MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாமா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் தஸ்பீஹ் மணி மூலம் அல்லாஹ்வை (தஸ்பீஹ், திக்ர்) செய்வது கூடுமா? இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?
♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு
அல்லாஹ்வை (தஸ்பீஹ் - திக்ரு) செய்யும் பொழுது எண்ணிக்கைக்காக பயன்படுத்தப்படும் தஸ்பீஹ் மணி பித்அத் என்றும், ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் காலத்தில் தஸ்பீஹ் மணியெல்லாம் கிடையாது என காரணம் கூறி நிராகரிக்கின்றனர்.
எனவே வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில ஹதீஸ்களை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள் வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
♦ முஹாஜரின்களில் ஏழ்மையானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் வந்து (அல்லாஹ்வின் தூதரே!) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமா? அதற்கு அவர்கள் ஆம் சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்றார்கள்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹ் அக்பர் 33 தடவை சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம்
அந்த அடிப்படையில் அல்லாஹ்வை (தஸ்பீஹ் - திக்ரு)செய்யும் விதத்தில் தான் வழிகெட்ட வஹ்ஹாபிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது, ஆகவே கை விரல்களைக் கொண்டேதான் அல்லாஹ்வை திக்ர் செய்ய வேண்டும் என வாதிடுபவர்கள் இதற்கு ஆதாரமாக எடுத்துவைக்கும் ஹதீஸ்களை முதலில் காண்போம்.
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: திர்மிதீ, நஸயீ
♦ உங்கள் விரல்களால் எண்ணுங்கள். அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் புஸ்ரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: திர்மிதீ, அபூதாவூத்
மேலே முன்வைத்துள்ள இந்த ஹதீஸ்களில் எந்த குழப்பமும் இல்லை, இந்த வஹ்ஹாபிகள்தான் குழப்பமெல்லாம், இவர்கள் புரிந்துகொண்டதில்தான் குழப்பம்.
நமது முன்னோர்களாகிய ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப்அதாபியீன்கள், இமாம்கள் எவ்வாறு குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரிந்துகொண்டார்களோ அவ்வாறு புரிந்துகொள்ளாமல், அவரவர் தத்தமது மனோஇச்சையின்படி தனது சொந்த ஆராச்சியின்படி குர்ஆன், ஹதீஸ்களை புரிந்துகொள்ளும் பொழுதுதான் மார்க்கத்தில் பிரச்சினைகள், குழப்பங்கள் மற்றும் பிளவுகள் ஏற்படுகின்றது.
மேலும் இந்த ஹதீஸின்படி ஸஹாபா பெருமக்கள் புரிந்துகொண்டது, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) திக்ருக்கு கரத்தை பயன்படுத்த சொன்னது எண்ணிக்கைக்காகத்தான். அந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ்களின்படி திக்ரை எண்ணுவதற்காகத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தனது கரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அறியலாம்.
ஏனெனில் எந்த ஒரு அமலும் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது உடல் அதற்கு ஒத்துழைக்கவேண்டும்.
உதாரணத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிறிய ஷிர்க்கைப்பற்றி எச்சரித்துள்ளார்கள், அதாவது ஒருவர் தொழுவார் அது அல்லாஹ்விற்கின்றி அடுத்தவர் பார்ப்பதற்காக இருக்கும். ஏனெனில் அல்லாஹ் நம்மிடத்தில் பார்ப்பது நமது உள்ளத்தைத்தான், அது எந்த அமலாக இருந்தாலும் சரியே! அதுமட்டுமல்ல தஸ்பீஹ் மணி கொண்டு கை மற்றும் விரல்களால்தான் திக்ருகளை எண்ணுகிறோம் கால்களால் அல்ல என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.
♣ தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்வதை நிருத்திவிட வஹ்ஹாபிகளின் தந்திரங்களுக்கு தக்க பதிலடிககள்
தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்வதை நிருத்துவிட வஹ்ஹாபிகள் பல திட்டங்களை தமது பக்கம் வழைத்துக் கொள்வார்கள் சகோதர! சகோதரிகளே! கவனமாக இருந்து ஈமானிய உணர்வுடன் உசாராக இருங்கள்.
♦தஸ்பீஹ் மணியைக் கொண்டு திக்ரு செய்கிறேன் என்ற பெயரில் கையால் உருட்டிக்கொண்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் நாம் காண முடிகிறது என்று குழப்புவார்கள் கவனம்:-
உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். தொழும் பொழுது அல்லாஹ்வை நீ பார்க்கின்றாய் அல்லது அல்லாஹ் உன்னை பார்க்கின்றான் என்ற நிலையில் தொழவேண்டும். ஆனால் தொழுகையில் நின்றபின்தான் ஷைத்தான் உலக சிந்தனைகள் அனைத்தையும் உள்ளத்தில் போடுவான். இது ஷைத்தானால் ஏற்படும் கோளாறு, அதேபோன்றுதான் தஸ்பீஹ் மணியால் கோளாறு அல்ல, மாறாக ஷைத்தான் ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் ஆகவே உள்ளத்தை தூய்மைபடுத்தினால் சரியாகிவிடும்.
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு. இவ்வாறு இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்று கூறி வஹ்ஹாபிகள் காரணம் கட்டுவார்கள் கவனம்:-
உதாரணமாக தொழுகையின் நேரத்தை அறிய நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காட்டித்தந்த முறையை பார்ப்போம். ஹதீஸ் : ளுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சரிந்ததுமுதல் ஒரு மனிதரின் நிழல் (சரியாக) அவர் உயரத்தைப் (போன்று) ஆகின் (நேரம்) வரையிலாகும். மேலும் அஸர் நேரம் வராதவரையிலாகும். அஸரின் நேரம் சூரியன் மஞ்சள் மாறாதவரையிலாகும். மஹ்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையிலாகும். ஃபஜ்ரு தொழுகையின் நேரம், ஃபஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் உதிக்காத வரையிலாகும்.
சூரியன் உதயமாகிவிட்டால் தொழுவதை நிருத்திக்கொள் ஏனெனில் அது நிச்சயமாக ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகின்றது. என அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ, பின் அம்ரு ரலியல்லாஹூ அன்ஹூமா.
நூல்: முஸ்லிம்
மேற்கண்ட இந்த ஹதீஸிற்கு மாற்றமாக இப்பொழுது தொழுகையின் நேரத்தை அறிய கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு. அதைப்போல் ஜகாத் கணக்கிட கால்குலேட்டர், ஹஜ்ஜுக்கு செல்ல விமானம் மற்றும் பேருந்து இவைகளையெல்லாம் அந்தந்த அமலுக்கு உதவும் பொருள்தான் என விளங்கியவர்களுக்கு தஸ்பீஹ் மணி மட்டும் பித்அத் ஆக விளங்கியது ஆச்சரியமே. எனவே தஸ்பீஹ் மணி திக்ர் என்னும் அமலுக்கு உதவும் ஒரு பொருள்தான் என்பதை அறியலாம்.
♣ மேலும் மேற்கண்ட ஹதீஸ்களை ஸஹாபா பெருமக்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்ப்பதற்கு முன் பித்அத் என்றால் என்ன? என்பதை பார்ப்போம்.
குர்ஆன் அல்லது நபிகள் நாயகம் (ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் செய்யப்படும் ஒரு அமலைத்தான் (இபாதத்) பித்அத் என்று கூறப்படும். மேலும் பித்அத் இரண்டு வகைப்படும்:
1) நல்ல பித்அத் : இதனை இஸ்லாம் மார்க்கம் அனுமதித்துள்ளது. உதாரணமாக குர்ஆனை தொகுத்து நூல் வடிவில் பிரதி செய்தது, தராவீஹ் தொழுகையை ஜமாஆத்தாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்பித்தது. இதனை இஸ்லாம் மார்க்கம் வரவேற்கும் நல்ல (பித்அத்)காரியமாகும்.
2) கெட்ட பித்அத் : இதனை இஸ்லாம் மார்க்கம் அனுமதித்கவில்லை எனவே தஸ்பீஹ் மணி இன்னும் அமல்களுக்கு உதவிபுரியும் பொருட்களெல்லாம் நல்ல பித்அத் ஆகும். மேலும் தஸ்பீஹ் மணி இபாதத் அல்ல அது திக்ர் என்னும் அமலுக்கு துனைபோகும் ஒரு பொருள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
♣ திக்ர் என்னும் அமலுக்கு துனைபோகும் பொருட்கள் பற்றிய ஹதீஸ்கள் :
♦ நானும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491
♦ நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம்பழக் கொட்டைகளை குவித்து வைத்திருந்த பொழுது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தார்கள். அப்பொழுது அவர்கள் நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹை விடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட்டுமா ? என கேட்டார்கள். உடனே எனக்கு கூறுங்கள் என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'ஸூப்ஹானல்லாஹி அதத கல்கிஹி' என்று கூறு என்றார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் சஃபியா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: திர்மிதீ 3477
ஆகவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஸ்பீஹ் செய்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்தத் தடையையும் செய்யவில்லை, மாறாக அல்லாஹ்வை திக்ர் செய்யும் அமலுக்கு துனைபோகும் பொருள்களுக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது. அந்த அடிப்படையில் தஸ்பீஹ் மணி என்பதும் அல்லாஹ்வை திக்ர் செய்யும் அமலுக்கு துனைபோகும் ஒரு பொருள் என்பதை நன்றாக விளங்கி கொள்ளுங்கள்.
♦ எனவே குறைந்த எண்ணிக்கையில் திக்ர் செய்ய தஸ்பீஹ் மணி தேவையில்லை வெறும் கையினாலயே செய்யலாம். ஆனால் 100 அல்லது 1000 அல்லது 2000 என பெரிய எண்ணிக்கையில் திக்ர் செய்ய வேண்டுமெனில் வெறும் கையினால் செய்ய முடியாது என்று நம்மை விட பித்அத் என்று கூறுபவர்களுக்கு நன்றாகவே விளங்கும்.
அவர்கள் தஸ்பீஹ் மணியை தவிர வேறு எதை பயன்படுத்தினாலும் (நோட்புக், பேனா, பென்ஸில்,மெக்கானிக்கள் கெளன்டர், எலக்ட்ரானிக்ஸ் கெளன்டர்) முதலியவைகள் இவர்களின் விளக்கத்தின்படி பித்அத் ஆகும். அல்லது கைவிரலைக்கொண்டு எண்ணுகின்ற அளவுக்குத்தான் திக்ர் செய்யவேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
ஆகவே வஹ்ஹாபிகள் புரிந்துகொண்டதை ஒதுக்கிவிட்டு ஸஹாபா பெருமக்கள் புரிந்து கொண்டதை எடுத்துக்கொண்டால் வெற்றி பெறலாம். இவர்கள் கூறும் மற்ற கற்பனைகள் எப்பொழுதும் அல்லாஹ்வின் நினைவில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்தி விட்டது தம்பட்டம் அடிக்கவைப்பது அவர்களது உள்ளம்தான்.
♣ தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.
1) தஸ்பீஹ் மணி கொண்டு திக்ர் செய்வதால் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் உள்ளம் அல்லாஹ்வோடு ஒன்றிவிடுகிறது.
2) தஸ்பீஹ் மணி கையில் வைத்திருப்பதால், திக்ர் செய்ய மறந்துவிட்டாலும் மீண்டும் திக்ர் செய்ய தூண்டும் பொருளாக உதவுகிறது.
3)ஒருவர் தஸ்பீஹ் மணி மூலம் அல்லாஹ்வை திக்ர் செய்யும் பொழுது அதனை பார்ப்பவர்களுக்கும் அல்லாஹ்வை திக்ர் செய்ய வேண்டும் என்ற உணர்வு, ஆசை ஏற்படும்.
♦எனவே தஸ்பீஹ் மணியைக் கொண்டு திக்ர் செய்வதை இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த நல்ல பித்அத் என்பதை விளங்களாம். ஆனால் அதேசமயம் தஸ்பீஹ் மணியைக் கொண்டு மட்டும்தான் திக்ர் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. என கூறியவனாய் இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.