MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
உள்ளத்தை உருக்கும் கர்பலா
****************************************
எழுதியவர்: Abdur Raheem Muhammad Jaufer
மாபாவி தீப்பாவி.. யஸீதுக்கு பதவிமோகம் தலைக்கடித்து விட்டது. மதீனாவில் அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருப்பேரரும் அவர்களின் பரிசுத்த குடும்பமும் இனி எக்காலத்திலும் ஆட்சி அதிகாரத்தைக் கோராமல் இருப்பதற்காக, கூண்டோடு அழித்துவிட திட்டமிட்டான் கொடியோன் யஸீத்.
இதற்காக தனக்கு விசுவாசியான ஆயிரக் கணக்கானவர்களை வைத்துக் கொண்டு சதி செய்தான்; கடிதங்களுக்கு மேல் கடிதமாக கூபாவுக்கு வருகை தருமாறு அச்சதிகாரர்களை கொண்டு அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.
.
இப்னு அப்பாஸ் رَـضِيَ الله تَعَالٰى عَنْهُ அவர்கள் தடுத்தப் போதும் இஸ்லாத்தின் கண்ணியம் காப்பதற்காக நல்லாட்சி மலர வேண்டு என்பதற்காக தன் குடும்பத்தவர்கள் 28 பேர்களுடனும் நண்பர்களுடனும் கூபா புறப்பட்டாரகள் இமாம் ஹுஸைன் رَـضِيَ الله تَعَالٰى عَنْهُ அவர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்று அறிந்தவுடனேயே தனது கட்டளை தளபதி இப்னு ஸியாதுக்கு அவர்களை சுற்றி வளைத்து தாக்கி கொல்லுமாறு கட்டளை பிறப்பித்தான் யஸீத். அக்கொடியவனும் 4000 பேர் கொண்டப் படையைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டான்.
இமாமவர்கள் கூபா வந்தடைந்தவுடன் அவர்களை கூபா வருமாறு மீண்டும் மீண்டும் அழைத்த எவரும் அங்கிருக்கவில்லை; அவர்களை யாரும் வரவேற்கவும் இல்லை. மாறாக அவர்களை வருமாறு அழைத்தவர்கள் எல்லாரும் இப்னு ஸியாதின் படையணியில் இருந்தார்கள். இமாமவர்கள் இருதலை கொள்ளி எறும்பானார்கள். தன் குடும்பத்தையும் நண்பர்களையும் தான் கொல்லப்படும் பழிபாவத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்... அதற்கு யஸீதுக்கு விசுவாசம் காட்ட வேண்டும். அல்லது இஸ்லாத்தின் தன் மானத்தைக் காப்பாற்றப் போராட வேண்டும். இறுதியில் இறுதிவரைப் போராடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள் மா வீரர் ஹுஸைன் رَـضِيَ الله تَعَالٰى عَنْهُ.
தன் குடும்பத்தையும் நண்பர்களையும் பார்த்து இவ்வாறு உரை நிகழ்த்தினார்கள்,
"எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே... ஸலவாத்தும் ஸலாமும் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னர்களுக்கே உரியது.
"என்னுடைய நண்பர்களே, உறவினர்களே, பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அஹ்லுபைத்துகளே... நாங்கள் எப்படியான இக்கட்டான நிலைமையை அடைந்துள்ளோம் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இவர்கள் முகத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள்... எம்மைவிட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டார்கள். நற்குணங்கள் பின்வாங்கி விட்டன... தீய நாட்களே எதிர் நோக்கி நிற்கின்றன. சத்தியம் இங்கு ஆட்சி செய்யப் போவதில்லை என்பதைக் காணப் போகிறீர்கள். இறுதியில் அசத்தியத்தின் கை ஓங்கி விட்டது. அல்லாஹ்வை சந்திக்கப் பேராவல் கொண்டவர்கள் நல்விசுவாசிகள் மாத்திரமே. என்னைப் பொருத்த வரையில் சந்தேகமில்லாமல் மரணம் நல்லருளாகும். கொடியோர்களுக்கு மத்தியில் வாழ்வதை மாபெரும் குற்றச் செயலாகவே காண்கிறேன்."
இந்தப் பிரபஞ்ச நாயகர் ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ அன்னவர்களின் அருமைத் திருப்பேரரை, மாது சிரோன்மணி பாத்திமாநாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அன்புக் குழந்தையை கொடியவர்கள் வெட்டினார்கள்... உயிர்தியாகம் செய்ய வைத்தார்கள். அவர்களின் அருள்மிகுந்த சிரசை கொய்து ஒரு தட்டில் வைத்து மாபாவியான இப்னு ஸியாதின் முன்னால் கொண்டு வந்து வைத்தார்கள்.
நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் கொடியவர்களை வந்து சாடுகிறது [திருக்குர்'ஆன், 11:18]
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே சொந்தமானவர்கள் அவனளவிலேயே நாம் மீழுவோம் [திருக்குர்'ஆன், 2:156]
அல்லாஹ் அவர்களைக் கொண்டு மகிழ்வானாக... அவர்களை மகிழ்வடையச் செய்வானாக.
இமாம் ஹுஸைன் رَـضِيَ الله تَعَالٰى عَنْهُ அவர்களின் உயிர் தியாகம், ஈராக்கில் ஹில்லாவுக்கும் கூபாவுக்கும் இடையில் அமைந்துள்ள கர்பலாவில், ஹிஜ்ரி 60ல் முஹர்ரம் 10ம் நாள் நிகழ்ந்தது.. அவர்களோடு சேர்த்து அஹ்லுபைத்துகள் 23 பேர் அன்றைய தினம் ஷஹீதாக்கப்பட்டார்கள்.. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஊன்.
பழியாகிய இந்த இருபத்து மூன்று பேரும் எங்கள் பரிசுத்த மாநபி கண்ணிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் புனித இரத்தச் சொந்தங்கள்; நேரடி உறவினர்கள். ஷஹீதாக்கப்பட்டவர்களில் ஸையுதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குழந்தைகளும் ஸையுயுதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பச்சிளம் மதலைகளும் அடங்குவார்கள்.
ஸையிதுனா ஸைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள். அவர்கள் கூபா புறப்பட்டு வரும் போதே சுகவீனமுற்றிருந்தார்கள். கூபா வந்தப் போது வியாதி கடுமையாகி படுத்தபடுக்கையாகி விட்டார்கள். எதிரிகள் கூடாரத்துக்குள் புகுந்து அஹ்லு பைத்துகளை தேடி தேடிக் கொன்று விட்டு, ஸையுதுனா ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹுவை நெருங்கும் போது அவர்கள் உயிர் மூச்சுக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். சாகப்போகும் அவரை வெட்டுவதில் எந்தப் பயனும் இல்லை என்று எதிரிகள் விட்டுவிட்டுச் சென்றனர்.
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் இல்லத்தரசிகளின் கண்ணீர் வெள்ளம் நைல் நதியென யூப்ரடீஸ் நதியெனப் பெருக் கெடுத்தோடியது. அவர்கள் விட்டத் துயரப் பெருமூச்சு வானுலகைக் கடந்து மதரசியாம் ஒளிச்சுடர் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவை குழுக்கி கண்ணீர் சிந்த வைத்தது. இது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த ஆத்மாவையும் பெருந்துயரத்தில் ஆழ்தியது. இதனால் வானவர்களும் ஜின்களும்கூட துயருரத் தொடங்கினார்கள்.
தன் கண்ணியமிக்க சகோதரர் ஷஹீதாக்கப்பட்டதைக் கண்டவுடன் ஸையிதத்தினா ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா, கண்ணீர் ஆறாய்ப் பெருக அந்தக் கொடிய "கொலைகாரனை நோக்கிக் கதறினார்கள்:
"கொடுங்கோலர்களே! நீங்கள் என்ன செய்து விட்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. யாரை நீங்கள் உயிர்தியாகம் செய்ய வைத்திருக்கிறீர்கள்? யாரை நீங்கள் அழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மகத்துவ மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நாளை நீதி தீர்ப்பு நாளையிலே 'நான் சென்று விட்டப் பிறகு என் வீட்டை உடையவர்களுக்கும் அஹ்லுபைத்துகளுக்கும் என்ன காரியம் செய்தாய்?' என்று கேட்கும் போது அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அன்னவர்களுடைய முகத்திலே எப்படி விழிப்பீர்கள்? அன்னவர்களுடையப் பரிந்துரையை எப்படி எதிர்பார்ப்பீர்கள்? இப்படியாகவா உங்கள் நபிக்கு உங்கள் நனறியை செயற்படுத்திக் காட்டினீர்கள்? இவ்வாறுதானா உங்கள் நேசத்தை காட்டினீர்கள்?'என் நேசராம் திரு பேரர் ஹுஸைனுக்கும் என் வீட்டை உடையவர்களுக்கும் ஒரு துளி தண்ணீர் கூட கொடுக்காமல் தவிக்க விட்டவர்களே' என்று அவர்கள் கூறும் போது, எப்படி நீங்கள் அன்னவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தடாகத்தில் நீர் கேட்டுப் போகப் போகிறீர்கள் ?"
கொடியவர்களுக்கு இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.
பொல்லா பாவி இப்னு ஸியாத் வெற்றிக் களிப்போடு, மாபாவி யஸீதின் காலடியில் சமர்பிப்பதற்காக ஸையுதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுவின் அருள் கமழும் சிரசை எடுத்துக் கொண்டு பறப்பட்டான்.
ஸல்லு அலன் நபி... صلى الله عليه و سلم