MAIL OF ISLAM

Knowledge & Wisdom



“தன்ஸீஹ்” “தஷ்பீஹ்”


​ஆக்கம்: மௌலவி K.R.M. ஸஹ்லான் (றப்பானீ) BBA (Hons)​

“வஹ்ததுல் வுஜூத்” எனும் அத்வைத ஞானம் பேசுகின்ற சூபிகளும், ஞானிகளும் குறிப்பாக அஷ்ஷெய்குல் அக்பர் வல்மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அல்லாஹ்வுக்கு “தன்ஸீஹ்” “தஷ்பீஹ்” என்று இரு நிலைகள் இருப்பதாகவும், அவ்விரண்டுக்கும் திருக்குர்ஆனிலும், திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்களிருப்பதாகவும் அவ்விருநிலைகளில் தன்ஸீஹுடைய நிலையில் அவன் உருவமற்றவனாயும், சடமற்றவனாயும் சிருஷ்டிக்குள்ள சகல தன்மைகளை விட்டும் துய்யவனாக இருப்பானென்றும் தஷ்பீஹுடைய நிலையில் உருவமுள்ளவனாயும், சடமுள்ளவனாயும், சிருஷ்டிக்குள்ள சகல தன்மையுள்ளவனாயும் இருப்பானென்றும் விளக்கம் எழுதியுள்ளனர்.

இவ்விரு நிலைகள் பற்றித் திருக்குர்ஆனும், ஹதீஸும் கூறுவதால் இவ்விரண்டில் “தன்ஸீஹ்” என்னும் நிலையை மட்டும் நம்பிக் கொண்டு “தஷ்பீஹ்” என்னும் நிலையை நம்பாமல் விட்டவனும் அதேபோல் “தஷ்பீஹ்” என்னும் நிலையை நம்பிக் கொண்டு “தன்ஸீஹ்” என்னும் நிலையை நம்பாமல் விட்டவனும் காபிர்களாவர்கள் என்றும், இரண்டு நிலைகளையும் ஒன்று சேர்த்து நம்பினவன் மட்டும்தான் உண்மை விசுவாசியாவான் என்றும் கூறியுள்ளார்கள்.

இவ்விவரத்தை உள்ளடக்கியதாக இமாம் இப்னு அறபீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நாலடிகளைக் கொண்ட கவியொன்றை நயம்படக் கூறியுள்ளார்கள்.

அவர்கள் அக்கவியைத் தங்களின் நூல்கள் அனைத்திலும் குறிப்பாக “அல்புதூஹாத்துல் மகிய்யஹ்” விலும் கூறியிருக்கின்றார்கள்.

அவர்களுக்குப் பின் வந்த ஞானமான்களில் அநேகர் தமது நூல்களிலும் அந்தக் கவிதையை மேற்கோள்காட்டி தன்ஸீஹ் தஷ்பீஹ் பற்றிய விளக்கம் எழுதியுள்ளார்கள்.

குத்பிய்யத் – விலாயத் எனும் உயர்மகாம் – நிலைகளையடைந்த இமாம்களும், அவ்லியாக்களும், திருக்குர்ஆனையும், திருநபியின் நிறை மொழிகளையும் சந்தேகமற ஆராய்ந்திருந்தும் தமக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட இல்ஹாம், இல்முல்லதுன்னீ போன்ற இறையருள் ஞானங்களைக் கொண்டு “தன்ஸீஹ்-தஷ்பீஹ்” பற்றி விளக்கியிருக்க, அந்த நாதாக்களின் பாதரட்சைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணுக்கும் கூட நிகரில்லாத மூடர்கள் இந்த விவரத்தை “இன்கார்” மறுத்துக் கொண்டிருப்பது இறுதி நாளின் அடையாளமென்றே கூறவேண்டும்.

இமாம் இப்னு அறபீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அக்கவிதை பின் வருமாறு:

“வஇன்குல்த பித்தன்ஸீஹி குன்த முஹத்திதா

வஇன்குல்த பித்தஷ்பீஹி குன்த முகையிதா

வஇன்குல்த பில்அம்றைனி குன்த முஸத்திதா

வகுன்த இமாம் பில் மஆரிபி ஸெய்யிதா”

கருத்து:

தன்ஸீஹ் எனும் நிலையை மட்டும் நீ சொன்னால் நீ கட்டுப்படுத்தினவனாவாய்.

தஷ்பீஹ் எனும் நிலையை மட்டும் நீ சொன்னால் நீ மட்டுப்படுத்தினவனாவாய்.

இரண்டையும் ஒன்று சேர்த்து நீ சொன்னால் நீ நேர்மையானவனாவாய்.

இன்னும் இறைஞானத்தின் தலைவனாகவும், இமாமாகவும் இருப்பாய்.

மேலும் இதே கருத்தையுள்ளடக்கி ஆரிபீன்களும், ஞானிகளும் பின்வருமாறு கூருகிறார்கள்.

“ வமன் தஷர்றஅ வலம்யதஹக்க்க் பகத்தபஸ்ஸக்

வமன் தஹக்க்க வலம் யதஷர்ற பகத்தஸந்தக்

வமன் ஜமஅ பைனஹுமா பகத்தஹக்கக்”

கருத்து:

ஒருவன் ஷரீஅத்தைக் கற்று ஹகீகத்தைக் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் பாஸிக்காகி விட்டான். கெட்டவனாகிவிட்டான்.

ஒருவன் ஹகீகத்தைக் கற்று ஷரீஅத்தைக் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் ஸிந்தீகாகிவிட்டான். அவன் ஈமானை வெளிப்படுத்தி குப்றை மறைத்தவனாகிவிட்டான். இவ்விரண்டையும் சேர்த்துக் கொண்டவன் – கற்றுக் கொண்டவன் – நம்பினவன் உறுதியானவனாகிவிட்டான்.

இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:

யார் மார்க்க சட்டதிட்டங்கள் (பிக்ஃ) படித்துக்கொண்டார் ஆனால் இறைஞானம் (தஸவ்வுப்) படிக்கவில்லையோ ​அவர் (ஸிந்தீக்) வழிகெட்டவராகி விட்டார். யார் இறைஞானம் (தஸவ்வுப்) மட்டும் படித்துகொண்டார் ஆனால் போதுமான அளவு மார்க்க சட்ட திட்டங்களை (பிக்ஃ) படிக்கவில்லையோ அவர் பாவியாகி விட்டார். யார் இரண்டையும் படித்துகொண்டாரோ அவர்தான் சரியான பாதையில் செல்கிறார்.


நூல்: மிர்காத் ஷரஹ் மிஷ்காத் ​​

மேலும் இந்த கூற்றை இமாம்களும், இறைஞானிகளும், தமது ஞான நூல்களில் கூறியிருப்பதால் இது அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய தத்துவமென்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏழு வருடம் நாலு கிதாபுகளை அறபு மத்ரஸாவில் புரட்டியும், பிரட்டியும் தள்ளிவிட்டு ஞானவான்களும், அவ்லியாக்களும் சொன்ன பேச்சுக்களை மறுப்பதும் , அவர்களின் பேச்சுக்ளுக்கு நூல்களிலிருந்து ஆதாரம் கேட்பதும் தேடுவதும் முழு முட்டாள்தனமாகும்.

ஏனெனில் அவ்லியாக்கள், கிதாபுகள் உள்ளதையும் சொல்வார்கள், கிதாபுகளிலில்லாததை அவர்கள் சொள்வார்கள்.

ஏனெனில் அவ்லியாக்களுக்கு இல்ஹாம், கஸ்பு, இல்முல்லதுன்னீ என்பன உண்டென்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.

ஒரு வலி தனக்கு கிடைத்த இல்ஹாம், கஸ்பு, இல்முல்லதுன்னீ போன்ற வழிகளில் பெற்ற அறிவைக் கூறுவாராயின் அது எந்தவொரு கிதாபிலும் இருக்காது. அவர் கூறிய அந்த அறிவுக்கு ஆதார நூல் அல்லாஹ்தான்.

திருக்குர்ஆனின் ஆணைப்படி அல்லாஹ் “ளாஹிர்” வெளியானவனாகயிருக்கின்றான் என்றும் இன்னும் “பாதின்” உள்ளானவனாயிருக்கிறான் என்றும் நம்புதல் வேண்டும்.

​ 

அல்லாஹ் தன்னைப் பற்றித் திருக்குர்ஆனில் “ஹுவல் அவ்வலு வல்ஆகிறு வள்ளாகிறு வல்பாதின்” (முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே) என கூளியுள்ளான்.

இத்திருவசனத்தில் நாலு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த நாலையும் நம்பினவந்தான் உண்மை விசுவாசியாயிருப்பான். இந்நாலில் ஒன்றை விட்டு மற்ற மூன்றையும் நம்பினால் கூட அவன் விசுவாசியாகிவிடமாட்டான். ஏனெனில் திருக்குர்ஆன் வசனங்களில் ஒருசிலதை நம்பிக்கொண்டு மறுசிலதை நம்பாமல் விடுவது ஒரு பொழுது ஈமானாகாது.

நான்கு அம்சங்களிலும் “ளாஹிர்” வெளியானவனும் என்று நம்புதல் அல்லாஹ்வின் “தஷ்பீஹ்” என்னும் நிலையை நம்புதலாகவும், “பாதின்” உள்ளானவன் என்று நம்புதல் அல்லாஹ்வின் “தன்ஸீஹ்” என்னும் நிலையை நம்புதலாகவும் கருதப்படும்.

தன்ஸீஹ், தஷ்பீஹ் என்ற இரு அம்சங்களும் திருக்குர்ஆனில் கூறப்பட்ட அம்சங்களாக இருப்பதால் இவ்விரண்டையும் நம்பினவன் மட்டும்தான் திருக்குர்ஆனை நம்பினவனாவான்.

இவ்விரண்டில் ஒன்றை மட்டும் நம்பிக் கொண்டு மற்றதை நம்பாமல் விட்டவன் திருக்குர்ஆனில் சில வசனங்களை நம்பிக் கொண்டு சில வசனங்களை நம்பாமல்விட்டால் காபிராகி விடுவான். இவன் திருக்குர்ஆனை நம்பினவனில்லை.

திருக்குர்ஆனை நம்புதலென்பது அதிலுள்ள வசனங்கள் அனைத்தையும் நம்புதலையே குறிக்கும். இந்த விவரப்படி திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றை மட்டும் நம்பாமல் விட்டுவிட்டு ஏனைய முழுவசனங் களையும் நம்பினால்கூட அவ்வாறு நம்பினவன் “முஃமின்” விசுவாசியாக மாட்டான்.

எனவே அல்லாஹ்வின் தன்ஸீஹ், தஷ்பீஹ் என்ற இரு நிலைகளையும் திருக்குர்ஆன் கூறுவதால் அவ்விரண்டையும் நம்பினவன் மட்டும்தான் “முஃமின்” விசுவாசியாவான் ஏனையோர் அனைவரும் திருக்குர்ஆனை நம்பாத காபிர்களேயாவர்.

அல்லாஹ்வின் இவ்விரு நிலைகளில் “தன்ஸீஹ்” எனும் நிலையை மட்டும் அதாவது அவன் “பாதின்” உள்ளானவன் என்ற நிலையை மட்டும் நம்பிக்கொண்டு அவனுடைய “தஷ்பீஹ்” எனும் நிலையை அதாவது அவன் “ளாஹிர்” வெளியானவனும் என்ற நிலையை நம்பாமலிருப்பவர்கள்தான் அல்லாஹ் உருவமற்றவன் மட்டும்தான் என்றும் சடமற்றவன் மட்டும்தான் என்றும் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் இரு நிலைகளையும் நம்பினவன் மட்டும்தான் அல்லாஹ் அரூபியென்றும், ரூபியென்றும், சடமற்றவனென்றும், சடமுள்ளவனென்றும் நம்புவான்.

.

இன்றுவாழும் முஸ்லீம்களில் அனேகர் அல்லாஹ்வின் இருநிலைகளில் “தன்ஸீஹ்” எனும் நிலையை அதாவது அவன் “பாதின்” உள்ளானவன் என்ற நிலையை மட்டும் நம்பினவர்களாக உள்ளனர் இத்தகைய நம்பிக்கையும் ஈமானல்ல.

பார்வை ஒன்று காட்சி இரண்டு

​​

படைப்பினங்களை பார்பவர்கள் மனிதர்கள். படைப்பினங்களில் படைத்தவனை பார்பவர்கள் புனிதர்கள். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

​​​​​

குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத்

​​

அல் குர்ஆன் அல் ஹதீஸ் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத் பற்றி அறிந்துக்கொள்ள இந்த உரையை கேளுங்கள்.

​​​​​

ஸஹாபாக்கள் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்

​​

ஸஹாபாக்கள் அவ்லியாக்கள் போதித்த வஹ்ததுல் வுஜூதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். தமிழில் இதுவரை வெளிவராத ஆக்கம்.

​​​​​

மெய்யும் பொய்யும்

​ 

மனித உடலுக்கு பெயர் மெய் என்று சொல்வார்கள்!



பொய்யான உடலுக்கு மெய் என்று பெயர் எப்படி வந்தது? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.