MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இஸ்லாம் கூறும் ரஜபும் ஷஃபானும்

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


யா அல்லாஹ்! ரஜப், ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக! இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக!


♦அல்லாஹ் நமக்கு அருளியுள்ள காலத்தின் அருமையை நாம் உணர்வதற்கு, அல்லாஹ்வுடனான நமது தொடர்பின் நிலை எவ்வாறுள்ளது எனச் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வுக்காகவும், அவனிடம் பிரார்த்தனை புரிவதற்காகவும் போதுமான நேரத்தை நாம் ஒதுக்கியுள்ளோமா? எனச் சிந்திக்க வேண்டும்.


​​நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் ரஜப், ஷஃபான் மாதம் முழுவதையும் எவ்வாறு நற்செயல்களால் நிரப்பினார்கள் என்பதை அறிந்து, அதன்படி செயல்பட்டு, அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ரஜப், ஷஃபான் மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


அந்த அடிப்படையில் கால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் உலுல் அஸ்ம் என்று அந்த றசூல்மார்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரைத் தெரிவு செய்து அவர்களில் மிக மிகச் சிறப்பான நபியாக றசூலாக அடியானாக அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்.


​​இவ்வாறே இடங்களைப் படைத்த அல்லாஹ் மக்கா முகர்ரமா. மதீனா முனவ்வரா, பைத்துல் முகத்திஸ் ஆகிய இடங்களை ஏனைய சகல இடங்களைவிடவும் கண்ணியப்படுத்தி வைத்தான். இது போல கால நேரங்களைப் படைத்த அல்லாஹ் வெள்ளிக்கிழமையை நாட்களின் தலைவனாகவும் மாதங்களில் முஹர்ரம், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, ரஜப், ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான்.


♦நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


​​(அல்குர்ஆன் : 9:36)


♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.


ஹழ்ரத் அபூ பக்ரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் புகாரி - 3197. 4406. 4662. 5550


ஆகவே வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நான்கு மாதங்களும் கண்ணியமாக்கப்பட்டிருந்த காரணத்தினால்தான் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பிற்கு முன்பிருந்த காலத்து மக்களிடத்திலும் இந்த மாதங்கள் சிறப்பானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.


​​இன்னும் இந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள் என்றும் அல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறான். அதனால்தான் கண்ணியமிக்க இந்த மாதங்களில் புரியப்படும் நல்லமல்களுக்கு அதிகபட்ச நற்கூலியும் பாவச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். கடும் குற்றச் செயல்களாகக் கருதப்படும் என ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்திருக்கிறார்கள்.


♦ ரஜப் மாதத்தை நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்து விட்டால் ('அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜபின் வஷஃபான வபல்லிங்னா ரமழானன') யா அல்லாஹ்! ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக! என்று நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாத துவக்கத்திலிருந்து புனித ரமழான் மாதத்தினை அடையும் வரை ஓதி வந்திருக்கிறார்கள். (நூல் முஸ்னத் அஹ்மத், தப்ரானீ) ஆகவே புனிதமான தினமும் இந்த தூஆவை நாமும் ஒதுவோம்


♦ ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


இந்த சிறப்பான சங்கையான மாதத்தில் அல்லாஹ் தன் வல்லமையை வெளிப்படுத்துவதற்காக நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலாக நிகழ்த்துக் காண்பித்த மகா அற்புத நிகழ்வே அல் 'இஸ்ராஉ வல் மிஃராஜ்' எனும் அதிசய நிகழ்வாகும். ரஜப் பிறை 27 புனித மிஃராஜ் தினமாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க விண்ணுலகப் பயணம் சென்ற நாள்.


​​இன்றுதான் நமக்கு ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. இந்த மாதத்தில் நோன்பு வைப்பது குறிப்பாக மிஃராஜ் நோன்பு, பராஅத் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். ஏனைய வணக்க வழிபாடுகளில் ஈடுபதுவது, அதிகமதிகம் ஸலவாத்து ஓதுவது சிறப்பிற்குரியதாகும்.


♦ (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன், அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.


​​(அல்குர்ஆன் : 17:1)


♦ ஷஅபான் வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: இப்னுமாஜா 1378​


♦ நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.


​​நூல்கள்: அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)


ஆகவே கண் மூடி விழிப்பதற்குள் இந்த மாதம் வந்துவிட்டது. சிலவேளைகளில், அல்லாஹ் நமக்கு அருளியுள்ள காலத்தின் மதிப்பை நாம் உணரத் தவறி விடுகிறோம். இன்ஷா அல்லாஹ் நாம் அதிக காலம் வாழ்வோம் வரும் ஆண்டில் ரஜப், ஷஃபான் மற்றும் ரமலானின் வாய்ப்புகளைப் பெறுவோம், அவற்றில் நாம் சில திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள். தனது இறுதி காலத்திலோ அல்லது மரண தருவாயிலோ காலத்தின் மதிப்பை உணரும் நபர்களில் ஒருவராக நாம் ஆகி விடக் கூடாது.


♦ அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றார்:முடிவாக அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்து விட்டால் “ என்னுடைய இறைவனே! நான் விட்டு வந்ததில் நற்செயலை நான் செய்வதற்காக என்னை உலகத்திற்குத் திருப்பி அனுப்புவாயாக! ”என்று கூறுவார். ஆனால் விஷயம் அவ்வாறல்ல, நிச்சயமாக அது அவர் கூறுகின்ற (வெறும்) வார்த்தையேயாகும். அவர்களுக்கு முன்னால்-அவர்கள் எழுப்படுகின்ற நாள் வரை (பர்ஜக் எனும்) ஒரு தடுப்பு இருக்கின்றது” (அல்-முஃமின் :99-100 )


♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இப்படி நவின்றார்கள்: “ரஜப் மற்றும் ரமலான் மாதங்களுக்கு இடையிலுள்ள ஷஃபான் மாதத்தின் விஷயத்தில் ஜனங்கள் அக்கறையற்று இருக்கிறார்கள். ஆனால், அம்மாதத்தில் தான் பிரபஞ்சத்தின் ரட்சகனாகிய அல்லாஹ்வின் பக்கம் நமது செயல்பாடுகள் உயர்த்தப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் எனது செயல்பாடுகள் உயர்த்தப்படுவதை விரும்புகிறேன்.


​​”நாம் இவ்வாண்டு முழுவதும் செய்த செயல்பாடுகளின் அறிக்கை எவ்வாறிருக்கும்? நம்மைப் படைத்தவனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் நமது செயல்பாடுகளின் புத்தகம் சமர்ப்பிக்கப்படும் போது நமது மதிப்பு என்னவாக இருக்கும்? நமது செயல்பாடுகளின் புத்தகங்கள் இன்று நமக்கு காண்பிக்கப்பட்டால் நாம் மகிழ்ச்சியாக, பெருமைப்படும் விதத்தில் அவை இருக்குமா? அல்லது தர்மசங்கடமான நிலையில் இருப்போமா? நாம் இன்னும் அதிக நற்காரியங்களைச் செய்திருக்க வேண்டுமே எனக் கவலைப்படுபவர்களாக இருப்போமா? என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும்.


​​நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்களாக இருந்தும்கூட ரஜப் ஷஃபான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவதில் ஆர்வமிக்கவர்களாக இருந்துள்ளார்கள்.ரமலான் மாதம் மிகவும் அருகில் உள்ளது என்பதை முன்னறிவிப்பு செய்வதாக ரஜப் ஷஃபான் மாதம் உள்ளது. இம்மாதத்தில் நமக்கு விடுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று, இம்மாதத்தின் அதிக நாட்களில் நோன்பு நோற்பதாகும்.


♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அன்பு மனைவியாகிய ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களை, (ரமலான் மாதத்தை அடுத்து) ஷஃபான் மாதத்தில் அதிக நோன்புகளை நோற்றதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்பவர்களாக நான் காணவில்லை”


நூல்: புகாரி, முஸ்லிம்


♦ ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்கும் படி நாம் ஆர்வ மூட்டப்படுவதற்கான தத்துவங்களில் ஒன்று, ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்பதாகும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் ரஜப் ஷஃபான் மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம்.


​​இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசரையாக ரஜப் ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சி களை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது. சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராகிய அபூபகர் அல்-பல்கி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்” (நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்)


இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் நமது வணக்க வழிபாட்டுச் செயல்களின் மூலம் ஆன்மீக ரீதியில் நம்மை நாம் தயார் செய்து கொள்வதோடு, அறிவுப்பூர்வமாக முன்னேற்றம் காண்பதற்கு அதிகமானக் கல்வியறிவைத் தேடுவது அவசியமாகும் என்பதையும் உணர வேண்டும். ஒவ்வொரு வருடமும் நமது சமுதாயத்தில் சிலர், நோன்புக் காலங்களில் தாம் செய்த தவறுகளைப் பற்றி கேள்வி கேட்கின்றார்கள். அவர்களின் நோன்பு சரியான நிலையில் உள்ளதா அல்லது முறிந்து விட்டதா என்ற விஷயத்தில் அவர்களிடம் நிச்சயமற்ற சிந்தனைகள் ஏற்படுகின்றன.


​​எனவே, ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் நோன்பு சம்பந்தமான இஸ்லாமியச் சட்ட திட்டங்களை அறிவது அவசியமாகும். உதாரணமாக, ஒருவர் நோன்பு நோற்கும் போது எந்தெந்தச் செயல்களைச் செய்யுமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளார், எவ்வித விஷயங்களெல்லாம் நோன்பை முறித்து விடும், நோன்பின் மூலம் பெற வேண்டிய பாடங்கள் என்ன போன்றவற்றையெல்லாம் அறிவது அவசியமாகும். கல்வியறிவால் நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ளும்போது நோன்பை முறிக்கின்ற அல்லது நோன்பின் நன்மைகளைக் குறைக்கின்ற செயல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.


ஆகவே நிமிடங்களும், மணித்தியாலங்களும், நாட்களும் கணக்கின்றி கழிகின்றன. மாதங்கள் உருண்டோடி வருடமொன்று நிறைவடைகின்ற போதே நாம் ஓரளவாவது காலத்தின் பெறுமதியை உணர்ந்து கொள்கின்றோம். கண் மூடித் திறப்பதற்குள் வருடமொன்று முடிவடைந்துவிட்டதே என்று அங்கலாய்க்கின்றோம். தொழில், குடும்பம், சொத்து சேகரிப்பு இதிலேயே எம் காலங்கள் கழிந்து போய்விடுகின்றன.


​​படைத்த இறைவனுக்காக நான் என்ன செய்தேன்? என்று சிந்திப்பவர்கள் எம்மில் குறைவாகவே உள்ளனர். செல்வத்தை அள்ளிச் சேகரித்து வைப்பதில் ஆர்வம் உள்ள அளவுக்கு எமக்கு நன்மைகளை அள்ளிக் கொள்வதில் ஆர்வம் இருப்பதில்லை. நன்மைகளை அள்ளிக் கொள்வதில் போட்டி போட்டுக்கொள்ளுங்கள் என்று அல்-குர்ஆன் எமக்கு கட்டளையிடுகின்றது. முஃமின்களின் பண்பு அதுவாகத்தான் இருக்க வேண்டும். அவர்களின் போட்டி பணத்தையும் செல்வத்தையும் சேகரிப்பதிலோ, பதவிகளைப் பெற்றுக் கொள்வதிலோ, பிறரை வீழ்த்தியேனும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதிலோ இருக்க மாட்டாது.


♦ உங்கள் இறைவனிடமிருந்து பாவ மன்னிப்பையும், சுவனத்தையும் பெற்றுக் கொள்வதில் போட்டி போட்டு முந்திக் கொள்ளுங்கள். அந்த சுவனத்தின் விசாலம் வானம், பூமி அளவுடையது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கைக் கொண்டவர்களுக்காக அது தயார்படுத்தப்பட்டுள்ளது. சுவனம் என்ற இந்த அருளை தான் நாடிய மனிதர்களுக்கு அல்லாஹூத்தஆலா வழங்குகின்றான். மேலும் அல்லாஹூத்தஆலா சிறப்பும் கண்ணியமும் கொண்டவனானவான்'.(சூறதுல் ஹதீத் : 21)


சகோதர, சகோதரிகளே!

நன்மைகளை அள்ளி, இறை அன்பையும் அவனது அருளையும் பெற்று சுவனத்தின் சொந்தங்களாய் மாற எமக்கெல்லாம் ஒரு சந்தர்ப்பமாகிய புனிதமான ரஜப் ஷஃபான் வருகிறது. எனவே இம்மாதம் நாம் நன்மைகளை அள்ளிக் கொள்வதற்கான மாதமாக வருகிறது. இம்மாதத்தில் நோன்பு நோற்று எமது அமல்கள் நாம் நோன்பாளிகளாக இருக்கின்ற நிலையில் உயர்த்தப்படுவதற்கு வழிசெய்வோமாக. தர்மங்கள் ஏனைய இபாதத்களை அதிகமதிகம் நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொள்வோமாக!


​​யாஅல்லாஹ் எங்களுக்கு ரஜப், ஷஃபான் மாதங்களில் அருள்பாளிப்பாயாக! மேலும் ரமழானை அடைந்து கொள்ளச் செய்வாயாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.