MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெரியார்கள் - ஷைகுமார்களின் கால்களை, கப்ருகளை குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு (தோற்றம்) வெளிப்பட்டால் அது கூடுமா?

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


(இபாதத்) என்ற நோக்கத்துடன் ஷைகுமார்கள், பெரியார்களின் கப்ருகளுக்கு ஸுஜூது செய்வது ஷிர்க், மேலும் (கண்ணியம் - மரியாதை) என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு ஸுஜூது செய்வது ஹராம், மேலும் யதார்த்தத்தில் பரக்கத், அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் வலிமார்களின் ஷைகுமார்களின் கால்களை, கப்ருகளை குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு - தோற்றம்) வெளிப்பட்டால் அது கூடும்.

இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது 'ஜவ்ஹர் அல்முனல்லம்' என்ற கிதாபில் கூறுகிறார்கள். ருகூவைக் கொண்டே, ஸூஜூதைக் கொண்டே கப்ரையோ, அல்லது தரையோ முத்தமிடுவது ஹராம். இதை அடிப்படையாக வைத்து சிலர் ஷைகுமார்களின் கால்களை, கப்ருகளை குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு - தோற்றம்) வந்தால் கூடாது ஹராம் என்று கூறுவார்கள் இது தவரான கருத்தாகும்.

ஆகவே இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதன் விளக்கம் என்ன? இவர்கள் கூறும் விளக்கம் என்ன? என்பதை நாம் அனைவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.


​​குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு - தோற்றம்) வந்தால் - வெளிப்பட்டால் அது கூடாது ஹராம் என்று கூறுபவர்கள் இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறிய கருத்தினை (சரியாக - தெளிவாக) புரிந்து கொள்ளாததே இதன் விபரீதமாகும்.


​​ருகூவைக் கொண்டே ஸூஜூதைக் கொண்டே முத்தமிடுவதுதான் கூடாது, ஆனால் முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு- தோற்றம்) வெளிப்பட்டால் அது கூடும். எனவே ருகூவைக் கொண்டே, ஸூஜூதைக் கொண்டே முத்தமிடுபதற்கும், முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு வெளிப்படுவதும் இந்த இரண்டு அமைப்பும் வேறு. இதில் முதலாவது அமைப்பைத்தான் இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹராம் என கூறியுள்ளார்கள்.

உதாரணமாக ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை எந்த விதத்தில் முத்தமிட்டார்கள்? ஸஹாபாக்கள், யூதர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கால் பாதத்தை எந்த அமைப்பில் முத்தமிட்டார்கள்? எனவே இவ்விரு அமைப்பிலும் நாம் சிந்திக்கும் போது குனிந்துதான் முத்தமிட வேண்டும் குனியாமல் முத்தமிட முடியாது. அந்த அடிப்படையில் குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு - தோற்றம் வந்தால் கூடும். பெரும்பாலும் அந்த அமைப்பு வராது. ஆனால் ருகூஃவைக் கொண்டே, ஸஜதாவைக் கொண்டே முத்தமிடுவது தான் கூடாது.

பெரியார்களின் பாதங்களை, கப்ருகளை குனிந்து உதட்டினால் முத்துவதை ஸுஜூதே தஃழீமாகக் கருதுவது மிகப் பெரும் பிழையாகும். காரணம் ஸஹாபாப் பெருமக்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதங்களை முத்தியதாக பதிவாகியுள்ள ஹதீஸ்களுக்கு விளக்கம் தரும் சிலர் கரத்தினால் தொட்டு முத்துதல் என்பதாகக் கருத்துக் கொள்கின்றனர். இது தவறானதாகும்.


​​ஹதீஸ் கிரந்தங்களில் 'பாபு தக்பீலில் யதி வர்ரிஜ்லி' கரம் பாதங்களை முத்தமிடுதல் என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளதாய் கரத்தினை முத்தும் விதமே பாதத்தை முத்தும் விதமாகும். பாதத்தை உதட்டால் முத்தமிடுவது ஸுஜூதே தஃழீம் என்றால் 'தக்பீல்' என்ற சொல் உதட்டால் முத்தமிடுவதற்கே அன்றி கையால் தொட்டு முத்துவதற்கு அல்ல. அதற்கெனும் 'இஸ்திலாம்' (கையால் தொட்டு முத்துதல்) என்ற பதம் உண்டு.


​​பாதங்களை முத்துவதற்கும் ஸஜ்தாவிற்கும் என்ன தொடர்பு? பாதத்தை முத்தமிடல் என்பது தலையை அல்லது உதட்டை பாதத்தில் வைப்பதும், ஸஜ்தா என்பது நெற்றியை தரையில் வைப்பதும் ஆகும். இதில் சந்தேகம் கொள்வோர் அல்லாஹ்வின் நேசர்களுக்குப் புரியும் கண்ணியத்தினை மறுப்போராகும்.


​​ஆகையால் பெரியோர்களின் பாதங்களை குனிந்து முத்துவோரை ஸஜ்தா செய்வதாக தவறாக எண்ணம் கொள்ளாதீர்கள் என்று அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் 'பதாவா ரிழ்விய்யா' (10:267) வில் கூறியுள்ளார்கள்.

மிஷ்காத் ஹதீஸ் கிரந்தத்திற்கு விரிவுரை வழங்கிய அல்லாமா அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரியார்களின் கரங்களையும், பாதங்களையும் முத்துவது நபிமொழியாகும். பாதத்தினை கரத்தால் தொட்டு முத்தமிடலாம், உதட்டினாலும் முத்தமிடலாம். உதட்டால் முத்துவதே சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள். (மிர்காதுல் மனாஜீஹ் 03:364)

ஸுஜூது என்பது அல்லாஹ்வுக்கான வணக்கம் என்றால் நபி யூசுப் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் தகப்பனாரும், அவர்களின் சகோதரர்களும் நபி யூசுஃப் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரியாதை நோக்கில் செய்த ஸுஜூது குணிந்து புரிந்ததாகும், மேலும் மலக்குமார்கள் (அமரர்கள்) ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்த ஸுஜூது தரையில் நெற்றியை வைத்ததாகும்.


​​ஆகவே மேற்கண்ட செய்தியிலிருந்து (கண்ணியம் - மரியாதை) நிமித்தம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஜதா தஃழீம் கூடுமானதாக இருந்தது பிறகு அந்த செயல் தடுக்கப்பட்டன, பாதங்களை முத்துவது என்பது உதட்டை பாதத்தில் வைப்பதாகும். இதனை ஸுஜூதாகக் கருதுவது மேற்கூறிய பெரியார்களின் தீர்ப்பின் பிரகாரம் அறியாமையாகும்.


​​உதாரணமாக தரையில் தூங்கும் குழந்தையை ஒருவர் முத்தமிடுவதாக இருந்தால் குனிந்து தான் முத்தமிட வேண்டும் அந்த அடிப்படையில் குனிந்து முத்தமிடும் போது முத்தமிடுபவரை பார்த்து குழந்தைக்கு ஸஜதா செய்கிறார் என்று சொல்ல முடியுமா? ஆகவே ஸஜதாவின் அமைக்கு வரத்தேவையில்லை தாராளமாக குனிந்து முத்தமிடலாம்.