MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களுக்கு நிழல் இல்லை
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
உயிரிலும் மேலான பெருமானார் முஸ்தபா ﷺ அன்னவர்களின் திருமேனிக்கு நிழல் இல்லை என்பது பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள், மற்றும் இமாம்களின் கருத்துக்களை தொகுத்து தந்துள்ளோம்.
♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை எம்மைப் போன்ற சாதாரண மனிதராகச் சித்தரித்துக் கூற முயலும் வழிகெட்ட வஹ்ஹாபிகளின் கருத்துக்களில் மிக முக்கியமானது என்வென்றால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் (நூர்) ஒளி கிடையாது,
அவர்கள் (பஷர்) எம்மைப் போன்ற சாதாரண மனிதர் மாத்திரம் தான் என்ற தவறான கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் மோசமான வழிமுறையாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லத்தின் திருமேனிக்கு நிழல் உண்டு என்று வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்காக வேண்டி ஈமானை இழந்து வழி தவறிக்கொண்டிருக்கிறார்கள், வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
♣ இது பற்றி சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் நிலைப்பாடு :-
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் உலகில் தோன்றிய அனைத்து படைப்பினங்களிலும் மேலானவர்கள் என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் பார்வையில் அன்னாரை நோக்கும் போதுதான் ஒருவன் உண்மையான முஃமினாகின்றான். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் அனைத்து அம்சங்களும் ஒப்பு உவமைகளின்றிருப்பது அன்னாரின் சிறப்பம்சமாகும். அதனால்தான் அன்னலாரை “ஓர் அற்புதம்“ என்று அல்லாஹுத்தஆலா திருமறையில் குறிப்பிடுகின்றான்.
நபீ ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எம்மைப் போன்ற சாதாரண மனிதர் கிடையாது மாறாக மனித புனிதர் அதாவது பஷராகவும் (மனிதராகவும்) யதார்தத்தில் நூராகவும் (ஒளியாகவும்) திகழ்கிறார்கள். அதிலும் பஷரை விட நூர் மிகைத்து விட்ட காரணத்தினால் அவர்களின் திருமேனிக்கு நிழலில்லை என்பது உலக அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட குறிப்பாக சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத் அகீதாவின் அடிப்படையில் ஓர் உண்மையாகும்.
நம்போன்ற ஒரு சாதாரண மனிதன் வெயிலிலோ, அல்லது மின்னொளியிலோ நிற்கும்போது அவனுக்கு நிழல் விழுவதை நன்றாகக் காணமுடியும், ஆனால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி அவர்களின் நிழல் விழுவதை காணமுடியாது. காரணம் அன்னவர்களின் திருமேனிக்கு நிழல் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் திருமேனிக்கு நிழலில்லை என்பதற்காக அடிப்படை காரணம் என்ன?
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெயிலில் நின்றாலும், நிலவொளியில் நின்றாலும் அவர்களுக்கு நிழல் விழாது. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் கூறப்படுகின்றன.
1⃣ ஒன்று: நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளிமயமானவர்களாயிருப்பதால் ஒளிக்கு நிழலில்லையென்ற தத்துவத்தின்படி அவர்களுக்கு நிழலில்லாமல் போயிற்று.
2⃣ இரண்டு : நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிழல் பூமியில் விழுவதையும், அது விழுந்த இடங்களில் மக்கள் காலால் அல்லது பாதணியால் மிதித்து விடுவதையும் விரும்பாத இறைவன் அவர்களுக்கு நிழலை கொடுக்கவில்லை.
ஆகவே நபீ ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழலில்லாமற் போனதற்கு மேற்கூறப்பட்ட இரண்டு காரணங்களல்லாத வேறு காரணங்கள் உண்டு. காரணம் எதுவாயிருந்தாலும் அவர்களுக்கு நிழலில்லையென்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்.
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் திருமேனிக்கு நிழலில்லை என்பது பற்றிய ஹதீஸ்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் தோற்றம் ஒளியாக இருப்பதாக அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் கூறியுள்ளான். இதனை “அல்லாஹுத்தஆலா முதன் முதலில் எனது ஒளியைத்தான் படைத்தான்“ என்று கூறி தனது அகமியத்தை வெளிப்படுத்திக் காட்டினார்கள். நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் ஹகீகத் ஒளியாய் இருப்பதனால் அவர்களின் திரு உடலுக்கு நிழல் விழுவதில்லை. இதனைப் பல்வேறு ஹதீதுகள், இமாம்களின் கருத்துக்கள் மூலம் கீழே தெரியவருகின்றன.
♦ இமாம் ஹாக்கீம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது நவாதிறுல் உஸூல் என்ற நூலில் ஹஜரத் தக்வான் ரலியல்லாஹு அன்ஹு என்பவர் மூலம் அறிவிக்கின்றார்கள்,“றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு நிழல் சூரிய வெளிச்சத்திலோ நிலா ஒளியிலோ“ தென்படுவதிலலை.
நூல்கள்: கஸாயிஸுல் குப்றா, பாகம் - 01, பக்கம் - 68, ஸற்கானி பாகம் - 04, பக்கம் - 220 ஜம்உல் வஸாயில் (முல்லா அலிகாரி), பாகம் - 01, பக்கம் - 17602)
♦ ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருமேனிக்கு சூரிய வெளிச்சத்திலும், விளக்கின் பிரகாசத்திலும் நிழல் விழுவதில்லை. பெருமானாரின் பிரகாசம் சூரிய, விளக்கின் வெளிச்சங்களை மிகைத்துக் காணப்பட்டது. (அதனால்தான் இவற்றிற்கு முன்னால் நிழல் விழவில்லை.
அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல்: ஸர்கானி அலல் மவாஹிப், பாகம் - 04, பக்கம் - 22003
♦அன்னை ஆயிஷா ஸித்தீகா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது முனாபிக்குகள் படுதூறு கட்டிப்பேசினர். அப்போது முக்கிய ஸஹாபாக்களிடம் அம்மணி ஆயிஷா நாயகியைப் பற்றி கருத்துக் கேட்டார்கள். அன்னையரின் பரிசுத்தத்தை அவர்கள் அனைவரும் பறைசாற்றினர். இச்சந்தர்ப்பத்தில் ஹஜரத் உதுமான் ஙனி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். மற்றவர் பாதம் உங்கள் நிழலிலும் படக்கூடாது என்பதற்காக உங்கள் நிழலை பூமியில் விழுவதை அல்லாஹுத்தஆலா தடுத்தான். அப்படியிருக்க அசிங்கத்தை உங்களுடன் சேர்ப்பானா? என்று கேட்டார்கள்.
நூல்: தப்ஸீர் மதாரிக், பாகம் - 01, பக்கம் - 10304
♦ ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு பூமியில் நிழல் விழுவதில்லை. காரணம் அவர்கள் ஒளியாகும். சூரிய, சந்திர வெளிச்சத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து சென்றால் நிழல் தெரிவதில்லை. இதுவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பம்சத்தில் உள்ளதாகும்.
சில அறிஞர்கள் கூறுகின்றார்கள், “யா அல்லாஹ்! என்னை ஒளியாக ஆக்குவாயாக!“ என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கேட்ட துஆ கபூலாகியுள்ளது என்பதற்கு இது ஆதாரமாகவும் உள்ளது.
நூல்: கஸாயிஸுல் குப்றா, பாகம் - 01, பக்கம் - 68
♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழல் கிடையாது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூரிய ஒளியிலும் சந்திர ஒளியிலும் நிழலில்லை என்பதாக தக்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் நிச்சயமாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிழல் நிலத்தில் விழுவதில்லை. ஏனெனில், அவர்கள் ஒளியாக இருந்தார்கள். எனவே அவர்கள் சூரிய ஒளியில் நடந்தாலும் அல்லது சந்திர ஒளியில் நடந்தாலும் அவர்களின் நிழலைக் காணமுடியாது. இது அவர்களின் விஷேச தன்மைகளில் ஒன்றாகும்.
ஹழ்ரத் இப்னு ஸபஃஸபஃ ரலியல்லாஹு அன்ஹு
நூல்: கஸாஇஸுல் குப்ரா பாகம் 1 பக்கம் 68
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் திருமேனிக்கு நிழலில்லை என்பது பற்றி இமாம்களின் கருத்துக்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருமேனிக்கு நிழல் இல்லை என்ற வாதம் கற்பனையல்ல! அது ஆதாரத்துடன் உள்ள கூற்றுத்தான் என்பதற்கு சான்றாக சில ஹதீதுகள் மேலே முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த கருத்தை ஸலபுகளான அறிஞர்கள் மேற்கண்ட ஹதீதுகளினடிப்படையில் இதே கொள்கையைக் கொண்டிருந்தனர் என்பதை பின்வரும் அவர்களின் கூற்றுக்களின் மூலம் உறுதியாகின்றது. எடுத்துக் காட்டாக சில அறிஞர்களின் கூற்றுக்களை கீழே தருகின்றேன்.
♦ ஹாபிழ் அல்லாமா ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், “றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு சூரிய, சந்திர வெளிச்சத்தில் நிழல் விழுவதில்லை. நபிகள் நாயகம் ஒளியாக இருப்பதுதான் இதற்கு காரணம் என்று இப்னு ஸர்இன் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பவரும், ஏனைய ஒளிகளை விட பெருமானாரின் ஒளி மிகைத்துள்ளது என்று றஸீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பவரும் கூறுகின்றனர்.
நூல்: உன்மூதுஜுல் லபீப்
♦ மிகச் சிறந்த ஹதீஸ்துறை அறிஞரான இமாம் காழி இயால் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள் சூரிய, சந்திர ஒளியில் நபிகள் நாயகம் ல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருமேனிக்கு நிழல் விழுவதில்லை. காரணம் அவர்கள் ஒளியாகும். (அதுபோல்) அன்னாரின் உடலிலும் உடையிலும் ஈ, கொசு தொடுவதில்லை.
நூல்: ஷிபா, பாகம் - 01, பக்கம் - 243
♦அல்லாமா ஷிஹாபுத்தீன் கபாஜி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள் மரியாதை, மகத்துவம் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரிய, சந்திர ஒளியில் நிழல் விழுவதில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒளி என்று திருக்குர்ஆன் கூறும் சாட்சியமே இதற்குத்தக்க சான்றாகும். இதனால் அன்னாரின் மனித நிலைக்கு இது எதிரானது ஆகாது.
நூல்: நஸீமுர்ரியாழ், பாகம் - 3, பக்கம் - 319
♦ புகாரி ஷரீபின் விரிவுரையாளர் அல்லாமா கஸ்தலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்: ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு சூரிய, சந்திர வெளிச்சத்தில் நிழல் விழுவதில்லை. இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தக்வான் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பவர் மூலம் இதனை அறிவிப்புச் செய்துள்ளார்கள். ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு சூரிய, சந்திர ஒளியில் நிழல் விழுவதில்லை.
நூல்: மவாஹி புல்லதுன்னியா, பாகம் - 01, பக்கம் - 180
♦ இமாம் ஷிஹாபுத்தீன் இப்னு ஹஜர் மக்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்: றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஒளியாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்யும் ஆதாரமாக இதுவும் உள்ளது. றஸூல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் சூரிய, சந்திர வெளிச்சத்தில் நடந்தால் அவர்களுக்கு நிழல் விழுவதில்லை. கனமானவற்றுக்குத்தான் நிழல் விழும் சடம் சார்ந்த அனைத்து வகையான திண்மங்களை விட்டும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை அல்லாஹுத்தஆலா பரிசுத்தமாக்கி அவர்களை ஒளியாக ஆக்கியுள்ளான். அதனால் ஒருபோதும் அன்னாருக்கு நிழல் விழாது.
நூல்: அப்ழலுல் குறா, பக்கம் - 72
♦ அஷ்ஷெய்கு முஹக்கீக் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு சூரிய, சந்திர வெளிச்சத்தில் நிழல் விழுவதில்லை.
நூல்: மதாரிஜுன் நுபுவ்வத், பாகம் - 01, பக்கம் - 21
♦ இமாம் தகிய்யுத்தீன் ஸுப்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,“நிச்சயமாக (நாயகமே) உங்களின் நிழல் நிலத்தில் காண முடியாதவாறு பரிசுத்தமாக்கியுள்ளான். தங்களின் காரணமாக நிழலை சுருட்டி எடுத்துள்ளான்.
நூல்: ஸீறத்துல் ஹலபிய்யா, பாகம் - 02, பக்கம் - 94
♦ அல்லாமா முல்லா அலிகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், “றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் நடந்து செல்லும்போது சூரிய, சந்திர வெளிச்சத்தில் நிழல் விழுவதில்லை.
நூல்: ஜம்உல் வஸாபியில், பாகம் - 01, பக்கம் - 176
♦இமாம் முஹத்தீன் ஹஜரத் ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், “றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருவுடலின் சிறப்பம்சங்களில் ஒன்று பெருமானாரின் நிழல் பூமியில் படுவதில்லை.
நூல்: தப்ஸீர் அஸீஸி, பக்கம் - 219
♦ காழி தனாஉல்லாஹ் பானிபத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், “இஸ்லாமிய உம்மத்தில் உள்ள வலிமார்களின் கூற்றின்படி றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருமேனிக்கு நிழல் இல்லை“ மேற்கண்ட ஆதாரங்களை ஒரு முறைக்குப் பல முறை வாசியுங்கள். ஸஹாபாக்கள் தொடக்கம் சமகால அறிஞர்கள் வரையிலான அனைவரும் பெருமானாரின் திருமேனிக்கு நிழல் இல்லை என்பதை ஏற்று உறுதி செய்கின்றனர்.
அண்ணல் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நம்மைப் போன்று நிழல் உண்டா? என்ற கேள்விக்கு சுருக்கமாக பதில் கூறலாம், அவர்களை மனிதராக பார்த்தவர்களுக்கு நிழல் தெரிந்தது. அவர்களை இறைவனின் ரசூலாக பார்த்தவர்களுக்கு நிழல் தெரியவில்லை. இது தான் எதார்த்தமான உண்மையாகும்.
ஆகவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் எதார்த்தம் ஒளியாக இருப்பதினால் அவர்களின் மனித நிலையில் மாற்றம் இல்லை என்பதை மறுக்க விளக்கம் பகரப்படுமாயின் அது அவரின் இதய நோயின் அறிகுறியாகவே அமையும்.
அல்லாஹுத்தஆலாவின் “ஹிதாயத்“ என்ற அவுடதத்தால் மாத்திரமே அதற்கு நிவாரணமளிக்க முடியும். எனவே வழிகெட்ட வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் அவர்களுக்கு நம்போன்ற நிழல் இருக்கவேண்டு மல்லவா? இதிலிருந்து நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்போன்ற சாதாரண மனிதரில்லையென்பதும் இக்கட்டுரை மூலம் தெளிவாக விளங்குகிறது.