MAIL OF ISLAM

Knowledge & Wisdom



© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.

புகைப்படம் எடுக்கலாமா ?  ஓவியம் வரையலாமா ?


எழுதியவர்: முஹம்மத்  ரஹ்மான்  (இலங்கை)


‘ஓவியக்கலையின் பரிணாம வளர்ச்சியே புகைப்படக்கலை’ என்று விளங்கும். அறிஞர்களில் சிலர் ‘புகைப்படங்கள் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டவை’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். ஹதீஸ் விளக்கத்தில் ஆழ்ந்த ஞானமிக்க அறிஞர்களில் சிலர் இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டுள்ளனர்.


‘ஓவியக்கலையின் நவீன வளர்ச்சி தான் புகைப்படக்கலை என்பதை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அது புகைப்படங்களை கட்டுப்படுத்தாது’ என்பது இவர்களின் நிலைப்பாடு.


ஹதீஸ்களின் வாசக அமைப்பையும், அது சொல்லப்பட்டுள்ள விதங்களையும் சிந்திக்கும்போது இரண்டாவது கருத்துதான் சரியானது என்பதை புரிந்துக் கொள்ளலாம். இதுபற்றி ஒரு தெளிவை பெறுவதற்காக விரிவாக அணுகுவோம்.


உருவப்படங்களும் நாயும் உள்ள வீடுகளில் வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஹழ்ரத் இப்னு அப்பாஸ், அபூதல்ஹா, அபூஸயீத் (ரலியல்லாஹு அன்ஹு) போன்ற சில நபித்தோழர்கள் அறிவிக்கும் இச்செய்தி பல நூல்களில் வருகிறது.  பார்க்க புகாரி 2956, 2957, 5182


யாரேனும் உருவப்படம் வரைந்தால் மறுமையில் அந்த உருவத்துக்கு இறைவன் உயிர் கொடுக்க சொல்லுவான். வரைந்தவரால் ஒரு காலமும் உயிர் கொடுக்க முடியாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.


​ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

புகாரி 2225


இந்த இரண்டு செய்திகளிலும் பொதுவாக உருவங்கள் என்ற வார்த்தையே வந்துள்ளன. எல்லாவிதமான உருவங்களையும் இந்த வார்த்தை கட்டுப்படுத்தவே செய்யும். ஆனாலும் உருவப்படங்கள் என்ற வார்த்தையை நபிநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை மற்ற ஹதீஸ்கள் விளக்குகின்றன.


நான் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அங்கு வந்தார்கள். திரைக்கு பின்னே என் விளையாட்டு பொம்மைகள் இருப்பதை பார்த்து ஆயிஷாவே! இது என்ன? என்றார்கள். ‘எனது விளையாட்டு பொம்மைகள்’ என்றேன். ‘அது என்ன ஒரு குதிரை பொம்மைக்கு இரண்டு இறக்கைகள் இருக்கின்றதே..!’ என்றார்கள். ‘ஏன் நபி சுலைமானிடம் இருந்த குதிரைக்கு இரண்டு

இறக்கைகள் இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா..?’ என்றேன். இதை கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கடவாய் பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்து விட்டு சென்றார்கள்.


ஹழ்ரத் அபூ ஸலாமா ரலியல்லாஹு அன்ஹு

நூல்: அபூதாவூத்


எங்களிடம் பறவைகள் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு திரை சீலை இருந்தது. வீட்டில் நுழைபவர்கள் கண்ணுக்கு அது தெரியும். இதைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ’இதை அப்புறப்படுத்து, இதை நான் காணும் போதெல்லாம் உலக நினைவுதான் வருகிறது’ என்றார்கள்.

ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா

நூல்: முஸ்லிம்


பொதுவாகவே உருவப்படங்களை வரையவேக் கூடாது, வைத்திருக்கவே கூடாது என்பது இஸ்லாத்தின் சட்டமாக இருந்தால் உருவங்களை கண்டவுடன் அவற்றை அழிக்கும் வேலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறங்கியிருப்பார்கள். தீமையை களைவதில் அவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள், இருக்க வேண்டும் – என்ற உண்மையோடு இந்த நபிமொழிகளை அணுகும் போது ‘வரைவதற்கும், வைத்துக் கொள்வதற்கும் தடை செய்யப்பட்ட உருவங்கள் இவையல்ல’ என்பதை விளங்கலாம்.


பொம்மைகள் என்ற உருவங்கள் உருவாக்கப்பட்டு அவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டில் இருக்கின்றன. அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காண்கிறார்கள் ‘உருவங்கள் வரைபவரை, உருவாக்குபவரை மறுமையில் இறைவன் தண்டிப்பான்’ என்று தாம் கண்டிக்கும் ஒரு காரியத்தின் வடிவமே தம் வீட்டில் இருக்கிறது. அதை பார்த்து, அதுபற்றி கேள்வி கேட்டு, சிரித்து அங்கீகரித்து விட்டு செல்கிறார்கள் என்றால், அவர்கள் கண்டித்து எச்சரித்துள்ள உருவங்கள் இவையல்ல என்று விளங்குவதில் மாற்று கருத்து இருக்க முடியாது.


வீட்டு திரை சீலையை நீக்க சொன்னதற்கு காரணம் கூட அதில் பறவை உருவங்கள் இருக்கின்றன. என்பதற்காக அல்ல. உலக நினைவை இது அதிகப்படுத்துகின்றது என்பதுதான். உலக நினைவை அதிகப்படுத்தும் எதிலும் நாம் ஐக்கியமாகி விடக்கூடாது என்பதற்கான சட்டம்தான் இந்த செய்தியில் அடங்கியுள்ளது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளது பொதுவான எல்லா உருவங்களையும் அல்ல என்பதை இன்னுமொரு ஹதீஸூம் கூறுகின்றது.


உருவப்படங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்ற செய்தியை அறிவிக்கும் ஸைத் பின் காலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டிற்கு, அவர்களின் உடல் நலன் பற்றி விசாரிக்க நான் சென்றேன். அவர்கள் வீட்டு வாசலில் தொங்கிய திரை சீலையில் உருவப்படங்கள் இருந்தன.  இதைக்கண்ட நான் அங்கு இருந்த உபைதுல்லாவிடம் (இவர்கள் அண்ணை மைமுனா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வளர்ப்பு மகன்) ‘இவர்கள்தான் உருவப்படங்கள் குறித்து எச்சரித்தார்கள்’. (அவர்களி வீட்டிலேயே மாற்றமாக நடக்கின்றதே!) என்றேன். அதற்கு உபை,‘ 'துணியில் இருக்கும் சிறியப் படங்களைத் தவிர’ என்று ஸைத் கூறியதை நீர் அறியவில்லையா..? என்று கூறினார்கள்.

ஹழ்ரத் பிஸ்ர் பின் ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு

ஆதாரம் புகாரி 3226


இதுவரை நாம் எடுத்துக்காட்டிய செய்திகளிலிருந்து வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் எந்த உருவங்களுக்கும் தடையில்லை என்பதை விளங்கலாம். எதை வைத்துக் கொள்ள அனுமதியுள்ளதோ அதை உருவாக்கிக்கொள்ளும் அனுமதியும் அதற்குள்ளேயே அடங்கி இருப்பது அதற்குரிய சட்ட விதியாகி விடுகிறது. இதில் அறிஞர்களுக்கு மத்தியில் மாற்று கருத்து இருக்காது என்று நம்புகிறோம்.


இந்த அடிப்படையில் விளையாட்டு பொம்மைகளை வடிவமைப்பதோ, அவற்றை விற்பதோ, பாட புத்தகங்களில் உருவப்படங்கள் வரைவதோ, உருவப்படங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதோ, கார்ட்டூன்கள், போடுவதோ, உருவப்படங்கள் உள்ள கைலிகள், திரை சீலைகள், உடைகள் இவற்றை இல்லங்களில் பயன்படுத்துவதோ விற்பதோ மார்க்கத்திற்கு முரணான காரியமல்ல என்பதை விளங்கலாம்.


பள்ளிக் கூடங்களில் வரைக்கலை பாடம் எடுத்துப் பயிலலாம். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வரைக்கலைப் பாடங்களில் வண்ணம் தீட்டலாம் இதற்கெல்லாம் தடையொன்றும் இல்லை.


அப்படியானால் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்து தடை செய்த உருவங்கள் என்பது என்ன..? என்பதை விளங்க வேண்டும். இறைவனுக்கு இணையை ஏற்படுத்தி, தனிமனித வழிபாடுகளை உண்டாக்கும் உருவங்களும், வடிவங்களும்தான் தடை செய்யப்பட்டுள்ளன.


ஒருமுறை வீட்டின் உள்ளே வருவதற்கு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனுமதி கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்தார்கள். ஆனாலும் ஜிப்ரயீல் உள்ளே நுழையவில்லை. ‘வீட்டில் உருவப்படங்கள் இருப்பதால் நான் நுழைய மாட்டேன். அதை கிழித்து மதிப்பற்ற வகையில் மிதிப்படும் தலையணையின் உரையாக்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.


அதை நான் கிழித்து இரண்டு தலையணை உரை தைத்தேன். உருவம் அதில் இருக்கும் நிலையிலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் சாய்ந்துக் கொள்வார்கள்.


அன்னை ஆய்ஷா ரலியல்லாஹு அன்ஹா, அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் அறிவிக்கும் இச்செய்தி நஸாயி 5370, அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் வருகிறது.


மதிப்பற்ற வகையில் மிதிப்பட செய்யுங்கள் என்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கூறியதிலிருந்தே அதுமதிப்பு மிக்க உருவமாக இருந்துள்ளது என்பதை விளங்கலாம். மதிப்பு மிக்க உருவங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதோடு நின்று விடாமல் பிற முஸ்லிம்களின் முன்னிலையில் அது மதிப்பற்ற விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இச் செய்தி விளக்கத் தயங்கவில்லை.


நவீன யுகத்தில் புகைப்பட ஆதாரங்கள் எத்துனையோ பிரச்சனைகளுக்கும் வழக்குகளுக்கும் சாட்சியாகி விடுகின்றன. பூமியின் வியக்கத்தக்க அத்தாட்சிகளையும், அங்கு வாழும் மக்களின் நிலைப்பாடுகளையும் பிற மக்களுக்குக்காட்டி அறிவூட்ட, இறை நம்பிக்கையை வளர்க்க பயன்படுத்தலாம்.


இது போன்ற வகைக்கு பயன்படுத்துவதில் அர்த்தமும், நன்மையும் இருக்கின்றது. நாம் வாழும் நவீன யுகத்தில் வளர்ந்து நிற்கும் புகைப்படக் கலையை நல் வழியில் பயன்படுத்துவோமாக.!