MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஒடுகத்து புதன் என்றால் என்ன?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
ஸபர் மாதத்தின் இறுதி புதன்கிழமை (ஒடுக்கத்து புதன்) பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?
♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-
சமீப காலத்தில் அறைகுறையாக மார்க்கத்தை படித்துப் பட்டம் பெற்ற சிலர் ஒடுக்கத்து புதன் என்ற ஒன்று கிடையாது, அன்றைய தினத்தில் விஷேசமாக செய்யப்படும் விடயங்கள் “ஹறாம்” என்றும், “பித்அத்” என்றும், மூட நம்பிக்கை என்றும் பேசியும், எழுதியும், மின்பர் மேடையில் முழங்கியும் வருகின்றார்கள்.
எனவே, இது பற்றி திருக்குர்ஆனும், நபீ மொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களான இமாம்களும் தெரிவித்துள்ள தகவல்களை இங்கு சுருக்கமாகத் தருகின்றோம். இமாம்களையும் மகான்களையும் தூக்கி எறிந்துவிட்டும், அவர்களால் எழுதப்பட்ட நூல்களை புறக்கணித்துவிட்டும் தமக்கு குர்ஆனும் ஹதீதும் போதும் என்று சொல்பவர்களுக்கு இப்பிரசுரம் இனிக்கவும் மாட்டாது, மணக்கவும் மாட்டாது. எனவே கண்டதெற்கெல்லாம் திருக்குர்ஆனில் இருந்தும், ஹதீதிலிருந்தும் நேரடியான தெளிவான ஆதாரம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்போரை அல்லாஹ்தான் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.
♣ ஒடுக்கத்துப் புதன் என்றால் என்ன?
ஒடுக்கத்து புதன் என்பது ஸபர் மாத இறுதிப் புதன் கிழமையைக் குறிக்கும். இம் மாதம் முடிமைக்குரிய மாதம் என்றும், இம்மாதத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்கலாகாது என்றும் மக்களிடம் ஒரு அபிப்பிராயம் இருந்து வருகின்றது.
இந் நாளில் வாழை இலையில் சில திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்து குளிக்கும் வழக்கமும் தொண்டு தொட்டு முஸ்லீம்களிடம் இருந்து வந்துள்ளது. இந்த அடிப்படையில் ஒடுக்கத்துப்புதன் தொடர்பாக குர்ஆனும், ஹதீஸ்களும், இமாம்களும், வலீமார்களும், இறைஞானிகளும் கூறியுள்ள கருத்துக்களை சிந்தனையிற் கொண்டு செயல்பட வேண்டும்.
♣ ஸபர் மாதம் (ஒடுக்கத்து புதன்) சுயமாகவே (தன்னிலையே) மிடிமைக்குரிய மாதமா?
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “இஸ்லாம் மார்க்கத்தில் தொற்று நோய், பறவை ஜாதகம், ஆந்தை (பக்கிள்) கத்துவதால் மரணம் நிகழ்தல், ஸபர் மாதம் மிடிமைக்குரியது என்பன இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை” என்று அருளினார்கள்.
நூல்: புகாரி 5707, 5717
இதன் கருத்து ஸபர் மாதம் சுயமாக முடிமைக்குரிய மாதம் இல்லை என்பதாகும். ஆயினும் அல்லாஹ் நாடினால் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றை ஸபர் மாதத்திலும் தருவான். ஏனைய மாதங்களிலும் தருவான். ஆயினும் ஸபர் மாதம் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றைச் சுயமாக ஏற்படுத்துமென்று நம்பிக்கை கொள்ளுவதுதான் பிழையானதாகும். ஏனெனில் அல்லாஹ் தவிர சுயமாகச் செய்தவற்கு எவருக்கும் எதற்கும் சக்தி இல்லவே இல்லை. இதுவே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும்.
“லா ஸபர பில் இஸ்லாம்”. என்ற வசனம் இக்கருத்தையே வலியுறுத்துகிறது, தவிர ஸபர் மாதம் எவருக்கும் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவை வராதென்பது கருத்தல்ல.
ஒடுக்கத்து புதன் பற்றிய இவ்வழக்கம் இருந்து வந்த காலத்தில் இமாம்கள் போல் திறமையும் அறிவு முதிர்ச்சியும் பெற்றிருந்த மார்க்க அறிஞர்கள் பலர் இருந்தும்கூட அவர்களில் எவரும் இவ்வழக்கம் இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்றோ பித்அத் என்றோ, மூட நம்பிக்கை என்றோ சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை.வெள்ளிக்கிழமை மின்பர் மேடையில் முழங்கியதுமில்லை. மாறாக அவர்களும் இவ்வழக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளார்கள்.
♣ நாட்களில் கெட்டநாள் உண்டா?
அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்டநாள் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றிற்கான நாள் உண்டு என்பதற்கு திருகுர்ஆனில் ஆதாரம் உள்ளது. "நிச்சயமாக நாம் அவர்கள் மீது “ஆத்” கூட்டதினர் மீது “நஹ்ஸ்” உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பிவைத்தோம்".(திருகுர்ஆன் கமர் அத்தியாயம் வசனம் 19), நிச்சயமாக நாம் அவர்கள் மீது “நஹ்ஸ்” உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம் (புஸ்ஸிலத் அத்தியாயம் வசனம் 16)
விளக்கம் :-
மேற்கண்ட இரு வசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டங்களுக்கு அல்லாஹ் கடும் காற்றை அனுப்பி அவர்களைத் தண்டித்ததாகக் கூறியுள்ளான். மேற்கண்ட இரு வசனங்களில் முந்தின வசனத்தில் “நஹ்ஸ்” என்ற சொல் ஒருமையாகவும், இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச் சொல்லுக்கு தீமை, மிடிமை, தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் “நஹ்ஸ்” உடைய நாள் என்று ஒன்று உண்டு என்பது தெளிவாகின்றது. அந்த நாள் எது என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.
அதோடு அந்த நாள் எந்த மாதத்தில் உள்ள நாள் என்பதிலும் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. இவ்விபரத்தை சரியாக அறிந்து கொள்வதாயின் “ஆத்” கூட்டதினருக்கு அல்லாஹ் பயங்கரக் காற்றை அனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் . இதில் கூட வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு எனினும் இது தொடர்பாகச் சொல்லப்பட்டுள்ள பலரின் கருத்தையும் இங்கு தருகின்றோம்.
1) அந்த நாள் புதன் கிழமைதான் என்று அநேக அறிஞர்கள் கருத்து கூறியுள்ளார்கள். ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றி தெளிவாகவும், திட்டவட்டமாகவும் ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை.
2) தப்ஸீர் ரூஹுல் மஆனி ஆசிரியர் அவர்கள் தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27ம் பாகம் 119ம் பக்கத்தில் அது ஷவ்வால் மாதப் பிற்பகுதியில் உள்ள புதன் கிழமை என்று கூறியுள்ளார்கள்.
3) அல்லாமா வகீஉ (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “குறர்” என்ற நூலில் ஒவ்வொரு மாத்தின் கடைசிப் புதன்கிழமை “நஹ்ஸ்” உடைய நாள் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அறிவித்துள்ளதாக இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தொட்டும் வந்துள்ள நபீ மொழியை இப்னு மர்தவைஹ் (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும் அல்ஹதீபுல் பக்காதீ (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளார்கள்.
4) இமாம் தபறானீ (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அந்த நாள் புதன் கிழமையென்று தங்களின் தபறானீ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
♣ புதன் கிழமை ‘நஹ்ஸ்” உடைய நாள் என்பதற்கான சில தகவல்களை இங்கு தருகின்றோம்.
நஹ்ஸ் என்ற அரபிச் சொல்லுக்கு தீங்கு மற்றும் துர்ப்பாக்கியம் என்பது பொருளாகும்., ஆத் கூட்டத்தினருக்கு தண்டனை இறக்கிவைத்த நாளை இறைவன் நஹ்ஸுடைய நாள் என குர்ஆனில் பெயரிடுகிறான்.
♦ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து , ஒரு சாட்சியுடன் சத்தியமிடுதலும் இருந்தால் அவற்றைக்கொண்டு தீர்ப்பு வழங்குங்கள் என்று எனக்கு கட்டளையிட்டார்கள். மேலும், கூறினார்கள் புதன்கிழமை தொடர்ந்து தீங்குகள்ள நஹ்ஸூடைய நாளாகும்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ
♦ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஒருவர் தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேற்றி அதன் காரணமாக தொழுநோயின் அடையாளத்தை தனது உடம்பில் பார்த்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ
♦எமது உம்மத்துக்கள் வெறுக்க மாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் பணித்திருப்பேன் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) அறிவித்துள்ளார்கள். இந்த நபீ மொழி பிர்தௌஸ் என்ற நூலில் பதிவாகியுள்ளது.
♦ வெண்குஷ்டம்”, “கருங்குஷ்டம்” இரண்டும் புதன் கிழமையில்தான் வெளியாகும் என்று நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபீ மொழியை இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு மாஜாஹ்வும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள்.
♦ புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாது என்றும், அவ்வாறு செய்வதால் குஷ்டநோய் வரும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு நோயாளியிடம் சுகம் விசாரிக்கச் செல்வது நல்ல காரியமாயினும் அதை புதன் கிழமை தவிர்த்துக் கொள்ளுதல் நல்லதென்றும் தகவல்கள் கூறுகின்றன. புதன் கிழமை முடிமைக்குரிய நாளாக கருதப்படுமென்றும், மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாள் என்றும் “அர்றவ்ழஹ்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாள் என்று நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) அறிவித்துள்ளார்கள்.(றூஹுல் பயான் என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல், வால்யும் 09ம் பக்கம் 324ல் குறிப்பிடப்பட்டுள்ளது)
♦ வார நாட்களில் சனிக்கிழமை சூட்சி, துரோக்கத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக் கிழமை மரம் நடுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். திங்கட்கிழமை பயணம் உழைப்புக்குரிய நாளாகும் செவ்வாய்க்கிழமை வன்மை, துக்கத்துக்குரிய நாளாகும். புதன் கிழமை கொடுக்கல் வாங்கலுக்குப் பொருத்தமற்ற நாளாகும். வியாழக்கிழமை தேவைகளைத் தேடுவதற்கும், அதிகாரிகளிடம் செல்வதற்கும் உரிய நாளாகும். வெள்ளிக்கிழமை திருமணப் பேச்சுக்கும் திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும். என நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபீ மொழியை இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்ததாக அபூயஃலா (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும், அபூ ஸயீத் (றழியல்லாஹு அன்ஹு) அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும் தமாம் (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும் அல் பவாயித் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
♦ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டது புதன்கிழமையாகும், ஸஃபர் மாதம் முடிய இருநாட்கள் மீதமிருந்தன. அந்த நேரத்தில் அருமைத் துணைவியார் மைமூனாரலி அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். கடுமையான வலியின் காரணமாக மயக்கமுற்றார்கள். அறிவிப்பாளர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு (நூல் : சீரா - ஆசிரியர் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு நோயின் துவக்கம்
ஸஃபர் மாதத்தில் இரு நாட்கள் மீதமிருந்த நிலையில் நோய் ஆரம்பமானது. ரபீவுல்அவ்வல் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமை இவ்வுலகைவிட்டும் மறைந்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் இவ்வுலகைவிட்டும் மறைவதற்கு காரணமாக இருந்த நோய் புதன் கிழமைதான் ஆரம்பமானது. ஸஃபர் முடிவிற்கு இருநாட்கள் மீதமிருந்தன. அப்போது மைமூனா ரலியல்லாஹ் அன்ஹா அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். நோய் கடுமையானபோது ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ரபீவுல்அவ்வல் பிறை 12 ஆம் நாள் திங்கட்கிழமை ளுஹா நேரத்தில் அவர்களின் உயிர் பிரிந்தது.
♣ புதன் கிழமை நஹ்ஸூடைய நாள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பது போல அது நல்ல நாள் என்பதற்கும் சில அறிஞர்களின் கருத்துக்களும் உள்ளன.
மின்ஹாஜுல் ஹுலைமீ , ஷுஅபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன் கிழமை மதிய நேரத்தின் பின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
♦ இமாம் புர்ஹானுல் இஸ்லாம் (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஹிதாயா என்ற நூலில் வந்துள்ளதாக தங்களின் “தஃலீமுல் முதஅல்லிம்” என்ற நூலில், புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஒளியைப்படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் பெரியோர்கள் ஹஸ்ரத்மார்கள் கல்வி சம்பந்தமான வகுப்புக்களை புதன் கிழமையில் தொடங்கி வந்துள்ளார்கள். அதோடு புதன் கிழமை கல்விக்குரிய நாள் என்றும் பரவலாகக் கணிக்கப்படுகின்றது.
எவனாவது புதன்கிழமை மரங்களை நட்டி “ஸுப்ஹானல் பாஇதில் வாரிதி” என்று சொல்வானாயின் அது அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான் (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும் தைலமி (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த நபீமொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல் பட்டு வந்துள்ளார்கள்.
♣ இமாம்கள், அறிஞர்கள் நஹ்ஸுடைய நாளை புதன் கிழமையினை தேர்ந்தெடுத்தற்கான சில காரணங்கள் உண்டு.
1) தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை.
2) அய்யூப் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை
3) துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை.
4) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை.
5) நோயின் துவக்கம் அதாவது வென்குஷ்டமும் கருங்குஷ்டமும் புதன்கிழமை இரவில்தான் இறங்கும்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு (நூல்: ஹாகிம்)
6) இறைத்தூதர் ஸல்லலாஹூ சொன்னார்கள் புதன்கிழமையன்று
(உடம்பிலிருந்து) இரத்தம் வெளியேற்றுவதை தவிர்த்து கொள்ளுங்கள் ஏனென்றால் புதன்கிழமையில்தான் அய்யூப் (அலைஹி ஸலாம்)அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். வென்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டமென்ற தொழுநோய் புதன்கிழமை பகலிலோ அல்லது இரவிலோதான் ஆரம்பமாகும். (நூல்: ஹாகிம்)
♣ ஸபர் மாதத்தினை (ஒடுக்கத்து புதன்) பற்றி இமாம்கள், அறிஞர்களின் கருத்துக்கள்
ஸபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும் வருட நாட்களில் அந்த நாள் ஒன்று மட்டுமே மிகவும் கஷ்டமான நாள் என்றும் இறைஞானிகள் சொல்லியிருப்பதாக (“முஜர்றபாதுத்தைறபீ” என்ற நூல் 103ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது)
அஷ் ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஞ்ஜே ஷகர் (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் ஞானகுரு ஹாஜா முயீனுத்தீன் (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் “அவ்றாத்” தொகுப்பில் பின்வருமாறு இருக்க தான் கண்டதாக கூறியுள்ளார்கள்.
♦ “ஸபர் மாதம் முடிந்துவிட்டதென்று என்னிடம் சுபச் செய்தி சொல்பவனுக்கு சுவர்க்கத்தைக் கொண்டு நான் சுபச் செய்தி சொல்வேன்” என்று நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் (ஹயாத்துல் ஹயவான் என்ற நூல் முதலாம் பாகம் 120ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது).
♦ “இஆனதுத் தாலிபீன்” என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும், மக்காவில் பிறந்து திரு மதீனா நகரில் சமாதி கொண்டுள்ளவருமான அஷ்ஷையித் முகம்மத் ஷதா அத்திம்யாதி (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் “நிஹாயத்துல் அமல்” என்ற சட்டநூல் 208ம் பக்கத்தில் ஒடுக்கத்துப் புதன் பற்றிக் குறிப்பிடுகையில், “ஒவ்வொறு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய்கள், கஷ்டங்கள், சோதனைகள் “லவ்ஹுல் மஹ்பூல்” பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்திற்கு ஸபர் மாத இறுதிப் புதன் அன்று இறக்கப்படுகின்றன”. ஆகையால் கீழ் காணும் திரு வசனங்களைப் பாத்திரங்களில் எழுதி அதை தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்பட மாட்டாது என்று கூறியுள்ளார்கள்.
♣ ஒடுக்கத்து புதன் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?
“புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது சிறந்தது” என்று கூறப்பட்டுள்ளது.தண்டனை பெற்ற எந்தவொரு கூட்டமாயினும் அது புதன்கிழமையே தண்டிக்கப்பட்டுள்ளது. இத் தகவல் (றூஹுல் பயான் வால்யும் 08, பக்கம் 328ல் இடம் பெற்றுள்ளது)
♦ ஒவ்வொறு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் துன்பங்கள் இறங்குகின்றன. அவை யாவும் ஸபர் மாத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன அந்த வருட நாட்களில் இந்நாள்தான் மிகவும் கஷ்டமானது அன்று யாராவது நான்கு “றக்அத்” தொழுது ஒவ்வொறு றக்அத்திலும் பாத்திஹா சூறா ஒதியபின் “இன்னாஅஃ தைனா கல் கவ்தர்” என்ற சூறத்தை 17 தரமும், “குல்குவல்லாஹ்வை” 05 தரமும், “குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு தரமும் “குல் அஊது பிறப்பின்னாஸ்” ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவான். பின்பு “ஸலாம்” என்ற சொல் கொண்டு துவங்கப்படுகின்ற திரு குர்ஆன் வசனங்களை பண்ணீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக் குடிக்கவும் வேண்டும்.(நூல்: பழாயிறுஷ்ஷுஹூரில் ஹிஜ்ரிய்யஹ் பக்கம் 33, 34) ஆகவே ஸபர் மாதம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது சிறந்ததென்று அனேகர் அபிப்பிராயம் கூறுகின்றார்கள்.
ஒவ்வொறு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும், குறிப்பாக ஸபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் “நஹ்ஸ்” மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும், நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மரண வருத்தம் “ஸபர்” மாத்தின் இறுதிப் புதன் கிழமை ஆரம்பமானதை கருத்திற் கொண்டும் அன்றைய தினம் சில திருகுர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரத்திலோ எழுதி நோய், மிடிமை, கஷ்டம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியம் எனக்கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் “ஹறாம்” ஆகவோ “பித்அத்” ஆகவோ “ஷிர்க்” ஆகவோ மாட்டாது. அருள்பெற நாடி திரு குர்ஆன் வசனங்களை அன்றைய தினத்திலோ வேறு தினத்திலோ குடிக்க வேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே, ஸபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையான ஒடுக்கத்துப் புதன் கிழமை சில திருகுர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது காகிதம், பீங்கான் போன்றவற்றிலோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பதும் “முபாஹ்” ஆகுமாக்கப்பட்ட காரியமேயன்றி அது எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணாகி விடாது.
அதனால், ஏதோ ஒரு வகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இதை எதிர்ப்போர் இவ்விடயத்தை ஆழமாக ஆய்வு செய்து இச்செயல் “ஷிர்க்” என்றும் “பித்அத்” என்றும், மூட நம்பிக்கை என்றும் “பத்வா” வழங்குவதையும், மிம்பர் மேடைகளில் முழங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இது தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகள், பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபீ மொழிகளை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
♣ "ஒடுக்கத்துப் புதன் இஸ்ம்"
ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக சில குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்து குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக அல்குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான்."இறை நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம்". (அல்குர்ஆன் 17: 82)
அந்த அடிப்படையில் “ஸலாம்” என்ற சொல் கொண்டு துவங்கப்படுகின்ற கீழ் காணும் திரு வசனங்களை பன்னீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பாத்திரங்களில் எழுதி அதை தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்பட மாட்டாது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆகையால் அருள்பெற நாடி திரு குர்ஆன் வசனங்களை அன்றைய தினத்திலோ வேறு தினத்திலோ குடிக்க வேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰى. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ.
اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِِ الْقَضَآءِ وَشَمَاتِةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ .
ஆகையால், ஸபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையான ஒடுக்கத்துப் புதன் கிழமை மேலே கூறியது போன்று சில திருகுர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது காகிதம், பீங்கான் போன்றவற்றிலோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பதும் “முபாஹ்” ஆகுமாக்கப்பட்ட காரியமேயன்றி அது எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணாகி விடாது. அதனால், ஏதோ ஒரு வகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது.
ஆகவே இவ்வழக்கம் ‘ஹறாம்” என்பதற்கோ, “ஷிர்க்” என்பதற்கோ ஆதாரம் இல்லாதிருப்பதாலும், ஆனால் “முபாஹ்” ஆகும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாலும் இதை எதிர்ப்போர் இது விடயத்தில் குறைந்த பட்ஷம் விரும்புவோர் செய்யட்டும், விரும்பாதோர் விட்டு விடட்டுமென்றாவது சொல்ல வேண்டும் என்று அவர்களை அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம். தொடர்ந்து ஓர் ஊரில் தொன்று தொட்டு நடந்துவந்த ஒரு வழக்கம் “முபாஹ்” ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் அதை அப்படியே விட்டு விட வேண்டுமேயன்றி அதை தடுத்து நிறுத்துவதும், அதை கருவாகக் கொண்டு ஊர் மக்களிடம் பிளவையும், பிரச்சினையையும் உருவாக்குவதும் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே உண்மையை உணர்ந்து உள்ளச்சத்துடன் செயற்ப்பட இறைவன் எம் அத்துனை பேருக்கும் தௌபீக் செய்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.