MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஜின் வைத்தியம் செய்யலாமா?


​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் ஜின்னை வசப்படுத்துதல், ஜின் வைத்தியம் செய்வது, ஓதிப்பார்ப்பது பற்றி ஓர் ஆய்வு.

ஜின்னை வசப்படுத்துதல் மற்றும் ஜின் வைத்தியம் பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

வழிகெட்ட வஹ்ஹாபிகள் இஸ்லாத்தில் ஜின் வைத்தியம் இல்லை என்று சில பொய்யான தகவள்களைக் கொண்டும் அறிவியல் ரீதியாகவும் சில பொய்யர்கள் செய்ததை காட்டி குர்ஆனில் ஹதீஸில் சொல்லப்பட்டதை மறுக்கின்றார்கள்.


​​சில பொய்யர்கள் செய்ததைக் காட்டி குர்ஆனில் ஹதீஸில் சொல்லப்பட்டதையும் மறுக்கின்றார்கள். மேலும் ஜின்களை காண முடியாது. மனிதர்களுக்கு ஜின் கட்டுப்படாது. நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் ஜின்கள் யாருக்கும் கட்டுப்பட்டதற்கு எதுவித ஆதாரமும் கிடையாது. தாயத்துக் கட்டுவது ஷிர்க். மறைவான விடயங்களை ஜின்களால் அறிய முடியாது. நோய்களை அறிந்து வைத்தியம் செய்வதற்கு ஜின்களால் முடியாது என்று பல குற்றச் சாட்டுக்கள் வஹ்ஹாபிகளால் முன்வைக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தக்க ஆதாரம் எதனையும் முன் வைக்காத இவர்கள் வழக்கம்போல் சண்ட மாருதம் பேசுகின்றனர். இப்னு தைமிய்யா என்பவரின் கொள்கைகளைத்தான் வஹ்ஹாபிகள் பின்பற்றுகின்றனர். இவரின் நூற்களைத்தான் வேதமாகக் கருதி தீர்ப்புக் கூறுகின்றனர்.

இப்னு தைமிய்யா வலிமார்கள் பற்றி “அல்புர்கான் பைனல் அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான்“ என்று ஒரு நூல் எழுதியுள்ளார். இதனை கோட்டாறு எஸ்.கமாலுத்தீன் மதனி என்பவர் “இறைநேசச் செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும்“ என்ற பெயரில் தமிழாக்கியுள்ளார். இதனை சஊதி அரேபியாவில் உள்ள வக்பு வாரியத்தால் அச்சிட்டு இலவசமாக வெளியிட்டுள்ளார்கள். மேற்படி நூலில் ஜின்கள் பற்றி எழுதப்பட்ட பின்வரும் விடயங்களை நன்கு படியுங்கள்.

♦ “தன்னை நபி என வாதாடிய “அஸ்வதுல் அனஸி, முஸைலமா“ என்பவனிடம் பல ஷைத்தான்கள் இருந்தன. சில மறைவான விடயங்களை அவனுக்கு அவை அறிவிக்கும்.(பக்கம் - 250)

♦ ஜின், ஷைத்தான்களை வசப்படுத்தி வைத்திருப்பவர்களுக்கு அவர்களுடைய ஊரில் இல்லாத பழ வர்க்கங்கள், இனிப்புப் பொருட்களை ஷைத்தான் கொண்டு வந்து கொடுப்பான். இவர்களில் சிலரை ஜின்கள் தூக்கிச் சென்று மக்கா, பைத்துல் முகத்தஸ் போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்லும். சிலரை அரஃபா தினத்தன்று இரவு அரபாவிற்கு தூக்கிச் சென்று அதே இரவிலேயே கொண்டு வந்து அவர்களுடைய ஊரிலேயே விட்டு விடும். (பக்கம் - 253)

♦ஜின்களிலும் பல கொள்கையுடையவைகள் இருக்கின்றன. முஸ்லிமாகவும், முஷ்ரிக்காகவும். யூதனாகவும், கிறிஸ்தவனாகவும் சுன்னியாகவும், பிதயியாகவும் இவ்வாறு பல சாரராகவும் இருக்கின்றனர் என இமாம்கள் கூறியுள்ளனர்.(பக்கம் - 286)

♦ ஜின்கள் மனிதர்களுடன் பல நிலைகளில் உள்ளன. எந்த மனிதன் தன்னிடம் உள்ள ஜின்களை அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏவிய கட்டளைகளை எடுத்து நடக்குமாறு ஏவி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு வழிப்படுமாறு கட்டளையிடுகின்றானோ அந்த மனிதனும், அவனிடம் இருக்கும் ஜின்னும் நற்கருமங்களைச் செய்வதுடன் பிறரையும் செய்யத் தூண்டுவார்களேயானால் அந்த மனிதனும், அந்த ஜின்னும் சிறந்த இறை நேசர்களாகவும்,நல்லவற்றைப் போதிப்பதில் றஸுலுல்லாஹ்வின் பிரதிநிதிகளாகவும் ஆகி விடுகின்றார்கள். (பக்கம் - 290)

♦எவன் ஜின்களை அனுமதிக்கப்பட்ட ஆகுமான காரியங்களுக்காகப் பயன்படுத்துகின்றானோ அவன் ஆகுமான காரியங்களுக்காக மனிதனைப் பயன்படுத்தியவனைப் போலாவான். உதாரணமாக ஜின்களின் மீது கடமையானவற்றைச் செய்யுமாறு அவற்றைத் தூண்டுவது, அவற்றிற்கு விலக்கப்பட்டவற்றை விலக்குமாறு அவற்றை விலக்குவது, தனக்கு அனுமதிக்கப்பட்ட விடயங்களுக்காக ஜின்களைப் பயன்படுத்துவது ஆகிய இது போன்ற செயல்களைச் செய்த அரசர்களுடைய அந்தஸ்த்தை அவன் அடைகின்றான். (பக்கம் - 290)

♦ வஹ்ஹாபிகளின் மற்றுமொரு பிரதான இமாம் அல்லாமா ஷவ்கானி ஆவார். இவர் தனது “நைலுல் அவ்தார்” என்ற நூல் பக்கம் 202 இவ்வாறு எழுதுகிறார்.“அல்லாஹ்வின் அடியார்களில் மனிதனின் கண்களுக்குப் புலப்படாத மலக்குகள், சாலிஹான ஜின்களிடம் உதவி கோருவதற்கு ஹதீதில் ஆதாரம் உண்டு என்றும் அவ்வாறு உதவி கோருவதனால் ஷரீஅத்தில் எதுவித குற்றமும் கிடையாது என்றும் கூறியுள்ளார்”.

எனவே மேலே கூறப்பட்ட விடயங்களை வஹ்ஹாபிகளுக்கு உணர்த்துவதற்காகதான் சுட்டிக்காட்டினேன்.


​​எங்களுக்கு (சுன்னத் வல் ஜமாஅத்) தினர்களுக்கு குர்ஆன், ஹதீஸ்களில் நிறைய ஆதாரங்கள் உண்டு அவைகளை பின்வருமாறு கீழே பதிவு செய்துள்ளேன்.


​​"முஃமினான சாலிஹான ஜின்களிடம் உதவி கோருவதற்கு ஷரீஅத்தில் ஆதாரமுண்டு" என்று வஹாபிகளின் மூத்த தலைவர்கள் தீர்ப்புக் கொடுத்திருக்கும் போது பிஞ்சு வஹாபிகள் ஏதோ உளறுகின்றனர். முஃமினான ஜின்கள் மூலம் வைத்தியம் செய்வது, உதவி தேடுவது கூடாது என்று ஷரீஅத்தில் எங்கும் கூறப்படவில்லை. முஃமினான ஜின்கள் நமது சகோதரர்களே! நம்மைப் போன்று அவர்களும் ஷரீஅத்திற்கு கட்டுப்பட்டு நடக்கின்ற ஒரு சமூகமாகும். நன்மையைக் கொண்டும், தக்வாவைக் கொண்டும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள் என்பது இறை கட்டளையாகும். அதனால் ஜின்கள் மனிதர்களுக்கு நன்மையான வழியில் உதவுவது திருகுர்ஆனின் கட்டளைக் குட்பட்டதாகும்.


​​

♣ ஜின் பற்றி சத்திய கொள்கை சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

ஜின் என்ற அரபு பதத்திற்கு மறைவானது என்று பொருள். ஜின் என்ற படைப்புகண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிற்கு அந்தப் பெயர் வந்தது.சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப்பெற்றதாகும். மனிதன் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டுள்ளனர்.


​​இவர்கள் மலக்குகள், மனிதர்கள் போன்றில்லாமல் தீய சுபாவம் மிகைத்தவர்களாக உள்ளனர். மனிதனின் பார்வையில் படாமல் மறைந்திருப்பதால் இவர்களை ஜின்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.இக்கருத்தினை இப்னு அகீல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். “ஜின்கள் மனிதனின் கண்ணில் படாமலும் மறைந்து வாழ்வதாலுமே இவர்களை ஜின் என்று கூறப்படுகின்றது. தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு “ஜனீன்“ என்று கூறப்படுவதற்கு அக்குழந்தை பிறர் கண்ணில் படாமல் இருப்பதே காரணமாகும்.


​​ஆதாரம் : உகாமுல் மர்ஜான் பக்கம் – 07

♦ஜின்கள் மூன்று பிரிவினராக இருப்தாக றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். முதல் வகையினர் காற்றில் சஞ்சரிப்பவர்கள். இரண்டாவது வகையினர், பாம்பு, நாய் போன்றவற்றின் உருவில் இருப்பவர்கள். மூன்றாவது வகையினர் ஷரீஅத்தைப் பேணி நடப்பவர்கள்.


​​ஆதாரம் : தப்றானி, ஹாகீம்

♦ மற்றொரு அறிவிப்பில் ஜின்கள் மூன்று வகைப்படும் என்று நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள். ஒன்று பாம்பு வடிவில் உள்ளவைகள். இரண்டு (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை மூன்று ஆகாயத்தில் பறப்பவை.


ஹழ்ரத் அபூ தஅல்பா ரலியல்லாஹு அன்ஹு

​ஆதாரம் - ஹாக்கிம்

♦ வஹ்ஹாபிகளின் மூலத் தந்தையான இப்னு தைமிய்யா கூறுகின்றார், ஜின்கள் மனித உருவிலும் மிருகங்களின் உருவிலும் தோன்றும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இதனால் அவை பாம்பு, தேள், ஒட்டகம், மாடு, ஆடு, கழுதை, குதிரை, குருவிகள் (பூனை, நாய்) உள்ளிட்ட உருவில் தோன்றுகின்றனர்.


​​ஆதாரம்: மஜ்முஉல் பதாவா பாகம் -19, பக்கம் – 44

♦ ஜின்களை சிலர்களால் வசப்படுத்த முடியும் என்பதை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து பார்க்கலாம் ஏனெனில் இறைவன் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஜின்னை வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன் 21:82, 27:17, 34:14)

♦ (ஒருநாள்) நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், "நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது'' என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு "அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் தூண் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது "இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காதே ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக'' (அல்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்த துஆ என் நினைவுக்கு வந்தது'' எனவே அந்த ஜின்னை நான் விட்டு விட்டேன் என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல் : புகாரி 461

குறிப்பு :- அந்த ஜின்னுடைய கெடுதலை களைவதற்காக அல்லாஹ் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஆற்றலை வழங்கினான். இந்த ஆற்றலின் மூலம் கெடுதல் செய்த ஜின்னை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடக்குவேன் என்று கூறினார்கள். அதே நேரத்தில் எல்லோரும் காணுகின்ற வகையில் அந்த ஜின்னை கட்டி வைக்க அவர்கள் நாடிய போது சுலைமான் நபியவர்கள் கேட்ட பிரார்த்தனையை நினைவு கூறுகி மரியாதைக்காக வேண்டி அந்த ஜின்னை கட்டிப்போடுவதற்க்கு முயற்சிக்காமல் அந்த ஜின்னை விட்டுவிட்டார்கள்.


​​இந்த இடத்தில் நாம் ஒரு விடயத்தை சிந்திக்க வேண்டும் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "எனக்கு பின்னால் வேறு யாருக்கும் ஜின்னை வசப்படுத்தும் ஆற்றலை கொடுக்க கூடாது" என்று இறைவனிடத்தில் துஆ கேட்டிருக்கும் போது இந்த ஜின்னை கட்டிப்போட்டு காட்டிருப்பேன் என்று சொல்லிருக்க மாட்டார்கள்.


​​எனவே அந்த ஆற்றல் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருக்கப்போய்தான் அந்த ஜின்னை தூனில் கட்டிப்போட்டிருப்பேன் என்று சொன்னார்கள். ஆகவே அப்படி செய்யாமல் அதனை ஏன் விட்டார்கள் என்றால் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்ய துஆவிற்கு மரியாதை செய்வதற்காகத்தான் விட்டு விட்டார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.


​​மாறாக அந்த ஆற்றல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இல்லை என்று கூறுவது தவரான வாதம் எனவே இந்த ஆற்றல் நபிமார்களுக்கு இருந்தால் முஃஜிஸாத் வலிமார்கள் செய்தால் கராமத்தாகும்.


​​

♣ மேலே உள்ள குர்ஆன் வசனம், ஹதீஸின் (புகாரி 461) விளக்கம் 

சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஜின்னை முழுமையாக அதாவது அந்த ஜின்கள் விரும்பியோ, அல்லது விரும்பாமலோ இருந்தாலும் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் அப்படி இறைவன் வசப்படுத்தி கொடுத்தான். ஆனால் ஜின் வைத்தியம் செய்பவர்கள் ஜின்னை வசப்படுத்துபவர்களுக்கு அப்படி அல்ல மாறாக அவருக்கு அடிமையில்லாமல் உதவி செய்ய வேண்டும் என்ற என்னத்தை மாத்திரம் இந்த ஜின்னிற்க்கு அல்லாஹ் உதயமாக்குகிறான். ஜின்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அடிமையாக வசப்படுத்துதல் என்ற அடிப்படையில்தான் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான் ஜின் வைத்தியம் செய்பவர்களுக்கு இவர்களுக்கு அப்படியல்ல.

இன்று சிலர் கூறுவார்கள் ஜின்னை நான் வசப்படுத்தியுள்ளேன் என்று இதனை நம்ம முடியுமா? என்றால் ஜின்களை வசப்படுத்துதல் என்பது மார்க்கத்தின் அடிப்படையில் முடியுமான விடயமாகும். ஆனால் அவர்கள் சொல்வது உண்மையா? பொய்யா? என்பது வேறு விடயம் மேலும் சிலர் நான் ஜின்னை வசப்படுத்தி வைத்திருக்கேன் என்று போய்சொல்லிக் கொண்டிருப்பார்கள். காரணம் அப்பதான் நாளுபேர் தல்ஸமாதுக்கு வருவார்கள் பொது மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்களாம் என்பதற்காக சொல்வார்கள். அந்த அடிப்படையில் இப்படிப்பட்டவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்கள் என்று நாம் சொல்லவில்லை. மார்க்கத்தில் ஜின்களை வசப்படுத்தலாமா ? சாத்தியம் உண்டா? என்றால் உண்டு என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

♣ ஜின்களை வசப்படுத்தலாமா?

ஜின்களும், குறி சொல்பவர்களும் நமது முன்னோர்களான நாதாக்கள் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றும் அதற்குரிய வழிவகைகள் இருப்பதாக கூறியுள்ளார்கள். ஜின்களுக்கு இஸ்லாம் கொண்டு செல்லப்பட்டு அதில் முஸ்லிமான ஜின்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஜின்களும் இருக்கின்றன. செய்யிதினா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கரம் பற்றி எண்ணற்ற ஜின்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளன என்று அவர்களின் வரலாறு சான்று பகர்கிறது. ஜின்கள் இறைநேசர்களுக்கு வழிய வந்து தொண்டு புரிந்து வந்தததை நாம் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகளில் படித்திருக்கிறோம்.

♦ முஸ்லிமான ஜின்கள் ஷரீஅத்திற்கு கட்டுப்பட்டு அல்லாஹ்விற்கு பயந்து தமது வாழ்க்கைகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் காபிரான ஜின்களோ, மனிதர்களுக்கு கெடுதி செய்வதையே குறிக்கோளாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஜின்களுக்கு சில சக்திகளை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதை மையமாக வைத்து, குறி சொல்பவர்கள், சூனியம் செய்பவர்கள், இந்தவகை ஜின்களை தம் வசப்படுத்தி தம் இஷ்டத்திற்கு தகுந்தவாறு அவற்றை ஆட்டிப் படைக்கின்றனர்.


​​இந்த ஜின்களை வைத்துதான் சூனியம், வஞ்சனை, கெடுதிகளை இவர்கள் செய்கின்றனர். அதேபோல் இந்த ஜின்கள் மலக்குமார்கள் வானலோகத்தில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்கும் சக்தி படைத்தவை (அல்குர்ஆன் 37 : 8, 15:17) அதை ஒட்டுக் கேட்டு இங்கு வந்து அதை தம்மை கட்டுப்படுத்தி வைத்திருப்பவரிடம் சொல்கிறது. அதை அவர் தம்மை நாடி வரும் பக்தர்களிடம் ஒப்படைக்கிறார். இதற்கு பெயர் குறி சொல்லுதல் என்று சொல்கிறார்கள்.

♦ஆக, முதலில் ஒட்டுக் கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழேயிருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழேயிருப்பவரிடமும் இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள். சில நேரங்கள் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில் ஒட்டுக்கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து) விடுவதுண்டு. இன்னும் சில நேரங்கல் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்து விடுவதுமுண்டு.


​​(இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன் வரை அது போய்ச்சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்களிடம்) பேசுகின்றான். அப்போது (இதைக் கேட்கும் மக்களிடையே) இன்னின்ன நால் இன்னின்னவாறு நடக்குமென அவர் (குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா?” என்று பேசப்படும். வானத்தில் உள்ள அனைத்தையும் இந்த ஜின்கள் அறியும் சக்தியை அல்லாஹ் கொடுக்கவில்லை. சில விசயங்களை அறியும் சக்தியை மட்டும் கொடுத்திருக்கிறான். எனவே பற்பல சமயங்களில் இந்த குறி சொல்லுபவர்களின் சொல்கள் தவறாக அமைந்து விடுகிறது இதன் காரணமாகும்.


​​அல்லாஹ் நம் அனைவரையும் காபிரான, கெடுதியான ஜின், ஷைத்தான்களை விட்டும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் பாதுகாத்து அருள்புரிவானாக!

(மேலும் ஜின்களின் உருவம் பற்றி பார்க்க.(நூல் : புகாரி 3298, அல் குர்ஆன் 18:50, நூல் உகாமுல் மர்ஜான் பக்கம் 08)


​​

♣ ஓதிப்பார்ப்பது பற்றிய ஆதாரங்கள்

(இந்த ஆக்கம் நீண்டு விடும் என்பதற்காக சுருக்கிக்கொள்கிறேன் இஸ்லாத்தின் பார்வையில் ஓதிப்பார்த்தல் சம்பந்தமான தனி தொகுப்பில் பல ஆதாரங்களை அண்மை காலங்களில் பதிவு செய்துவிட்டோம் அல்ஹம்துலில்லாஹ்) அந்த அடிப்படையில் யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர சத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும் ஓதி ஊதிப் பார்த்தல், தண்ணீர் ஓதிக் கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும் .

♦ அல்லாஹுதஆலா (அல்குர்ஆனில் நாம் விசுவாசிகளுக்கு அருளையும் நோய் நிவாரணத்தையும் இறக்கி வைத்துள்ளோம்) என்று கூறியுள்ளான். இது திருமறையில் நோய்களுக்கான மருந்துகள் உள்ளன என்பதை உணர்த்துகின்றது.

♦ இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதும் இமாம் பக்றுத்தீன் றாஸீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் “அல்குர்ஆன் என்பது உடல் மற்றும் ஆன்மாவுடன் தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகும். அதனை ஓதுவதன் மூலம் நோய்களை தடுக்க முடியும்” என்று கூறுகின்றார்கள்.


தப்ஸீர் றாஸீ-பகுதி-21,பக்கம்24

♦ நபிﷺ அவர்கள் சொன்னார்கள் உங்களில் ஒருவர் தூக்கத்தினபோது திடுக்கமடைந்தால் அவர்أعُوذُ بِكَلِمَاتِ الله التَّامات مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرِّ عِبَادِهِ، ومِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِஎன்று சொல்லவும் நிச்சயமாக அது எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது பிள்ளைகளில் வயது வந்தவர்களுக்கு இதை கற்றுக்கொடுத்தார்கள். சிறுவர்களுக்கு இதை எழுதி தொங்கவிட்டார்கள்.


அறிவிப்பு - அம்று இப்னு சுஐப் (ரழியல்லாஹு அன்ஹு)​

​​ஆதாரம் – திர்மிதி ஹதீஸ் இலக்கம் – (3662), ஆதாரம் - அபூதாவூத் ஹதீஸ் இலக்கம் – (3893) 

♦ ஹாரிஜா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் சாச்சா அவர்கள் ஒரு கூட்டத்தின் பக்கம் சென்றபோது அந்த கூட்டத்தவர்கள் அவரிடம் திடுக்கமடைந்த ஒரு மனிதனைக் கொண்டு வந்து ஒதிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்த மனிதனுக்கு அவர் மூன்று நாட்கள் சூறதுல் பாத்திஹாவைக் கொண்டு காலையும் மாலையும் ஒதிப்பார்த்தார். ஒதி முடிந்ததும் உமிழ் நீரை திரட்டி துப்பினார். அப்போது அந்த மனிதர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் எழுந்தார். அந்த கூட்டத்தினர் அவருக்கு அன்பளிப்பு வழங்கினர். அதை நபி ﷺ அவர்களிடம் வந்து கூறிய போது, "என் ஆயுளின் மீது சத்தியமாக நீ அதை சாப்பிடு. எத்தனையோ பேர் அசத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகின்றனர். நீ சத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகிறாய்" என்று கூறினார்கள்.


அறிவிப்பு - ஹாரிஜா இப்னு ஸல்த் (ரழியல்லாஹு அன்ஹு)​​

​ஆதாரம் – அபூதாவூத், ஹதீஸ் இலக்கம் – (3421) 

மேலும் பார்க்க முஸ்லிம் ஹதீஸ் இலக்கம் – 5686,5654/ புகாரி ஹதீஸ் இலக்கம் (3306, 5735, 5742, 2242, 5739)

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாபித் இப்னு கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நோயுற்று இருந்தபோது அவர்களிடம் சென்று «اكْشِفِ الْبَاسَ رَبَّ النَّاسِ மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! என்று சொன்னார்கள். பின்னர் மண்ணை எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீரை அவர் மீது ஊற்றினார்கள்.


​​ஆதாரம் – அபூதாவூத் ,ஹதீஸ் இலக்கம் – (3885)


​​மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களையும் இது போன்ற இங்கு குறிப்பிடப்படாத ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போது நோய்களுக்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டும் ஓதி ஊதிப்பார்தல், தண்ணீர் ஓதுதல், தாயத்து கட்டுதல் என்பன இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டவையாகும்.

♦ இவை ஷிர்க் ஆன காரியங்கள் அல்ல என்பதையும் நபி ﷺ அவர்கள் அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டும் வைத்தியம் செய்துள்ளார்கள் என்பதையும் ஷிர்க் (இணைவைத்தல்) சம்மந்தமான ஓதல்கள் மூலம் வைத்தியம் செய்வதை நபி ﷺ அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.


​​عن ابن مسعود «إن الرقى والتمائم والتولة شرك ஓதிப்பார்தலும் தாயத்துகட்டுதலும் ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும் என்ற கருத்தைத் தரும் (அபூதாவூத் – 3883 ஹதீதும் இப்னு மாஜா 3612) ஹதீதுகளும் இது போன்றவைகளும் ஜாஹிலிய்யா காலப்பகுதியில் காணப்பட்ட ஷிர்க் (இணைவைத்தல்) சம்பந்தமான தாயத்துகளை குறிப்பிடுகின்றன. மாறாக அல்குர்ஆனை கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்களை கொண்டும் ஓதிப்பார்தலையும் தாயத்துகட்டுதலையும் ஷிர்க் என இங்கு குறிப்பிடப்படவில்லை. எனவே மார்க்கத்தை தெளிவாக விளங்கி நடப்போம்.