MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஒழுக்கமான சிரிப்பின் முக்கியத்துவங்கள்
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
ஒழுக்கமான சிரிப்பின் முக்கியத்துவமும், கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்த சம்பவங்களும்.
♣ ஒழுக்கமான சிரிப்பின் முக்கியத்துவங்கள்
“சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும், சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன், பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன்.
அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக முக்கியமானதாகும். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும்.
மேலும் மனிதனுக்குள் இறைவன் ஏற்படுத்தியுள்ள பண்புகளில் சிரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இரக்கம் கோபம் வெட்கம் பயம் போன்ற எத்தனையோ குணங்கள் மனிதன் குறிப்பிட்டப் பருவத்தை அடைந்தப் பிறகு தான் தோன்றுகின்றன. ஆனால் சிரிப்பைப் பொறுத்தவரை மனிதன் பிறந்த உடனே இத்தன்மை குழந்தைக்கு தொற்றிக்கொள்கிறது. பிறத்தல் மரணித்தல் அழுதல் போன்ற பண்புகள் இயற்கையாகவே மனிதனிடத்தில் குடிகொண்டிருப்பதைப் போல் சிரிப்பும் மனிதனுடன் பிண்ணிப்பிணைந்துள்ளது.
இந்தத் தன்மையை இறைவன் மனிதனுக்கு மாத்திரதம் பிரத்யேகமாக வழங்கியுள்ளான். மனிதனைத் தவிர்த்து ஆடு மாடு யானை பூனை போன்ற ஏனைய உயிரினங்கள் சிரித்து நாம் பார்த்ததில்லை. எனவே தான் மனிதனுக்கு வரைவிலக்கணம் சொல்லும் போது சிரிக்கும் உயிரினம் என்று விளக்கம் கொடுப்பார்கள்.
மேலும் "சிரிப்பு" என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் "நகைச்சுவை"யும் ஒன்று. அந்த அடிப்படையில் நோய் குணமாவதற்கு மிக எளிதான, செலவற்ற வழி நன்றாகச் சிரிப்பது என்று இன்று மருத்துவத்துறையில் கூறுகிறார்கள். அதனைத்தான் நம் முன்னோர்கள் “வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்று கூறியுள்ளார்கள்.
இதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது வாழ்வு அமைந்து விடவும் கூடாது. எம்மைப் பார்த்துப் பிறர் சிரிக்கும் நிலைக்கும் எமது வாழ்வு இறங்கி விடவும் கூடாது. சிரிப்பு பிறர் மத்தியில் எமக்கிருக்கும் ஆளுமையைக் குறைத்து விடவும் கூடாது. இதுவும் கவனிக்கத் தக்கதாகும்.சிரித்து வாழ வேண்டும்! ஆனால் பிறர் உன்னைப் பார்த்து சிரிக்க வாழ்ந்திடாதே! உழைத்து வாழ வேண்டும்! பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!
♦இஸ்லாம் மார்க்கம் தரும் வரப்பிரசாதம் "உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்".
நூல்: திர்மிதி 2022, 2037
♦ பிறரை சந்திக்கும் போது மலர்ந்த முகத்துடன் இருப்பதும் நல்லகாரியம் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பது உட்பட எந்த ஒரு நல்லகாரியத்தையும் அற்பமாக நினைத்துவிடாதே.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் 4760
♦ நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஹழ்ரத் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் 4522
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற நபித்தோழர் நாயகத்திற்கு சிரிப்பூட்டிக்கொண்டே இருந்துள்ளார். சிரிப்பூட்டியதற்காக இவரை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கண்டிக்கவில்லை. மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் கழுதை என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை சிரிக்கவைப்பார்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் உமர் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரி 6780
♦ இறைவன் அல்குர்ஆனில் கூறியுள்ளான்.(அன்றியும்,) நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்கவும் வைக்கிறான் அழவும் செய்கிறான்.(அல்குர்ஆன் : 53:43)
♦ மறுமை நாளில் நல்லவர்களுக்கு இறைவன் அளிக்கும் பாக்கியங்களில் ஒன்று சிரிப்பாகும். அந்நாளில் கெட்டவர்களின் முகங்கள் கடுகடுவென சுருங்கிய நிலையில் இருக்கும். இவர்களுக்கு சிரிப்பு என்ற பாக்கியத்தை இறைவன் தடுத்துவிட்டான். சொர்க்கவாசிகள் சுவனத்தில் அடையும் இந்த இன்பத்தை இந்த உலகத்தில் நாம் ஏன் தவறவிட வேண்டும்? அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள். அல்குர்ஆன் (80 : 32), அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அல்குர்ஆன் (75 : 22)
♣ ஒழுகமற்ற சிரிப்பின் விபரீதங்கள்
இஸ்லாம் மார்க்கத்தில் மற்றவரை கவலைப்படுத்தும் அளவுக்கும், அவர்களை நோய்வினை செய்யும் அளவுக்கும் சிரிக்க கூடாது, சிரிப்பதை அனுமதிக்கும் நம் மார்க்கம் அதை அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. சிரிக்கக் கூடாத இடங்களில் சிரிப்பதைத் தடை செய்கிறது. சிரிக்கத் தகுதியற்ற இடங்களில் சிரிப்பது தேவையற்றது. சிரிப்பு வராவிட்டாலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வேண்டுமேன்றே சிரிப்பதைப் போல் சிலர் காட்டிக் கொள்கிறார்கள்.
கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் நிலைமை புரியாமல் சிரிப்பவர்களும் உண்டு. பொருத்தமற்ற இந்தச் சிரிப்புகள் பிறரை மகிழ்விப்பதற்குப் பதிலாக கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்தி விடும். பிறர் துன்பப்படும் போது அதைப் பார்த்துக் கேலி செய்து சிரித்தால் அதன் மூலம் பலர் பரவசம் அடைந்தாலும் சிலர் புண்படுகிறார்கள். இத்தகைய சிரிப்புகள் அனுமதிக்கப்பட்டவை அல்ல.
மேலும் பிறரைச் சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாகச் சொல்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று! நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக் கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாகப் பரவியிருக்கிறது.
♦ எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும். (அல்குர் ஆன். 9:82)
♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: இப்னுமாஜா 4183
♦சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதையே (புன்னகை) மார்க்கம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு போதும் ஒரேயடியாக தமது உள் நாக்குத் தெரியும் அளவுக்கு சிரிக்க நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
நூல்: புகாரி
♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடுதான்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆவியா பின் ஹைதா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: திர்மிதி 2237
♣ கண்மனி நாயகம் ﷺ அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்த சம்பவங்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்த அழகிய சம்பவங்களும் பிறர் நகைச்சுவையுடன் பேசும் போது அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள். பல நேரங்களில் பிறரிடத்தில் அவர்கள் நகைச்சுவையுடன் பேசியும் இருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விட அதிகம் புன்னகைப்பவரை நான் கண்டதில்லை”
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: திர்மிதி, அஹ்மத்
♦ நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!” என்றார்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அறக்” எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான்தான்!” என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள்.
நூல்: புகாரி 1936
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு மனிதர் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உம்மை ஒட்டகத்தின் குட்டியின் மீது ஏற்றிவிடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் இறைதூதர் அவர்களே! ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது? என்று கேட்டதற்க்கு எந்த ஒட்டகமும் தாய் ஒட்டகத்தின் குட்டித்தானே என்று (புன்னகை பூத்தவர்களாக)சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: அபூதாவூத் 4346, திர்மிதி
♦ ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு நாள் எனது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், ஸவ்தாவும் (ரலியல்லாஹு அன்ஹா) இருந்தனர். நான் ஹரீரா என்ற உணவைச் செய்தேன். அதைக் கொண்டு வந்து ஸவ்தாவிடம் (ரலியல்லாஹு அன்ஹா) உண்ணும்படி கூறினேன். அதற்கவர் எனக்கு விருப்பமில்லை என்று கூறினார். நீ சாப்பிடாவிட்டால் உனது முகத்தில் பூசுவேன் என்று கூறினேன். இது எனக்கு சாப்பிட்டுப் பழக்கமில்லை என்று கூறினார். நான் அந்த மாப்பண்டத்தை எடுத்து அவர்களின் முகத்தில் பூசினேன்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் அமர்ந்திருந்தார்கள். என்னைப் பிடித்துக் கொள்வதற்காக அவர்களது முழங்கால்களைத் தாழ்த்தினார்கள். நான் அப்பண்டத்தை எடுத்து எனது முகத்திலும் பூசினேன். நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.”
நூல்: அபூயஃலா
♦ ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும்.
அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2348
♦ அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ”நஜ்ரான்” நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ”முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
நூல்: புகாரி 5809
♦நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே! என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அவர் விளையாடிக் கொண்டிருந்த அவரது குருவி இறந்து விட்டது என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ உமைரே! உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு
நூல்: அஹ்மத் 12389
இறைத்தூதர் சுலைமான் (அலைஹி வஸல்லம்) அவர்கள் எறும்பு பேசியதைக் கேட்டு சிரித்ததாக குர்ஆன் கூறுகிறது."அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ”எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார்". (அல்குர்ஆன் 27 :18)
♦ மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்த நீண்ட சம்பவங்கள் பார்க்க... (நூல் : புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709,6780 6710, 6711, 2348,2348, 2826/ முஸ்லிம் 310)ஆகவே மேலே கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அளவாக சிரித்து வளமோடு வாழ்வோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்