MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அல்லாஹ்

அல்லாஹ் என்பது இறைவனுக்கு சொல்லப்படும் தனித்த அரபு சொல்லாகும். முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்றே அழைப்பர். அல்லாஹ் ஒருவன். அவன் சர்வ சக்தன். சர்வ ஞானமும் கொண்டவன். சகலவற்றையும் படைத்தவன், பரிபாலிப்பவன்.


அல்லாஹ் பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கை :


1. அல்லாஹ் ஒருவன், எவ்வித குடும்ப உறவுகளோ ஆரம்பமோ முடிவோ இல்லாதவன்

முஸ்லிம்களின் அடிப்படை கடவுள் கொள்கை ஓரிறை கொள்கையாகும். அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன், அவனுக்கு தாய் தந்தையோ, பிள்ளைகளோ கிடையாது. அவனுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது.


அல்லாஹ் அல் குர்ஆனிலே அவனை பற்றி கூறும் போது:

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

(அல் குர்ஆன் 112 : 1-4)



2. அல்லாஹ் உருவமற்றவன், எதற்கும் ஒப்பானவன் அல்ல

முஸ்லிம்களின் மற்றொரு அடிப்படை நம்பிக்கை, அல்லாஹ் உருவமற்றவன். அல்லாஹ்வுக்கு கண், காது, கை, கால், முகம் என உறுப்புகள் கிடையாது. அவன் கண்ணின்றி பார்ப்பவன் காதின்றி கேட்பவன். இன்னும் அவன் எதற்கும் யாருக்கும் ஒப்பானவன் அல்ல.


இதை பற்றி அல்லாஹ் அல் குர்ஆனிலே கூறும்போது :

"பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்"

(அல் குர்ஆன் 6:103)



3. அல்லாஹ் யாவற்றையும் படைத்தவன், பரிபாலிப்பவன்

முஸ்லிம்களின் நம்பிக்கை அல்லாஹ்வே அனைத்து அண்டச்சராசரங்களையும் "குன்" "ஆகுக" என்னும் வார்த்தையை கொண்டு படைத்தான்.


இதை பற்றி அல்லாஹ் அல் குர்ஆனிலே கூறும்போது :

"(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக - என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது"

(அல் குர்ஆன் 2: 117)


மேலும் அல்லாஹ் மனிதனை படைத்தது அல்லாஹ்வை வணங்கவே என்பது இஸ்லாமிய கொள்கையாகும்.

"இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை"

(அல் குர்ஆன் 51: 56)



அல் அஸ்மா அல் ஹுஸ்னா - 99 அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்

அல்லாஹ் ஒருவன். ஆனால் அவனது பல்வேறு பண்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக அவனுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. அவை "அல் அஸ்மா அல் ஹுஸ்னா" (அழகிய திருநாமங்கள்) என அழைக்கப்படுகிறது.


99 அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை அரபியிலும் அதன் அர்த்தத்தை தமிழிலும் தெரிந்து கொள்ள  "அஸ்மாவுல் ஹுஸ்னா - 99 அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள்" என்ற இந்த லிங்கை அழுத்துங்கள்.