MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
களா தொழுகை உண்டா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் களாத் தொழுகை உண்டா? என்பது பற்றி ஓர் ஆய்வு
♣ களாத் தொழுகை பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு
ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என கூறி விட்டு, இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்த ஒரு காரணங்களுக்காகவும் அதாவது ஒருவர் அலட்சியமாக வேண்டுமென்று தொழுகையை விட்டவர் அத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை என்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படை அறிவே இல்லாமல் சுய அறிவை பயன்படுத்தி ஈமானை இழந்து நஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.
தூக்கமும் மறதியும் நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களாக உள்ளன. எனவே இந்தக் காரணங்களுக்காக மட்டும் ஞாபகம் வந்தவுடன் தொழுவதற்கு அதாவது களா செய்வதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள். உறக்கத்துக்கும் மறதிக்கும் மட்டுமே இந்தப் பரிகாரம் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒருவர் அலட்சியமாக வேண்டுமென்றே தொழுகையை விட்டால் அவர் அத்தொழுகையை களாச் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் அவர் செய்த குற்றத்துக்கு இது பரிகாரம் ஆக முடியாது. மாறாக அவர் தொழுகையை விட்ட குற்றத்துக்குரியவர். இக்குற்றம் அடுத்து நம்மிடத்தில் ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். மேலும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸ்க்கு முரணாகவே வழிகெட்ட வஹாபிகள் விளக்கம் சொல்கிறார்கள்.
♦இவ்வாதத்தை முதன் முதலில் முஸ்லிம்கள் மத்தியில் புகுத்தியவர் வழிகெட்ட கொள்கயைையை பின்பற்றி வந்த இப்னு ஹஸ்மு என்பவராகும் இவர் அகீதா, பிக்ஹ் போன்ற துறைகளில் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரண்பட்ட விளக்கத்தைக் கொண்டிருந்தார். எல்லாம் தனக்குத் தெரியும் என்ற தோரணையில் இவர் எழுதி வந்தார்.
இவருக்குப் பின் இவர் விட்டுச் சென்ற குறை மாத சிசுவான வழி கேட்டு வாதங்களையும், பிழையான சட்டங்களையும் தூக்கி தத்தெடுத்து வளர்த்தவர் இப்னு தைமியா ஹர்ரானி ஆவார். இதன் பின் இவர் நிழலாக வளர்ந்த இவரின் மாணவரான இப்னுல் கையூம் இதற்கு ஒத்தணம் வழங்கினார்.அதன் பிறகு இப்னு தைமியாவின் தீர்ப்பும், கோட்பாடும் முஹம்மட் இப்னு அப்துல் வஹாபி நஜ்தியிடம் தோன்றி மக்களை வழிகெடுத்தான்.
♦இவ்வாறு, சவூதியில் முளைத்த வஹாபிஸ நச்சு பிரசாரத்தில் தங்களைப் பறிகொடுத்தவர்களால்தான் வேண்டுமென்று விடுபட்ட தொழுகையைக் கழாச் செய்ய வேண்டியதில்லை என்ற வாதமும் இந்தியாவிலும், இலங்கையிலும் வழி கெட்ட வஹாபிசம் அறிமுகமாகியிருந்தம் விடுபட்ட தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை. என்ற கோஷம் முன்வைத்தனர் விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்ய தேவையில்லை என்றே கூறி வந்தனர். தற்காலத்தில் தமிழகத்திலும், இலங்கையிலும் இப்னு தைமியாவின் சாக்கடைவாதங்களுக்கும், வஹாபிஸ நச்சுக் கோட்பாடுகளுக்கும் உயிர் கொடுத்து ஊரையும், நாட்டையும் நாசப்படுத்தியவர்கள் பீ,ஜே குழுவினராகிய (TNTJ, SLTJ) வஹ்ஹாபிகள். வேண்டுமென்று விடுபட்ட தொழுகையைக் களாச் செய்ய வேண்டியதில்லை என்ற தவரான வாதத்தை முன்வைத்துள்ளார்கள்.
♣ களாத் தொழுகைப் பற்றி சுன்னத் வல் ஜமாஆத் நிலைப்பாடு
' களாத்' தொழுகை என்றால் என்ன ?
தூக்கமும் மறதியும் ஏற்படும் போது அல்லது தொழுகை நேரம் வருவதைத் தெரிந்து கொண்டே அலட்சியமாக இருந்து விட்டு பின்னர் மொத்தமாகச் சேர்த்துத் தொழும் தொழுகைக்குப் பெயர் தான் ''களாத் தொழுகை'' ஆகும்.
♦ ஒருவருக்கு தொழுகை விடுபடுவதாக இருந்தால் அடிப்படை மூன்று காரணங்கள் காணப்படும். 1)மறதி. 2)தூக்கம். 3)அலட்சியமாக வேண்டுமென்று விடுபதாகும். இப்படி எந்த காரணத்தினாலும் தொழுகையை விட்டவர் அத் தொழுகையை களாச் செய்ய வேண்டும் என்பதே சரியான கருத்தாகும். ஆனால் வழிகெட்ட வஹ்ஹாபிகள் அலட்சியமாக வேண்டுமென்று தொழுகையை விட்டவர் அத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை என்று உலருகிறார்கள். ஆகவே அலட்சியமாக வேண்டுமென்று தொழுகையை விட்டவர் அத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை என்று குர்ஆன் ஹதீஸ்களில் இருக்கின்றதா? இல்லை.
♦ குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்க வில்லை. உரிய நேரத்தில் தொழுகையை தொழவேண்டும் என்பதை இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்திக் கூறுகின்றது. அந்த அடிப்படையில் சென்ற காலங்களில் விடுபட்ட தொழுகைகளையும் மேலும் தனது கவன குறைவாக, பொடுபோக்கின் காரணமாக களாவாக ஆக்கிவிட்ட தொழுகைகளையும், தூக்கம், மறதி போன்றவற்றால் தொழுகையைத் தவற விட்டவர்கள் தொழுகையைக் களாவாகத் தொழுவது கட்டாயம் செய்ய வேண்டும் என்பதாகும். இதற்கு ஹதீஸ்களில் இருந்து ஆதாரங்களை பார்ப்போம். எனவே தொழுகைகளை அவற்றுக்குரிய நேரங்களில் தொழுவதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். நமது அலட்சியமாக வேண்டுமென்று தொழுகையை விட்டவர்கள் மேலும் சக்திக்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாது சில காரணங்களுக்காக அதாவது (தூக்கம், மறதி) நேரம் தவறி விடுபடட்ட தொழுகைகளை களாவாக நிறைவேற்ற வேண்டும்.
♦ஷரீஅத்தில் ஒரு விடயம் கடமை (வாஜிபு) ஆவதற்கான நிபந்தனை பூரணமானதன் பின், அதனை விடுவதற்கான தடை வராவிட்டால், அதனை நிறைவேற்ற வேண்டியது அவரின் கடமையாகும். இதில் மாற்றுக் கருத்து கிடையாது. கடமையான விடயம் நேரம், காலம் குறித்ததாக இருப்பின், அந் நேரத்தில் அல்லது அக்காலத்தில் நிறைவேற்றினால் அவரின் கடமை அல்லது பொறுப்பு நீங்கிவிடும். நிர்ப்பந்தம் ஏதும் இல்லாத நிலையில் வேண்டுமென்று குறித்த நேரத்தில் அக்கடமையை நிறைவேற்றத் தவறினால் பிற்படுத்திய குற்றம் ஏற்படுவதுடன் அவர் மீதுள்ள பொறுப்பும், கடமையும் நீங்கிவிடாது, மனிதன் குற்றம் செய்யும் இயல்புள்ளவன் என்பதை அல்லாஹூத்தஆலா நன்கறிவான்.
♦அதனால் அவன் அருளையும், பொருத்தத்தையும் அடியான் பெறுவதற்குரிய வழியை அவன் ஏற்படுத்தியுள்ளான். பாவம் என்ற வியாதியை நீக்க வல்ல மருந்தாக தௌபாவையும், இஸ்திஃபாரையும் ஆக்கினான். அவன் மீதுள்ள கடமையிலிருந்து நீங்குவதற்கு 'அதாஃ' என்பதற்குப் பதிலாக களாவையும் ஏற்படுத்தினான். இந்த அடிப்படை விளக்கத்தை றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சஹீஹான ஹதிதுகள் மிகத் தெளிவான விளக்கத்தை நமக்குத் தந்துள்ளன. இது தொடர்பான பிரச்சனைகளுக்கான விடையை நேரடியாகவும், கியாஸ் அடிப்படையிலும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். காரணம், இது தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வை முஸ்லிம் சமுகத்திலிருந்து தீர்வாக எடுக்க வேண்டும் என்ற நோக்கிலாகும்.
♦ ஒரு மனிதர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதுரே எனது தாய் மரணித்து விட்டாள்! அவர் மீது ஒரு மாத நோன்பு நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவருக்காக நான் அதைக் களாச் செய்யலாமா? என்று கேட்டதற்கு ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு மிகக் தகுதியானதாகும். என்று விடை பகர்ந்தார்கள்.
அறிவிப்பவர் - ஹழ்ரத் இப்னு ஹப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூ
நூல் - ஸஹீஹுல் புகாரி
♦ ஜூஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனது தாய் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டாள். ஆம் அவருக்காக நீர் ஹஜ் செய்யலாம் உன் தாயின் மீது கடன் இருந்தால் அதை நீர் நிறைவேற்ற மாட்டீரா? அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள், கடனை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்தான் பொருத்தமானவன் (முதலில் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுவதற்கு முற்படுத்த வேண்டும்)
அறிவிப்பவர் - ஹளரத் இப்னு ஹப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூ
நூல் - ஸஹீஹுல் புகாரி
♦ இதே கருத்தை ஒத்த பல அறிவிப்புக்கள் முஸ்லிம், ஸூனன் அபூதாவூத், திர்மிதி, நஸஈ உள்ளிட்ட ஹதீதுக் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நேரம் குறித்துக் கடமையாக்கப்பட்டுள்ள வணக்கங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் அது அவர் மீதுள்ள அல்லாஹ்வின் கடன் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். மனிதனுக்கு செலுத்த வேண்டிய பொருளாதார கடன் போன்றே இக் கடனும் உண்டு என ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.
மனிதனிடம் பட்ட கடனை உடன் செலுத்த வேண்டியது கடமை என்றும், அக் கடனை இறுக்கும் வரை அக்கடன் தன்னை விட்டும் நீங்காது என்பதை நன்கு அறிந்தவர்களிடம் கூறிவிட்டு முதலில் தீர்க்கப்பட வேண்டியது அல்லாஹ்வின் கடனாகும். என்று அதன் முக்கியத்துவத்தையும் கூறியுள்ளார்கள்.
அத்துடன் அதனை நிறைவேற்றுங்கள் என்று களாச் செய்வதை கட்டளையாகவும் கூறியுள்ளார்கள். கடன் நிறைவேற்றப்படுவதில் உடலினால் மட்டும் செய்யப்படும் நோன்பு போன்ற வணக்கத்தையும், உடலும், பொருளும் சேர்ந்த ஹஜ் போன்ற வணக்கத்தையும் நபியவர்கள் பிரிக்கவில்லை. இரண்டும் நிறைவேற்றப்பட வேண்டிய கடன் என்று கூறினார்கள். இதிலிருந்து கியாஸ் ஒரு சட்ட மூலாதாரம் என்பதற்கும், மனிதன் அனுபவத்தை வைத்து அனுபவத்திற்கு அப்பால் உள்ளதை விளங்கப்படுத்துவதும் சிறந்த முறை என்பதற்கும் இந்த ஹதீதை ஆதாரமாக அறிஞர்கள் எடுத்துக் கொண்டனர்.
நோன்பு உடலினால் மட்டுமே செய்யும் வணக்கம், இவ் வணக்கத்தை உரிய காலத்தில் நிறைவேற்றுவது கடமை. தவறினால் அது அல்லாஹ்வின் மீதுள்ள கடனாக இவர் பொறுப்பிலிருக்கும். கடன் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்வின் கடனே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என சஹீஹான ஹதீதுகள் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றன.
♦ நபிகள் நாயகம் (ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்து விட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம் 1217, புகாரி 597
♦புத்தியுள்ள பருவமெய்திய ஒருவர் வேண்டுமென்று தொழுகையை விட்டவர் ,மரதியினால் விட்டவர், தூக்கத்தனால் விட்டவர் அத்தொழுகையை உடன் களாச் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான ஆதாரம் பின்வரும் சம்பவத்தில் உள்ளது.
அகல் போரின் போது சூரியன் மறைந்தபின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ‘அல்லாஹ்வின் தூதரே சூரியன் மறையும் வரை ? அஸர் தொழவில்லையே’ என்று கூற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘அல்லாவின் மீது ஆணையாக நானும் அஸர் தொழவில்லை’ என்றார்கள். நாங்கள் புத்ஹான் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூர் செய்தார்கள். நாங்களும் உளு செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மஃரிப் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள் : புகாரி 596, முஸ்லிம், திர்மிதி 164, நஸயீ 1349
♦ (மேலும்) அகழ்ப் போரின்போது லுஹர், அஸர் ஆகிய தொழுகை போரில் ஈடுபட்டதனால் தவறிவிட்டது. சூரியன் மறைந்த பிறகு பிலாலை அழைத்து லுஹருக்கு இகாமத் சொல்லச் செய்து லுஹர் தொழுகையை நிறுத்தி நிதானமாக அதற்குரிய நேரத்தில் தொழுவதுபோல் தொழுதார்கள். பின்பு அஸர் தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து அஸரை, அதன் நேரத்தில் தொழுவது போல் அழகிய முறையில் நிறைவேற்றினார்கள். பின்பு மஃரிப் தொழுகையையும் இதே போல் தொழ வைத்தார்கள். பின்பு மஃரிப் தொழுகையையும் இதே போல் தொழ வைத்தார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஸயீத் (ரலியல்லாஹு அன்ஹு)
சுருக்கம் : நஸயீ, அஹ்மத், முஅத்தா ஆகிய நூல்களில் இந்த விபரம் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
♦ ஒரு தினம் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். இரவின் பெரும் பகுதியை கடந்து சென்ற பின் தங்குவதற்கான இடத்தை அடைந்தார்கள். எங்களை ஸுபஹ் தொழுகைக்கு எழுப்பும் பொறுப்பை எடுத்துக் கொள்பவர் யார்? என திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கேட்டதற்கு, பிலால் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். ஆயினும் தூக்கம் எல்லோரையும் ஆட்கொண்டது. எல்லோருக்குமே ஸூபஹூத் தொழுகை களாவாகிவிட்டது. காலையில் விழித்தெழுந்த பின் அனைவரையும் வுழுச் செய்யுமாறு பணித்தார்கள். பின் முஅத்தின் அதான் கூறினார் ஸூபஹூவின் சுன்னத்தான இரு ரகாஅத்துக்களையும் வழக்கமாகத் தொழுபவர்கள், இரண்டு ரகாஅத்துக்கள் ஸூபஹின் சுன்னத்தையும் தொழுதார்கள்.
பின்னர் எல்லோரையும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் களாவாகத் தொழுவித்தனர். இச் செயல் சஹாபாக்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்தது. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்வர்களுக்கு இதனால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இதனால் அவர்கள் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள், அவர்களைப் போன்று நமது நிலையும் அமையுமா? என்று அஞ்சினார்கள்.
ஷரீஅத்தில் குற்றம் செய்வதற்குரிய தண்டனையாக கப்பறா முறை நடைமுறையில் இருப்பதை அறிந்த சஹாபாக்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்களிடம் விரைந்து சென்று நாங்கள் செய்த இத்தவறுக்கான கப்றா-குற்றப் பரிகாரம் என்ன? என்று கேட்டனர். யாராவது தொழுவதை மறந்தால், அல்லது தொழாமல் உறங்கினால் அது பற்றிய நினைவு வந்ததும் தொழுது கொள்ளவும், அது தவிர வேறு கப்பறா கிடையாது. என்று விடை பகர்ந்தார்கள்.
ஆதாரம் - புகாரி, முஸ்லிம்
♦ முஸ்லிமில் வரும் மற்றுமொறு அறிவிப்பில் உங்களில் ஒருவர் தொழாமல் தூங்கினால், அல்லது அதை மறந்தால் அது பற்றிய நினைவு வந்ததும் தொழுது கொள்ளவும் என்னை நினைப்பதற்காகவே தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று அல்லாஹூத்தஆலா கூறியுள்ளான். அதாவது, தொழுகையிலும், தொழுகையைக் கொண்டும் அலலாஹ்வை திக்று செய்வதுதான் தொழுகையின் முக்கிய நோக்கமாகும், நீங்கள் தொழுகையை அதன் நேரத்தில் தொழத் தவறினால், அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு தவறி விட்டது.
ஆதலால் நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காக தொழுகையைக் களாச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் களாவானது உரிய நேரத்தில் தொழுதது போன்றாகிவிடும். அதற்கு அதனை களாச் செய்வது தவிர வேறு கப்பறா கிடையாது என்பதன் பொருள் தூக்கத்தால், மறதியால், மதிமயக்கத்தால், தொழுகை வேண்டுமென்று தப்ப விட்டால் கப்பாறா கொடுத்துத் தீர்க்குமளவு குற்றமாகாது. அத் தொழுகையைக் களாச் செய்வதுததான் அதற்கு கப்பாறாவாகும்.
தொழுகையை வேண்டுமென்று பிற்படுத்தியவர் தூக்கம், மறதி போன்றவற்றால் தொழுகையைத் தவற விட்டவர் போன்று தொழுகையைக் களாச் செய்தல் வேண்டும். அத்தோடு இவர் மீது தொழுகையைப் பிற்படுத்தியதற்கான குற்றம் இருக்கும். இதற்கு அவர் தௌபாச் செய்தல் அதாவது, மனம் வெதும்பிக் கவலைப்பட்டு இதன் பின் இக் குற்றத்தைச் செய்யமாட்டேன் என்று மன உறுதி கொள்ளல் வேண்டும். தௌபா இவர் குற்றத்திற்கு கப்பாறாவாக அமையும். தூக்கம், மறதி உள்ளிட்ட காரணத்தால் தொழுகையை விட்டவருக்கு களாச் செய்வது மட்டுமே கடமை! ஆனால் வேண்டுமென்று தொழுகையை விட்டவர் மீது களாவும், தௌபாவும் கடமையாகும். தூக்கம், மறதி ஆகிய காரணத்தால் தொழுகையை விட்டவர் தொழுகையைக் களாச் செய்ய வேண்டும் என்றுதான் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.
♦ வேண்டுமென்று தொழுகையை விட்டவர் களாச் செய்ய வேண்டும் என்று கூறவில்லையே! அப்படிக் கடமையெனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பார்களே! என்று வாதிக்கும் முட்டாள்களைப் பார்த்து: நாம் கேட்கின்றோம். பெற்றோரைப் பார்த்து 'சீ' என்று கூறாதீர்கள் என்று திருக் குர்ஆன் கூறுகின்றது. அடிப்பது, கன்னத்தில் ஓங்கி அறைவது பற்றிக் கூறவில்லை. ஆதலால்'சீ 'என்று மட்டும் சொல்லாமல் ஏனையவைகளைத் தாராளமாகச் செய்யலாமா? களாத் தொழுகைபற்றி ஹதீது, சட்டக்கலை அறிஞர்கள் கூறுவதைக் கேளுங்கள். எவனுக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவனது பொருளும் குடும்பமும் தவறி விட்டது போன்றாகும். என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி, முஸ்லிம்
♦ மேற் கண்ட ஹதீதுக்கு புகழ் பெற்ற ஹதீஸ்கலை மேதையான ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் புகாரி சரீபுக்கு எழுதிய புகழ் பூத்த விரிவுரையான பத்ஹூல் பாரியில் இவ்வாறு வரைகின்றார்கள். தொழுகையைக் களாவாக்கியவனுக்கு இரண்டு வகையான நஷ்டங்கள் உண்டு. என்ற எச்சரிக்கை இந்த ஹதீஸ் மூலமாக இருக்கின்றது.
01. உரிய வேளையில் தொழுவதால் கிடைக்கும் நன்மை
02. உரிய நேரத்தில் தொழாமல் விட்டதற்கான தண்டனை
உலகம் அற்பமானது கொஞ்சம் அமல் உலகின் மூலம் கிட்டும் அதிக நண்மையை விட மேலானது. என்ற விளக்கமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, என்று ஹாபிழ் அப்துல் பர்ரு அவர்கள் கூறுகின்றார்கள்.
நூல் - பத்ஹுல் பாரி பாகம் -02, பக்கம் 171
♦ ஸஹிஹூல் முஸ்லிமுக்கு சிறப்பான விரிவுரை எழுதிய இமாம் நவவி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள். தவறிப் போன தொழுகையைக் களாச் செய்வது வாஜிப், தூக்கம், மறதி போன்ற காரணத்தால், தப்பினாலும் சரி, அல்லது காரணமின்றி தப்பினாலும் சரி காரணத்துடன் இருப்பதால் தூக்கத்தைப்பற்றி ஹதீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரணத்துடன் தப்பிய தொழுகையை நிறைவேற்றுவது வாஜிபு எனில், காரமிண்றி தவறியதை களாச் செய்வது கண்டிப்பாக கடமையாகும். இது தாழ்ந்ததைக் கொண்டு கடுமையானதின் மீது எச்சரிக்கையாகும.
ஆதாரம் - ஷறஹூ முஸ்லிம் பாகம் 01, பக்கம் 238
♦புகாரி ஷரீபுக்கு எழுதப்பட்ட விரிவுரைகளுள் சிறப்பான இடத்தை வகிக்கும் உம்ததுல் காரி என்ற நூலில் இமாம் பதுறுதீன் ஜனி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுகின்றார்கள்.வேண்டு மென்று தொழுகையைக் களாவாக்கினால் அதை நிறைவேற்றுவது வாஜிபு, பெரும்பாலான அறிஞர்களின் கூற்று இதுவாகும். தாவுது ளாஹிரியும் மிகச் சொற்பமான சிலரும் கழாச் செய்ய வேண்டியதில்லை என்கின்றனர். இக் கருத்து தவறானதாகும்.
(ஆதாரம் உமத்துல் காரி பாகம் 02, பக்கம் 608
ஆகவே அன்று தோன்றிய வழிகெட்டவர்கள் கூறியதற்கு இன்றைய வழிகெட்ட வஹாபிகள் முலாம் பூச முனைகின்றனர். இது இவர்களின் புதுக் கண்டு பிடிப்பல்ல. மக்களைக் குழப்புவதற்கு எடுத்துக் கொண்ட ஓர் ஆயுதம் மாத்திரமே! வழி கேடர்கள் காலத்துக்கு காலம் பழையதுகளைக் கிண்டியெடுத்து சந்தியில் காயப்போடுகின்றனர். அதிலிருந்து பரவும் வைரஸ் கிருமிகள் பலவீனமான ஈமான் கொண்டோரைப் பாதித்துள்ளது, ஆதலால் வைரஸ் கிருமிகள் தொற்றிக் கொள்ளாமல் இருக்க மத்ஹபு என்ற தற்காப்பு அங்கியை அணிந்து கொள்ளுங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.