MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா (திக்ர்) ஓதுவது கூடுமா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
ஜனாஸாவுடன் செல்லும்போது, கூடச் செல்பவர்கள் சப்தமாகவும், (வெளிரங்கமாகவும்) சப்தமில்லாமலும் (உள்ரங்கமாகவும்) கலிமா ஓதுவது புகழப்பட்டதும், முஸ்தஹப்பானதும் ஆகும். இது ஒரு பித்அத்தான காரியமல்ல.
♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் தவரான வாதங்களுக்கு தக்க பதில்கள்:
ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போது மௌனமாகவும், மரண சிந்தனையுடனும் செல்ல வேண்டும் என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அல்அத்காறுன் நவவியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியிருப்பதை மேற்கோள்காட்டி பேசும் இலங்கையைச் சேர்ந்த வஹ்ஹாபி மதகுரு யூசுஃப் முப்தினதும் வழிகெட்ட தப்லீக் மற்றும் வஹ்ஹாபி இயக்கங்களும் அதன் ஆரம்பத்தில் வரும் “யுஸ்தஹப்புலஹு.....“ ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போது அல்லாஹுத்தஆலாவின் திக்றில் கவனத்தை செலுத்திக்கொண்டு செல்வது சுன்னத்து என்று எழுதியிருப்பதை மறைத்து விட்டனர்.
ஸஹாபாக்கள் தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள் காலத்தில் இருந்த சூழலும், நிலையும் இப்போதும் கடைப்பிடிக்கப்படுமாயின் வாய்மூடி திக்றோடும், மரண சிந்தனையோடும் செல்வதுதான் சிறப்பு. ஆனால் இப்போது இந்த சூழல் மாறிவிட்டது. உலகியல் சிந்தனையுடன் ஊர் வம்பும், அரசியல் பேச்சும் பேசிக்கொண்டு செல்வதையே காண்கின்றோம். ஸஹாபாக்கள் காலத்திலிருந்த நடைமுறைக்கு முற்றிலும் எதிரான ஒன்றை எப்படி ஒப்பிட முடியும்? ஸஹாபாக்களின் காலத்திலிருந்த அதே ஒழுங்கு சிந்தனை இன்றும் கடைப்பிடிக்கப்படுமாயின் அதே சட்டம் இன்றும் பொருந்தும். ஆனால் தற்கால நிலை அவ்வாறில்லையே!
ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போது மக்கள் வீண் பேச்சுக்களையும், ஊர் வம்பும் புறம் பேசுவதையும் மரண சிந்தனையுமின்றி மக்கள் செல்வதையும், அடுத்தவனின் குறைகளையும் பேசிக்கொண்டு செல்வது ஹறாமான, பாவமான செயலாகும். இதனைத் தடுப்பதற்காக சில இமாம்கள் ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போது மௌனமாக செல்ல வேண்டும் என்று கூறியதை புரிந்து கொள்ளாத அறிவீர்கள் 'ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போது ஷஹாதத் கலிமாவை மொழிந்து செல்வது பாவமான செயல், ஹராம் என்று ஊழையிட்டு இஸ்லாத்திற்கு முரணான நச்சு கருத்துக்களை மக்களின் உள்ளத்தில் விதைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படிப்பட்ட குழப்பவாதிகளை விட்டும் முஸ்லிம் சமுதாயத்தை எல்லாம் வல்ல கிருபையாளன் பாதுகாப்பானாக!
ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போது ஷஹாதத் கலிமாவை மொழிந்து செல்லும் வழக்கத்தை அதிகமாக இமாம்கள், நல்லடியார்கள் ஏற்படுத்தினர்.அந்த அடிப்படையில் மையித்தைக் கொண்டு போகையில் ஷஹாதத் கலிமா போன்ற நல்வாக்கியங்களைச் சொல்வதிலே குற்றமொன்றுமில்லை. சில இமாம்கள் அதை “சுன்னத்“ என்று கூறுகின்றனர். இன்னும் இமாம்களில் சிலர் வாஜிப் என்று சொன்னாலும் கூட பாதகமில்லை. ஏனெனில், ஷரகிலே விலக்கப்பட்ட வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண்டு (ஜனாஸாவைக்கொண்டு போகும்போது) நடப்பதை விட கலிமாச் சொல்லி நடப்பது எவ்வளவோ சிறந்தது.
♦ (மேலும்), நீங்கள் நினைவுபடுத்துங்கள். ஏனெனில், நிச்சயமாக நினைவுபடுத்துதல முஃமின்களுக்கு (விசுவாசிகளுக்கு) நற்பயனளிக்கும்.(அல்குர்ஆன் : 51:55)
♦ எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு, எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 6:160)
♦ ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள்:
யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய) வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீயநடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட) வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: முஸ்லிம் 5193, திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா, தாரமீ, மிஷ்காத்
♦ அனசுப்னு மாலிக்கைத் தொட்டும் அஸாகிர் ரழியல்லாஹு அன்ஹு ஹதீதை றிவாயத் செய்துள்ளார்கள்:
“நீங்கள் மையித்தின்போது கலிமாவை மிகுதமாக்குங்கள் என்று வந்திருக்கின்றது“.
நூல்: நைலுல் மறாம்
ஆகவே இக்காலத்தில் மனிதர்கள் முற்காலத்தை (றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் காலத்தை)ப் போன்று மௌத்தைப் பற்றியும்,மறுமையைப் பற்றியும் யோசித்தவர்களாகப் போகக் காணவில்லை. எனவே, விரைந்து திக்றுகள், கலிமாக்களைச் சொல்லிக்கொண்டு போவதில் குற்றமில்லை.
எது எப்படி இருந்தாலும் ஒரு விடயத்தில் இரண்டு குற்றம் செய்ய ஏற்படுமானால், பெரிய குற்றத்தை தவிர்த்து சிறு குற்றத்தை செய்வது மார்க்கச் சட்டமும், உலக சட்டமுமாகும். இதற்கு உவமானம், ஒருவரின் கால் விரலில் சர்ப்பம் (பாம்பு) தீண்டுமானால், விஷம் ஏறி இவனை ஹலாக்காக்கி விடும் என்று பயந்தால் விரலை மட்டும் துண்டித்து விடுவது போலவே “சப்தமிடுவது“ “பித்அத்“ புறம் பேசுவதும், வீண் வார்த்தை பேசுவதும் ஹறாம். எனவே, எங்கள் ஊர்களில் நடைமுறையிலிருந்து வருவதுபோல ஷஹாதத் கலிமா ஓதுவது விலக்கப்பட்டதல்ல. ஹதீஸும் வந்தேயிருக்கின்றது. அதனால் இது ஆகும்.
சூழல் மாறும் போது சில சட்டங்களும் மாறும் என்பது ஷரீஅத்தில் உள்ள ஒரு பொது விதியாகும். இந்த அடிப்படையில்தான் தற்காலத்தில் ஜனாஸாவைச் சுமந்து செல்லும்போது கலிமா, திக்று, ஸலவாத் உள்ளிட்டவைகளை மொழிந்து செல்வது ஸுன்னத் என்று இமாம்கள், அறிஞர்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையாக வைத்து இஸ்லாமிய துணை மூலாதாரமான (கியாஸ், இஜ்மாஃ) மூலம் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
♣ ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா (திக்ர்) ஓதுவது கூடும் என்பது பற்றி இமாம்களின் கருத்துக்கள்
ஜனாஸாவுடன் செல்லும்போது, கூடச் செல்பவர்கள் சப்தமாகவும், (வெளிரங்கமாகவும்) சப்தமில்லாமலும் (உள்ரங்கமாகவும்) கலிமா ஓதுவது புகழப்பட்டதும், முஸ்தஹப்பானதும் ஆகும். இது ஒரு பித்அத்தான காரியமல்ல. அல்லாஹ்தஆலா அருள்மறையாம் திருமறையில் 'விசுவாசிகளே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுதலாக நினைவு கூறுங்கள்' என்று கூறுகின்றனர். இந்த ஆயத்தை மேற்கோள்காட்டி இமாம்களான நமது முன்னோர்கள் ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா (திக்ர்) போன்றவற்றை ஓதும்படி கூறியிருக்கிறார்கள். அப்படிச் செய்வதினால் அம்மய்யித்திற்கு இக்கலிமாவின் பொருட்டைக் கொண்டு பரக்கத் செய்யப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
♦ இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது ஜாமிஉஸ் ஸகீர் எனும் கிரந்தத்தில் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கிறார்கள் ஜனாஸாவுடன் செல்லும்போது 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்னும் கலிமாவை அதிகமாக ஓதிக் கொள்ளுங்கள். மேலும் அப்படி சொல்வதினால் அம்மய்யித்திற்கு உணர்ச்சியூட்டக் கூடியதாகவும் இக்கலிமாவைக் கொண்டு பரக்கத் செய்யப்படுகிறது என்றும் சொல்கின்றார்கள்.
நூல்கள்: ஸரத்துல் அஹ்ஸாப், ஜாமிஉஸ்ஸகீர் பாகம் 1, பக்கம் 380, பைளுல் கதீர் காஷியா ஜாமிஉஸ்ஸகீர் பாகம் 2,பக்கம் 88
♦ இதுபற்றி மேலகதிக விபரங்களுக்கு
அத்காருல் நவவி பக்கம் 170, நிஹாயா பக்கம் 03, பாகம் 23, கல்யூபி பாகம் 1, பக்கம் 347, புகாரி பாகம் 2 ஹதீஸ் எண் 944 ஐ பார்க்கவும்
♦ இமாம் அப்துல் ஙனீ நாபிலிஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: ஜனாஸாவைச் சுமந்து செல்லும்போது முன்னாலும், பின்னாலும் கலிமாவைச் சொல்லிக் கொண்டும் திக்று செய்து கொண்டும் செல்வதை கண்ணியத்திற்குரிய சில ஷெய்குமார்கள் ஆகும் என்று கூறியுள்ளார்கள். இதனால், மையித்திற்கும் உயிருள்ளவர்களுக்கும் கலிமாவைப் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றது. உலகத்தின் பற்றாலும், பதவி மோகத்தாலும் மனம் வன்மை பெற்றவர்களின் அக இருளை இது தூரமாக்கி வைக்கின்றது.
ஆதாரம் : ஹகீகத்துன் நதிய்யா
♦ செய்யிது அலிய்யுல் கவாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாக அல் குத்புர் ரப்பானி இமாம் அப்துல் வஹ்ஹாபுஷ் ஷஹ்றானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
ஜனாஸாவுடன் செல்வோர் வீண் பேச்சுக்களை விடாமலும், உலக விவகாரம் தொடர்பான கவனத்திலிருந்து திரும்பாமலுமிருந்தால், கலிமாவை மொழிந்து கொண்டு செல்லுமாறு தூண்டுவதுதான் பொருத்தம். உலகியல் சிந்தனையோடு செல்வதைவிட கலிமா மொழிந்து செல்வது மேலாகும். மார்க்கச் சட்டங்களை நன்கு கற்ற ஒரு பக்கீஹு (சட்ட அறிஞரு)க்கு இதனைத் தடை செய்வது எந்த வகையிலும் பொருத்தமாகாது. அவ்வாறு தடை செய்வதாயின், தெளிவான நேரடியான (ஷரீஅத்தின்) தடை வேண்டும். திருக்கலிமாவை விரும்பிய இடத்தில், விரும்பிய விதத்தில் மொழிவதற்கு, மார்க்கத்தை நமக்குச் சொல்லித் தந்த நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தரப்பிலிருந்து பொது அனுமதி நமக்குண்டு. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் இதனைத் தடை செய்யும் அகக் கபோதிகளைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகின்றேன்.
ஆதாரம் : லவாகிஹுல் அன்வாருல் குத்ஸிய்யா
♦ குத்புர் ரப்பானி இமாம் அப்துல் வஹாபுஷ் ஷஹ்றானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்: முஸ்லிம்கள் நன்மை தரும் நல்ல செயலாகக் கருதிச் செயல்படுகின்ற ஒரு செயலை குறிப்பாக அல்லாஹ்வோடும் அவனது திருத்தூதரோடும் தொடர்புடையதை தடை செய்வதை நாம் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். ஜனாஸாவைச் சுமந்து செல்லும்போது திருக்கலிமாவை மொழிந்து செல்வதையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஜனாஸாவின் முன்னால் செல்பவர் திருக்குர்ஆனை ஓதுவதை அல்லது கலிமா சொல்வதை ஹறாம் என்று யாராவது சொல்வாராயின், அவர் ஷரிஅத்தை சரிவரப் புரியாதவராகவே இருப்பார்.
“லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்“ என்ற திருக்கலிமா அனைத்து நன்மை தரும் காரியங்களிலெல்லாம் அதிக நன்மை தரும் ஒன்றாகும். இதனை ஏன் தடை செய்ய வேண்டும்? தற்காலத்திலுள்ள சூழ்நிலையை சற்று திரும்பிப் பாருங்கள்! ஜனாஸாவுடன் செல்லும்போது உலகியல் விவகாரங்களை அலசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் செல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர்களின் மனதில் மரண சிந்தனையோ அதன் எண்ணத்தின் வாடையோ இருப்பதில்லை. மரணமானது ஏதோ நடந்து முடிந்ததாகவே நினைக்கின்றார்கள்.
ஜனாஸா வீட்டிலும் ஜனாஸாவுடன் செல்வோரும் கதைத்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் செல்வதை நான் என் கண்ணால் கண்டுள்ளேன். இந்த சூழலில் இஸ்லாத்தில் ஆரம்ப காலத்தில் ஜனாஸாவுடன் செல்லும்போது எவரும் கலிமாச் சொல்லிக்கொண்டு செல்லவில்லை என்று கூறி இதனைத் தடை செய்வது எந்த வகையிலும் பொருத்தமானதாக ஆகாது. இது கண்டிப்பாக ஆகுமான செயல் என்றே தீர்ப்புச் சொல்ல வேண்டும்.உலக விவகாரங்களை அசைபோட்டுக் கொண்டு செல்வதை விட கலிமா மொழிந்து செல்வது நல்லதாகப் படவில்லையா? இது நன்மைதரும் நற்செயலாக இல்லையா? யாராவது ஜனாஸாவுடன் செல்லும்போது உரத்த தொனியில் கூட்டாக கலிமாவை மொழிந்து செல்வதை எம்மில் எவரும் ஒருபோதும் ஆட்சேபிக்க மாட்டோம்.
ஆதாரம் : உஹுதுல் மஷாயிக்
♦ ஹஸரத் ஷெய்க் உதுமான் புஜைரமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி “ஷரஹ் இக்னாஃ“ என்ற நூலின் ஹாஷியா இரண்டாம் வால்யூமில் இவ்வாறு எழுதுகின்றார்கள்: ஜனாஸாவுடன் செல்லும்போது சப்தமிட்டு திருக்குர்ஆன் ஓதுவதும், திக்று செய்வதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத் கூறிக்கொண்டு செல்வதும் மக்ரூஹ் என்று இஸ்லாத்தின் ஆரம்ப கால சூழலை கவனத்தில் கொண்டே அறிஞர்கள் கூறினார்கள். ஆனால், இக்காலத்தில் இதில் எக்குற்றமும் கிடையாது.
இன்று உரத்துக் கலிமாவை மொழிவது மையத்தின் அடையாளமாக ஆகி விட்டது. அதனை விடுவது மையத்திற்குச் செய்யும் அவமானமாகும். அதனால், இது வாஜிபு என்று கூறினாலும் இது மிகையாகாது. இமாம் முதாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இதனை இவ்வாறு நக்லு செய்துள்ளார்கள். இவ்வாறான ஆதாரங்கள் ஏராளமுண்டு.
கால சூழலை கவனத்தில் கொள்ளாது ஏட்டைப் பார்த்து தீர்ப்புக் கூறுபவர் ஷரீஅத்தைப் புரியாத அகக் கபோதி என்று இமாம் அப்துல் வஹாபுஷ் ஷஹ்றானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியிருப்பதை வாசகர்கள் நன்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.மௌனமாகச் சொல்ல வேண்டும் என்று கூறி ஸஹாபாக்களின் காலத்தில் உள்ள தீர்ப்பை எடுத்துக் கூறுவோர் அவர்களின் மனோநிலையையும் ஒத்தல்லவா சொல்ல வேண்டும். மன நிலையில் ஜாஹிலிய்யாக் காலத்தையும் மௌனத்தில் ஸஹாபாக்களையும் ஒப்பிடுவது எங்ஙனம் பொருத்தமாகும்?
கலிமாச் சொல்வதைத் தடை செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் இவர்கள் வீண் பேச்சுக்கள் பேசாமல் மௌனமாகவும் மரண சிந்தனையுடனும், கவலையுடனும் வர வேண்டும் என்று ஒரு நாளாவது கூறியதுண்டா? பாவத்தில் பராமுகமும் நன்மை தருவதைத் தடுப்பதில் ஆர்வமும் காட்டுவதின் மர்மம்தான் என்ன? இது நல்லெண்ணத்தின் வெளிப்பாடா, அல்லது மன வியாதியின் பிரதி பலிப்பா? ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஜனாஸாவுடன் செல்லும்போது திக்று, கலிமா மொழிவதைத் தடை செய்பவன் ஷரீஅத்தை சரிவரக் கற்காத அறிவிலி என்றும், அகக் கபோதி என்றும் இமாம்கள் இவர்களைப் பற்றிச் சாடி எழுதியதை வாசகர்கள் படித்தீர்கள்.
எல்லாம் வல்ல கிருபையாளன் இப்படிப்பட்ட வழிகேடர்களை விட்டும் அனைத்து முஸ்லிம்களின் ஈமானையும் பாதுகாப்பானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்