MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொற் குணங்களில் சில:
சுந்தர வதனம் கொண்டவர்களாகவே தவிர காணப்பட மாட்டார்கள்.
இரவு காலங்களில் பசித்த நிலையிலேயே இருந்து வருவார்கள்.
தமது பாதணிகளை தானே தைத்துக் கொள்வார்கள்.
தமது ஆடைகளுக்கு ஒட்டுப் போட்டுக் கொள்வார்கள்.
தமது ஆடுகளில் தாமே பால் கறப்பார்கள்.
தமது வீட்டைத்தாமே கூட்டி சுத்தம் பண்ணுவார்கள்.
தமது பணியாளுக்கு உதவியாக அவருடன் சேர்ந்து மாவு அரைப்பார்கள்.
தமது பொருள்களை தமது சிறப்பிற்குரிய தோள் புஜத்தில் சுமப்பார்கள்.
உணவு அருந்தும் போது தனது ஆண் அடிமைகளை விடவோ அல்லாது பெண் அடிமைகளை விடவோ உயர்ந்து இருக்கமாட்டார்கள். (மாறாக அடிமைகளில் ஒரு அடிமை போன்றே இருந்து கொள்வார்கள்).
விருந்தையோ அன்பளிப்புகளையோ மறுக்கமாட்டார்கள்.
ஆட்டுக்காலின் குளம்பை கறியாக சமைத்து அதை உண்ண அழைக்கப்பட்டாலும் பதில் கொடுப்பேன் என்றும், எனக்கு ஆட்டின் முன் சப்பையை அன்பளிப்புச் செய்யப்பட்டாலும் அதை ஒப்புக்கொள்வேன் என்றும் கூறுவார்கள்.
மேலும் உங்களுடைய துன்யாவிலிருந்து என்பால் மூன்று வஸ்த்துக்கள் பிரியமாக்கப் பட்டுள்ளது. முதலாவது பெண்கள், இரண்டாவது மனம் கமழும் வாசனைகள், மூன்றாவது தொழுகையில் என் கண் குளிர்ச்சி என்றும் ஆண் மக்களை விட பெண் மக்கள் பிரியமாக்கப்பட்டவர்களுக்கு எனது சுபசோபனம் உண்டாகட்டும் என்றும் கூறுவார்கள்.
கொடுக்கல் வாங்கல் அனைத்து மனிதரிலும் அழகாக இருப்பார்கள்.
யாரிடமாவது கடன் வாங்கினால் அதை முறையாக நிறைவேற்றி விடுவார்கள். மேலும் அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் உமது பொருளிலும் குடும்பத்திலும் உமக்கு பரகத் செய்வானாக என்று கூறுவார்கள்.
மன்னிப்பு கேட்போரின் மன்னிப்பை ஒப்புக்கொள்வார்கள்.
பலம் வாய்ந்தவனும் பலவீனனும் சொந்தக்காரனும் அன்னியனும் அவர்களிடம் சமமானவர்களே.
தமது தோழர்களுக்கிடையே எதையேனும் பங்கிட்டால் அவர்களில் வலது பக்கமுள்ளவர்களைக் கொண்டே ஆரம்பிப்பார்கள்.
அவர்களுக்கிடையே சமமாகவே பங்கிடுவார்கள்.
அவர்களில் ஒருவரைவிட ஒருவருக்கு விஷேசத் தன்மை இருந்தால் மாத்திரம் அவருக்கு கூடுதலாக்குவார்கள்.
அவருக்கு கூடுதலாக கொடுத்த விஷயத்தில் எவராவது மடத்தனமான முறையில் அவர்களைக் குறை கூறினால் அதைப் பொறுத்துக் கொள்வார்கள்.
எந்த விஷயத்திற்காகவும் சீ என்று கூறிவிடமாட்டார்கள்.
தொடர் கவலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இறை நினைவிலும் இறைச் சிந்தனையிலும் நேமமாக இருந்து வருவார்கள்.
நீர் கொதிக்கும் பாத்திரத்திலிருந்து எழும் சப்தத்தைப் போன்று அவர்களின் விலாப்பகுதியில் இருந்து சப்தம் கேட்கும்.
ஆட்டின் முன்சப்பை, சுரைக்காய், ஹல்வா ஆகியவைகளை விரும்புவார்கள்.
ரொட்டியை சிர்க்காவுடன் சேர்த்து உண்பார்கள்.
கோழி, செங்கநாரை, கொக்கு ஆகியவைகளின் இறைச்சிகளை உண்பார்கள்.
தொலிக் கோதுமையை பேரீத்தம் பழத்துடனும் வெள்ளரிக்காயுடனும் அது போன்றே பேரீத்தம் பழத்தை வெண்ணையுடனும் சில சமயங்களில் கறிகளுடனும் சேர்த்து உண்பார்கள்.
மாட்டு இறைச்சியை உண்ண மாட்டார்கள். உண்போரைத் தடுக்கவும் மாட்டார்கள்.
ஒரு ஆணத்தைவிட அறவே அதிகமாக்கமாட்டார்கள்.
சமயத்தில் உப்பை மட்டும் வைத்தோ அல்லது நெய்யை மட்டும் வைத்தோ உணவு உண்பார்கள்.
மூன்று விரல்களில் உண்பார்கள்.
சாப்பிட்டு முடித்தபின் விரல்களை சிவக்கின்ற வரை சூப்புவார்கள்.
சாப்பாட்டு மேசையின் மீதோ அல்லது சாய்ந்த நிலையிலோ உணவு உண்ணமாட்டார்கள்.
சாப்பாட்டு விரிப்பின் மீது உண்பார்கள்.
ஸஹாபாக்களுடன் கலந்து பேசுவார்கள்.
அவர்களுடன் ஹாசியம் (தமாஸ்) பண்ணிக் கொள்வார்கள்.
அவர்களுடன் கலந்து ஆலோசிப்பார்கள்.
இன்னும் அவர்களின் பொற்குணங்களை வரையறுத்துச் சொல்ல முடியாது.
நூல்: மின்ஹதுஸ் ஸரன்தீப் பக்கம் 122
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.