MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நின்று மரியாதை செய்யலாமா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
♣ஜனாஸாவைக் கண்டால் எழுந்து மரியாதை செய்வது இது இஸ்லாமியர்களின் பண்பாடா? அல்லது பிற மதத்தவர்களின் பண்பாடா?
♦இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் அதைப் பின்தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்.”
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலியல்லாஹு அன்ஹு)
ஷஹீஹ் புகாரி 1309
♦ ஜனாஸாவைக் கொண்டு செல்லக் கண்டால் அது உங்களைத் தாண்டிப் போகும்; வரை எழுந்து நில்லுங்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அம்ர் இப்னு றபீஆ ரலியல்லாஹு அன்ஹு
நூல்: முஸ்லிம்
♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.”
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலியல்லாஹு அன்ஹு)
ஷஹீஹ் புகாரி 1316
♦அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் . ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “உறுதியாகிவிட்டது“ எனக் கூறினார்கள். உமர்(ரலியல்லாஹு அன்ஹு) “எது உறுதியாகிவிட்டது?“ எனக் கேட்டதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்” எனக் கூறினார்கள். (இன்னுமொரு அறிவிப்பில் முஃமீன்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது)
ஷஹீஹ் புகாரி 1367, முஸ்லிம்
♦ அபுல் அஸ்வத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் . நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர்(ரலியல்லாஹு அன்ஹு) உடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்ததும் உமர்(ரலியல்லாஹு அன்ஹு), “உறுதியாகிவிட்டது“ என்றார். பிறகு இன்னொரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போதும் மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசினர். உடனே உமர்(ரலியல்லாஹு அன்ஹு), “உறுதியாகிவிட்டது“ என்றார். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. மக்கள் அவரின் தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் உமர்(ரலியல்லாஹு அன்ஹு), “உறுதியாகிவிட்டது“ எனக் கூறினார்.
நான் “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! எது உறுதியாகிவிட்டது?“ எனக் கேட்டதும். “எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சி கூறினால் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் “மூவர் சாட்சியாயிருந்தால்..?“ என்று கேட்டோம். அதற்கவர்கள் “மூன்று பேர் சாட்சி கூறினாலும் தான்” என்றனர். மீண்டும் “இருவர் சாட்சியாக இருந்தால்...” என நாங்கள் கேட்தற்கு இரண்டு பேர் சாட்சி கூறினாலும் தான்” என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன்” என்று உமர்(ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்.
நூல் :புகாரி 1368