MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நாற்காலியில்  (கதிரையில்) அமர்ந்து தொழலாமா?


​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


"இஸ்லாத்தின் பார்வையில் நாற்காலியில் (கதிரையில்) அமர்ந்து தொழுவது பற்றி இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?"

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

தற்போது பள்ளிவாயில்களில் தொழுவதெற்கென்றே நாற்காலிகள் (கதிரைகள்) போடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் மிகவும் முடியாதவர்கள், வயதானவர்கள் அமர்ந்து தொழுவதையும் நீங்கள் பார்த்துதான் இருப்பீர்கள்.


​​நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும், குனிந்த நிலையிலும், படுத்த நிலையிலும் இறைவனை நினைவு கூறும் படி ஏவப்பட்டுள்ள குர்ஆன் ஆயத்திற்கு இமாம்கள் தந்த விளக்கப்படி இந்த தொழுகை அமைந்துள்ளதையும் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் நாற்காலியில் தொழுவது என்பது கூடாது, பித்அத் என்று குறைக்கும் சில வஹ்ஹாபிகளும் , மற்றும் தேவ்பந்திய உலமாக்கள் போன்றோர் உரக்க கத்துவதும், இயலாத, முடியாத, வேறு வழியில்லாதவர்களின் தொழுகையை இதனால் பாழாக்க முனைவதும் இதற்கு சிலர் வக்காலத்து வாங்குவதும் வழமையாகி விட்டது.

தேவ்பந்தியிஸம் (தப்லீக் ஜமாஅத்) எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நமது நாடுகளில் நுழைந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. அதற்கு நாம் என்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

♣  வழிகெட்ட வஹாபிகள் தவரான வாதங்களுக்கு தக்க பதில்கள்

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் இஸ்லாமிய நடைமுறைச் சட்டங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றி வருவதும், அதற்காகவே நமது இமாம்கள், இறைநேசச் செல்வர்கள் பாடுபட்டிருப்பதையும் நாம் அறிவோம். காலங்கள் செல்ல செல்ல நவீனங்களும், நாகரீகங்களும் புதிது புதிதான தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன. அதற்கெல்லாம் அமையவே நமது சட்டங்கள் வகுத்து தரப்பட்டுள்ளன.


​​மாறி வரும் இந்த பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய சட்டதிட்டங்களுங்கு மாறுபடாமல் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றி நடப்பதுதான் ஒரு உண்மையான இஸ்லாமியனின் கடமையாக இருக்க வேண்டும். அதற்குரிய வழிவகைகளைத்தான் உலமாக்கள் நவீனங்களுக்கு ஏற்ப, இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சொல்ல வேண்டுமே தவிர, மக்களுக்கு கஷ்டத்தைத் தரக் கூடிய, இறைவனை மறக்கடிக்கக் கூடிய வழிவகைகளை சொல்லி மக்களைக் குழப்பக் கூடாது. ​​இந்த வகையில்தான் நாற்காலியில் தொழுவதும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அவர்களும், ஏனைய சஹாபாக்களும் உட்கார்ந்து தொழுதிருக்கிறார்கள். இதற்கு ஹதீதுகளில் ஆதாரங்கள் காணக் கிடக்கின்றன. அச்சமயத்தில் உட்கார்ந்து தொழுவது என்பது கீழே உட்கார்ந்து தொழுவதுதான் என்பது வெள்ளிடைமலை. ஏனெனில் அக்காலத்தை எண்ணிப் பாருங்கள். எங்கே நாற்காலிகள் இருந்தன? அவ்வாறு பார்க்கும் போது, அக்காலத்தில் மின்சாரம், செல்போன், கம்பியூட்டர், ஏ.டி.எம்., விமானம் போன்ற நவீன வசதிகள் அக்காலத்தில் இல்லை என்பதால் அதை இக்காலத்தில் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள் போலும்!

தற்போதைய நிலையை எண்ணிப் பாருங்கள். நாகரீக உலகம். நவீனங்கள் பெருகிவிட்ட காலம். விருந்தினர்கள் வந்தாலும், வியாபாரப் பெருமக்கள் வந்தாலும் யாரையும் கீழே உட்காரச் சொல்வதில்லை. உடனே நாற்காலியைப் போட்டுத்தான் உட்காரச் சொல்கிறோம். அந்தளவிற்கு நவீனமாக – நாற்காலிகள் வந்து விட்டன. வந்தவர்களை அதில் அமரச் சொல்கிறோம். நாற்கலியில் அமர்வது என்பது உட்காருவதுதான். இதில் சந்தேகமில்லை.


​​

♣ கதிரையில் அமர்ந்து தொழுவதற்கு ஆதாரங்கள் உள்ளதா?

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை, அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே!. (அல்குர்ஆன் : 2:286)

♦ ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோயுற்றிருக்கும்போது தம் இல்லத்தில் உட்கார்ந்து தொழுதார்கள். அவர்களுக்குப் பின்மக்கள் நின்று தொழுதார்கள். அப்போது உட்காருமாறு மக்களுக்குச் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் ”இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே. எனவே அவர் ருகூவுச் செய்யுங்கள் அவர் (ருகூவிலிருந்து) நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) குறிப்பிட்டார்கள்.

நூல்: ஷஹீஹ் புகாரி 1113, 1114

♦ நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: தாரமீ 1536

ஆகவே 'உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துத் தொழு,அதற்கும் முடியாவிட்டால் சைகை மூலம் தொழு' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள். முடியாத பட்சத்தில் சைகை செய்து கூட தொழலாம் எனும் போது, தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதில் தவறில்லை என்பதை தெளிவாக மேலே உள்ள ஹதீஸ்கள் எடுத்துக்காட்டுகிறது.


​​

♣ கதிரையில் அமர்ந்து தொழுவதற்க்கு அனுமதிக்கப்பட்டவர்கள் யார்?


அதிகமான கால்மூட்டு வலி காரணமாகவோ அல்லது இடுப்பு வலி காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவுகாரணமாகவோ அல்லது சிறுநீர்

கசிவு போன்ற வேறு சில குறிப்பான நோய்களின் காரணமாகவோ அல்லது தற்போது ஹார்ட் ஆபரேஷன் போன்ற மேஜர் ஆபரேஷன் பண்ணுபவர்கள் கீழே குனியக் கூடாது அதனால் உயிருக்கு கூட பாதிப்புகள் உருவாகும் என்று மருத்துவர்கள் அட்வைஸ் பண்ணுவதும், சிக்கன் குனியா போன்ற காய்ச்சலால் கால்வலி எடுத்து கீழே உட்கார முடியாதபடி துன்பப்படுபவர்களும், இன்னும் இதுபோன்று கீழே குனிய, அமர முடியாதவர்களும் பெருகிவிட்டார்கள்.


​​இவர்கள் எப்படி இறைவனைத் தொழ வேண்டும்? இதற்கு உலமாக்கள் தரும் தீர்ப்பு என்ன? என்று பார்ப்போமானால், நமது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் ஏகோபித்த கூற்றுப்படி இந்த மாதிரி சூழ்நிலைகளில் உட்கார்ந்து தொழ நாற்காலியில் அமர்ந்து தொழ வேண்டும். அது ஆகுமானதே!

♦ இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். எனக்கு மூலம் இருந்தது. எவ்வாறு தொழுவது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”நீ நின்று தொழு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு” என்று விடையளித்தார்கள்.

நூல்: ஷஹீஹ் புகாரி 1117

ஆகவே எக்காலத்திலும் தொழுகையை விடக் கூடாது என்பதையே ஹதீஸ்கள் ரீதியாக தீர்க்கமான முடிவாக தெரிவித்துள்ளார்கள். அதன்படிதான் பள்ளிவாயில்களில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அறவே எழும்பி நிற்க இயலாதவர்களும், நிற்பதினாலோ அல்லது காலை ஊன்றி ருகூஃ சுஜூத் செய்வதினாலோ நோயோ வலியோ அதிகரிக்கும் அதனால் பாரிய விளைவுகள் ஏற்படலாம் எனப் பயந்தோருமே பர்ழான தொழுகைகளை கதிரையில் அமர்ந்தோ அல்லது தரையில் அமர்ந்தோ தொழுவதற்கு ஷரீஅத் அனுமதிக்கின்றது.


​​அவர்கள் அமர்ந்து தொழும் தொழுகையை மீட்டித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு அவசியம் கிடையாது என்றும் கூறுகின்றது. என்றாலும் அன்றாடம் தத்தமது வேளைகளைத்தானே செய்யும் நோயற்ற, நிற்க சக்தி பெற்ற வயோதிபர்கள் கூட கீழே அமர்ந்தோ அல்லது கதிரையில் அமர்ந்தோ பர்ழான தொழுகைகைளை தொழுவதற்கு அனுமதி கிடையாது. அவர்கள் நின்றே பர்ழான தொழுகைகளை நிறைவேற்றுவது அவர்களுக்கு அவசியமாகும். மேலும் தானாகவோ, பிறரின் உதவியினாலோ, அல்லது சுவரில் சாய்ந்தோ நிற்க முடியுமெனில் நின்றே தொழ வேண்டும்.


​​முதுகில் கூன் விழுந்திருப்பதனால் நிமிர்ந்து நிற்க இயலாத போது கூனிய அமைப்பிலேயே தொழ வேண்டும். எந்த அளவிற்கு நிற்க முடியுமோ அந்த அளவு நிற்பதற்கு இயலாதவர்கள் கூட முயற்சித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக – இயலாதோர் தனியாக தொழும் பொழுதோ அல்லது ஜமாஅத்தாகதொழும் பொழுதோ பாதிஹாசூராவில் “இய்யாக நஃபுது” என்ற வசனம் வரும் வரை நிற்க முடிந்தால் நிற்கவே வேண்டும். அதற்காக அமர்வது கூடாது. தக்பீர் கட்டி நிற்பதற்கு சக்தி வாய்ந்த,ஆனால் ருகூஃ சுஜூத் பணிந்து செய்ய கஷ்டமான மக்கள் தக்பீர் கட்டி நிற்பதும் ருகூவு சுஜூது அமர்ந்து செய்வதும் அவசியமாகும்.

அறவே நிற்க முடியாதவர்கள் அத்தஹிய்யாதில் இருப்பது போன்ற அமைப்பை முதலாவது தேர்வாகவும் அதுவும் இயலாமல் போனால் சம்மணமிட்டுத் தொழுவதை இரண்டாவது தேர்வாகவும் அதுவும் இயலாமல் போனால் கதிரையிலிருந்து தொழுவதை மூன்றாவது தேர்வாகவும் அதுவும் இயலாமல் போனால் ஒருக்கணித்துப் படுத்துக்கொண்டு தொழுவதை நான்காவது தேர்வாகவும் வரிசைக்கிரமமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.


​​இவற்றுக்கு மாறாக நிற்க சக்தி பெற்றோர் பர்ழான தொழுகைகளை தரையில் அமர்ந்தோ அல்லது கதிரையில்அமர்ந்தோ தொழுவது கூடவே கூடாது. அப்படித் தொழுதால் தொழுத தொழுகையை அவர்கள் மீட்டித் தொழ வேண்டும். ஏனெனில் நிற்றல் என்பது தொழுகையின் றுக்ன்களில் ஒன்றாகும். அதாவது தொழுகை நிறை வேற்றுவதற்குரிய காரணங்களில் நின்றுமுள்ளதாகும் இவ்விடயத்தில் இயலாதோர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் நிற்காவிட்டாலும் தலையை ஊன்றி நிலத்தில் நெற்றிபட சுஜூது செய்யாவிட்டாலும் இயன்ற வரை தங்கள் தொழுகையில் அவர்கள் செய்ததை ஏற்று அவர்கள் இயலாதோர் என்பதற்காக அவர்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்.


​​

♣ அமர்ந்து கொண்டு தொழும் முறையும் அதில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களும் 


​​பொதுவாக அமர்ந்து கொண்டு தொழும் பொழுதோ அல்லது நின்று கொண்டு தொழும் பொழுதோ எம் அங்க உறுப்புக்கள் அனைத்தும் கிப்லாவை நோக்கி இருக்க வேண்டும் கால் விரல்கள் கூட திசையை விட்டும் மாறி வேறு திசைகளில் இருப்பது கூடாது. ருகூஃவில் குனியவோ அல்லது சுஜூதில் நெற்றியை நில்தில் பதிக்கவோ இயலாது தரையிலோ கதிரையிலோ அமர்ந்து தொழுவோர் தங்களின் ருகூஃவிலும் சுஜூதிலும் அளவால் வித்தியாசம் காட்ட வேண்டும் அதாவது ருகூஃவிலும் ஓர் கூறிப்பிட்ட அளவிலும் சுஜூதில் அக்குறிப்பிட்ட அளவை விட சற்று கூடியஅளவிலும் கையை காலில் வைத்து பணிய வேண்டும்.

ஜமாஅத்தாக ஸப்பில் அமர்ந்து தொழும் போது அருகில் நிற்கக் கூடியவர்களின் தோற்புயங்களுக்கு நேரே தன் தோற்புயத்தையும் ஆக்கிக் கொள்ள வேண்டும். அமர்ந்து தொழுவோர் தமக்கு முன்னால் சிறிய மேசை ஒன்றையோ அல்லது சிறிய கதிரை ஒன்றையோ சுஜூத் செய்ய போடுவது அவசியம் இல்லை.


​​

♣ அமர்ந்து தொழுதாலும் நின்று தொழுத நன்மை கிடைக்குமா? 


​​ஆம், பர்ழான தொழுகைகளை இயலாதோர் அமர்ந்து தொழுதாலும் நின்று தொழுத நன்மை கிடைக்கும் இது இமாம்களின் ஏகோபித்த முடிவாகும்.

♦ குறிப்பு : சக்தியுள்ளோர் பர்ழான தொழுகைகளை நின்றே தொழ வேண்டும் எனினும் நபிலான தொழுகைகளை அமர்ந்து தொழ சக்தியுள்ளோருக்கு அனுமதி இருக்கின்றது ஆனால் அமர்ந்து தொழும் போது நன்மையில் இவர்களுக்கு குறைவு ஏற்படும். நின்று தொழுபவரின் பாதி அளவு நன்மை அமர்ந்து தொழுபவருக்கு கிடைக்கும்.

♦ இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ”நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு” என்று விடையளித்தார்கள்.


​​நூல்: ஷஹீஹ் புகாரி 1115, 1116

எளிமையான பின்பற்றத்தக்க மார்க்கம் இஸ்லாம் என்னும் போது நாற்காலியில் தொழுவதுதான் அதாவது அக்காலத்தில் வாகனத்தில் இருந்து தொழுதது போல, முடியாதவர்கள் அமர்ந்து தொழுதது போல் தொழுவதுதான் இதற்கு சரியானத் தீர்வாக அமையும். இறைவனையும் விடாமல் வணங்க முடியும்.


​​ஆக நாற்காலி மூலம் தொழக் கூடாது என்று சொல்லும், ஆகுமான ஒன்றை ஆகாது என்று சொல்லும் தேவ்பந்திய வஹ்ஹாபிகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இவர்களின் வஹ்ஹாபிய வேஷத்தை அறிந்து இவர்களை விட்டும் விலகி இருக்க வேண்டும். இவர்களின் கூற்றுக்களைப் புறந்தள்ள வேண்டும்.

அதே சமயம் இந்த நாற்காலிகள் போடப்பட்டுள்ளது மிகவும் இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பதை நமது மக்கள் புரிந்து, சின்னஞ்சிறு விஷயத்திற்காகவும், இலேசான முடியாமைக்காகவும் நாற்காலிகளை நாடுவதை தவிர்க்க வேண்டும். வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ரஹ்மத்தும், ஆஃபியத்தும் செய்தருள்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.