MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கடமையான குளிப்பு 


குளிக்கும் முறை


கடமையான குளிப்பை நிறைவேற்று முன் மர்மஸ்தானத்தைக் கழுவி உளூச் செய்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும். குளித்த பின் தொழ வேண்டியிருந்தால் மறுபடியும் உளூச் செய்ய வேண்டியதில்லை.


குளிக்கும் போது செய்த உளூவே போதுமானது.


நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ   நூல்: புகாரி


நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது கைகளின் மீது (சிறிதளவு தண்ணீர்) ஊற்றி இரண்டு, மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தில் ஊற்றி மர்ம ஸ்தானத்தைக் கழுவினார்கள். பின் தம் கைகளைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்து முகத்தைக் கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தமது மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: ஹழ்ரத் மைமூனா رَضِيَ اللَّهُ عَنْهُ   நூல்கள்: புகாரி, முஸ்லிம்


நபி صلى الله عليه وسلم அவர்கள் குளித்தபின் உளூச் செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், திர்மிதீ


பெண்கள் சடை போட்டிருந்தால்


சடை போட்டுள்ள பெண்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது சடையை அவிழ்த்து விட வேண்டிய அவசியமில்லை.


“இறைத்தூதரே! நான் எனது தலை முடியை சடை பின்னிக்கொண்டு இருக்கிறேன்! கடமையான குளிப்புக்காக அதனை அவிழ்த்துத்தான் விட வேண்டுமா?” என நான் கேட்டேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “வேண்டியதில்லை, உனது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கொள்” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ   நூல்கள்: அஹ்மத், திர்மிதீ