MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இரத்தம், உடல் உறுப்புக்கள் தானம் செய்யலாமா?
எழுதியவர்: மௌலவி S.L . அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இரத்த தானம் மற்றும் கண், இதயம், கிட்னி போன்ற உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு
"இரத்த தானம் மற்றும் தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து கண், இதயம், கிட்னி போன்ற உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டு. ஆகவே கண், இதயம், கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்வதையும் இஸ்லாம் மார்க்கம் ஆகுமாக்கிய நல்லதோர் காரியமாகும், மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிரானவையல்ல, ஆகவே தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து கண்,இதயம், கிட்னி போன்ற உடல் உறுப்புக்களை தானமாக கொடுத்து பிற மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்ல காரியமாகும்". என்று குர்ஆன், ஹதீஸ்களை சரியாக படிக்காமலும் - விளங்காமலும் மார்க்க அறிவு இல்லாமலும் 'நாங்கள் மனித உயிரைக் காக்குகின்றோம்' என்று தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து ஷரீஅத் கடுமையாக தடை செய்த ஹராமான செயலை ஹலாலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அதிகாரத்தை வழிகெட்ட வஹ்ஹாபிகளுக்கு யார் கொடுத்தது?
♣ இரத்த தானம் செய்வதைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?
இரத்தம் என்பது அசுத்தமான (நஜிஸ்) வகையினைச் சேறும். அசுத்தமான ஒன்றை உடலில் சேர்க்கலாமா? என்ற கேள்வி நமக்கு மத்தியில் எழலாம், ஆகவே இரத்த தானம் என்பதை ஒரு உயிரை அல்லாஹ்வின் கிருபையுடன் காப்பாற்றுவதற்காக உபயோகிக்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் நிர்பந்தமான சூழ்நிலைகள் ஏற்படும் போது இஸ்லாம் மார்க்கத்தில் 'தடுக்கப்பட்ட ஒன்றும் தேவையான அளவுக்கு பயன்படுத்துவது கூடும்' என்ற நிலையில் வந்துவிடும். இதனை அல்லாஹ் திர்குர்ஆன் பின்வருமாறு :
"தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்".(அல்குர்ஆன் : 2:173)
♦ ஆகவே இரத்தம் (நஜிஸாக - அசுத்தமாக) இருந்தாலும் நிர்பந்தமான சூழ்நிலைகள் வரும் போது கூடும் என்ற நிலையில் ஆகிவிடும். இதில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. ஒரு முஸ்லிமான ஆணுடைய இரத்ததை முஸ்லிமான பெண்ணுடைய உடலிலும் அதே போன்று ஒரு முஸ்லிமான பெண்ணுடைய இரத்தத்தை முஸ்லிமான ஆணுடைய உடலிலும் செலுத்தலாம். மேலும் தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் அண்ணிய மதத்தவர்கள் (காபிர்கள்)ளுடைய இரத்தமும்.,(ஹராம் - ஹலால்) பேணி நடந்துகொள்ளாதவர்களுடைய இரத்தத்தையும் எமது உடலில் செலுத்துவதை தவிர்ந்து கொள்ள முயற்சி செய்து கொள்ளவேண்டும்.
♦ இரத்த தானம் என்பது ஒரு நோயாளிக்கு இரத்தம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுவதுண்டு. அவரது இரத்தப் பிரிவு என்ன என்பதை அறிந்து, அதே பிரிவு இரத்தமுள்ள மற்றவரிடம் தானமாகவோ விலை கொடுத்தோ இரத்தம் பெற்று, நோயாளிக்குச் செலுத்தும் முறை மருத்துவ உலகில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. இதற்காக இரத்த வங்கியின் தேவை, முதலாம் உலகப் போருக்குமுன் உணரப்பட்டது. இரத்தத்தைச் சேகரித்து, சேமித்து, பதப்படுத்தி வழங்குகிற நிறுவனமே இரத்த வங்கி (Blood Bank) ஆகும். இரத்த தானம் மூலம் சேகரிக்கப்படும் இரத்தங்களே பெரும்பாலும் இதில் சேமிக்கப்படுகின்றன.
♦ ஒரு தாய் மற்றொருவரின் குழந்தைக்குப் பாலூட்டும் முறை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அதற்காக அத்தாய் கூலியும் பெறலாம் (அல்குர்ஆன், 65:6).தாய்ப்பால் எப்போதும் சுரந்துகொண்டிருப்பதால், அடுத்தவர் குழந்தைக்குப் பாலூட்டுவதால் தாய்க்கோ சேய்க்கோ பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும் வாய்ப்பும் இதில் உள்ளது. பாலைப் போன்றே மனிதனின் உடலில் இரத்தமும் ஊறிக்கொண்டே இருக்கிறது. எனவே, நோயாளிக்கு இரத்தம் வழங்குவதால் கொடையாளிக்குப் பாதிப்பும் இல்லை; நோயாளிக்குப் பயனும் கிடைக்கும். எனவே, இரத்த தானம் செய்வது மார்க்கச் சட்டப்படி செல்லும், ஆகுமாக்கப்பட்ட காரியமாகும். ஆனால், அவசியத்தை முன்னிட்டே இரத்த தானம் செய்ய வேண்டும். அத்துடன இரத்த தானம் செய்வதால் கொடையாளிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதைச் சோதனை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும். இரத்தம் கொடுத்துவிட்டுக் கூலி வாங்கக் கூடாது. “இரத்தம் விற்ற காசுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை விதித்தார்கள்”.
நூல் : புகாரீ
ஆகவே முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமின் சகோதரன். அவன் தனது சகோதர முஸ்லிம் ஒருவருக்கு துன்பம் இழைபதையோ, அநீதி இழைபதையோ விரும்ப மாட்டான்.எனவே இஸ்லாம் இரத்ததானம் செய்வதை, அது மனிதனது உயிரை அல்லாஹ்வின் கிருபையாள் காக்குகின்றது என்ற வகையிலும், ஒரு மனிதனது வாழ்வை தக்கவைப்பதற்கு அவசியம் என்ற வகையிலும், கட்டாயமாக்குகிறது.
♣ உயிருடன் இருக்கும் போது உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
ஒருவர் பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, அல்லது தர்மத்திற்காகவோ உயிருடன் இருக்கும்போது அல்லது இறந்த பின்போ தன்னுடைய (கண்,இதயம், கிட்னி) போன்ற உடல் உறுப்புகளை பிற மனிதர்களுக்கு தானம் கொடுப்பதை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காத ஷரீஅத் ஹராமாக்கிய செயலாகும். ஆகவே மனித உடல் உறுப்புக்கள் அவனுக்கு சொந்தமானது அல்ல அவனுடைய சொந்த பொருள் என்றால்தான் மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். அந்த அடிப்படையில் அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான். அந்த அமானிதத்தை முழுமையாக
அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும்.
♦ வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம். அவன் நாடியதைப் படைக்கிறான். இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குஆன் 5:17)
♦ வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! (அல்குஆன் 24:64)
♦ அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 2:195)
♦கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரி 2474, 5516
எனவே உயிரோடு இருப்பவர்கள் தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து இதயம், கண், கிட்னி போன்ற உடல் உறுப்புகளைத் தானம் செய்து தன்னை மாய்த்துக் கொள்ள இஸ்லாத்தில் அனுமதில்லை.
உடல் உறுப்பு தானம் கூடுமென்று தத்துவம் பேசுபவர்கள் இரு உறுப்புகளில் ஒன்றைத் தானமாக கொடுத்து மற்றொன்றைக் கொண்டு எவ்வித ஊனமும் இடையூறுமின்றி வாழ முடியுமென்றும், 'இறைவன் இரண்டு கிட்னி தந்துள்ளானென்றால்! யாருக்காவது கிட்னி தேவைப்பட்டால் இரண்டில் ஒன்றை தானம் கொடுப்பதற்காகதான்' என்றும் ஹராமான செயலை ஹலாலாக்க முயல்கிறார்கள்.
ஆகவே எது எப்படி இருந்தாலும் நாம் கிட்னி தானம் கொடுப்பவருக்கு இறைவன் இரண்டு கிட்னியைதானே கொடுத்தான். அவருடைய (கிட்னி பைfலியர்) பழுதடைந்த போனபோதுதானே நமது கிட்னியை கேட்கிறார்கள். பிறகு நமது கிட்னி பைfலியரானால் நமது நிலை என்ன? மேலும் வைத்தியர்கள் 'ஒரு கிட்னி இருந்தால் போதும் பல வருடங்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம்' என்று கூறுகிறார்கள்.
ஆகவே இரண்டு கிட்னி உள்ளவர்கள் ஒரு கிட்னியை தானம் கொடுக்கலாம் என்றும் சிலர் தத்துவம் பேசுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அப்படி வைத்தியர்கள் கூறுவார்கள், அடுத்த வருடம் நீங்கள் அதே வைத்தியரிடம் கேட்டு பாருங்கள் நமது உணவு பழக்கவழக்கங்களால் மற்ற நடைமுறைகலாள் கிட்னி பைfலியர் (பழுதடைந்தால்) இவர்கள் என்ன செய்வார்கள் இதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?
♦ ஆகவே ஒரு மனிதனுக்கு இறைவன் இரண்டு கிட்னி கொடுத்தது ஒன்று (பைfலியர்) பழுதடைந்தால் மற்றதை வைத்து ஆரோக்கியமாக வாழ்வதெற்க்குதான். கிட்னி தானம் கொடுப்பவர் 'நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாமென்று கூறினால் இது சரியா? இவர் உயிர் வாழ வேண்டுமென்பது இவர் சார்ந்தது மட்டுமல்ல, இவர் குடும்பம் சார்ந்த விடயம் குறிப்பாக மனைவி, பிள்ளைகள் சார்ந்த சூழ்நிலைகள் உள்ளது ஏனெனில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சில கடமைகள் இவர் மீது உள்ளது. எனவே தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து கிட்னி தானம் போன்ற உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
♣ மரணமடைந்த பின்னர் உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
எம்மைப் போன்ற சாதாரன மனிதர்கள் மரணித்து, அவர்களை அடக்கம் செய்தால்! மண்ணுதானே திண்ணுது! ஆகவே மரணித்த பின் யாருக்காவது உடல் உறுப்புக்களை தானம் செய்தால் அது பிரோஜனமான, நன்மையாக அமையும் என்று இறந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டு என இவ்வாறு கூறுகிறார்கள். இதனை பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான ஒரு தீர்வினை கூறியுள்ளார்கள்.
இறந்தவரின் எலும்பை உடைப்பதானது, உயிருள்ளவரின் எலும்பை உடைப்பதைப் போன்றதே” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (
நூல்கள் : அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்)
♦ உடல் உறுப்புகளை தானம் செய்வதால் ஊனத்துடன் மறுமையில் எழுப்பபடுவார்கள். நாம் எந்த நிலையில் அடக்கம் செய்யப்படுகின்றமோ அந்த நிலையில் மறுமையில் எழுப்பப்படுவோம், ஆனால் அல்லாஹ்வே ஒருத்தரை கண் பார்வை இல்லாமல் படைத்தால் எழுப்பும் போது அவர் நல்லவராக இருந்தால் அழகான கண் பார்வையுடன் எழுப்பப்படுவார்.
சிலர் சொல்வார்கள் 'உடல் உறுப்புக்களை தானம் செய்தாலும் மறுமை நாளில் அழகான தோற்றத்தில்தான் எழுப்பப்படுவோம்' என்று ஆதாரம் என்ற பெயரில் இதற்கு சம்மந்தமில்லா ஒரு வசனத்தினை கட்டுவார்கள்.
அல்குர்ஆனில் அல்லாஹ் 'மறுமையில், மனிதன் இறை கட்டளைப்படி வாழாத காரணத்தால் அவர்கள் குருடர்களாக செவிடர்களாக எழுப்பப்படுவவார்கள், மறுமையில் அவர்களின் கண் பார்க்கும் சக்தியை இழந்து விடும்'
♦ ஆகவே மேலே கூறப்பட்ட வசனமும் அவர்கருடைய செயல்பாடுகளைக் கொண்டுதான் எழுப்பப்படுவார்கள், அதேபோன்றுதார் ஒருவர் தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்தவரும் அவ்வாறு தான் மறுமையில் எழுப்பப்படுவார் காரணம் அல்லாஹ் அவர்களை அவ்வாறு ஆக்கவில்லை மாறாக இவர்களே தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து கொண்டதாலையாகும்.
♦ முஸ்லிம் ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவர் தனது உறுப்புக்களை சிதைப்பது, வெட்டுவது, அசிங்கப்படுத்துவது ஹராமாகும். அதுபோன்றே மரணமடைந்த பின்னரும் அவரது அங்கங்களை சிதைப்பது கூடாது.ஒருவர் ஷரீஅத்திற்கு மாற்றமாக வஸிய்யத் செய்திருந்தால் அந்த வஸிய்யத் நிறைவேறாது, மட்டுமின்றி அதனை நிறைவேற்றுதலும் கூடாது.அத்தோடு ஒருவர் மரணமுற்றால் அந்த ஜனாஸா, வாரிசுதார்களின் உரிமையாகிவிடுகிறது. வாரிசுதார்கள் மைய்யித்தைக் குளிப்பாட்டி, கபனிட்டு, தொழ வைத்து நல்லடக்கம் செய்ய வேண்டும்.
மைய்யித்தை நோவினை செய்தல், உறுப்புகளை வெட்டி எடுத்தல் போன்றவை ஹராமான செயல். ஏனென்றால் மைய்யித்தைக் குளிப்பாட்டுதல் போன்றவற்றுக்காக கையாளும்போது மிக மிருதுவாக கையாள வேண்டும் என்று ஷரீஅத் கூறுகிறது. வேதனை தரக் கூடாது என்றும் கட்டளை இடுகிறது ஷரீஅத். இப்படி இருக்க ஒரு முழு உறுப்பை வெட்டி அகற்றுகின்ற போது எவ்வளவு வேதனை ஏற்படும்? அப்படிச் செய்வது குற்றமல்லவா? அத்தோடு மய்யித்தின் ஒவ்வொரு உறுப்புமே குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட வேண்டியவை மைய்யித்திலிருந்து ஒரு பகுதியை வெட்டி எடுக்கும்போது, அது குளிப்பாட்டாமலும், நல்லடக்கம் செய்யப்படாமலும் ஆகிவிடுகின்றது. இதனால் மைய்யித்தை நோவினை செய்வது குற்றம். உறுப்பைச் சிதைப்பது குற்றம். மைய்யித்தின் ஒரு உறுப்பு குளிப்பாட்டப்படாமல், நல்லடக்கம் செய்யப்படாமல் விடப்பட்ட குற்றம் ஆகிய ஏற்படுகிறது.எனவே உடல் உறுப்புக்களைத் தானம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.