MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
வழித்தவறிய 72 கூட்டத்தின் விளக்கம்
எனக்குப் பின் என்னுடைய உம்மத்துக்கள் 73 கூட்டமாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய 72 கூட்டத்தினரும் வழித்தவறியவர்களாவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபோது, அண்மையில் இருந்த ஸஹாபாக்கள் " அல்லாஹ்வின் திருத்தூதரே! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்" எனக் கேட்க. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் " நானும், என்னுடைய ஸஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள் தான் அந்த கூட்டத்தினர்" எனக் கூறினார்கள். இந்த கூட்டத்தினரே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபடி. 73 கூட்டத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத் நீங்கலாக மற்ற 72 கூட்டத்தினரும் ஆரம்பத்தில் ஆறு பிரிவுகளை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த ஆறில் ஒவ்வொன்றும் பன்னிரண்டு பிரிவுகளாக பிரிந்ததினால் அவர்கள் 72 கூட்டத்தினர்களாக ஆனார்கள். அந்த கூட்டங்களின் விளக்கமும், கொள்கைகளும் பின்வருமாறு: -
1. ராபிளிய்யா, 2. காரிஜிய்யா, 3. ஜபரிய்யா, 4. கதரிய்யா, 5. ஜுஹைமிய்யா, 6. மர்ஜிய்யா என்ற ஆறு பிரிவுகளாகும்.
ராபிளிய்யா, காரிஜிய்யா, ஜபரிய்யா என்ற இந்த மூன்று கூட்டத்தார்களும் பொதுவாக ஷியா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.
* ராபிளிய்யா என்ற பிரிவில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அலவிய்யா 2. பதாஇய்யா 3. ஷீய்யா 4. இஸ்ஹாக்கியா 5. ஸெய்திய்யா 6. அப்பாஸிய்யா 7. இமாமிய்யா 8. நாவிஸிய்யா 9. முதனாசிகிய்யா 10. லாஇனிய்யா 11. ராஜிஇய்யா 12. முதராபிஸிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கை:
தராவீஹ் தொழுகை ஸுன்னத் இல்லை, தொழுகைக்கு இமாம் ஜமாஅத் ஸுன்னத் இல்லை, வுழு செய்யும் போது தலையில் மஸ்ஹு செய்தல் ஜாயிஸ் இல்லை, அதோடு அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) இந்த மூன்று கலீபாக்களை பற்றி அவதூறு கூறுவார்கள். இவர்களுக்கிடையில் சில செயல்களில் வேறுபட்ட அபிப்பிராய பேதங்களும் உண்டு. அதாவது அலவியாக்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி என்று கூறுகிறார்கள். பதாஇய்யாக்கள் நபி பட்டத்தில் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் பங்கு உண்டு என்கின்றனர்.
* காரிஜிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அஸ்ரகிய்யா, 2. இபாளிய்யா, 3. ஸஃலபிய்யா, 4. ஹாஸிமிய்யா, 5. கலபிய்யா, 6. கூஸிய்யா, 7. கன்ஸிய்யா, 8. ஷிம்ராக்கிய்யா, 9. முஃதஸிய்யா, 10. மைமூனிய்யா, 11. மஹ்கமிய்யா, 12. அக்னஸிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கை:
ஜமாஅத்து தொழுகை உண்மை இல்லை, கிப்லா உடையவர்கள் பாவத்தை கொண்டு காபிர் ஆவார்கள், அநீதி உடைய அரசனுக்கு விரோதம் செய்து விலகுவது நலம், இவர்களில் கன்ஸிய்யாக்கள் ஸகாத் ஃபர்ளு அல்ல என்றும் முஃதஸிய்யாக்கள் தீமையானது அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டதல்ல என்றும் பாஸிகீன்களுக்கு பின்னால் தொழுவது ஆகுமானது அல்ல என்றும் கூறுவதோடு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷபாஅத், அவ்லியாக்களின் கராமத் இவைகள் இல்லை என்று மறுக்கிறார்கள்.
* ஜபரிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. முளுதர்றிய்யா, 2. அப்ஆலிய்யா, 3. மஇய்யா, 4. மப்ரூகிய்யா, 5. நஜ்ஜாரிய்யா, 6. மைமனிய்யா, 7. கஸ்லிய்யா, 8. ஸாபிகிய்யா, 9. ஹபீபிய்யா, 10. கவ்பிய்யா, 11. ஹஸ்பிய்யா, 12. பிக்ரிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஸதகா கொடுப்பது அவசியம் இல்லை. இவர்களில் ஸாபிகிய்யாக்கள் வணக்கத்தை கொண்டு எந்த பிரயோசனமும் இல்லை பாவத்தை கொண்டு கெடுதியும் இல்லை என்றும் ஹஸ்பிய்யாக்கள் தவ்பாவையும், அல்லாஹ்வின் லிகாவையும் மறுக்கின்றார்கள்.
* கதரிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அஹமதிய்யா, 2. ஸனவிய்யா, 3. ஷெய்த்தானிய்யா, 4. ஷரீகிய்யா, 5. வஹ்மிய்யா, 6. அபதிய்யா, 7. நாகிதிய்யா, 8. முதபர்ரிய்யா, 9. காஸிதிய்யா, 10. நிளாமிய்யா, 11. மும்தரிய்யா, 12. கைஸானிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
நன்மையையும் தீமையும் உண்டாகிறது அல்லாஹ்வுடைய தக்தீரை கொண்டதல்ல, ஜனாஸா தொழுகை வாஜிப் அல்ல இவர்களில் அஹமதிய்யாக்கள் பர்லை ஒப்புக் கொண்டு ஸுன்னத்தை மறுக்கின்றார்கள். ஸனவிய்யாக்கள் நன்மைகளை படைக்க ஒரு இறைவனும், தீமைகளை படைக்க ஒரு இறைவனும் உண்டு என்றும், ஷெய்த்தானிய்யாக்கள் ஷெய்த்தான்கள் இல்லை என்றும் மறுக்கின்றார்கள்.
* ஜுஹைமிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. முஅத்தலிய்யா, 2. முராபிலிய்யா, 3. முதராகிபிய்யா, 4. வாரிதிய்யா, 5. ஹர்கிய்யா, 6. மக்லூக்கிய்யா, 7. கைரிய்யா, 8. பானிய்யா, 9. ஸனாதிகிய்யா, 10. லப்லிய்யா, 11.கப்ரிய்யா, 12. வாக்கிபிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஈமான் கல்பி கொண்டதாக இருக்கும் நாவை கொண்டதல்ல, இஸ்ராயீல், முன்கர், நகீர் ஆகிய மலக்குமார்களையும், ஹவ்ஸுல் கவ்ஸர், ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தையும் கேலி செய்வதாகும், இவர்களில் முஅத்தலிய்யாக்கள் அல்லாஹ்வின் அஸ்மா படைக்கப்பட்டது என்றும், கைரிய்யாக்கள் நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு புத்திசாலியாக இருந்தார்களே தவிர ஒரு ரசூலாக இருக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.
* மர்ஜிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. தாரிகிய்யா, 2. ஷாஇய்யா, 3. ராஜிய்யா, 4. ஷாகிய்யா, 5. பைஹஷிய்யா, 6.அமலிய்யா, 7. மன்கூசிய்யா, 8. முஷ்தஸ்னிய்யா, 9. அப்தரிய்யா, 10. பிதய்யா, 11.முஷப்பிஹிய்யா, 12. ஹஷவிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஈமானை தவிர வேறு ஒரு இபாதத்தும் பர்ளாக இல்லை இவர்களில் ஷாகிய்யாக்கள் ஈமானில் சந்தேகம் இருக்கின்றது என்றும், பைஹஷிய்யாக்கள் ஏவல் விலகல் அறியாதவன் காபிர் எனச் சொல்லுகின்றார்கள்.
இதே போன்றே இந்த கூட்டத்தார்களின் கொள்கைகளில் சில மாறுதல்களோடு சில கூட்டம் உருவானார்கள். அவர்கள் தங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமான வழி கெட்ட கொள்கையில் இருந்து கொண்டு இஸ்லாத்தை காட்டி தாங்கள் சீர்திருத்தவாதிகள் என்று கூறி அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வழி கெடுக்கும் வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுள் வஹாபிகள், காதியானிகள், அஹ்லே ஹதீஸ் என்ற மிக முக்கியமான வழி கெட்ட கூட்டத்தார்கள் இவர்கள்.
இதில் காதியானி, அஹ்லே ஹதீஸ் போன்றவைகளை மக்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டு கொண்டார்கள். காரணம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தான் இறுதி நபி என்ற கூற்றுக்கு மாற்றமான கருத்தை இவர்கள் கொண்டு இருந்தபடியால் இவர்கள் மக்கள் முன் தோற்று போனார்கள்.
ஆனால் இவர்களை விட மோசமானவர்களான வஹாபிகளை இன்று மக்கள் அடையாளம் கண்டு கொள்ள சிரமப்படுகின்றார்கள். காரணம் இவர்களில் சிலர் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையின்படி மத்ஹபுகளையும் பின்பற்றுவார்கள், சில கூட்டத்தார் நமது இமாம்களின் சில கூற்றுக்களை ஏற்று கொள்ளுவார்கள். எனவே பொது மக்கள் இவர்களின் சூழ்ச்சியையும், ஏமாற்றுகளையும் அறியாமல் இவர்களும் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்று நம்புகின்றார்கள்.
இந்த வஹாபி என்ற வழி கெட்ட கொள்கையில் உருவான கூட்டங்கள் இவர்கள் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமான கருத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள்.
இவை அனைத்தும் இந்த ஜமாஅத்துகளை உருவாக்கிய தலைவர்களின் கூற்றுகள். அதற்கு ஆதாரமாக இந்த கூட்டங்களின் தலைவர்கள் சொன்ன கருத்தக்களை பாருங்கள்:
* அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு. அவன் அர்ஷின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.
* அல்லாஹ்வுக்கு காலம் இடம் திசை இவைகள் உண்டு.
* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மௌத்தாகி மண்ணோடு மண்ணாகி விட்டார்கள்.
* அல்லாஹ்வுக்கு (இல்முல் கைப்) மறைவான சங்கதியை அறியும் ஞானம் இல்லை. ஆனால், எப்பொழுது விரும்புகின்றானோ அப்பொழுது அறிய முடியும்.
* தொழுகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஞாபகம், உருவம் மனதில் வருவது, மிருங்கங்களுடைய ஞாபகம் உருவம் வருவதை பார்க்கிலும் மிக மோசமானதாகும்.
* 'ரஹ்மத்துலில் ஆலமீன்' என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு மாத்திரம் சொந்தமான ஸிபத்து அல்ல. அதை மற்றவர்களுக்கும் சொல்லலாம்.
* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 'இல்முல் கைப்' என்ற மறைவான ஞானம் ஒரு போதும் இல்லை.
* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு தபால்காரரைப் போன்றவர்கள்தான். அவர்கள் இஸ்லாத்தை போதித்தது உண்மையே ஆனால், இப்போது அவர்கள் இறந்து விட்டதால் அவர்களைப் பெரிதுபடுத்த வேண்டிய தில்லை.
* எவன் ரஸுலுல்லாஹ் என்று சொல்வானோ அவன் காபிர், அது ஷிர்க்.
* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு தபால்காரரைப் போன்றவர்கள்தான். அவர்கள் இஸ்லாத்தை போதித்தது உண்மையே ஆனால், இப்போது அவர்கள் இறந்து விட்டதால் அவர்களைப் பெரிதுபடுத்த வேண்டிய தில்லை.
* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய ஸியாரத்தை நோக்கமாகக் கொண்டு மதீனா முனவ்வரா செல்வோர் எவரும், (ஹாஜிகள் கூட) முற்தத்துகளாகி விடுவர். அவர்களை கொலை செய்வதும், அவர்களுடைய உடமைகளை கொள்ளையடிப்பது ஹலால்.
* சூனியக்காரர்களுடைய சூனியம் நபிமார்களுடைய முஃஜிஸாத்துகளை விட அதிக சக்தி வாய்ந்ததாகும்.
* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த நாளை கண்ணியப்படுத்துவது ஷிர்க்.
(1) அல்லாஹ் பொய் சொல்லலாம்
கூறியவர் - ரஷித் அஹ்மத் கங்கோஹி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - பதாவா ரஷிதியா
(2) அமல்களின் மூலம் உம்மத்தினர்கள் நபிமார்களை விட உயர முடியும்
கூறியவர் - காசிம் நானோத்வி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - தஹ்ழீருன் நாஸ்
(3) தொழுகையில் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லாம் அவர்களது ஞாபகம் வருவது கழுதையின் ஞாபகம் வருவதை விட மோசமானதாகும்
கூறியவர் - இஸ்மாயில் தெஹ்லவி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - சிராதுல் முஸ்தகீம்
(4) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை எல்லாம் வல்ல தாத்தை கொண்டு சுயமாக அறியவில்லை என்றாலும் அல்லாஹ் அறிவித்து கொடுத்து அறிகின்றார்கள் என்று சொல்லுகின்றார்களே அது சுத்தப் பொய்யும், பைத்தியமுமாகும்.
கூறியவர் - ரஷித் அஹ்மத் கங்கோஹி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - பதாவா ரஷிதியா - 73
(5) ரபியுல் அவ்வலில் மௌலித் மஜ்லிஸ் நடத்துகின்றவன், அதில் நாயகத்தின் பிறந்த செய்தி வரும் போது எழுந்து நிற்கின்றவன் முஸ்லிம் அல்ல காபிர்.
கூறியவர் - இஸ்மாயில் தெஹ்லவி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - தக்வியத்துல் ஈமான் - 56
(6) மௌலித் ஓதுவது எந்த நிலைமையிலும் கூடாது. காரணம் ஸுன்னத்தை பின்பற்ற அழைப்பு இருப்பதனால் விலக்கப்பட்டதாகும்.
கூறியவர் - ரஷித் அஹ்மத் கங்கோஹி (தப்லீக் ஜமாஅத்)
நூல் - பதாவா ரஷிதியா 136
(7) எந்த விதத்திலும் என்னிடத்தில் களா-கத்ருடைய மஸ்அலா ஈமானின் பாகத்தை சேர்ந்ததல்ல.
கூறியவர் - அபுல் அஃலா மவ்தூதி (ஜமாத்தே இஸ்லாமி)
நூல் - மஸ்அலா ஜப்று - கத்ரு 09
(8) இஸ்லாமிய பரிபாஷையில் எவர்களை மலக்குகள் என்று சொல்லுகின்றார்களோ அவர்கள் ஏறக்குறைய இந்தியா மற்ற நாடுகளில் உள்ள முஷ்ரிகீன்கள் அவர்களின் மதத்தில் தேவுகள், பிசாசுகள் என்று சொல்லுகின்றார்களோ அவைகள் தான்.
கூறியவர் - அபுல் அஃலா மவ்தூதி (ஜமாத்தே இஸ்லாமி)
நூல் - தஜ்தீது வஇஹ்யாயேதீன் - 14
இவை அனைத்துமே தௌஹீத் ஜமாஅதின் கொள்கையும் ஆகும். மேலும் அவர்களின் தலைவர்களால் சொல்லப்பட்டதும் ஆகும்.
எனவேதான் இப்படியான இஸ்லாத்துக்கு எதிரான மோசமான கருத்துக்களை கூறிய அந்த தலைவர்கள் உருவாக்கிய கூட்டத்தை வழிகேடு என்றும் அது மக்களை நரகத்துக்கு கொண்டு செல்லும் கூட்டம் என்று உலமாக்கள் கூறுகின்றார்கள்.
அல்லாஹுதஆலாவை மனதார ஏற்று, அவனது ஹபீப் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் வழிமுறையான ஸுன்னத்தை முழுமையாக பின் தொடர்ந்து அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில், மார்க்க சட்டத்திட்டங்களை முறைப்படுத்தி தந்த இமாம்களுக்கு கட்டுப்பட்டு நல்லோர்களையும் பெரியார்களையும் கண்ணியப்படுத்தி வாழ்பவர்களே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் எனப்படுவர். இவர்கள்தான் உண்மையான முஸ்லிம்கள்.
அல்லாஹ் நம்மை இறுதிமூச்சு வரை சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் நிலைநிறுத்தி, அதை பின்பற்ற அறிவையும் ஆற்றலையும் தந்தருவானாக. ஆமீன்!!!