MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அகில இலங்கை ஸூன்னத் வல் ஜமாஅத் ஸுபிச உலமா சபை     

                                                  கொள்கைப் பிரகடனம்

                                                 ***************************

இலங்கையில் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 18-10-2014, 19-10-2014 ஆகிய இரு தினங்களும் நடைபெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 நிகழ்வின் போது உலமாக்களால் வெளியிடப்பட்ட ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப் பிரகடனம்.



பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர் றஹீம்


அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் உண்டாகுக.


நாம் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள். காத்தான்குடி – 05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 18-10-2014, 19-10-2014 ஆகிய இரு தினங்களும் நடைப்பெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 நிகழ்வின் பிரகடனத்தை பின்வருமாறு வெளிப்படுத்துகின்றோம்.


ஸுன்னத் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், நிலை என்பனவாகும்.


ஜமாஅத் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அஹ்லுல் பைத்துகளான குடும்பமும் தோழர்களான ஸஹாபாக்களும் பின்வந்த தாபியீன்களும் தபஉத்தாபியீன்களும் இமாம்களும் இறை ஸூபிகளும் ஏகோபித்து சொன்ன கருத்துக்களைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கின்றது.இத்தகு ஸுன்னத் வல் ஜமாஅத் உண்மையின் பக்கம் ஒன்று சேர்ந்த கூட்டமாகும்.


அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.


وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (التوبة-100)


முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்கள், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான். அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள். அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் தயார்படுத்தியிருக்கின்றான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும் (அல்குர்ஆன்- 9:100)


மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ‘பனூ இஸ்ராயீல்கள் 72 கூட்டங்களாக பிரிந்தனர் எனது சமுதாயம் 73 கூட்டங்களாக பிரியும். ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் நரகைச் சென்றடையும்.அந்த ஒன்று எது என ஸஹாபாக்கள் கேட்டபோது நானும் எனது தோழர்களும் எதில் இருக்கின்றோமோ அது’ எனக்கூறினார்கள். (துர்முதீ-2641)


மேலும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்


‘உங்களில் எனக்குப்பின் வாழ்பவர்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளை காண்பீர்கள்.(அந்த சந்தர்ப்பத்தில்) என்னுடையவும் நேர்வழி பெற்ற கலீபாக்களினதும் வழிமுறையைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.


(அபூதாவூத்-4607)


இங்கு நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறை எனக் குறிப்பிடப்படுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையிலிருந்து அனுமானிக்கப்பட்ட வழிமுறையே தவிர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறையல்ல.


மேற்குறித்த திருமறை வசனமும் நபி மொழிகளும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீபாக்களினது வழிமுறையையும் ஏனைய முஹாஜிர் மற்றும் அன்ஸாரீ ஸஹாபாக்களின் வழிமுறையையும் அவர்களைப் பின்தொடர்ந்த தாபியீன்கள், மற்றும் இமாம்களின் வழிமுறையையும் பின்பற்றுமாறு எங்களை பணிக்கின்றன.


இதுவே صراط المستقيم ஸிறாதுல் முஸ்தகீம் எனக்குறிப்பிடப்படும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் மற்றும் ஸஹாபாக்கள் தாபியீன்கள், முஜ்தஹிதுகளான இமாம் அபூஹனீபா(ரஹ்மதுல்லாஹி அலைஹி),இமாம் மாலிக்(ரஹ்மதுல்லாஹி அலைஹி),இமாம் ஷாபீ(ரஹ்மதுல்லாஹி அலைஹி),இமாம் அஹ்மத்(ரஹ்மதுல்லாஹி அலைஹி),இமாம் அபுல்ஹஸன் அல்அஷ்அரீ(ரஹ்மதுல்லாஹி அலைஹி),இமாம் அபூமன்ஸூர் அல்மாதுரீதீ(ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஆகியோரின் நேரான பாதையாகும்.


நாம் இந்த அடிப்படையிலேயே அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல்இஜ்மாஉ, அல்கியாஸ் ஆகிய இஸ்லாமிய நான்கு மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு; செயற்படுகின்றோம்.


இஸ்லாமிய அகீதாவில் இமாம் அபுல்ஹஸன் அல்அஷ்அரீ(ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களைப் பின்பற்றுகின்றோம்.

இஸ்லாமிய ஷரீஆவில் இமாம் ஷாபீ(ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களைப் பின்பற்றுகின்றோம்.



ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014


அத்துடன் நான்கு மத்ஹபுகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுவதை நாம் அவசியமாகக் கருதுகின்றோம்.


ஸுபிஸ வழி முறையில் இமாம் ஜூனைத் அல்பக்தாதி (ரஹ்மதுல்லாஹி அலைஹி), இமாம் கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஆகியோரைப் பின்பற்றுவதுடன் ஏனைய ஸுபியாக்களின் கருத்துக்களையும் மதிக்கின்றோம்.

அத்துடன் தரீக்காக்களின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளைச்செய்து அல்லாஹ் தஆலாவின் சன்னிதானத்தைச் சென்றடைவதை நாம் ஆதரவு வைக்கின்றோம்.


அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் அவனால் இறக்கிவைக்கப்பட் வேதங்களையும் அவனது றஸுல்மார்களையும் மறுமை நாளையும் நலவும் தீங்கும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளது என ஈமான் – நம்பிக்கை கொண்டுள்ளோம்.


1. இந்த அடிப்படையில் நாம் அல்லாஹ் ஒருவன், அவன் தூயவன், ஏகன், இணை துணையற்றவன், அவன் தன்னைக் கொண்டு நிலைபெற்றவன்,சிருஷ்டிகள் அனைத்தும் அவனைக் கொண்டே நிலைபெற்றுள்ளன.அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச்சமீபமாக இருக்கின்றான்.அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாக இருக்கின்றான். அவன் சிருஷ்டிகளுக்கு மாற்றமானவன்.அவனுக்கு நிகராக எந்த வஸ்துவுமில்லை அவனே கேட்பவனாகவும் பார்ப்பவனாகவுமிருக்கின்றான். அவன் காலம் இடம்,திசை,சடம் எனும் கட்டுப்பாடுகளை விட்டும் தூயவன்.அவனைக்கொண்டே தவிர அணுவும் அசையாது.சிருஷ்டிகளைப் படைக்கவேண்டிய எந்த ஒரு நிர்ப்பந்தமும் அவனுக்கில்லை.அவன் தேவையற்றவன். அவனே முந்தியவன் அவனே பிந்தியவன் அவனே வெளியானவன் அவனே உள்ளானவன், அவன் சகல வஸ்துக்களையும் நன்கறிந்தவன்.அவர்கள் இணைவைப்பதைவிட்டும் அவன் தூயவன். என உறுதிப்படுத்துகின்றோம்.


2. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் சகல படைப்புகளிலும் சிறந்தவர்கள், சம்பூரணமானவர்கள் என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


3. இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகள் கலிமா, தொழுகை, ஸகாத்,நோன்பு,ஹஜ் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.


4. சொர்க்கம்,நரகம், அர்ஷ்,குர்ஸீ, கப்றுடைய வேதனை ஸிறாத், மீஸான் போன்ற மறைவான விடயங்களை உறுதிப்படுத்துகின்றோம்.


5. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏனைய நபிமார்களும் மலக்குகளும் நல்லடியார்களும் மறுமை நாளில் அல்லாஹ் தஆலாவிடம் அவனின் உத்தரவின்படி ஷபாஅத் – மன்றாட்டம் செய்வார்கள் என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


6. நபிமார்களுக்கு முஃஜிஸத் எனும் அற்புதமும் வலிமார்களுக்கு கறாமத் எனும் அற்புதமும் அல்லாஹ் தஆலாவால் வழங்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்துகின்றோம்.


7. தறாவீஹ் தொழுகை இருபது றக்அத்கள் என்றும் இது உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களினதும் அவர்களோடிருந்த ஸஹாபாக்களினதும் இஜ்மாஉ – ஏகோபித்த முடிவு என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


8. வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் போது இரண்டு அதான்கள் சொல்வது உத்மான்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களினதும் அவர்களோடிருந்த ஸஹாபாக்களினதும் இஜ்மாஉ – ஏகோபித்த முடிவு என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


9. தனித்திருந்தும் கூட்டாகவும் அல்லாஹ்தஆலாவை திக்ர் செய்தல் அல்குர்ஆனின் கட்டளை என உறுதிப்படுத்துகின்றோம்.


10. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலும் ஸஹாபாக்கள் மற்றும் வலிமார்களிலும் அவர்கள் பாவித்த பொருட்களிலும் பறகத் – அருள் உண்டு என்றும் அவற்றின்; மூலம் அருள் பெற முடியும் என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


11. உயிரோடுள்ளவர்கள் செய்யும் நல்லமல்களான அல்குர்ஆன் ஓதுதல்,தர்மம் செய்தல் போன்ற ஏனைய அனைத்து நல்லமல்களும் மரணித்தவரைச் சென்றடையும் என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


12. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவ்லியாஉகளையும் நல்லடியார்களையும் புகழ்ந்து மௌலித் ஓதுதலும் அன்னதானம் வழங்குதலும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட நன்மை தரக்கூடிய விடயம் என்றும் உறுதிப்படுத்துகின்றோம். நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவதார தினத்தைக் கொண்டாடுவதும் அவர்களையும் அவ்லியாஉகளான நல்லடியார்களையும் புகழ்ந்து மௌலித் ஓதுதல், றாதிப் , வளீபா, ஸலவாத் மனாகிப் மஜ்லிஸ்களை ஏற்படுத்தல், அன்னதானம் (கந்தூரீ) வழங்குதல், நினைவு தினங்களில் கொடியேற்றுதல் போன்றவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட நன்மை தரக் கூடிய விடயங்கள் என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


13. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஏனைய நபீமார், றஸுல்மார்களும் நல்லடியார்களான வலிமார்களும் மறைவான விடயங்களை அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவார்கள். என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


14. அல் குர்ஆனைக் கொண்டு நோய்களுக்கு மருந்து செய்யவும் அல்குர்ஆனைக் கொண்டு ஓதிப்பார்க்கவும் அல்குர்ஆன் வசனங்களைக் கொண்டு; தாயத்து அணியவும் முடியும் என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


15. நல்லமல்களின் பொருட்டைக்கொண்டும் நபிமார்கள், ஸஹாபாக்கள் மற்றும் வலிமார்களின் பொருட்டைக் கொண்டும் வஸீலா – அல்லாஹ் தஆலாவிடத்தில் உதவி தேடமுடியும் என்றும் நபிமார்கள், ஸஹாபாக்கள் மற்றும் வலிமார்கள் நல்லடியார்களிடம் நேரடியாக உதவிதேட முடியும் என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


16. நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களினதும் ஏனைய நல்லடியார்களினதும் கப்றுகளை ஸியாரத் – தரிசித்தல் அதற்காக பிரயாணம் செய்தல் முஸ்லிமான ஆண்,பெண் இருபாலாருக்கும் அனுமதிக்கப்பட்டது என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


17. நல்லடியார்களின் கப்றுகளைச் சூழ கட்டடங்களை (தர்ஹா) அமைத்தல் அவற்றை கண்ணியப்படுத்துவதில் முதன்மையான விடயமாகும். என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


18. ஸுபிஸம் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகப்பகுதியாகும். இது உள்ளம் சம்பந்தப்பட்ட ஆன்மீக வழிமுறையாகும். உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அறிதல்,அவனை வணங்குதல், அவற்றின் மூலம் அவனை அடைவதற்கான வழிகாட்டல்களை அது வழங்குகின்றது என்றும்


இஸ்லாமிய ஸுபித்துவ வழிமுறை மனிதனில் இயல்பாக அமைந்துள்ள தீய எண்ணங்களான கோபம், பொறாமை, வஞ்சகம், வேற்றுமை, கொலை, கொள்ளை, இனவேறுபாடு போன்றவற்றைக் களைந்து, கறைபடிந்த உள்ளத்தை இறையறிவினால் பரிசுத்தப்படுத்தி இறைவனுடன் அவனைச் சேர்த்து வைப்பதற்கான போதனைகளை வழங்குகிறது.என்றும் உறுதிப்படுத்துகின்றோம்.


19. இஸ்லாம் என்பது வெளிப்புற சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமல்ல. உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அடைவதுதான் அதன் முக்கிய நோக்கமாகும். தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் மற்றுமுள்ள எல்லா வணக்க வழிபாடுகளும் அந்த நோக்கத்தை அடைவதற்கான கருவிகளாகும். இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இந்த வணக்க வழிபாடுகளை உயிரோட்டமற்ற சடங்குகளாக செய்துவருகின்றனர்.அதன் விளைவுதான் இன்று முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும் எல்லா விதமான சீரழிவுகளுக்கு காரணமாகும்.


இறைவனை அடைவதாயின் முதலில் அவனது நேசத்தைப் பெறவேண்டும். அவனது நேசத்தைப்பெறுவதாயின்; முதலில் இறைவனின் பிரதிநிதியான மனிதனை நேசிக்கவேண்டும். அத்துடன் ஏனைய படைப்புகளையும் நேசிக்கவேண்டும். அவர்களுக்கு நன்மை செய்து தீங்கிழைக்காமல் வாழுதல்வேண்டும். பின்னர் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தல்வேண்டும். உள்ளத்திலுள்ள தீய,அழுக்கான எண்ணங்களை நீக்கி, உலக ஆசாபாசங்களை நீக்கி இறைவனின் நேசத்திற்கு மட்டுமே உள்ளத்தில் இடமளிக்கவேண்டும்.


எந்நேரமும் உள்ளத்தை இறைவனின் நினைவில் வைத்திருத்தல்,இறைவனை தியானித்தல், நல்ல குணங்களையும் பண்புகளையும் வளர்த்துக்கொள்ளல், சாதி,மதம்,இனம்,நிறம்,நாடு என வித்தியாசமின்றி அனைவருக்கும் அன்புகாட்டுதல், உதவி செய்தல், தீயவர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தீங்கு ஏற்படும்போது சத்தியத்தை பாதுகாத்தல் போன்ற போதனைகளையே ஸுபிஸம் வழங்குகின்றது. என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.


20. நபிகள் நாயகம் (ﷺ) அவர்களிடமிருந்து அவர்களின் தோழர்கள் இந்த ஸுபிஸ கல்வியை முறைப்படி கற்றுக்கொண்டனர். அவர்களிடமிருந்து பின்வந்தவர்கள் கற்றுக்கொண்டனர். இப்படி நபிகள் நாயகம் (ﷺ) அவர்களிடமிருந்து இன்றுவரை இந்த ஸுபிஸ அறிவு போதிக்கப்பட்டு வரும் தொடரே தரீக்கா வழி என அழைக்கப்படுகிறது.


உலகளாவிய ரீதியில் தரீக்காக்கள் இஸ்லாமிய ஆன்மீகக்கல்வியை போதிக்கின்றன. எனவே இன்று உலக முஸ்லிம்களுக்கு மிக அவசியமான அறிவு ஸுபிஸ அறிவு எனவும் மிக அவசியமான வழிமுறை தரீக்கா வழிமுறை எனவும் உறுதிப்படுத்துகின்றோம்.


21. நபி வழித் தோன்றல்களான சங்கைக்குரிய சாதாத்மார்கள், தரீகாக்களின் ஷெய்ஹுமார்களை ஏற்று அவர்களை கண்ணியம் செய்வதுடன், தரீகாக்கள் வலியுறுத்தும் ஸுபிஸ இறை தத்துவத்தைப் பரப்புவதும் தரீக்கா வாதிகள் மத்தியில் ஒற்றுமை, புரிந்துணர்வு, அன்;பு, கருணை, தரீகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல்.


22. அல்குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மா, அல் கியாஸ் ஆகிவற்றின் அடிப்படையில் ஷரீஅத் , தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகியவை உண்மையென உறுதி செய்கிறோம்.


23. ஸுபிஸ வழிமுறைக்கு எதிரான ‘வஹ்ஹாபிஸ வழிகேடு நம் நாட்டுக்கு சாபக்கேடு’ எனவும் உறுதிப்படுத்துகின்றோம்.


24. நமது இலங்கை நாடு பல்லின மக்களும் ஒன்றாக வாழும் ஒருநாடாகும். இங்கு தற்போதைய நிலையில் பொது மக்களை சாத்விகத்தின் பால் வழிகாட்டவும், ஒற்றுமை, புரிந்துணர்வு, சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பவற்றை முஸ்லிம்களுக்கும் பிற சமூகத்தவர்களுக்கும் போதிக்கவும் வேண்டியுள்ளது. அத்துடன் பிற சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான எண்ணங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இதன் மூலமே நம் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா நம் அனைவரினது தூய பணிகளையும் அங்கீகரித்து சுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கையில் நிலைத்திருக்கவும் அதன் கூட்டத்தில் அணி திரளவும் வல்ல அல்லாஹ் அருள்வானாக. ஆமீன்