MAIL OF ISLAM

Knowledge & Wisdom



புனித பொருட்களில் பரக்கத் உள்ளதா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


நபிமார்கள், வலிமார்கள், ஷுஹதாக்களின் (முடி, செருப்பு, உடைகள்), அவர்கள் பாவித்த பொருட்கள், அவர்களுடன் சம்பந்தப்பட்ட ஞாபகச் சின்னங்களைக் கொண்டு பரக்கத் பெற்றுக்கொள்ளலாமா?

♣ இது பற்றிய வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

குர்ஆனிலோ - ஹதீதுகளிலோ நபிமார்கள், ஷூஹதாக்கல், வமார்களின் (முடி, உடைகள், அவர்கள் பாவித்த பொருட்கள், ஞாபகச் சின்னங்களை பேணி பாதுகாத்து வருவது பற்றியும், அப்படி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் அவைகளைக்கொண்டு பரக்கத் பெறுவதற்கு) ஆதாரம் இல்லை என்றும் அவ்வாறு யாராவது பரக்கத் தேடினால் அது ஷிர்க்-பித்அத் என்று கிருக்குப்பிடித்த முட்டாள் வஹ்ஹாபிகள் கூறுவது குர்ஆன், ஹதீஸ்களின் சரியான அறிவு இல்லாததே காரணம் ஆகும்.


​​முந்தைய நபிமார்கள், வலிமார்கள் உபயோகித்து வந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவற்றின் பொருட்டைக் கொண்டு உதவி தேடப்பட்டு பரக்கத் பெற்று வந்தது என்பதற்கு அல்குர்ஆனில் ஹதீஸில் தெளிவான ஆதாரம் உண்டு.

இவ்வுலகில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றி மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருப்பதில்லை. வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் இல்லாமல் இருப்பதில்லை. இப்படி ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர்.


​​ஆகவே நம் வாழ்வில் இந்த குறைகளை இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி முறை இருக்கிறது. இந்த குறை எவ்வாறு போக்குவது? படைத்தவனின் உதவியின்றி இக்குறையை போக்க முடியாது. அவனின் அருள் வளம் ரஹ்மத், நபிமார்கள் வலிமார்கள் ஷூஹதாக்களின் துஆ (பரக்கத்) நமக்கு கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் நன்மையை காணலாம்.


​​இறைவனின் மறைமுகமான அந்த அருள்வளம் - ரஹ்மத் நபிமார்கள் வலிமார்கள் ஷூஹதாக்களின் துஆ (பரக்கத்) நமக்கு கிடைப்பதற்குரிய வழி என்ன? என்பதை அறிந்தால் பரக்கத்தை பெற்றுக் கொள்ள நாம் முயற்சிக்கலாம். இதற்கு மக்களிடம் இருக்கும் வழிமுறைகள் என்ன? நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காட்டிய வழி முறைகள் என்ன? என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

♣ ரஹ்மத் என்றால் என்ன?

உங்களை உலகத்தாருக்கு ஒரு ‘றஹ்மத்’ அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை. (திருக்குர்ஆன் 21;107)

இத்திரு வசனத்தை உரிய முறையில் ஆராய்ந்தால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கால் நகம் முதற் கொண்டு தலைமுடிவரையுள்ள சகல உறுப்புக்களிலும் ‘பறகத்’ அருள் உண்டென்பது தெளிவாக விளங்கும். மேலே கூறிய திரு வசனத்தில் ‘உங்களை அருளாக அனுப்பியுள்ளோம்’ என்றுதான் அல்லாஹ் கூறியிருகின்றானேயல்லாமல் உங்களில் அருள் இருக்கிறதென்றோ உங்களுடைய கையில் அருள் இருக்கிறது என்றோ அவன் கூறவில்லை.


​​‘உங்களை’ என்று அல்லாஹ் முன்னிலைப்படுத்தியது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையேயன்றி அவர்களின் கையை மட்டுமோ அல்லது காலை மட்டுமோ அல்ல. ‘உங்களை’ என்ற சொல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முழுமையாக குறிக்கின்றதேயல்லாமல் அவர்களின் ஒரு சில உறுப்புக்களை மட்டுமோ பாதி உடலை மட்டுமோ குறிக்காது. எனவே “உங்களை றஹ்மத்தாக அனுப்பினோம்’ என்ற இறை வசனத்தின் அர்த்தம் நீங்கள் முழுமையாகவே உலகத்தாருக்கு றஹ்மத்தாக இருக்கின்றீர்கள் என்தேயாகும். இந்த விபரத்தின்படி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால் வரையிலான சகல உறுப்புக்ளையும் ஒன்று சேர்த்துக் கொண்ட உடலையே “உங்களை” என்றசொல் குறிப்பதால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சகல உறுப்புக்களிலும் பறகத்தும், றஹ்மத்தும் உண்டென்பது தெளிவாகிவிட்டது.


​​

♣ தபர்ருக் என்றால் என்ன?

"தபர்ருக்" என்ற வார்த்தை பரக்கத்தை தேடுவது என்ற பொருள் படும். நபிமார்கள் நல்லோர்கள் விட்டுசென்ற பொருளை ஆசாரே முபாரக் என்று நாம் கூறுகிறோம். இவ்வாறு அவர்கள் விட்டு சென்ற பொருளை பாதுகாத்து வைக்க, அதன் மூலம் அல்லாஹ்விடமிருந்து பரக்கத்தை பெற, நோயாளிகளுக்கு நிவாரம் தேட மார்கத்தில் ஆதாரம் உண்டு.

♣ நபிமார்கள் உபயோகித்து வந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதற்குறிய ஆதாரம்

குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ நபிமார்கள், வலிமார்களின் முடி,உடைகள்,அவர்கள் பாவித்த பொருட்கள், ஞாபகச் சின்னங்களை பேணி பாதுகாத்து வருவது பற்றியும், அப்படி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் அவைகளைக்கொண்டு பரக்கத் பெறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுபவர்கள் குர்ஆன், ஹதீஸ்களின் சரியான அறிவு இல்லாததே காரணம் ஆகும்.


​​முந்தைய நபிமார்கள், வலிமார்கள் உபயோகித்து வந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவற்றின் பொருட்டைக் கொண்டு உதவி தேடப்பட்டும் வந்தது என்பதற்கு அல்குர்ஆனில் தெளிவான ஆதாரம் உண்டு.

♦ (இன்னும்) , அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.  (அல்குர்ஆன் : 2:248)

♦ குறிப்பு :- இந்த வசனத்தில் குறிப்பிடப்படுகின்ற நபி மூஸா நபி ஹாரூன் அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரது ஞாபகச் சின்னங்கள் என்பது குறித்து திருமறை விரிவுரையாளர்கள் அனைவரும் ஒத்தக் கருத்தையே கொண்டுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் பின்வருமாறு:- பலகைத்துண்டுகள், மூஸா நபியின் கம்பு, ஆடைகள், தௌராத் வேதத்தின் ஒரு பகுதி, மூஸா நபியின் செருப்புகள், ஹாரூன் நபியின் தலைப்பாகை, மேலங்கி ஆகும் (ஆதாரம்: தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் மதாரி;குத் தன்ஸீல்,தப்ஸீர் லுபாபுத் தஃவீல், தப்ஸீருல் பைளாவி).


​​எனவே இந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு, பெட்டியினை முன்னால் வைத்து உதவி தேடுவர் வெற்றியும் பெறுவர் என்று காணக் கிடக்கிறது நபிமார்களின் புனிதப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்கு குர்ஆன் கூறும் அத்தாட்சியே இதுவாகும். ஒருவர் விட்டு சென்ற பொருளை அழித்துவிடவேண்டும் அல்லது அதை பாதுகாப்பது மார்கத்தில் முரண் என்றால் அல்லாஹ் ஏன் மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டு சென்றதை பாதுகாக்கவேண்டும்.


​​எனவே மேற்கண்ட வசனம் தெளிவாக நமக்கு உணர்த்தவரும் செய்தி, நபிமார்கள் மட்டுமல்ல நல்லடியார்கள் விட்டு சென்ற பொருளை பாதுகாப்பதும் கூடும் என்பதாகும்.

♦ உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலார் பெருமாணார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரு காலுறைகள், ஒரு கம்பு, ஒரு வாளுறை இருந்தன. அவற்றை அவர்கள் மிகக் கண்ணியத்தோடு பாதுகாத்து அவற்றை தினமும் பார்வையிடவும் செய்வார்கள். சிறப்பு விருந்தினர்கள் யாராவது வருகை தரும் போது 'யார் மூலம் உங்களை கண்ணியப்படுத்தினானோ அவரின் அனந்தப் பொருட்கள் இவை' என்று கூறுவார்கள்.  (நூல் : றூஹுல் ஈமான் பக்கம் 2)

​​

♦(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 17:1)

♣ நபிமார்களின் பாவித்த ஆடைகள் மூலம் அல்லாஹ்விடமிருந்து பரக்கத்தை பெற, நோயாளிகளுக்கு நிவாரம் தேட ஆதாரம்

♦யூசுஃப் நபியின் பிரிவை நினைத்து கண் பார்வையை இழந்த தந்தை எஃகூப் நபியின் முகத்தில் யூசுஃப் நபியின் பரக்கத் நிறைந்த கண்னியமான சட்டையை முகத்தில் போட்டபோது கண் பார்வை மீண்டும் வந்த நீண்ட வரலாற்று செய்தி.

“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).  (அல்குர்ஆன் : 12:93)


​பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்.  (அல்குர்ஆன் : 12:96)

♦ கைபர் போரின் பொழுது ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்களின் இரு கண்களிலும் தங்கள் எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண்வலியிலிருந்து குணமடைந்தார்கள்.

நூல்: ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்த ஜூப்பா மூலம் அல்லாஹ்விடமிருந்து பரக்கத்தை பெற, நோயாளிகளுக்கு நிவாரம் தேட ஆதாரம்

​ 

ஹழ்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு கைஸான் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக்கு சொன்னார்கள்: இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய ஜுப்பா. இது ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்களுடைய மரணத்திற்கு பிறகு அதை நான் எடுத்து கொண்டேன். இதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அணியக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஜுப்பாவை நோயாளிகளுக்கு கழுவிக் கொடுத்து நாங்கள் நோய் நிவாரணத்தை தேடி கொள்வோம். அவர்கள் அதன் மூலம் சுகமும் பெறுகின்றனர் என கூறினார்கள்.


​(ஸஹிஹ் முஸ்லிம் பாகம் 2, பக்கம் 190, மிஷ்காத் பக்கம் 374) ஆகவே இந்த ஹதீஸின் மூலம் ஸாலிஹீன்களின் உடைகளைக் கொண்டும், ஞாபகச் சின்னங்களைக் கொண்டும் பரகத் பெற ஆதாரமிருக்கிறது.


​​

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்ட உணவு மூலம் அல்லாஹ்விடமிருந்து பரக்கத்தை பெற, நோயாளிகளுக்கு நிவாரம் தேட ஆதாரம்

பேச்சு சரியாக வராத ஒரு பெண்மணி அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தாள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சுடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணி, 'எனக்கும் சிறிதளவு உண்ணுவதற்கு அளிக்கக்கூடாதா?' என்று கேட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமக்கு முன்னால் இருந்த உணவிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு அப்பெண்மணி, 'தங்களின் வாயில் உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், தங்கள் வாயிலுள்ள உணவை வெளியாக்கி, அப்பெண்ணிடம் கொடுத்தார்கள். அப்பெண் அதனை தன் வாயில் போட்டுக் கொண்டார். அதனை சாப்பிட்டு விட்டார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம் போய்விட்டது!


​​நூல் : தப்ரானி 


​​

♣ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத இடத்த்தில் தானும் தொழுது பரகத் பெற ஆசைப்பட்ட நபித்தோழர்

இத்பான் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! நான் எனது சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக்காலங்களில் எனக்கும் என் சமூகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே இறைத்தூதர் அவர்களே! தாங்கள் என் இல்லத்திற்கு ஓர் இடத்தில் தொழவேண்டும். அவ்விடத்தை (என்னுடைய) தொழுமிடமாக நான் ஆக்கி கொள்ள விரும்புகிறேன் என்றேன். “இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்க கூறிவிட்டு மறு நாள் சூரியன் உயரும்போது அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே “உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென விரும்புகிறீர்? என்று கேட்டார்கள். வீடிங் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் (அவ்விடம் நின்று) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்களாக அவர்கள் தொழுகை நடத்திய பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.


​​நூல் : புஹாரி ஹதீஸ் எண்: 425 


புஹாரி ஷரீபின் பிரபல்யமான விரிவுரை நூலில் அதை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் இந்த ஹதீஸிற்கு பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள். ِநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத அல்லது பாதம் பட்ட இடத்தை கொண்டு பரகத் பெறலாம் என்று இருக்கிறது. மேலும் ஒரு நல்லடியாரை பரக்கத்திராக (ஒரு காரியத்திற்கு) அழைக்கபட்டால் (அவர் சென்றால்) குழப்பம் ஏற்படாது என்ற சூழலில் அவர் அங்கு செல்லலாம் என்ற கருத்து இந்த ஹதீஸிலிருந்து கிடைக்கிறது. மேலும் ஒரு ஆலிம் அல்லது மார்க்க அறிஞர் ஒரு மகால்லா வாசியின் வீட்டிக்கு வரும்போது மற்றவர்கள் அந்த வீட்டிற்கு வந்து கூடி அந்த ஆலிம் அல்லது மார்க்க அறிஞரிடமிருந்து மார்க்க சார்ந்த பலன்களை பெறுவதும், பரகத் பெறுவது (கூடும் என்ற கருத்து) இந்த ஹதீஸில் உள்ளது.


​​நூல்: பத்ஹுல் பாரி பாகம்:1 பக்கம்:522, 523


​​

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாய் வைத்து குடித்த அதே பாத்திரத்தில் அவர்களின் பரக்கத்தை பெற தானும் வாய் வைத்து குடிக்க ஆசைப்பட்ட தோழர்கள்

♦  அபூபுர்தா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள். “ நான் மதீனா சென்று இருந்தேன். அங்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம். “ வீட்டிற்குப் போகலாம் (வாருங்கள்). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருந்திய ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு நான் அருந்தக் கொடுப்பேன், மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தொழுத பள்ளிவாசலில் நீங்கள் தொழலாம்” என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் எனக்கு (அரைத்த) மாவு பானத்தை அருந்தக் கொடுத்தார்கள். பேரீச்சம் பலத்தை உண்ணக் கொடுத்தார்கள். அவர்களின் பள்ளிவாசலில் தொழுதேன்.


​​நூல் புஹாரி எண்: 7431


​​ஆகவே உத்தம நபியின் உமிழ் நீர் பரக்கத்தை பெற சஹாபாக்கள் அந்த பாத்திரத்தை பாதுகாத்து வந்தார்கள். நபி ஸல்லல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பயன்படுத்திய பொருளை பாதுகாத்தது மட்டுமல்லாமல் பின்னால் வந்த சந்ததிகளுக்கு அதை கற்றுகொடுத்தார்கள்.

♦ ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றபொது, “நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை எத்துனைத் துணிகளில் க்ஃபன் செய்தீர்கள்?” என்று அவர் கேட்டார். “வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்.” அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம், “நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எந்தக் கிழமையில் மரண மடிந்தார்கள்?” எனக் கேட்டார். நான் “திங்கட்கிழமை” என்றேன். “இன்று என்ன கிழமை?” என்று கேட்டதும் நான் “திங்கட்கிழமை” என்றேன். அதற்கவர் “இன்றிரவிற்குள் (என்னுடைய மரணம்) நிகழும் என எண்ணுகிறேன்” என்று கூறிவிட்டுத் தாம் நோயுற்றிருந்தபோது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார். அதில் குங்குமப்பூவின் கரை படிந்திருந்தது. இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரண்டு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபணிடுங்கள்” எனக் கூறினால். நான் “இது பளையதாயிற்றே” என்றேன். அதற்கவர், “மய்யித்தைவிட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதிடையவர். மேலும், அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீளுக்கி போகும்” என்றார். பிறகு அன்று மாலை வரை மரணிக்க வில்லை. செவ்வாய் இரவில்தான் மரணித்தார். அன்று காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்.


​​நூல்: புஹாரி எண்: 1387

இந்த ஹதீஸின் விளக்கத்தில் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் கூறிகிறார்கள். “வெள்ளை ஆடையில் கபனிடுவது, மூன்று துணியில் கபனிடுவது, பரகத்திற்காக (அந்தஸ்த்தில்) உயர்ந்தவர்கலாக இருப்பவர்களுக்கு நடந்ததை போன்று தனக்கும் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆகிய விஷயங்கள் முஸ்தஹப் என்ற கருத்து இந்த ஹதீஸில் உள்ளது”.


​​நூல் பத்ஹுல் பாரி பாகம்: 3 பக்கம்: 254

♦ “ தோலினால் செய்யப்பட சிவப்பு நிற மேலங்கியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அணித்திருக்கப் பார்த்தேன். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் உளூச் செய்த தண்ணீரை பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எடுத்து செல்வதையும் அந்தத் தண்ணீரை எடுப்பதில் மக்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் கண்டேன். அந்தத் தண்ணீரைப் பெற்றவர் அதைத் தங்களின் உடம்பில் தடவினார். அந்த தண்ணீரை பெறாதவர் தண்ணீரைப் பெற்ற தம் நண்பரின் கையில் உள்ள ஈரத்தை தொட்டு(த் தடவிக்) கொண்டார்.

நூல்: புஹாரி எண்: 376

♦ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு நாள் நடுப்பகலில் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதில் அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து மக்கள் எடுத்து அதை தங்களின் மீது தடவிகொண்டார்கள். என்று அபூ ஜுஹைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்.

நூல்: புஹாரி எண்: 187

இமாம் பத்ருத்தீன் ஐணீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தன்னுடைய புஹாரி விரிவுரை நூல் உம்ததுல் காரியில் குறிப்பிடுகிறார்கள் “ நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் உளூச் செய்த தண்ணீரை சஹாபாக்கள் எடுத்திருப்பது அதைக்கொண்டு பரகத் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் செய்திருக்கிறார்கள். தண்ணீர் சுத்தமானது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பரகத் பொருந்திய கையை வைத்த பாரகத்தால் இன்னும் சுத்தம் அதிகமாகியது. இரண்டாவது நல்லோர்கள் பயன்படுத்திய பொருள்களை கொண்டு பரகத் தேடுவது கூடும் என்பதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் உள்ளது.”


நூல்: உம்ததுல் காரி பாகம்: 3 பக்கம்: 75 


​​மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொட்ட கைபட்ட அந்த தண்ணீர் பரகத் பொருந்தியது. அவைகளை சஹாபாக்கள் பரகத்திர்காக போட்டிபோட்டுக்கொண்டு பெற்றார்கள் பெறாதவர்கள் கூட அந்த பரக்கத்தை பெற்றவர்களை தொட்டு பெற்றுக்கொண்டார்கள் என்று புஹாரி ஹதீஸ் நமக்கு தெளிவாக கூறிகாட்டுகின்றது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியின் மூலம் அல்லாஹ்விடமிருந்து பரக்கத்தை பெற, நமது வாழ்கையில் வெற்றி கிடைக்க ஆதாரம்

நபித்தோழர் ஹாலித் பின் வலீத் (றழியல்லாஹு லாஹு அன்ஹு) அவர்களின் தொப்பியில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தலைமுடிகளில் சில முடிகள் இருந்தன. ஒரு யுத்தநேரம் அவர்களிடமிருந்து அந்தத் தொப்பி தவறிவிட்டது. அதனால் காலித் பின் வலீத் ஆத்திரமடைந்தவராகக் காணப்பட்டார்.அங்கிருந்த நபீத்தோழர்கள் தொப்பி காணாமற் போனதற்காக காலித் இவ்வாறு கோபப்படுகிறார் என்று பேசிக்கொண்டனர். இதைக்கேட்ட காலித் இப்னு வலீத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி “தொப்பி” காணாமற் போனதற்காக நான் கவலைப்பவோ கோபப்படவோ இல்லை. அதில் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலை முடிகளிற் சில முடிகள் இருக்கின்றன. அதன் “பறகத்” தவறிவிடுமென்றும் அது காபிர்களிடம் போய்விடும் என்று அஞ்சுகிறேன்” என்றுசொன்னார்கள்.


​​அறிவிப்பு : ஹழ்ரத் காழி இயாள் (றழியல்லாஹு அன்ஹு)

ஆதாரம் ;- அஷ்ஷிபா, தபறானி 9: 349, ஹாகிம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருமுடியின் மூலம் அல்லாஹ்விடமிருந்து பரக்கத்தை பெற, நோயாளிகளுக்கு நிவாரம் தேட ஆதாரம்

♦ ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மவ்ஹிப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். எனது மனைவி ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை என்னிடம்கொடுத்து உம்மு சல்மா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அனுப்பிவைத்தாள். ஒருவனுக்கு கண் திரிஷ்டி அல்லது ஏதோ ஒன்று ஏற்படுமாயின் இவ்வாறு தண்ணீர்ப் பாத்திரம் ஒன்றை உம்மு சல்மாவிடம் என் மனைவி அனுப்புவது வழக்கம். அதேபோல் தான் என்னையும் அனுப்பிவைத்தாள் உம்மு சல்மா அவர்கள் எனது தண்ணீர்ப் பாத்திரத்தைக் கண்டதும் தன்னிடமிருந்த வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து அதில்வைக்கப்பட்டிருந்த நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடியை எடுத்து நான் கொண்டு சென்ற தண்ணீர்ப் பாத்திரத்தினுள் அதைவிட்டு அசைத்தார்கள் அப்பொழுது நான் பாத்திரத்தினுள் எட்டிப்பார்த்தேன் அங்கு சிவந்த முடிகள் இருப்பதை கண்டேண் என்று சொன்னார்கள்.


​​ஆதாரம்: புஹாரி 5896, மிஷ்காத், மேலும் பார்க்க புகாரி ஓரக் குறிப்பு பக்கம் 875

♦பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இத்திரு முடி, அன்னாரது மறைவுக்குப் பின்னரே அதிகமாக நரைத்திருக்கிறது. ஏனெனில் அன்னை உம்மு ஸல்மா ரலயில்லாஹு அன்ஹா அவர்கள் அத்திருமுடியை அளவுகடந்து கண்ணியப்படுத்தும் பொருட்டு அம்முடிக்கு அத்தர் பூசுபவர்களாக இருந்ததாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்புச் செய்வதை (நூல் : புகாரியின் ஓரக்குறிப்பிலும் பக்கம் 875, இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் முஸ்லிமுக்கு எழுதிய விரிவுரை (பாகம் 2 பக்கம் 254) யிலும் காணலாம்.

♦ நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் “காதிம்” பணியாளர் ஹஸ்ரத் அனஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடியை தன்னுடன்வைத்து அடக்க வேண்டுமென்று வஸிய்யத் இறுதி உபதேசம் செய்தார்கள்.


​​நூல் : புகாரி

♦நான் அபீதாவிடம் சொன்னேன், எங்களிடம் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாகவோ, அவர்களது குடும்பத்தினர் மூலமாகவோ பெற்ற அண்ணலாரின் திருமுடி ஒன்று உள்ளது. உலகில் உள்ள அனைத்துப் பொருளையும் விட இத்திருமுடி என்னிடம் இருப்பது மேலானது' என்று இப்னு ஸிரீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.


​​நூல்: புகாரி

♦ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹஜ்ஜின் போது) மினாவில் கல்லெறிந்து விட்டு தம் இருப்பிடம் வந்து ஒட்டகை அறுத்த பின்னர், நாவிதரை அழைத்து தமது சிரசின் வலப்பக்கத்து முடியினை சிரைத்தெடுக்கச் கூறினார்கள்.

அபூதல்ஹா அன்சாரி என்ற தோழரை அழைத்து சிரைத்த அம்முடியைக் கொடுத்தனர். பின் இடது பக்கத்தையும் மழித்து அந்த முடியையும் அபூதல்ஹா அவர்களிடம் கொடுத்து மக்களுக்கு அவற்றைப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சொன்னார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி, முஸ்லிம்

குறிப்பு :- இதன் மூலமாக அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தம் திருமுடிகளை பங்கிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தியதை அறிந்து கொள்ளலாம். அண்ணலாரின் முடிகள் பாதுகாக்கத் தகுந்ததல்ல பரக்கத் பெறுவது கூடாது அவைகள் பொருட்டினால் உதவி தேடமுடியாது என்றிருக்குமானால் நாயகமே தோழரை அழைத்து மக்களுக்கு அவற்றைப் பங்கிட்டுக் கொடுக்குமாறு கொடுப்பார்களா?

♦ முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் லுங்கி, சட்டை, மேலாடை, சில திருமுடிகள், நகங்கள் இருந்தன. முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் உயிர் பிரியும் நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சட்டையால் என்னை கபனிடுங்கள், மேலாடையால் என்னை சுற்றி லுங்கியை எனக்கு உடுத்துங்கள். எனது கண்ணிலும், கன்னத்திலும், நெற்றியிலும் அண்ணலாரின் திருமுடியையும் நகங்களையும் வையுங்கள். எனக்கும் அர்ஹமுர்ராஹிமீனுக்குமிடையே நேசத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினார்கள்.


​நூல்: இக்மால் பக்கம் 617


♦ அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடி கீழே விழாதவாறு தாங்கி பிடித்து பரக்கத்திற்காக பாதுகாத்து வைக்கும் வழக்கம் சஹாபாக்களிடம் இருந்தது.

​ 

ஷரஹ் முஸ்லிம் பாகம் 2 பக்கம் 256

♦ அண்ணலாரின் அன்பு மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்து, 'நீங்கள் மூன்று தடைவ அல்லது ஐந்து தடைவ அல்லது அதை விட அதிகமாக குளிப்பாட்டுங்கள். நீரையும், சீயக்காயையும் போட்டு நீர் ஊற்றி விட்டு இறுதியில் கற்பூரத்தை வையுங்கள். எல்லாம் முடிந்து விட்டால் எனக்குத் தகவல் கொடுங்கள் என்று கூறினர். அனைத்தும் முடிந்தபோது அண்ணலாரை அழைத்தோம். அண்ணலார் தமது வேட்டியைத் தந்து அதை அன்னாருக்கு ஞாபகச் சின்னமாக அணிவித்து விடுங்கள் என்று சொன்னார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 304


​​இந்த ஹதீஸில் ஸாலிஹீன்களின் உடைகள், ஞாபகச் சின்னங்களைக் கொண்டு பரக்கத் பெறுவது ஆகும் எனபதற்கு ஆதாரமிருக்கிறது.


​​ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 305

​​

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறிபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்.


ஹழ்ரத் ​​அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல் புகாரி 200

♦ எனவே புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன அவைகளை சுருக்கமாக சொல்கிறேன். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரத்தைக் கொண்டு கலீபாக்கல் பரக்கத் பெற்றார்கள். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உதிரங்களை ஸஹாபாக்கள் குடித்து பரக்கத் பெற்றனர்.

இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வேர்வையினை அத்தராக மேணியில் பூசி பரக்கத் பெருபவர்களாக இருந்தார்கள், ஆகவே நபிமார்கள், வலிமார்கள், இமாம்கள் நாதாக்கள் பாவித்த புனித பொருட்கள் அவர்களுடன் சம்பந்தப்பட்ட பொருட்களை பாதுகாத்து அதன் மூலம் உதவி தேடி நமது வாழ்கையில் பரக்கத் பெற்றுக்கொள்வோமாக!