MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகத்தின் ﷺ உடல் அமைப்பும் சிறப்புகளும் 

​ 

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான பெருமானார் ﷺ அவர்களின் அழகிய உடல் அமைப்புக்களும் அவற்றின் சிறப்புகளும்.

உங்களை உலகத்தாருக்கு ஒரு ‘றஹ்மத்’ அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை. (திருக்குர்ஆன் 21:107 )

இத் திரு வசனத்தை உரிய முறையில் ஆராய்ந்தால் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கால் நகம் முதற் கொண்டு தலை முடிவரையுள்ள சகல உறுப்புக்களிலும் ‘பறகத்’ அருள் உண்டென்பது தெளிவாக விளங்கும்.


​​மேலே கூறிய திரு வசனத்தில் ‘உங்களை அருளாக அனுப்பியுள்ளோம்’ என்றுதான் அல்லாஹ் கூறியிருகின்றானேயல்லாமல் உங்களில் அருள் இருக்கிறதென்றோ உங்களுடைய கையில் அருள் இருக்கிறது என்றோ அவன் கூறவில்லை. ‘உங்களை’ என்று அல்லாஹ் முன்னிலைப்படுத்தியது நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையேயன்றி அவர்களின் கையை மட்டுமோ அல்லது காலை மட்டுமோ அல்ல. ‘உங்களை’ என்ற சொல் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முழுமையாக குறிக்கின்றதேயல்லாமல் அவர்களின் ஒரு சில உறுப்புக்களை மட்டுமோ பாதி உடலை மட்டுமோ குறிக்காது.


​​எனவே “உங்களை றஹ்மத்தாக அனுப்பினோம்’ என்ற இறை வசனத்தின் அர்த்தம் நீங்கள் முழுமையாகவே உலகத்தாருக்கு றஹ்மத்தாக இருக்கின்றீர்கள் என்தேயாகும். இந்த விபரத்தின்படி நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால் வரையிலான சகல உறுப்புக்ளையும் ஒன்று சேர்த்துக் கொண்ட உடலையே “உங்களை” என்றசொல் குறிப்பதால் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சகல உறுப்புக்களிலும் பறகத்தும், றஹ்மத்தும் உண்டென்பது தெளிவாகிவிட்டது.


​​

♣ புனித அழகின் சிறப்புகள்

♦பராஉ பின் ஆஸிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைவிட நீண்ட முடிவைத்து, சிவப்பு நிற அங்கி அணிந்திருந்த அழகான ஒருவரை நான் கண்டதேயில்லை. அவர்களது தலைமுடி தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. (விரிந்த முதுகும் பரந்த மார்பும் கொண்டு) அவர்கள் இருதோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் அதிக உயரமுடையவராகவும் இருக்கவில்லை, குட்டையானவராகவும் இருக்கவில்லை. (நடுத்தர உயரமுடையவராகவே இருந்தார்கள்). (நூல் முஸ்லிம் 4664, 4665)

♦ ஹழ்ரத் அபூஹூரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை விட மிக அழகான எந்த வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் ஓடிக்கொண்டிருப்பது போன்று இருப்பார்கள். (நூல்கள் திர்மிதி 3648, மிஷ்காத் 5795, முஸ்னத் அஹ்மத் 2-350)

♦ ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸமூரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்:'சந்திரன் சூழ்ந்த இரவில் நான் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை பார்த்தேன். பின்னர் சந்திரனையும் பார்த்தேன். (அச்சமயம்) கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது சிவப்பு நிறப்போர்வையொன்று இருந்தது. அப்போது அன்னவர்கள் சந்திரனை விட அழகாக இருந்தார்கள். (நூல்கள் திர்மிதி 2811, தாரமி 57, மிஷ்காத் 5794)

♦ ஹழ்ரத் அபூஉபைதா இப்னு முஹம்மத் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் ருபய்யிஃ (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களிடத்தில், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களைப் பற்றி எனக்கு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'அருமை மகனே! அருமை நபி; (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை நீ பார்த்தாயானால், சூரியன் உதிப்பதாகவே காண்பாய் என்று கூறினார்கள். (நூல் தாரமி 60, மிஷ்காத் 5793)

♦ ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:'நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாள்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள். (நூல் ஹாகிம் 6558)

♦ பறா இப்னு ஆஸிகப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் நபிகளாரைப்பற்றி வர்ணிக்கையில், 'அண்ணலார் அன்னவர்களை விட அழகான ஒருவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை' என்றும் அவர்களின் முகம் சந்திரன் போல் இருந்தது என்றும் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 4ம் பாகம், 165ம் பக்கம்)

♣ புனித உடல் அமைப்பின் சிறப்புகள்

♦ பராஉ பின் ஆஸிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடுத்தர உயரமுள்ள மனிதராகவும் (பரந்த முதுகும், விரிந்த மார்பும் அமைந்து) இரு தோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இரு காதுகளின் சோனையை எட்டும் அளவுக்குத் தலைமுடி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தார்கள். (அந்த ஆடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை. (நூல்கள் புகாரி, முஸ்லிம் 4663, 4664, திர்மிதீ, நஸாயீ)

♦ அலீ இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வருணித்துக் கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிக நெட்டையோ மிகக் குட்டையோ இல்லை கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர் அடர்த்தியான சுருட்டை முடி உடையவருமல்லர் கோரைமுடி கொண்டவருமல்லர் சுருட்டை, கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர் பெருத்த உடம்பில்லை முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல சிவந்த வெண்மை நிறமானவர் கருவிழி உடையவர் நீண்ட இமை முடி பெற்றவர் புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கொடி போன்ற முடி உள்ளவர்கள் உடம்பில் முடி இருக்காது உள்ளங்காலும் கையும் தடித்தவர்கள் அவர்கள் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார்கள் திரும்பிப் பார்த்தால் முழுமையாகத் திரும்பிப் பார்ப்பார்கள் இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும் தூதர்களில் இறுதியானவர் மக்களில் மிக அதிகம் வழங்கும் கை உள்ளவர் துணிவுடைய உள்ளம் கொண்டவர் மக்களில் மிக அதிகம் உண்மை பேசுபவர் மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர் மிக மிருதுவானவர் பழக மிகக் கண்ணியமிக்கவர் திடீரெனப் பார்த்தால் அச்சம் தரும் வடிவம் அறிமுகமானவர் அவரை விரும்புவர் அவர்களை யார் வருணித்தாலும் ‘அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களைப் போன்று யாரையும் பார்த்ததில்லை’ என்றே கூறினார்கள். (நூல் திர்மிதீ, இப்னு ஹிஷாம்)

♦ அனஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப்புடையவர்களாகவும் இருந்தனர். அவர்களின் முடி முற்றிலும் சுருண்டவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை.அவர்கள் கோதுமை நிறமுடையவர்களாக இருந்தனர். நடக்கும் போது (முன்புறம்) சாய்ந்து நடப்பார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி)

♦ அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இருக்கவில்லை. இரு உள்ளங்கைகளும், இரு பாதங்களும் சதைபிடிப்புள்ளதாக (உறுதி வாய்ந்ததாக) இருக்கும். தலையும், மூட்டுகளும் பெரிதாக இருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை (கோ போன்று முடிகளிலிருக்கும். மேடான இடத்திலிருந்து பள்ளமான இடத்திற்கு இறங்கும் போது அடி எடுத்து வைப்பது போல் அடி எடுத்து நடப்பார்கள் (கால்களை தேய்த்துக் கொண்டு நடக்க மாட்டார்கள்) இவர்களைப் போன்றவரை இதற்கு முன்பும் இதற்கு பின்பும் நான் கண்டதில்லை. (நூல் - ஸூனன் திர்மிதி)

♦ என்னைக் கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவரைக் கண்ட முஸ்லிமையும் நரகம் தொடாது என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மொழிந்தார்கள். ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல் திர்மிதி, மிஷ்காத்: கிதாபுல் மனாகிப்)


​​

♣ புனித உடல் நறுமணத்தின் சிறப்புகள்

♦  கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை. வேறு சில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது . ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு, (நூல் புகாரி 3561)

♦ஹஸரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பாதையால் நடந்து சென்றால் அப்பாதை முழுவதும் நறுமணம் கமழும். (நூல்கள் : தாரமி,பைஹகீ, அபூநுஐம்)

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒரு பாதையில் சென்றிருக்க அதே பாதையில் மற்றொருவர் செல்கிறார் என்றால் அவர் அவ்வழியில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சென்றுள்ளார்கள் என்பதை அவர்களது வாடையின் மூலம் அறிந்து கொள்ளலாம். (நூல் மிஷ்காத், தாரமி)


​​

♣ புனித நிறத்தின் சிறப்புகள்

♦அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒளிரும் வெண்ணிறம் கொண்டவர்களாக இருந்தார்கள்.(நூல் முஸ்லிம் 4654)

♦ அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அகலமான கரமுடையவர்கள் முற்றிலும் சிவந்த நிறம் கொண்டவர் அல்லர். அவர் உயிர் பிரியும் போது தாடியிலும் தலையிலும் சேர்த்து இருபது வெள்ளை முடிகள் கூட இல்லை. நரை இரு பொட்டுப் பகுதியில் (கிருதாப் பகுதியில்) மட்டும் இருந்தது. தலையிலும் மிகக் கொஞ்சமாக நரைமுடி இருந்தது. (நூல் புகாரி, முஸ்லிம்)

♦ அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு மிக உயரமானவர்களாகவும் இல்லை;குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை, மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை. (நூல் முஸ்லிம் 4685)

♦ சயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறியதாவது: நான் அபுத்துஃபைல் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான முகமுடையவராகவும் இருந்தார்கள்" என்று பதிலளித்தார்கள். முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:அபுத்துஃபைல் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் (ஹிஜ்ரீ) நூறாம் ஆண்டில் இறந்தார்கள், அவர்களே நபித்தோழர்களில் இறுதியாக இறந்தவர் ஆவார். (நூல் முஸ்லிம் : 4670, 4671, 4679)


​​

♣ புனித முடியின் சிறப்புகள்

♦ கத்தாதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது தலைமுடி எப்படி இருந்தது?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களது தலைமுடி, அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை, படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது" என்று பதிலளித்தார்கள்.(நூல் முஸ்லிம் 4666, 4667, 4668)

♦ நிச்சயமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து குர்பானி கொடுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரைக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல்கள் ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232)

♦ நபித்தோழர் ஹாலித் பின் வலீத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தொப்பியில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தலைமுடிகளில் சில முடிகள் இருந்தன. ஒரு யுத்தநேரம் அவர்களிடமிருந்து அந்தத் தொப்பி தவறிவிட்டது. அதனால் காலித் பின் வலீத் ஆத்திரமடைந்தவராகக் காணப்பட்டார்.அங்கிருந்த நபீத்தோழர்கள் தொப்பி காணாமற் போனதற்காக காலித் இவ்வாறு கோபப்படுகிறார் என்று பேசிக்கொண்டனர். இதைக்கேட்ட காலித் இப்னு வலீத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி “தொப்பி” காணாமற் போனதற்காக நான் கவலைப்பவோ கோபப்படவோ இல்லை. அதில் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலை முடிகளிற் சில முடிகள் இருக்கின்றன. அதன் “பறகத்” தவறிவிடுமென்றும் அது காபிர்களிடம் போய்விடும் என்று அஞ்சுகிறேன்” என்றுசொன்னார்கள்.


​​அறிவிப்பு : ஹழ்ரத் காழி இயாள் (றழியல்லாஹு அன்ஹு) (நூல்கள் அஷ்ஷிபா,தபறானி 9: 349, ஹாகிம்)

♦ உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம், என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இஸ்ராயீல் இப்னு யூனுஸ் (ரலியல்லாஹு அன்ஹு), (நூல் ஸஹிஹுல் புகாரி 5896, மிஷ்காத்)

♦பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திரு முடி, அன்னாரது மறைவுக்குப் பின்னரே அதிகமாக நரைத்திருக்கிறது. ஏனெனில் அன்னை உம்மு ஸல்மா ரலயில்லாஹு அன்ஹா அவர்கள் அத்திருமுடியை அளவுகடந்து கண்ணியப்படுத்தும் பொருட்டு அம்முடிக்கு அத்தர் பூசுபவர்களாக இருந்ததாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்புச் செய்வதை (நூல் : புகாரியின் ஓரக்குறிப்பிலும் பக்கம் 875, இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் முஸ்லிமுக்கு எழுதிய விரிவுரை (பாகம் 2 பக்கம் 254) யிலும் காணலாம்.

♦ நான் அபீதாவிடம் சொன்னேன், எங்களிடம் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாகவோ, அவர்களது குடும்பத்தினர் மூலமாகவோ பெற்ற அண்ணலாரின் திருமுடி ஒன்று உள்ளது. உலகில் உள்ள அனைத்துப் பொருளையும் விட இத்திருமுடி என்னிடம் இருப்பது மேலானது' என்று இப்னு ஸிரீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி ஷரீப், பாகம் - 01, பக்கம் - 26)

♦ அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடி கீழே விழாதவாறு தாங்கி பிடித்து பரக்கத்திற்காக பாதுகாத்து வைக்கும் வழக்கம் சஹாபாக்களிடம் இருந்தது. (நூல் ஷரஹ் முஸ்லிம் பாகம் 2, பக்கம் 256)


​​

♣ புனித நரைமுடியின் சிறப்புகள்

♦ முஹம்மத் பின் சீரீன் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறியதாவது:அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது தலையில் நரை எதையும் பார்க்கவில்லை, இவ்வளவு தவிர" என்று கூறினார்கள். (அவை மிகவும் குறைவானவை என்பதைப் போன்று அறிவிப்பாளர் சைகை செய்தார் என இப்னு இத்ரீஸ் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்) மேலும் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் தம் நரைமுடிக்கு மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் சாயமிட்டுவந்தனர்" என்றும்


ஹழ்ரத் ​​அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்.  (நூல் முஸ்லிம் 4672, 4673, 4675, 4676, 4677, 4678)

♦முஹம்மத் பின் சீரீன் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சாயம் பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு, ”ஒரு சில நரைமுடிகளையே கண்டார்கள். (எனவே, சாயம் பூசவில்லை)” என்று அனஸ் பதிலளித்தார்கள். (நூல் முஸ்லிம் 4674)

♦ சிமாக் பின் ஹர்ப் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் சமுரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், ”நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒருசில நரைமுடிகூடத் தென்படாது அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடி தென்படும்” என்று சொன்னார்கள்.(நூல் முஸ்லிம் 4680, 4681)

♦ அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அகலமான கரமுடையவர்கள் முற்றிலும் சிவந்த நிறம் கொண்டவர் அல்லர். அவர் உயிர் பிரியும் போது தாடியிலும் தலையிலும் சேர்த்து இருபது வெள்ளை முடிகள் கூட இல்லை. நரை இரு பொட்டுப் பகுதியில் (கிருதாப் பகுதியில்) மட்டும் இருந்தது. தலையிலும் மிகக் கொஞ்சமாக நரைமுடி இருந்தது. (நூல் புகாரி, முஸ்லிம்)

♦ அபூ ஜுஹைஃபா அஸ் ஸுவாயீ (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன்.(நூல் புகாரி 3545)


​​

♣ புனித நெற்றியின் சிறப்புகள்

ஸய்யிதத்துனா ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் என்னிடத்தில் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடைய நெற்றிக் கோடுகள் (மின்னலைப் போன்று) பளிச்சிடக் கூடியவைகளாக இருந்தன. (நூல் புகாரி 3555, 6770, 6771)


​​

♣ புனித முகத்தின் சிறப்புகள்

♦  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களின் முகம் சந்திரனில் இருந்து (வெட்டி எடுக்கப்பட்டு) ள்ள ஒரு துண்டை போன்று (பேரொளியால்) பிரகாசிக்க துவங்கி விடும். அறிவிப்பவர் ஹழ்ரத் கஹ்பு பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல்கள் புகாரி 3556 , முஸ்லிம் 2769 , முஸ்னத் அஹமத் 3 - 459 , மிஷ்காத் 5798)

♦ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முகம் சூரியனை போன்றும் சந்திரனை போன்றும் வட்ட வடிவமாக இருந்தது. அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல்கள் முஸ்லிம் 2344, திர்மிதி 3636, மிஷ்காத் 5779)

♦ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுகம் வாளைபோன்று (மின்னக்கூடியதாக) இருந்ததா என்று பர்ராஉ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை, சந்திரனை போன்று இருந்தது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 3552)

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு சந்தோசம் மேலிட்டால், அவர்களின் அழகு திருமுகம் சந்திரனின் ஒரு துண்டு போல் இலங்கிகொண்டிருக்கும். இதனை நாங்கள் (மிக தெளிவாகவே அறிந்துக்கொள்வோம். ஹழ்ரத் கஹ்பு இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு),(நூல்கள் புகாரி, முஸ்லிம், மிஷ்காத் – 518)

♦ நபியவர்கள் கோபித்தால் முகம் சிவந்துவிடும். மாதுளம் பழ முத்துக்களை முகத்தில் தூவப்பட்டது போன்றிருக்கும். (நூல் ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)


​​

♣ புனித முக ரேகையின் சிறப்புகள்

ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது வீட்டில் செருப்பு தைத்துக் கொண்டிருக்க, ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) ஓர் ஆடையை நெய்து கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உடலில் இருந்து வியர்வை வந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முக ரேகைகள் ஒளியால் இலங்கிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) திடுக்கிட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ கபீர் ஹுதலி தங்களைப் பார்த்தால் தமது “அவரது முக ரேகைகளை நீங்கள் பார்த்தால் மின்னும் நட்சத்திரத்தைப் போன்று இலங்குவதைப் பார்க்கலாம்.” (நூல் தஹ்தீப் தாரீக் திமஷ்க்)


​​

♣ புனித புருவம், கண், மூக்கு, வாய், உதடு, குதிகால்கள் ஆகியவற்றின் சிறப்புகள்.

♦ ஷுஅபா (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறியதாவது:"அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விசாலமான வாயும் விரிந்த கண்ணும் மெலிந்த குதிகால்களும் உடையவர்களாக இருந்தார்கள்" என்று ஜாபிர் பின் சமுரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக சிமாக் பின் ஹர்ப் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் தெரிவித்தார்கள். நான் சிமாக் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களிடம், "விசாலமான வாய் ("ளலீஉல் ஃபம்") என்றால் என்ன?" என்று கேட்டேன். அவர்கள் "பெரிய வாய்" என்றார்கள். "விரிந்த கண் ("அஷ்கலுல் ஐன்") என்றால் என்ன?" என்று கேட்டதற்கு "நீளமான கண் பிளவு" என்றார்கள்."மெலிந்த குதிகால்கள் ("மன்ஹூசுல் அகிப்") என்றால் என்ன?" என்று கேட்டதற்கு, "குதிகாலில் சிறிதளவு சதைப்பற்று காணப்படுவது" என்று பதிலளித்தார்கள். (நூல் முஸ்லிம் 4669)

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின்புறம் உங்களை நான் பார்க்கிறேன்."ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), (நூல் புகாரி - 418)

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மேனி ஒளிவீசிக் கொண்டிருக்கும். படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களும் சேர்ந்திருக்காது. இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பிருக்கும். கோபம் வரும் போது அது எழும்பிக் கொள்ளும். அவர்களை முதன்முதலில் காண்போர் மூக்கு நீண்டதாக காண்பர். ஆனால் கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

♦ அபூ ஜுஹைஃபா (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கீழ் உதட்டுக்கு கீழே கொஞ்சம் முடி வெண்மையாக இருந்தது. (நூல் புகாரி)

♦ இஸ்மித் என்ற (கருப்பு) கற்களால் சுர்மா இடுங்கள் அது பார்வையை கூர்மையாக்கும் இமைகளின் முடியை வளரசெய்யும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அறிவிக்கும் இப்னு அப்பாஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சுர்மாகூடு ஒன்று இருந்தது ஒவ்வொரு இரவிலும் இருகண்களிலும் மூன்று தடவை இட்டுக்கொள்வர்கள் என்றும் அறிவித்தார்கள் (நூல் :திர்மிதி 1757)

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தன் கண்களுக்கு மை இடுகையில் வலக் கண்ணில் மூன்று முறையும் இடக் கண்ணில் இரண்டு முறையும் இடுவார்கள்” (நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா)


​​

♣ புனித மச்சத்தின் சிறப்புகள்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கு மத்தியில் புறாவின் முட்டையைப் போல் மேனி நிறத்திலேயே நபித்துவ முத்திரை இருந்தது. அது இடது புஜத்திற்கு மேல் மிருதுவான தசைக்கு அருகில் மச்சம் போன்று இருந்தது. (நூல் ஸஹீஹ் முஸ்லிம்)


​​

♣ புனித பற்களின் சிறப்புகள்

♦ உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அழகிய பற்களைக் கொண்டவர்கள். (நூல் முஸ்லிம்)

♦ இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அகன்ற முன் பற்கள் உடையவர்கள் அவர்கள் பேசினால் பற்களின் இடைவெளியிலிருந்து பிரகாசம் வெளியேறுவது போன்றிருக்கும் அவர்களது கழுத்து தூய்மையான வெள்ளிச் சிலையின் கழுத்தைப் போல் இருக்கும் அவர்களது இமை முடி நீளமாக இருக்கும். தாடி அடர்த்தியாக, நெற்றி விசாலமாக இருக்கும் புருவம் அடர்ந்து வில் வடிவம் பெற்றிருக்கும் நீண்ட மெல்லிய மூக்குடையவர். மிருதுவான மெல்லிய கன்னமுடையவர். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை குச்சிப் போல முடி இருக்கும். வயிற்றிலோ நெஞ்சிலோ அதைத் தவிர முடி இருக்காது. குடங்கையிலும் தோள் புஜத்திலும் முடி இருக்கும். மார்பும் வயிறும் சமமானவர். அகன்ற மார்பும், நீளமான மணிக்கட்டும், விசாலமான உள்ளங்கையும் உள்ளவர் நீளமான முன் கையும், கெண்டைக்காலும் உள்ளவர் உள்ளங்கால் நன்கு குவிந்தவர்கள் விரல்கள் நீளமாக இருக்கும் அவர்கள் நடந்தால் கால்களை எடுத்து வைப்பவரைப் போல் பணிவுடனும் முன் பக்கம் சாய்ந்தவராகவும் நடப்பார்கள். (நூல்கள் : குலாஸத்துஸ் ஸீரா, தாரமி, மிஷ்காத்)


​​

♣ புனித சிரிப்பின் சிறப்புகள்

♦  கஅப் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிரித்தால் அவர்களது முகம் மிக ஒளி பொருந்தியதாக, பார்ப்பவர்களுக்கு சந்திரனைப் போன்று இருக்கும். (நூல் புகாரி)

♦ஜாபிர் இப்னு சமுரா (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மெல்லிய கெண்டைக்கால் உடையவர்கள். அவர்களது சிரிப்பு புன்முறுவலாகத்தான் இருக்கும். அவர்களைப் பார்த்தால் கண்ணில் ‘சுர்மா’ இட்டதைப் போல் இருக்கும். ஆனால், சுர்மா இடவில்லை. (நூல் ஜாமிவுத் திர்மிதி)

♦ நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை.அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு), (நூல் : முஸ்லிம் 4522)


​​

♣ புனித முதுவு, மார்பின் சிறப்புகள்

பராஉ பின் ஆஸிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடுத்தர உயரமுள்ள மனிதராகவும் (பரந்த முதுகும், விரிந்த மார்பும் அமைந்து) இரு தோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இரு காதுகளின் சோனையை எட்டும் அளவுக்குத் தலைமுடி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தார்கள். (அந்த ஆடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை. (நூல்கள் புகாரி, முஸ்லிம் 4663, 4664, திர்மிதீ, நஸாயீ)


​​

♣ புனித (கரம்) கைகளின் சிறப்புகள்

♦ஹழ்ரத் அபூ ஜூஹைஃபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருக்கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக்கொண்டேன். அது பனிக்கட்டியை விட குளிர்ச்சியானதாகவும், கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகவும் இருந்தது. (நூல் புகாரி 3553)

♦ஜாபிர் பின் சமுரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் முதல்தொழுகை (லுஹ்ர்) தொழுதேன். பிறகு அவர்கள் தம் வீட்டாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது அவர்களுக்கு எதிரே சிறுவர்கள் சிலர் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அச்சிறுவர்களின் கன்னங்களை ஒவ்வொருவராகத் தடவினார்கள். என் கன்னங்களிலும் தடவினார்கள். அவர்களது கரத்திலிருந்து ”குளிர்ச்சியை” அல்லது ”நறுமணத்தை” நான் உணர்ந்தேன். அவர்கள் தமது கையை நறுமணப் பையிலிருந்து அப்போதுதான் எடுத்ததைப் போன்றிருந்தது.(நூல் முஸ்லிம் 4652)

♦ அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தண்ணீர் (பாத்திரத்தைக்) கொண்டுவரச் சொன்னபோது, (உட்பகுதி குறுகலான) வாயகன்ற (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாத்திரத்திற்குள் தம் விரல்களை நுழைத்தார்கள்.) மக்கள் அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்யலாயினர். நான் எண்ணிக் கணக்கிட்டுப் பார்த்தேன். அவர்கள் அறுபதிலிருந்து எண்பது பேர் இருந்தனர். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய விரல் களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரப்பதை நான் பார்க்கலானேன். (நூல் முஸ்லிம் 4576, 4577, 4578, 4579)

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறிபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன். ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல் புகாரி 200)

♦ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை. வேறு சில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது.ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு), (நூல் புகாரி 3561)

♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், (மதீனாவிலுள்ள) ”ஸவ்ரா” என்னுமிடத்தில் இருந்தபோது அவர்களிடம் (தண்ணீர் இருந்த) ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் தம் கரத்தைப் பாத்திரத்தினுள் போட, அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து தண்ணீர் (ஊற்று போல்) பொங்கி வரலாயிற்று. மக்கள் அனைவரும் (அந்தத் தண்ணீரில்) உளூச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் கதாதா(ரஹ்மதுல்லஹி அலைஹி) கூறினார்கள் : நான் அனஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், ”நீங்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”முன்னூறு பேர்” என்றோ, ”முன்னூறு பேர் அளவிற்கு” என்றோ கூறினார்கள்.(நூல் புகாரி 3572, 3573, 3574)

♦ பராஃ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்த நீண்ட ஒரு சம்பவத்தை சுருக்கமாகச் சொல்கிறேன். அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூ ராபிஃ என்ற யூத வியாபாரியை அவனுடைய கோட்டைக்குச் சென்று கொலை செய்துவிட்டு இரவு நேரத்தில் இறங்கும் பொழுது இடையில் கால் சறுக்கி கீழே விழுந்து அவர்களுடைய கெண்டைக் கால் முறிந்துவிட்டது. அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள், "நான் நடந்த சம்பவத்தை நபிகள் நாயகத்திடம் கூற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்களுடைய காலை நீட்டுங்கள்" என்று கூறினார்கள். நான் காலை நீட்டினேன். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் மீது தடவினார்கள். நான் அதில் ஒரு பொழுதும் நோய் வாய்ப்படாதவனைப் போன்று மாறிவிட்டேன்" என்று அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியுள்ளார்கள்.(நூல் புகாரி 4039)

♦'நான் (மக்காவில்) உக்பா பின் அபீ முஅய்த் என்பவரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களும், அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களும் என்னிடம் வந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், 'சிறுவரே! பால் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் உள்ளது. எனினும் நான் நம்பி ஒப்படைக்கப்பட்டவனாக இருக்கிறேன். (யாருக்கும் நான் இவ்வாடுகளின் பாலை என் விருப்பப்படி வழங்க முடியாது)' என்றேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், 'சினையாகாத சாதாரண ஆடு எதுவும் உள்ளதா?' என்று கேட்டார்கள். உடனே ஒரு ஆட்டை நான் அன்னவர்களிடத்தில் கொண்டு வந்தேன். உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அந்த ஆட்டின் மடியை தங்கள் திருக்கரத்தால் தடவினார்கள். உடனே (அதிலிருந்து) பால் வர ஆரம்பித்துவிட்டது! ஒரு பாத்திரத்தில் பாலைக் கறந்து அவர்கள் பருகினார்கள். அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கும் வழங்கினார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹூ அன்ஹூ)(நூல் முஸ்னத் அஹ்மத்)

♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களை நான் பார்த்தேன். அஸருடைய தொழுகையின் நேரம் வந்தது. (ஒழுச் செய்யத்) தண்ணீரை மக்கள் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. ஒலுச் செய்ய ஒரு பாத்திரம் (தண்ணீர்) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்பாத்திரத்தில் தங்கள் கையை வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒழுச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்களுடைய விரல்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வெளிவருவதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் ஒழுச் செய்தனர். ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹூ அன்ஹூ) (நூல் புகாரி)

♦ ஹூதைபிய்யா நாள் அன்று மக்களுக்கு தாகம் எற்பட்டு விடவே அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்தனர். அவர்களுக்கு முன்னால் தண்ணீர்ப்பை வைக்கப்பட்டிருந்தது. 'நாங்கள் ஒழு செய்யவோ குடிக்கவோ எங்களிடம் தண்ணீர் இல்லை. தங்களுடைய தண்ணீர்ப் பையில் இருப்பதைத் தவிர' என்று தோழர்கள் கூறினார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தண்ணீர்ப் பையில் தங்களின் கையை வைத்தனர். உடனே அவர்களுடைய விரல்களிலிருந்து தண்ணீர் பீரிட்டு வரத் தொடங்கியது ஊற்றுக் கண் (திறந்தாற்) போல! எனவே நாங்களும் ஒழுவும் செய்து குடிக்கவும் செய்தோம். 'அச்சயமயம் நீங்கள் எத்தனைப் பேர் இருந்தீர்கள்?' என்று ஜாபிர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு) அவர்கள், 'நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருப்பினும் அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்கள்தாம் இருந்தோம்' என்று கூறினார்கள். ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹூ அன்ஹூ)(நூல் ஸஹிஹ் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்)


​​

♣ புனித நடையின் சிறப்புகள்

♦  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இரு உள்ளங்கைகளின் மூட்டுகள் நீளமானதாக இருக்கும். உள்ளங்கை விரிந்து இருக்கும். உள்ளங்கையும், பாதமும் சதைபிடிப்புடன் இருக்கும். கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும். பாதங்கள் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். பாதங்கள் மிருதுவாயிருப்பதால் அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை. நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள். நடக்கும்போது மேடான இடத்தில் இருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் அவர்கள் நடையிருக்கும் (நூல் திர்மிதி)

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்தால் (பள்ளத்தில் இறங்குவதைப் போன்று முன்பக்கம்) சாய்ந்து நடப்பார்கள்.(நூல் முஸ்லிம் 4654)

♦ அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விட மிக அழகான எதையும் நான் பார்த்ததில்லை. அவர்களது வதனத்தில் சூரியன் இலங்கியது. அவர்களை விட வேகமாக நடப்பவர்களை நான் கண்டதில்லை. பூமி அவர்களுக்கு சுருட்டப்பட்டது போல் இருக்கும். நாங்கள் சிரமத்துடன் நடப்போம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோ சிரமம் தெரியாமல் நடப்பார்கள். (நூல் ஜாமிவுத் திர்மிதி, மிஷ்காத்)


​​

♣ (கூச்சம்) வெட்கத்தின் சிறப்புகள்

♦   அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள். கெட்டவார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அப்பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பவர் : அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல் : திர்மிதி 1897)

♦ அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா (ரலியல்லாஹு அன்ஹு) இதே போன்றதை அறிவித்துவிட்டு, ”நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்” என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.(நூல் புகாரி 3562, முஸ்லிம் 4639 )


​​

♣ புனித வியர்வையின் சிறப்புகள்

♦அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒளிரும் வெண்ணிறம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்றிருந்தன. அவர்கள் நடந்தால் (பள்ளத்தில் இறங்குவதைப் போன்று முன்பக்கம்) சாய்ந்து நடப்பார்கள். அவர்களது உள்ளங்கையைவிட மென்மையான அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ நான் தொட்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது (உடல்) வாசனையைவிட சுகந்தமான கஸ்தூரியையோ ”அம்பரை”யோ நான் நுகர்ந்ததேயில்லை.(நூல் முஸ்லிம் 4653, 4654)

♦ அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், எங்களது வீட்டுக்கு வந்து மதிய ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்களது உடலில் வியர்வை ஏற்பட்டது. என் தாயார் (உம்மு சுலைம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வந்து வியர்வைத் துளிகளை அந்தக் குடுவையில் சேகரிக்கலானார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "உம்மு சுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள். என் தாயார், "இது தங்களது வியர்வை. இதை எங்கள் நறுமணப் பொருளில் சேர்க்கிறோம். இது நல்ல வாசனைப் பொருட்களில் ஒன்றாகும்" என்று சொன்னார்கள். (நூல் புகாரி 6281, முஸ்லிம் 4655, 4656, 4657)

♦ ஹழ்ரத் அபூஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் : ஒருவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனது மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கின்றேன். அவளுக்கு மணம் பூச வாசனைத் திரவியம் இல்லை. தாங்கள் அதனைத் தந்துதவுமாறு வேண்டுகின்றேன் என்றார்.பெரிய வாயுள்ள ஒரு போத்தலையும் ஒரு குச்சியையும் கொண்டு வருமாறு அம்மனிதரை நபியவர்கள் வேண்டினார்கள். அதனை அம்மனிதர் கொண்டுவந்து நபியவர்களிடம் கொடுத்தார். தங்களது முழங்கையிலிருந்து வடித்த வியர்வையை போத்தலில் நிறைத்துக் கொடுத்தார்கள். இதனை எடுத்துச்சென்று உனது மண மகளிடம் கொடுங்கள். குச்சியால் எடுத்துப் பூசிக் கொள்ளுமாறு கூறுங்கள் என்றார்கள். (நூல்கள் :அபூயஃலா, தப்றானி - அஸ்வத், இப்னு அஸாகிர்)


​​

♣ புனித (உதிரம் - குருதி) இரத்தத்தின் சிறப்புகள்

♦ ஹழ்ரத் அபூஉமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் : உஹது யுத்தத்தில் ஒரு தீயவன் திரு நபியவர்களுக்கு கல்லால் எறிந்தான். அதனால், நபியவர்களின் முபாறக்கான ஒரு பல் ஸஹீதானது. அதனால் வாயின் ஓரத்திலிருந்து குருதி வடிந்தது. ஹஸரத் அபூ சயிதுல் குத்ரிய் ரழியல்லாஹு அன்ஹுவின் தந்தை அபூஸினான் ரழியல்லாஹு அன்ஹு குருதியை உறிஞ்சிக் கொண்டிருந்தார். உறுஞ்சிய குருதியைத் துப்பி விடுமாறு குண நபிநாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாங்களின் குருதியை நிலத்தில் உமிழ மாட்டேன் என்று கூறிய பின் அதனை மென்றுவிட்டார். உலகத்தில் ஒரு சொர்க்கவாதியைப் பார்க்க விரும்பினால் இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவருக்கு சோபனம் சொன்னார்கள் (நூல்கள் : பைஹகி,ஸீறத்துன் நபவிய்யா பாகம் - 03, பக்கம் - 228, ஷிபா - பாகம் -1, பக்கம் - 161)

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துவிட்டு பிறகு என்னிடம் "இந்த இரத்தத்தை எடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால்நடைகளின் (கண்ணில்படாதவாறு) புதைத்து விடுங்கள்" என்று கூறினார்கள். எனவே நான் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். பிறகு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக் குடித்தேன் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குத் தெரிவித்தேன் அவர்கள் சிரித்தார்கள். அறிவிப்பவர்: சஃபீனா (ரலியல்லாஹு அன்ஹா ),(நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா)

♦ ஹஸரத் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு நபிகள் நாயகத்திற்க்கு இரத்தம் குத்தி எடுத்தார்கள். எடுத்த குருதியை எடுத்துச் சென்று எவர் பார்வையிலும் படாத இடத்தில் மறைத்து விடுமாறு நபியவர்கள் பணித்தார்கள். நான் அதனை எடுத்துச் சென்று மறைவிடத்தில் குடித்து விட்டேன்.குருதியை என்ன செய்தீர்? என்று கோமான் நபியவர்கள் அவரிடம் விசாரித்தார்கள். மனிதருக்கு மறைவாக உள்ள ஓர் இடத்தில் அதனை (பத்திரமாக) வைத்துள்ளேன் என்றார். குருதியைக் குடித்து விட்டீர்களா? என்று நபியவர்கள் கேட்டார்கள். ஆமாம் நாயகமே! நான் அதனைக் குடித்து விட்டேன் என்றார். எதற்காகக் குடித்தீர்கள் என்று நபியவர்கள் கேட்டார்கள். தாங்கள் குருதியை நரகம் தீண்டாது என்பதை திட்டமாக நான் அறிந்திருந்தேன். அதன் பறக்கத்தால் என்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே குடித்தேன் என்று அடக்கத்துடன் விடை சொன்னதும், நரக நெருப்பு உம்மைத் தொடாது என்று கூறிய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பாசத்தால் என் தலையை வருடினார்கள். (நூல்கள் :ஸீறத்துன் நபவிய்யா, பாகம் - 03, பக்கம் - 227 - 228 ஷறஹுஷிபா, பாகம் - 1, பக்கம் - 162, தாரகுத்னீ)

♦ கோமான் நபியவர்களின் குருதியை குடித்த தினத்திலிருந்து வீரமரணம் அடையும்வரை ஹஸரத் இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருவாயிலிருந்து கஸ்தூரி கமழ்ந்து கொண்டிருந்தது என ஹஸரத் ஷுஃபி ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்,பெருமானாரின் குருதியின் சுவை எப்படியிருந்தது? என்று இப்னு ஷுபைர் ரழியல்லாஹு அன்ஹுவிடம் ஸஹாபாக்கள் கேட்டார்கள். குருதி தேனைப் போன்று இனித்தது. கஸ்தூரி போன்று மணம் பரப்பியது என்று அவர் விடை பகர்ந்தார்கள். (நூல் : ழியாஉன்நபி,பாகம் - 05, பக்கம் - 499)


​​

♣ புனித சிறுநீரின் சிறப்புகள்

♦ உம்மு ஐமன் ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : இரவில் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஈச்ச மரத்தினால் செய்யப்பட்ட பாத்திரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு உறங்கி விட்டார்கள்.இரவில் நான் விழித்தேன். எனக்குத் தாகமாக இருந்தது. பாத்திரத்திலிருந்ததை (அது சிறுநீர் என்பது அவருக்குத் தெரியாது) குடித்துவிட்டேன். விடிந்ததும் விடயத்தை நபியவர்களிடம் கூறினேன். சிரித்தார்கள். இதன்பின் உன் வயிற்றில் எதுவித முறைப்பாடும் (வியாதியும்) வராது என்று நற்செய்தி கூறினார்கள்.(நூல்கள் : ஹாக்கிம்,ஹுஜ்ஜத்துல்லாஹில் ஆலமீன், பக்கம் - 688, ஷறஹுஸ்ஸிபா, பா கம் - 01, பக்கம் - 162)

♦ஹஸரத் இப்னு ஜுறைஜ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் : இரவில் நபியவர்கள் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு அப்பாத்திரத்தை கட்டிலுக்குக் கீழ் வைப்பது வழக்கம். விடிந்ததும் பாத்திரம் வெறுமையாக இருப்பதைப் பார்த்துவிட்டு உம்முல் முஃமினீன் அன்னை உம்மு ஹபீபாவுடன் ஹபஷாவிலிருந்து கூடவே வந்திருந்த “பறக்கா“ என்ற பெண்ணிடம் பாத்திரத்திலிருந்த சிறுநீரை என்ன செய்தீர்கள் என்று நபியவர்கள் கேட்டார்கள். அதனைக் குடித்துவிட்டேன் என்று பறக்கா கூறினார்கள். உம்மு யூசுப் உமக்கு ஆரோக்கியம் கிடைத்து விட்டது என்று கூறினார்கள். இதன் பின் பறக்காவுக்கு மரண நோயைத் தவிர்த்து வேறு எந்த நோயும் அணுகவே இல்லை. (நூல் : ஹுஜ்ஜத்துல்லாஹில் ஆலமீன், பக்கம் - 688, ஷறஹுஷிபா, பாகம் - 01, பக்கம் - 163)


​​

♣ புனித உமிழ் நீர், வுழுச் செய்த நீரின் சிறப்புகள்

♦பராஉ இப்னு ஆஸிப் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்: ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது (மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணறாகும். நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) இறைத்தோம். எந்த அளவுக்கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட நாங்கள்விட்டு வைக்கவில்லை. நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்தார்கள். பிறகு, சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு (தம் வாயிலிருந்து நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம். பிறகு, நாங்கள் தாகம் தீரும் வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும்... அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும்... நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர்) இறைத்தோம். (நூல் புகாரி 3577)

♦ பேச்சு சரியாக வராத ஒரு பெண்மணி அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தாள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சுடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணி, 'எனக்கும் சிறிதளவு உண்ணுவதற்கு அளிக்கக்கூடாதா?' என்று கேட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமக்கு முன்னால் இருந்த உணவிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு அப்பெண்மணி, 'தங்களின் வாயில் உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், தங்கள் வாயிலுள்ள உணவை வெளியாக்கி, அப்பெண்ணிடம் கொடுத்தார்கள். அப்பெண் அதனை தன் வாயில் போட்டுக் கொண்டார். அதனை சாப்பிட்டு விட்டார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம் போய்விட்டது! (நூல் தப்ரானி )

♦  கைபர் போரின் பொழுது ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்களின் இரு கண்களிலும் தங்கள் எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண்வலியிலிருந்து குணமடைந்தார்கள்.(நூல் ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்)

♦ ஹுதைபியா உடன்படிக்கையின்போது மக்கத்துக் குறைஷிகள் நபிகள் நாயகத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஹஸரத் உர்வதுப்னு மஸ்ஊத் (அப்போது அவர் இஸ்லாமாகவில்லை) அவர்களை அனுப்பி வைத்தனர். அவர் நபியவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் அங்கு கண்டவைகளை குறைஷிகளிடம் இவ்வாறு விபரித்தார்.“எனது சமூகமே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் கைஸர், கிஸ்றா,நஜ்ஜாசி உள்ளிட்ட பெரும் பெரும் மன்னர்களிடமெல்லாம் தூதுவராகச் சென்றுள்ளேன். அல்லாஹ் மீது ஆணையாக! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அவர் தோழர்கள் கொடுக்கும் மரியாதை போன்ற ஒன்றை எந்த ஒரு மன்னர் அவையிலும் நான் கண்டதில்லை.அல்லாஹ் மீது ஆணையாக! அவர் உமிழ்ந்தால் அது அவர் தோழர்களில் ஒருவரின் கரத்தில்தான் படிகின்றது. அதனை தனது உடலிலும் முகத்திலும் தேய்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர் ஒரு கட்டளை பிறப்பித்தால் விரைந்து செயல்படுகின்றனர். அவர் வுழுச் செய்தால் வுழுச் செய்த நீரை சண்டை பிடித்துப் பெற்று உடலில் தடவிக் கொள்கின்றனர். அவர் பேசினால் அவர்களின் சப்தத்தை தாழ்த்தி செவிமடுக்கின்றனர். கண்ணியத்தின் நிமிர்த்தம் அவரை ஏறிட்டு அவர்கள் பார்ப்பதில்லை. உங்களுக்கு அவர் ஒரு நல்வழியைத்தான் கூறுகின்றார். அதனால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்“ (ஆதாரம் : புகாரி)

♦ அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள். நான் (என் மகன்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை (மக்காவில்) சூலுற்றிருந்தேன். சூல்காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன். மதீனா வந்தேன் (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களின் மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனுடைய வாயில் உமிழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனுடைய வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனுடைய வாயினுள் வைத்து தேய்த்துவிட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள்வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான். வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ”அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மதீனா) நோக்கி கர்ப்பிணியான நிலையில் ஹிஜ்ரத் செய்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. (நூல் புகாரி 3909, 3910)

♦ “ தோலினால் செய்யப்பட சிவப்பு நிற மேலங்கியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அணித்திருக்கப் பார்த்தேன். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூச் செய்த தண்ணீரை பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எடுத்து செல்வதையும் அந்தத் தண்ணீரை எடுப்பதில் மக்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் கண்டேன். அந்தத் தண்ணீரைப் பெற்றவர் அதைத் தங்களின் உடம்பில் தடவினார். அந்த தண்ணீரை பெறாதவர் தண்ணீரைப் பெற்ற தம் நண்பரின் கையில் உள்ள ஈரத்தை தொட்டு(த் தடவிக்) கொண்டார். (நூல்: புகாரி : 376)

♦ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு நாள் நடுப்பகலில் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதில் அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து மக்கள் எடுத்து அதை தங்களின் மீது தடவிகொண்டார்கள். என்று அபூ ஜுஹைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: புகாரி : 187)


​​

♣ புனித வாய் வைத்து குடித்த பாத்திரத்தின் சிறப்புகள்

அபூபுர்தா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள். “ நான் மதீனா சென்று இருந்தேன். அங்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம். “ வீட்டிற்குப் போகலாம் (வாருங்கள்). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருந்திய ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு நான் அருந்தக் கொடுப்பேன், மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தொழுத பள்ளிவாசலில் நீங்கள் தொழலாம்” என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் எனக்கு (அரைத்த) மாவு பானத்தை அருந்தக் கொடுத்தார்கள். பேரீச்சம் பலத்தை உண்ணக் கொடுத்தார்கள். அவர்களின் பள்ளிவாசலில் தொழுதேன். (நூல் புகாரி: 7431)


​​

♣ புனித நகம், உடையின் சிறப்புகள்

♦ ஹஸரத் அமீர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுவிடம் நபியவர்கள் பாவித்த சாறனும் ஜுப்பாவும் ஒரு போர்வை மற்றும் நபியவர்களின் திருமுடி நகம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவர்களின் மரண வேளையில் பின்வருமாறு வசிய்யத் செய்தார்கள்.நபியவர்களின் ஜுப்பாவை எனக்கு கபன் செய்யுங்கள். போர்வையால் சுற்றுங்கள். அவர்களின் சாறனை உடுத்தாட்டுங்கள். சுஜூது செய்யும் உறுப்புக்களான நெற்றி, வாய் உள்ளிட்ட உறுப்புக்களில் அன்னாரின் திருமுடியையும் நகத்தையும் வையுங்கள். கருணாகரனான அல்லாஹ்வின் பேரருளில் என்னை வையுங்கள்.(நூல் : மிர்காத், பாகம் - 05, பக்கம் -638, இக்மால் பக்கம் 617)

♦ அண்ணலாரின் அன்பு மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்து, 'நீங்கள் மூன்று தடைவ அல்லது ஐந்து தடைவ அல்லது அதை விட அதிகமாக குளிப்பாட்டுங்கள். நீரையும், சீயக்காயையும் போட்டு நீர் ஊற்றி விட்டு இறுதியில் கற்பூரத்தை வையுங்கள். எல்லாம் முடிந்து விட்டால் எனக்குத் தகவல் கொடுங்கள் என்று கூறினர். அனைத்தும் முடிந்தபோது அண்ணலாரை அழைத்தோம். அண்ணலார் தமது வேட்டியைத் தந்து அதை அன்னாருக்கு ஞாபகச் சின்னமாக அணிவித்து விடுங்கள் என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்: ஹழ்ரத் உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹு (நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 304 )

♦ ஹழ்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு கைஸான் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக்கு சொன்னார்கள்: இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய ஜுப்பா. இது ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்களுடைய மரணத்திற்கு பிறகு அதை நான் எடுத்து கொண்டேன். இதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அணியக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஜுப்பாவை நோயாளிகளுக்கு கழுவிக் கொடுத்து நாங்கள் நோய் நிவாரணத்தை தேடி கொள்வோம் என கூறினார்கள். (நூல் முஸ்லிம் பாகம்2, பக்கம் 190)

♦ அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுவின் திருமகள் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாவிடம் நபியவர்களின் ஒரு சாறன் இருந்தது. அதனைக் கழுவி நோயாளிகளுக்கு அந்நீரால் குளிப்பாட்டுவார்கள். சுகம் கிடைக்கும்.(நூல் : முஸ்லிம் ஷரீப்,பாகம் - 02, பக்கம்- 190)


​​

♣ கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் உடல் அமைப்பை கொண்ட அருமை பேரர்கள் ஸெய்யதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நெஞ்சிலிருந்து தலை வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். ஸெய்யதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நெஞ்சிலிருந்து கால் வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். என்று இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் திர்மிதீ , மிஷ்காத்)

♦ அபூஜுஹைஃபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வெண்ணிறமுடையவர்களாகவும் முதுமை அடைந்தவர்களாகவும் இருந்தார்கள். (நபியவர்களின் பேரர்) ஹசன் பின் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு (தோற்றத்தில்) ஒத்திருப்பார்கள். (நூல் முஸ்லிம் 4679)



♣ அழகிய முன்மாதிரி, நற்குணத்தின் சிறப்புகள்

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து,அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.  (அல்குர்ஆன் 33:21)

♦ மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.  (அல்குர்ஆன் : 68:4)

♦ இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கிறேன்)" என்றேன். ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள் இதைச் செவியேற்ற நான் எழுந்து விடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும் வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன். ஹழ்ரத் ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு), ( நூல் முஸ்லிம் 1357)

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள் நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன். (நூல் அஹ்மத், பைஹகீ)

♦நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாவும் இருந்தார்கள். ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

(நூல் புகாரி 6033, முஸ்லிம்)