MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
உரூஸ் (கந்தூரி) நினைவு தினம் கொண்டாடலாமா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்களின் பெயரால் உரூஸ் (வருடாந்த கந்தூரி) தினம் கொண்டாடலாமா? என்பது பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?
♣ உரூஸ் (கந்தூரி) தினம் என்றால் என்ன?
நபிமார்கள், வலிமார்கள் பெயரில் வழங்கப்படும் பொதுமையான அன்னதானத்தையே கந்தூரி என்று அழைக்கின்றனர். பொதுவாக ஏழைகளும் ஏனையவர்களும் பாகுபாடின்றி சேர்ந்து புசிக்கும் உணவு கந்தூரி ஆகும்.
மேலும் கந்தூரி என்பதை உரூஸ் என்று அரபியில் கூறுவர். உரூஸ் என்பதின் அகராதிப் பொருள் புது மணவாளன் என்பதாகும். புதுத் தம்பதிகளை ‘அரூஸ்‘ என்பர், சன்மார்க்கப் பெரியார்களின் நினைவு தினத்தை ‘உரூஸ்‘ என்று கூறப்படுவதற்கு மிஸ்காத்தில் கப்றில் வேதனை பற்றிய பாடத்தில் வரும் ஒரு ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
கப்றில் முன்கர், நகீர் அலைஹிஸ்ஸலாமவர்களின் விசாரணையில் வெற்றி பெறுவோரைப் பார்த்து ‘புது மணவாளன் போன்று உறங்கு! அவர் குடும்பத்தில் அவருக்கு மிக விருப்பமானவர் தவிர அவரை எழுப்ப முடியாதளவு உறங்கும்! என்று மலக்குகள் கூறுவர். இதன்படி ஒரு நல்லடியார் மரணித்த அன்று கப்றில் மணவாளன் போன்று இருப்பார். அதனால்தான் அத்தினத்தை ‘உரூஸ்‘ என்று அழைக்கப்படுகின்றது.
நல்லடக்கம் செய்யப்பட்ட மையித்திடம் நபிகள் திலகம் முஹம்மது முஸ்தபா றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காட்டி “இவரைப் பற்றி உமது நம்பிக்கை யாது? என்று மலக்குகள் கேட்பர். நல்லடியார் பெருமானாரின் பேரழகைக் கண்டதும் அவர்தான் எங்கள் உயிரிலும் உயர்ந்த உத்தமத் திருத்தூதர்“ என்று பதில் சொல்வார்.
அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார் சுந்தர நபியின் சந்திர வதனத்தை கண்குளிரக் கண்டதனால் அவர் அன்று மணவாளன் போன்று மகிழ்ச்சியின் உச்சியிலிருப்பார். பொதுவாக உரூஸ் தினம் என்பது வபாத்தான தினத்தைக் குறிக்கும். ஒவ்வொரு வருடமும் அத்தினத்தில் ஸியாரத் செய்வர். கத்தமுல் குர்ஆன் ஓதுவர், உணவு சமைத்து யாவருக்கும் வழங்குவர். முடிவில் இதன் நன்மைகளை குறித்த நபரின் ஆத்மாவுக்குச் சேர்த்து வைப்பர். உரூஸ் தினத்தில் இவைதான் அதிகமாக இடம்பெறுகின்றன.
♣ கந்தூரியில் நடைபெறும் அமல்களை ஆறு அம்சங்களாகச் சுருக்கி ஆராய்ந்து பார்க்கலாம்
1) முதலாவது அம்சம் - மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதல்
மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒருவருக்கொருவர் சந்தித்து ஸலாம் சொல்லிக் கொள்ளுதல், சுகம் விசாரித்தல் இப்படி பல நன்மைகள் உள்ளன இதனை மார்க்கம் தடுக்கின்றதா?
2) இரண்டாவது அம்சம் - ஸியாரத் செய்தல்
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள்.
ஹழ்ரத் புரைதா ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள் : ஸஹிஹுல் முஸ்லிம் 3995, திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்
♦ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் உஹது ஷுஹதாக்களை ஸியாரத்துச் செய்வதற்காக வருவார்கள். அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். அவர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். நபியவர்கள் செய்தது போன்றே அன்னாருக்குப் பின் நான்கு கலீபாக்களும் செய்தார்கள்.
இந்தியாவில் புகழ் பூத்த ஹதீஸ் கலை பேரறிஞர் ஷைகுனா ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களது பதாவா அஸீஸியா பக்கம் 45இல் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.
நூல்: தபரானி 3 - 241
♦ கப்றுகளை ஜியாரத் செய்யுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல் : முஸ்லிம் 1777
♦நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது.
நூல் : இப்னு மாஜா-1569, மிஷ்காத் - 154
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.
நூல் : பைஹகி, மிஷ்காத் - 154
3) மூன்றாவது அம்சம் - கத்தமுல் குர்ஆன் ஓதுதல்
மரணித்தவருக்காக ஓரிடத்தில் மக்கள் திரண்டு திருக்குர்ஆன் ஓதுவது ஷரீஅத்துக்கு முரணானதென்று எந்த ஒரு பைத்தியக்காரன் கூடச் சொல்லமாட்டார்கள். திருக்குர்ஆன் ஓதிய பின் வந்தோருக்கு தானம் வழங்கும் முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலோ, நான்கு கலீபாக்களின் காலத்திலோ இருக்கவில்லை. ஆயினும், இவ்வாறு செய்வது குற்றமன்று உயிருள்ளோரின் நற்செயல்களால் மரணித்தோர் நிச்சயம் பயன் பெறுவர்.
‘ஸுப்தத்துன் நஸாயிஹ் பீமஸாயிலிஹ் தபாயிஹ்‘ என்ற நூலில் ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மேலும் கூறுகையில், உரூஸ் (கந்தூரி)க்கு எதிராக குரல் கொடுப்பதும் அதனைக் குறை கூறுவதும் அறியாமையால் ஏற்பட்டதாகும்.
மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அதன் கூலியை சேர்த்து வைக்க முடியும். அதுபோன்று உயிருள்ளவர் செய்யும் தர்மத்தின் கூலி மரணித்தவருக்குச் சேரும். இவற்றைப் பொதுவாக ஷரீஅத் அனுமதித்திருக்கும்போது வலிமார்கள் விடத்தில் எப்படி ஹறாமாக வந்துவிடும்.
மரணித்தவருக்காக திருக்குர்ஆன் ஓதி அதன் தவாபை சேர்த்து வைக்க முடியும் என்று அனைத்து அறிஞர்களும் கூறி இருக்கின்றனர். அப்படி இருக்க மரணித்தவருக்காக கத்தமுல் குர்ஆன் நிகழ்வு எப்படி ஹறாமாகும்?
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்களில் மௌத்தானவர்களுக்கு சூரத்துல் யாசீனை ஓதுங்கள்.
அபூதாவூத், இப்னு மாஜா, பைஹகி, மிஷ்காத் - 141
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:உங்களில் யாரேனும் மரணம் ஆகிவிட்டால் அவரை அடக்குவதில் தாமதம் செய்யாதீர்கள். அவரது தலை மாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பத்தையும், அவரது கால்மாட்டில் பகராவின் கடைசி ஆயத்தையும் ஓதுங்கள்.
ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
மிஷ்காத் - 149, பைஹகி, ஷுஹ்புல் ஈமான்
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:எவராவது கப்ர்ஸ்தானங்களுக்கு சென்று யாசீன் சூராவை ஓதினால் கப்ராளிகளை தொட்டும், வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கை அளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.
மிர்காத் 4 - 382
4) நான்காவது அம்சம் - ஸலவாத், திக்ர் மஜ்லிஸ், மௌலித் ஓதுதல்
சில திருவசனங்களை ஓதிய பின் மௌலித் ஆரம்பிக்கப்பட்டு நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள், நல்லடியார்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை கவி மூலம் மக்கள் மத்தியில் கூறி புகழ்வதாகும். இவைகளை ஆதாரங்கள் கூறி விரிவாக விளக்கம் கூறத் தேவையில்லை.
மரணித்தவர்களின் நற்செய்திகளை, பண்புகளை, சிறப்புக்களை எடுத்துக் கூறுமாறு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கும்போது மரணித்த வலிமார்களின் நற்பண்புகளையும், சிறப்புக்களையும் அன்னாரின் போதனைகளையும் மௌலித் மூலம் பாராயணம் செய்வதை அவர்களை நினைவு கூறுவதை எப்படித் தடையாக கொள்ள முடியும்?
நபிமார்களின் செய்திகளை கூறுவது இபாதத் - வணக்கம் ஸாலிஹீன்களின் செய்திகளை கூறுவது குற்றப்பரிகாரம் என்றும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதன்படி கந்தூரி விழாக்கள் மூலம்
வலிமார்களின் செய்திகள் மனாக்கிபுகளை கூறுவது நமது பாவத்திற்கு பரிகாரமாக அமைகின்றது.
♦ (நிச்சயமாக) நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் : 12:111)
♦ நிச்சயமாக அல்லாஹுதஆலா உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)
♦நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331
♦ உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.
நூல்கள் : அபூதாவூத் 4900, திர்மிதீ 1019, மிஷ்காத் 1678
♦அல்லாஹ் குர்ஆனில் நபிமார்கள், வலிமார்கள், ஷுஹதாக்களைப் புகழவில்லையா? குர்ஆனில் பல இடங்களில் 25 நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறி இறைவன் புகழவில்லையா? குகை வாசிகள் என்று சொல்லப்படும் இறைநேசர்களைப் பற்றி குர்ஆனில் கூறவில்லையா? எனவே ஒருவரை புகழலாம், அவரின் வாழ்க்கை வரலாறுகளை குணங்களை எடுத்துரைக்கலாம் என்று குர்ஆன், ஹதீஸ் விளக்குகின்றது.
♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் புகழ்கிறான் 'மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்'.(அல் குர்ஆன் 68:4), நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்குர்ஆன் : 94:4) மேலும் பார்க்க(சூரத்துல் லுஹா 4, அல் அஹ்ஸாப் 56, இன்னும் பல வசனங்கள் உள்ளன)
♦ ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வபாத்தான பின்பும் அவர்கள் அடிக்கடி நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள் சிலசமயம் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தோழிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.
நூல்கள்: புகாரி 3818, 6004, முஸ்லிம் 2435, திர்மிதீ 3875, 2017, மிஷ்காத் 6186
மேலே கூறப்பட்ட இவ்வாதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்கள், வலிமார்கள், ஷூஹதாக்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதும் அதை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது.
எனவே மேலே கூறப்பட்ட இவ்வாதாரங்கள் மூலமாக இறைநேசர்களாகிய வலிமார்களின் உரூஸ் தினத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். இந்த பணியைதான் கந்தூரி அன்று மக்கள் கூடி நபிமார்கள் வலிமார்கள் ஷூஹதாக்களின் வாழ்க்கை வரலாறுகளை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.
5) ஜந்தாவது அம்சம் - கொடி ஏற்றுவது
இஸ்லாத்தின் பார்வையில் கொடி ஏற்றுவதற்கான ஆதாரங்கள் பார்க்க கீழே உள்ள இந்த லிங்கை அலுத்தவும்.
www.mailofislam.com/tm_article_-_dhargakalil_kodi_etruvathu_kooduma.html
6) ஆறாவது அம்சம் - மனிதர்களுக்கு சாப்பாடு, இனிப்பு பண்டங்கள் வழங்குதல்.
மனிதர்களுக்கு சாப்பாடு வழங்குவது ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்டதா? இல்லையா? என்று ஆராய்ந்தறியத் தேவையில்லை. ஏனெனில் இறைவன் சொல்கிறான் ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள் என்று ஆகையால் உணவு வழங்குவது நல்ல அமல் என்றே இஸ்லாம் சொல்கிறது, பொதுவாக கந்தூரி வைபவங்களை உணவு பரிமாற்றம், தர்மம் கொடுக்கப்படுவதை கவனிக்கலாம்.
கந்தூரியில் ஏழைகள், உலமாக்கள்,நல்லவர்கள், நண்பர்கள்,அயலவர்கள், உறவினர்கள் உள்ளிட்டவருக்கு உணவளிக்கும் சந்தர்ப்பங்கள் இதில் இருக்கின்றன. அதனால் கந்தூரி வழங்குவதில் பின்வரும் சிறப்புக்கள் அடங்கியிருப்பதை அவதானிக்கலாம்.
சிறப்பான தர்மம், குடும்ப உறவு, அயலவரின் உறவு, முஸ்லிம்களின் குறிப்பாக ஏழைகளின் மனதைச் சந்தோஷப்படுத்தி கௌரவித்தல், சாலிஹான நல்வருக்குரிய உபகாரம், ஏழைகளுக்கு சுவையான உணவை வழங்கல், பொதுவாக முஸ்லிம் சகோதரர்கள் யாவருக்கும் உணவளித்தல், உணவில் முஸ்லிம்கள் சங்கமித்தல் ஆகவே மேற்கண்ட விடயங்கள் சொர்க்கத்தின் திருவாசலைத் திறக்கும் சாவிகளாக இருப்பது மட்டுமன்றி பஞ்சம், ஆபத்துக்கள், சோதனைகள், நோய்கள் உள்ளிட்டவைகளை விரட்டியடிப்பதுடன் அல்லாஹ்வின் கருணையையும் பாவ மன்னிப்பையும் ஈட்டித்தரும் ஆற்றல்களையும் கொண்டிருக்கின்றன. நாம் செய்யும் வினைகளினால்தான் எமக்கு சோதனைகள் வருவதாக அல்குர்ஆன் 30 :34 வசனம் கூறுகின்றது.
எமது தவறுகளால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் சோதனைகளிலிருந்து தப்புவதற்கு நன்மையான காரியங்களை அதிகமதிகமாய் நாம் செய்துவர வேண்டும். நன்மைகளை உயர்த்தும் நல்லமல்களாக தர்மம் செய்வது அன்னதானம் வழங்குவது அடங்கும் என்பதனை பின்வரும் ஹதீஸ்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
♦ நிச்சயமாக தர்மம் அல்லாஹ்வின் கோபத்தை அணைத்துவிடும். கெட்ட மரணத்தையும் தடுக்கின்றது.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : ஜாமிஉத் திர்மிதி (தர்மம் பற்றிய பாடம்), பாகம் - 01, பக்கம் - 8402
♦ நிச்சயமாக ஒரு முஸ்லிமின் தர்மம் ஆயுளை அதிகரிக்கச் செய்யும். தீய மரணத்தையும் தடுக்கும்.
அறிவிப்பவர் : அம்று இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : முஃஜமுல் கபீர், பாகம் - 17, பக்கம் - 22, 2303
♦ தர்மம் எழுபது வகையான பாவங்களைத் தடுக்கின்றது. அதில் இலகுவானது வெண், கருங்குஷ்டங்களாகும்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
ஆதாரம் : கதீப் தாரீக் பக்தாத், பாகம் - 08, பக்கம் - 27406
♦ தர்மம் கழாவில் (விதியில்) உள்ள தீயதைத் தட்டும்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அஸாகிர்,த ஹ்தீப் தாரீக் திமஷ்க், பாகம் - 05, பக்கம் 16809
♦உணவளித்தல், ஸலாம் கூறல், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் தொழுதல், இவை பாவத்தை அழிக்கக்கூடிய கப்பாறாவாகும்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : ஹாகீம், முஸ்தத்றக், பாகம் - 04, பக்கம் - 12920
எனவே உரூஸ் எனும் கந்தூரி வருட நினைவு கொண்டாடும் போது செய்யப்படும் ஆறு அம்சங்களும் இஸ்லாம் அனுமதித்த நன்மை தரக்கூடிய விடங்கள் என்று தெளிவாக விளங்குகின்றது. ஆகையால் கந்தூரி விழா என்பது எந்தவகையிலும் இஸ்லாமிய ஷரீஅத்துக்கு முரணானதல்ல என்பதை நாம் தெளிவான புரிந்து கொள்ளவேண்டும்.