MAIL OF ISLAM

Knowledge & Wisdom



'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்

சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:


கொடுக்கிறேன்.....


கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!

கொடுப்பதற்கு நீ யார்?


நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்

உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?


உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்

உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல


உண்மையில் நீ கொடுக்கவில்லை

உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது


நீ ஒரு கருவியே


இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை


இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே


இயற்கையைப் பார் அது கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொடுப்பதில்லை


தேவையுள்ளவன் அதிலிருந்து 

​வேண்டியதை எடுத்துக்கொள்கிறான்


நீயும் இயற்கையின் ஓர் அங்கம்

​என்பதை மறந்துவிடாதே


கொடுப்பதற்குரியது பணம் மட்டும்

​என்று நினைக்காதே


உன் வார்த்தையும் ஒருவனுக்குத்

தாகம் தணிக்கலாம்


உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில்

விளக்கேற்றலாம்


ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு


ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு


உன்னிடம் உள்ளது நதியில் உள்ள

​நீர்போல் இருக்கட்டும்


தாகமுடையவன் குடிக்கத் 

​தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை


கொடு ​

நீ சுத்தமாவாய்


கொடு

நீ சுகப்படுவாய்


கொடு

அது உன் இருத்தலை நியாப்படுத்தும்

1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி:


தாயிப் நகரில் தாஹா நபிகள்...


நபிகள் பெருமான் - 

​இல்லாமல் வாடிய ஏழை உலகம்,

கேட்காமலேயே கிடைத்த அருட்கொடை !

தட்டாமலேயே திறந்த கதவு !

தேடாமலேயே தெரிந்த மூலிகை !


இளமையில் பெற்றோரை

இழந்த இவ்வனாதைதான்

உலகுக்கே தாயாகி ஊட்டி வளர்த்தவர்!


படிக்கத் தெரியாத – இந்தப்

பாமர நபியிடம்தான்

பள்ளிக் கூடங்களும் பாடம் பயின்றன

இல்லை ..

பல்கலைக் கழகங்களே ​பாடம் பயின்றன !


கந்தல் அணிந்த – இந்தக்

கருணை நபி கையால்தான்

அம்மண உலகம் ஆடையைப் பெற்றது!


பாலையில் முளைத்த – இந்த

பசுமர நிழலில்தான் வெயிலும்கூட இளைப்பாற வந்தது !


இந்த ஏழையை ஈன்ற பின்னரே

கிடக்காத புதையல் கிடைத்தது போன்று

இந்த உலகம் இறுமாப் படைந்தது !


மண்ணில் – இந்த மணிவிளக்கைக்

கண்டபின்தான் விண்ணும்

​தன் சுடர்களுக்காய் வெட்கம் கொண்டது !


வல்லூறுகளும் – இவர் வலைக்குள் குடிபுகுந்து

வெள்ளைப் புறாக்களாய் 

​விண்ணெங்கும் பறந்தன !


உயர்மறை மகுடி – இவர் ஊதியத்கைக் கேட்டவுடன் நாகத்தின் பற்களிலும்

நல்லமுதம் ஊறியது !


தனித்தனி சாதி அறைகளில் கிடந்த

மனித எழுத்துக்களை ஒரே வாக்கியமாக

அச்சுக் கோர்த்து சகோதரத்துவ

சமுதாயம் கண்டவர் !


பாட்டால் புகழைப் பலர் பெறுவர் – ஆனால்

பரமனின் நபியைப் பாடுவதால் நமது

பாட்டுக்கல்லவா பெரும் புகழ் கிடைக்கும்


அன்று – அந்தத் ​தாயிப் நகரில்

தாஹா நபிகள் !


தாயிப் வாசிகளே !

விந்தை மனிதர் நீர்!

கல்லின் மீதுதான்

பூவைத் தூவுவீர்


ஆனால் அன்று

(பூமான் நபியெனும்)

பூவின் மீதல்லவா

கல்லைச் சொரிந்தீர் !


வெல்வதாக நினைத்தீர் !

ஆனால் – தோற்றவர் நீங்களே !

நீங்கள் வணங்கும்

கற்களை அல்லவா

கருணைநபி காலடியில்

மண்டியிட வைத்தீர் !


உங்கள் கற்கள்

ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !

பொறுமைக்குக் கிடைத்த

இரத்தினப் பதக்கங்கள் !

இறை சோதனையின்

குங்கும முத்தங்கள் !


பொய்மையை எதிர்த்த

வாய்மைத் தூதருக்கு

ரணங்கள் தானே

ஆபரணங்கள் !


அதோ பாருங்கள் !

நீங்கள் எறிந்த கற்கள்

பச்சை ரத்தம்

படிந்து கிடப்பதை !

காயங்கள் செய்த

பிரச்சாரத்திற்குரிய

பெரிய வெற்றி !

அவை கூட

மதம் மாறி விட்டன !


தாயிப் வாசிகளே !

கனிமரம் என்பதால்

கல்லெறிந்தீரோ?

கல்லடி பட்டால்

கனி மட்டுமா உதிரும்?

காய்கூட உதிருமே !


ஆனால்

கல்லடிக்குக்

கனிமட்டும் உதிர்ந்த

கருணை மரத்தை

வேறு எங்கேனும்

கண்டவருண்டோ?


எங்கள் பெருமான்

காயம்பட்டதோ

அன்றொருநாள் !

ஆனால் இரத்தமோ

இன்றுமல்லவா வழிகிறது

எங்களின்

எழுதுகோல் வழியே !



பாருக்குள்ளே நல்ல நாடு


அவர்களைச் சிறையில்

சந்தித்தேன்.


“என்ன குற்றம் செய்தீர்கள்”

என்று கேட்டேன்.


ஒவ்வொருவராகச்

சொன்னார்கள்..


எங்கள் வீட்டில்

திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.

“திருடன் திருடன்” என்று கத்தினேன்.

அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்

கைது செய்து விட்டார்கள்.


“என் வருமானத்தைக் கேட்டார்கள்”

‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன்

வருமானத்தை மறைத்தாக வழக்குப்

போட்டு விட்டார்கள்.


“நான் கரி மூட்டை தூக்கும் கூலி”

கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்

கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.

கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்

கைது செய்து விட்டார்கள்.


“என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன் பிரிவினைவாதி என்று

பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்”


“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.

அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்

செய்ய விடாமல் தடுத்ததாகத்

​தண்டித்து விட்டார்கள்.”


“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்

சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.

சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்ததாக அழைத்துக் கொண்டு

வந்து விட்டார்கள்”


“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன். அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக அடைத்துப்போட்டுவிட்டார்கள்”


“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”

என்று எழுதினேன்,“கடத்தல்காரன்” என்று

கைது செய்து விட்டார்கள்.


“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்

உண்மையை எழுதினேன். நாட்டின்

ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக் கொண்டு

வந்து விட்டார்கள்”


“சுதந்திர தின விழாவில்

‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள்.

நான் பசியால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.

எழுந்து நிற்க முடியவில்லை.

தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சிறையில் அடைத்து விட்டார்கள்”


“அக்கிரமத்தை எதிர்த்து

ஆயுதம் ஏந்தச் சொன்னான் கண்ணன்”

என்று யாரோ கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்

என்பெயர் கண்ணன்.

“பயங்கரவாதி” என்று என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.


நான் வெளியே வந்தேன்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது..

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ‘சுட்டுவிரல்’ கவிதை தொகுப்பிலிருந்து


உதிரும் சிறகுகள்…


மழை ஓய்ந்த

முன்னிரவில்

சாளரத்தின் வழியே

அறையில் புகுந்து

மின் விளக்கை

மொய்த்து

முட்டி மோதி

சிறகுகள் உதிர்த்து விழும்

ஈசல் கூட்டம்


காலையில்

திட்டியபடியே

செத்த உடல்களோடு

சிறகுகள் கூட்டிக்

குப்பையில் எறிந்து -


ஏதோ இருளை

மோகித்து

ஏதோ சாளர வழியே

நுழைந்து சிறகுகள்

உதிர்க்கப் போவோம்

நாம்.


ஆன்மாவின் விபச்சாரம்


உலகுக் கெல்லாம்

ஒருவனே தலைவன்

தலைவணக் கம்அந்தத்

தலைவனுக் கேயென

அறவுரை கூறிய

ஆன்றோர் களையே

அவதாரம் என்பதும்

அவரடி வீழ்வதும்

தலைவனை ஆகழும்

தற்குறித் தனமே


அரும்பிய துருவமீன்

அதனை நோக்கியே

திரும்ப வேண்டிய

திசைகாட் டியின்முள்

மின்மினிக் கெல்லாம்

மேனி திருப்பினால்

கப்பல் எப்படிக்

கரைபோய்ச் சேரும் ?


தலைவன் ஒருவனைத்

தலையால் வணங்குவதே

தலைகற் பாகும்

தலைவனை அன்றி

மற்ற வற்றை

மகேசன் என்றே

தொழுவது கொடிய

தொழுநோய் ஆகும்

மேலும் அது

ஆன்மா செய்யும்

விபச்சாரம் ஆகும்


'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்

சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:


கண்ணீரின் ரகசியம்....


'இறைவா எனக்குப்

புன்னகைகளைக் கொடு’ என்று

பிரார்த்தித்தேன்


அவன் கண்ணீரைத் தந்தான்


‘வரம் கேட்டேன்

சாபம் கொடுத்து விட்டாயே’

என்றேன்


இறைவன் கூறினான்:


 மழை வேண்டாம்

விளைச்சலை மட்டும் கொடு என்று

எந்த உழவனாவது கேட்பானா


ஆனால் நீ

அப்படித்தான் கேட்கிறாய்


கண்ணீரில் புன்னகையும்

புன்னகையில் கண்ணீரும்

ஒளிந்திருப்பதை நீ அறிய மாட்டாய்


உண்மையைச் சொல்வதானால்

கண்ணீர் கண்களின் புன்னகை

புன்னகை இதழ்களின் கண்ணீர்


வைகறைப் பொழுதில் மலர்களின் மீது

பனித்துளிகளை நீ கண்டதில்லையா?


புன்னகை தன்னைக் கண்ணீரால்

அலங்கரித்துக் கொள்ளும்

அற்புதம் அல்லவா அது!


மழை மேகங்களில்

மின்னல் உதிப்பதை

நீ பார்த்ததில்லையா?


கண்ணீரில் இருந்து

சிரிப்புப் பிறக்கும்

அழகல்லவா அது?


முத்து என்பது என்ன?

சிப்பிக்குள் இருந்து

தவம் செய்யும் கண்ணீர்த் துளி

புன்னகையாகும் அதிசயம்தானே  அது


கன்ணீரில் மலரும்

புன்னகைப் பூக்கள்

வாடுவதில்லை என்பதை

அறிவாயாக!


மேலும் கண்ணீர்தான்

உன்னைக் காட்டுகிறது


புன்னகையோ சில நேரங்களில்

உனக்கு திரையாகிவிடுகிறது


கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ‘சுட்டுவிரல்’ கவிதை தொகுப்பிலிருந்து


தொலைந்து போனவர்கள்…


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்

வெளுப்பது உனது விடியலில்லை

முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு

முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்

மாலை சூட்டலும் மணமில்லை

இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்

இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்

காகிதம் தின்பது கல்வியில்லை

பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்

பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ

கொண்ட அழுக்கோ போகவில்லை

அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ

அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்

உடலுக் கணிவது உடையல்ல

விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு

வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்

தின்னும் பசிகளுக் கிரையாவாய்

வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்

வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்

அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்

கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்

கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்

நாடக வசனம் பேசுகிறாய்

‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த

ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ?


தமிழ்  - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள்  - கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள்