MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இறைநேசர்கள் மூலம் வஸீலா எனும் இறைவனின் உதவி
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்களிடம் வஸீலா எனும் (உதவி தேடுதல்) பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?
♣ வஸீலா என்றால் என்ன?
வஸீலா என்பதற்கு அரபியில் இஸ்திம்தாது, இஸ்திகாதா, இஸ்திஷ்ஃபா, இஸ்திஆனா என்று பல சொற்களைக் கொண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இவை அனைத்தும் கருத்திலும் அர்த்தத்திலும் ஒன்றுதான்.
அந்த அடிப்படையில் வஸீலா என்பது நபிமார்களையோ அல்லது வலிமார்களையோ அல்லது நல்லமனிதர்களையோ அல்லது அவர்களுடன் சம்மந்தப்பட்ட பொருட்களையோ, இன்னும் நாம் செய்த நல்லமல்களையோ இறைவனிடம் முன்னிலைப்படுத்தி அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தமது நாட்டம் ,தேவைகள் நிறைவேறுவதை ஆதரவு வைத்தலாகும்.
மேலும் வஸீலா தேடுவதென்பதும் ஷபாஅத்தைப் போன்ற ஓர் அம்சமே. இது நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், இறைநேசர்கள் இறைவனின் அனுமதிப் பிரகாரம் எமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இறை சந்நிதானத்தில் உதவுவதையே குறிக்கிறது. அதாவது, நாம் அல்லாஹ்வையே விளித்து, பிரார்த்தனையில் ஈடுபடுகின்றோம். மறுபுறம் இறைநேசர்களை நமது பிரார்த்தனைக்கான உதவியாகக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றதே வஸீலா எனும் உதவி தேடுதலாகும்.
♣ நபி ஆதம் அலைஹிஸ் ஸலாம் அன்னவர்கள் இறைவனிடம் தேடிய வஸீலா
நபி ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தான் செய்த ஒன்றை ஏற்றுக்கொண்ட பின் யா அல்லாஹ்! முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் என்னை மன்னித்திடுவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் நபியவர்களை நோக்கி, ஆதமே! நீ எப்படி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிந்தாய்? இன்னும் நான் அவர்களை படைக்கவும் இல்லை எனக் கூற,
அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், எனது இரட்சகா! நீ உனது கரத்தால் என்னைப் படைத்து எனக்குள் ரூஹை அனுப்பிய சமயத்தில் நான் என் சிரசை உயர்த்தி அர்ஷைப் பார்த்தேன். அங்கே லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ் என உன் பெயருடன் மற்றுமோர் பெயரையும் இணைத்திருந்தாயல்லவா?
இதனால் நான், நீயே உன் பெயருடன் மற்றொருவரின் பெயரைச் சேர்த்திருக்கிறாய் என்றால், நிச்சயமாக அவர் உன்னிடத்தில் சகல சிருஷ்டிகளையும் விட மிகப் பிரியத்திற்குரியவராக இருக்கும் என்று நினைத்தேன் என்றார்கள்.
அதற்கு அல்லாஹ் ஆதமே! நீர் கூறியது உண்மைதான். அவர் சகல படைப்புகளை விடவும் என்னிடத்தில் மிக மிக நெருக்கமானவரே! எனவே அவரின் பொருட்டால் நீர் என்னிடம் பிழை பொறுக்கக் கேட்டதால் நான் உம்மை மன்னித்து விட்டேன் எனக் கூறிய அல்லாஹ் அவரை நான் படைத்திடாவிட்டால் உம்மையும் படைத்திருக்க மாட்டேன் என்றான். இதன் சனத் ஸஹீஹானதாகும்.
நூல்: அல் முஸ்தத்ரக், கிதாபுத் தாரீக் 2:615
மேலும், "முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா, ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகியவர்களைக் கொண்டு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வஸீலாத் தேடியதை முன்னிட்டு அவர்களின் தவுபா ஒப்பக்கொள்ளப்பட்டது" என்பதாய் நுஸ்ஹத்துல் மஜாலிஸ் 2-வது பாகம், 307-வது பக்கத்தில் கூறியுள்ளார்கள்.
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பொருட்டினால் இறைவனிடம் வஸீலா எனும் உதவி தேடலாம்
இன்னும், நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டு உம்மிடம் வந்து, பின்னர் அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்புக்கோரி, அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை ஏற்பவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 04:64)
♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கண்பார்வையிழந்த ஸஹாபி ஒருவருக்கு பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். (அதனை ஓதிய அவர் பார்வை பெற்று நலமடைந்தார். தேவைகள் ஏற்படும் போதெல்லாம் ஸஹாபாக்கள் இந்த துஆவை ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்) இச்சிறப்பு மிக்க துஆ இதோ!
யா அல்லாஹ்! உன்னிடம் கேட்கிறேன். ரஹ்மத்துடைய நபியாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டைக் கொண்டு உன்பால் முகம் நோக்குகின்றேன். யா ரசூலல்லாஹ்! உங்கள் பொருட்டைக் கொண்டு நாயன்பால் எனது இத்தேவைக்காக முகம் நோக்குகின்றேன். என் தேவை நிறைவேறுவதற்காக நாயனே! எனது விடயத்தில் அன்னாரின் ஷபாஅத்தை ஏற்றுக்கொள்வாயாக.
நூல்கள்: திர்மிதி 2 -197, இப்னுமாஜா 1 - 441, நஸாயி 658, 659, முஸ்தத்றக் 1 - 519, இப்னுஹுசைமா2 - 226
♦ ஒரு தினம் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கால் மரத்து சோர்வடைந்த போது, "உங்களிக்கு மிகவும் விருப்பமான ஒருவரின் பெயர் கூறி அழையுங்கள்" எனக்கூறப்பட்டது.உடனே "யா முஹம்மதா! (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே எனக்கு உதவுங்கள்) என்று உரத்த குரலில் கூவினார். கால் மறுப்பு உடன் நீங்கி விட்டது.
நூல்: அதபுல் முப்ரத் - 142
♣ நபிமார்கள் பொருட்டினால் இறைவனிடம் வஸீலா எனும் உதவி தேடலாம்
நபி யூசுப் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் சகோதரர்கள், தமது தந்தையை வஸீலாவாகக் கொண்டு, தாம் செய்த குற்றத்திற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்கள், தம் வயோதிபத் தந்தையான ஹஸ்ரத் யஃகூப் நபியை (அலைஹிஸ் ஸலாம்) நோக்கிக் கூறினார்கள்: எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு நீங்கள் எங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவீர்களாக. நிச்சயமாக நாம் குற்றவாளிகளாவோம். (அல்குர்ஆன் 12:97)
நபி யஃகூபும் அலைஹிஸ் ஸலாம் தமது மக்களின் வேண்டுகோளை ஏற்று அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவதாகக் கூறினார்கள்.''நான் விரைவில் என் இறைவனிடத்தில் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். (அல்குர்ஆன்12: 98)
♦ இறைவா! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னாள் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் துஆச் செய்தார்கள்.
நூல்: தப்ரானி 2 - 22
♣ ஸஹாபாபெருமக்கள் பொருட்டினால் இறைவனிடம் வஸீலா எனும் உதவி தேடலாம்
♦ (மதீனாவில்) மழைப் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக இருந்தார்கள். அதாவது இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆகியிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும்.
நூல்: புகாரி 1 - 137, மிஷ்காத் – 132
♦ ஹஜ்ரத் சுலைம் பின் ஆமிர் சுபாயீரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள், மக்கள் நீரில்லாப் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், திமிஷ்க் நாட்டு மக்களும் மழை தேடிப் பிரார்த்திப்பதற்காக வெளியானார்கள். ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரில் உட்கார்ந்த போது ஹழ்ரத் யஜீத் பின் அஸ்வத் அல் ஜரஷிய்யூ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எங்கே? எனக் கேட்டார்கள். இவர்களைத் தேடி சென்றனர் சிலர். தன்னை தேடப்படும் செய்தி எட்டிய ஹழ்ரத் யஜீத் அவர்கள் ஓடோடி சபைக்கு வந்ததும், ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஏவல் பிரகாரம் மிம்பரில் ஏறி அவர்களின் பாதத்தடியில் உட்கார்ந்து கொண்டார்கள்.
யா அல்லாஹ்! நாம் இன்று சிறந்த ஒரு மனிதாரின் சிபாரிசை முன்வைக்கின்றோம். யா அல்லாஹ்! உன்னிடம் யஜீத் பின் அல் அஸ்வத் பின் அல் ஜீர்ஷிய்யின் பொருட்டால் மழையைத் தருமாறு கேட்கின்றோம் என்றார். ஹழ்ரத் முஆவியா அவர்கள் யஜீத் அவர்களை நோக்கி கையை உயர்த்திக் கேளுங்கள் எனக் கூற ஹழ்ரத் யஜீத் அவர்கள் கையை உயர்த்தினார்கள். வீற்றிருந்தோர்கள் எல்லோரும் கரங்களை உயர்த்தி துஆக் கேட்டார்கள். திடீரென மேற்கு பக்கமாக முகில் கூட்டம் தென்பட்டு பெரும் இடி முழக்கத்துடன் மழை பொழிந்தது. கடைசியில் கூடியிருந்தோர் வீடுகளைச் சென்றடைவதே கஷ்டமாகிவிட்டது.
நூல்: அத்தபகாத் 7: 444
♣ நான்கு மாபெரும் இமாம்களின் வஸீலா
1) ஹழ்ரத் இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
என் எஜமானே! என் கஷ்ட நிலையில் எனக்குச் சிபாரிசாளனாயிருங்கள். உலக படைப்புகளில் உன் தயாளத் தன்மையின் பக்கம் நான் தேவையானவன். மனு ஜின்களில் தலை சிறந்தவரே! உலக பொக்கிஷமே! உங்கள் கொடையால் என்னைப் பாருங்கள். உங்களை ஏற்றவனாக என்னைப் பொருந்துங்கள். நான் உங்கள் அருளின் பக்கம் தேவையானவன். உங்களைத் தவிர இந்த ஹனீபாவுக்கு எவருமே இல்லை என பிரார்த்தித்திருக்கின்றார்கள்.
நூல்: கலீதா நுஃமானிய்யா 199-200
2) ஹழ்ரத் இமாம் மாலிக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
ஒரு சமயம் மஸ்ஜித் நபவியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அப்பாஸியர்களின் இரண்டாவது கலீபா மன்சூர் என்பவர் திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரௌழா ஷரீபுக்கு வருகை தந்தார். அவர் ஹழ்ரத் இமாம் அவர்களிடம், நான் கிப்லாவை (கஃபாவை) முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? அல்லது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? என விசாரித்தார்.
அதற்கு இமாம் அவர்கள், உனக்கும் உன் தகப்பனார் நபி ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கும் வஸீலாவான கருணைக் கடல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட்டும் ஏன் உன் முகத்தைத் திருப்பப் போகின்றாய்? வேண்டாம். நீங்கள் அவர்கள் பக்கமே திரும்பிக் கொள்ளுங்கள். அவர்கள் பொருட்டால் அல்லாஹ் உன்னை மன்னித்திடுவான் என்றனர்.
நூல்: அஷ்ஷிஃபா 2:33
3) ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் எனக்கு உபகாரமளிப்போர், அவர்கள் அல்லாஹ் பக்கம், எனது வஸீலா. அவர்கள் பொருட்டாலேயே நாளை மறுமை நாளில் என் பட்டோலை எனது வலது கரத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன் என்கின்றனர்.
நூல்: அஸ்ஸவாயிகுல் முஹ்ரிகா பக்கம் 180
4) ஹழ்ரத் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பொருட்டால் துஆ கேட்டார்கள். இதை செவியுற்ற அவர் புதல்வர் ஹழ்ரத் அப்துல்லாஹ் அவர்கள் ஆச்சரியமுற்று,இன்னஷ்ஷாபியிய்ய கஷ்ஷம்சி லின்னாசி, வகல் ஆஃபியதி லில்பதனி இமாம் அஹ்மத் அவர்கள், இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு சூரியனையும், சரீரத்திற்கு சுகத்தையும் போன்றவர் என பதிலளித்தார்கள்.
நூல்: ஷவாஹிதுல் ஹக் பக்கம் 166
♣ வலிமார்கள் பொருட்டினால் இறைவனிடம் வஸீலா எனும் உதவி தேடலாம்
♦ அப்தால்கள் ஷாம் நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நாற்பது பேர்களாகும். அவர்களில் ஒருவர் மரணிப்பார்களேயானால் மற்றொருவர் அவர் இடத்தில் நியமனம் செய்யப்படுகிறார். அவர்களின் பொருட்டினாலேயே மழை பொழிகிறது என்றும், அவர்களின் வஸீலாவைக் கொண்டே விரோதிகளிடமிருந்து வெற்றி கிடைக்கிறது என்றும் அவர்களினால்தான் ஷாம் தேசத்திற்கு வேதனை இறங்காமலிருக்கிறது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: மிஷ்காத் 3 /582
♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அப்தால்கள் என்றால் இறை நேசர்களில் ஒரு பிரிவினராகும். அவர்கள் மூலமே இவ்வுலகை இறைவன் நிலை நிறுத்தாட்டிக் கொண்டிருக்கிறான். அவர்கள் மொத்தம் 70 நபர்களாகும். 40 பேர் சிரியாவிலும், மீதி 30 பேர் ஏனைய பகுதிகளிலும் இருப்பார்கள்.
நூல்: மிஷ்காத் 10 - 176
♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்கள் சிலர் இருக்கின்றார்கள், ஜனங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கென்றே அவன் அவர்களைச் சொந்தப்படுத்தி வைத்திருக்கின்றான். தங்களுடைய தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொள்வதற்காக ஜனங்கள் அவர்களை அண்டுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்தவர்கள்" என்ற ஹதீது இபுனு உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு தபறானியில் வருவதாக அல்ஜாமிஉஸ்ஸகீர், 1-வது பாகம், பக்கம் 78ல் கூறியுள்ளார்கள்.
♦பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: என்னுடைய றஹ்மத்து உடைய கூட்டத்தார் (அவுலியாக்)களிடத்தில் உங்களுடைய தேவைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற ஹதீதை பைஹக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸுனன் குப்றாவிலும் தப்றானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் முஃஜம் அவ்ஸத்திலும், அபீஸயீது குத்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்கிறார்கள். இந்த ஹதீதையே இமாம் மனாவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹு ஜாமிஉஸ்ஸகீர் 1-வது பாகத்திலும், முல்லா அலி காரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஐனுல் இல்மிலும் கூறியுள்ளார்கள்.
♣ தர்ஹாக்களில் அடங்கியுள்ள நல்லடியார்களின் பொருட்டினால் இறைவனிடம் உதவி தேடலாம்
♦ ஒரு தடவை மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது அப்பொழுது அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் மக்களெல்லாம் முறையிட்டார்கள். அதற்கு அன்னையவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் பக்கம் முன்னோக்குங்கள் அவர்களின் கப்ரி(ருக்கும் அறையி)லிருந்து துவாரத்தை வானத்திற்கும் நபியவர்களின் கப்ருக்கும் மத்தியில் உண்டாக்குங்கள். அதேபோல் செய்யப்பட்டது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விட்டது தாவரங்கள் முழைக்க ஆரம்பித்தன கால்நடைகள் அனைத்தும் பெருத்துவிட்டன தேவைக்கு அதிகமாகவே பொழிந்தது அந்த ஆண்டிற்கு (عام الفتن)ஆமுல் பிfதன் என்று பெயர் வைக்க பட்டது.
நூல்: தாரமியூ 5950
♦ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை)க் கொண்டு உதவி தேடவும்.'
அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 5
♦ 'எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும் என்பதாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தப்ரானி, ஹிஸ்னுல் ஹலீன்
♣ மரணித்தவர்கள் பொருட்டினால் இறைவனிடம் வஸீலா எனும் உதவி தேடலாம்
இறைவா! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னாள் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் துஆச் செய்தார்கள்.(நூல் தப்ரானி 2 - 22)
♣ நல்ல மனிதர்கள் பொருட்டினால் இறைவனிடம் வஸீலா எனும் உதவி தேடலாம்
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தம்மில் இறை நெருக்கம் பெற்றவர் யார் என்பதைக் கவனித்து அவரைக் கொண்டு வஸீலாவாக்கிய நிலையில் இறைவனை வணங்குவார்களே அப்படிப்பட்டவர்கள். (அல்குர்ஆன் - 17:57 , ரூஹுல் மஆனி பாகம் 8 பக்கம் 94)
♦ முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், மேலும் அல்லாஹ்வளவில் ஓர் வஸீலாவை (உதவியாளரைத்) தேடிக் கொள்ளுங்கள், அவனுடைய பாதையில் போர்புரியுங்கள், அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் : 5:35)
நேரடியாகவே நீங்கள் வஸீலா தேடிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வே சொன்னபிறகு, அதை ஷிர்க் என்று சொல்வது திருக்குர்ஆனை விளங்கி கொள்ளாததும், திருக்குர்ஆனை மறுப்பதும் அல்லவா?
♦ இறைவா! முஜாஹிர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கின்ற உனது அடியார்களின் பொருட்டினால் விரோதிகளுக்கு பாதகமாக எங்களுக்கு சாதகமாக உதவி செய்தருள்வாயாக" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
நூல்: மிஷ்காத் பக்கம் 447, மிர்காத் பாகம் 10 பக்கம் 13
♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக்கொள்ளுங்கள்.
நூல்: முஸ்லிம் , மிஷ்காத் 582
♦ நீங்கள் உங்கள் பலகீனமானோரில் என் பொருத்தத்தைத் தேடிக் கொள்ளுங்கள். அல்லது அவர்களில் என்னைத் தேடிக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் பொருட்டாலேயே உணவும் வெற்றியும் கிடைக்கின்றது.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபுத்தர்தா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: மிஷ்காத் பாபு பஸ்ஸில்புகராஃ 447ம் பக்கம்
♣ நல்லமல்கள் பொருட்டினால் இறைவனிடம் வஸீலா எனும் உதவி தேடலாம்
இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ”நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!” என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் ”இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன்.
ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!” எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், ”இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன்.
அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ”முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!” என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன். அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்.
நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!” எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், ”இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ”அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!” என்று கூறினார்.
”நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!” என்று கூறினேன். அதற்கவர் ”அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். ”நான் உம்மை கேலி செய்யவில்லை!” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார்.
”இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!” எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!”
ஹழ்ரத் அப்துல்லாஹ்வின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி 2272
♣ கண்ணியம் பெற்ற பொருட்கள் பொருட்டினால் இறைவனிடம் வஸீலா எனும் உதவி தேடலாம்
(இன்னும்) , அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார். (அல்குர்ஆன் : 2:248)
இந்த வசனத்தில் குறிப்பிடப்படுகின்ற நபி மூஸா நபி ஹாரூன் அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரது ஞாபகச் சின்னங்கள் என்பது குறித்து திருமறை விரிவுரையாளர்கள் அனைவரும் ஒத்தக் கருத்தையே கொண்டுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் பின்வருமாறு:- பலகைத்துண்டுகள், மூஸா நபியின் கம்பு, ஆடைகள், தௌராத் வேதத்தின் ஒரு பகுதி, மூஸா நபியின் செருப்புகள், ஹாரூன் நபியின் தலைப்பாகை, மேலங்கி ஆகும்.
நூல்கள்: தப்ஸீர் ஜலாலைன் 1/38 ,தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் மதாரி;குத் தன்ஸீல்,தப்ஸீர் லுபாபுத் தஃவீல், தப்ஸீருல் பைளாவி
மேலும் இந்தப் பெட்டியை வஸீலாவாக்கி அதன் பரக்கத்தால் போரில் வெற்றியைத் தேடுவார்கள்.
நூல்: ரூஹுல் பயான் பாகம் 1 பக்கம் 385, தப்ஸீர் அபிஸ்ஸுஊத் பாகம் 1 பக்கம் 241
♦ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருமுடியின் மூலமே போர்களங்கள் அனைத்திலும் வெற்றியடைந்தேன்."
ஹழ்ரத் காலித் ரலியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள்.
நூல்: முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299
♦ அவுலியாக்களை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் கிருபாகடாட்சம் உண்டாகின்றது. நாட்ட தேட்டங்கள் கைகூடுகின்றன" என்பதாய் ஸையிதுல் ஆரிபீன் ஹஜரத் அபுல் காஸிம் ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்.
"அவுலியாக்களிடத்தில் உதவி, ஒத்தாசை தேடலாம் என்று பலமான ஆதாரங்களைக் கொண்டு ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, அவுலியாக்களிடத்தில் உதவி தேடக்கூடாது என்று இக்காலத்தில் ஒரு நவீன கூட்டம் ஏற்பட்டிருக்கிறது" என்று ஆச்சரியத்துடன் ஷைகு அப்துல் ஹக்கு முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'அஷிஅத்துல் லம்ஆத்-தர்ஜுமா மிஷ்காத்' 3-வது பாகத்தில் தெளிவுபடக் கூறியிருப்பதாக 'பஸ்லுல் கித்தாப்' 119-வது பக்கத்தில் ஷைகு ஷாஹ் முஹிய்யத்தீன் சாஹிபு வேலூரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
♦ அன்பியா, அவுலியாக்களைக் கூப்பிட்டு உதவி இரட்சிப்புத் தேடுவது ஸஹாபாக்கள், தாபியீன்கள், ஸாலிஹீன்கள், முஜ்தஹிதான, உலமாக்கள் ஆகியோர்களுடைய கிரியைகளைக் கொண்டு ஆகுமென்பது ஸ்திரமாக்கப் பெற்றிருக்கின்றது. இதை இன்கார் செய்வது அறியாமையாகும்" என்பதாய் மதறாஸ் முப்தி அல்லாமா மஹ்மூது சாஹிபு அவர்கள் பத்ஹுல் ஹக் 62-வது பக்கத்தில் கூறியுள்ளார்கள்.
ஆயினும், வஸீலாவுடைய சந்தர்ப்பங்களில் எல்லைகளை சரியாகப் பேணிக் கொள்வது மிக இன்றியமையாத அம்சமாகும். நபிமார்கள் இறைநேசர்கள், அனைத்து விடயங்களிலும் அல்லாஹ்வையென்றி தாமாக - சுயமாக சக்தி கொண்டவர்கள் என்றோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியோ, உதவியோ அவசியமற்றது என்றோ நம்பிக்கை கொண்டு விடக் கூடாது. இது, மன்னிக்க முடியாத பாவச் செயலான இணைவைத்தலுக்கு இழுத்துக் கொண்டு சேர்க்கும்.
மேலும், வஸீலா தேடுவதென்பது, இறை நேசர்களை இபாதத் (வணங்கும்) அடிப்படையில் அமைந்து விட்டால், அதுவும் இணைவைத்தலாகி விடும். இறைநேசர்களாயினும் அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களாகவும், அவனது உதவியின்றி எவ்வித காரியமாற்றுவதற்கும் சக்தியற்றவர்களாகவுமே இருக்கி ன்றார்கள், அல்லாஹ்தான் அவர்களுக்கு அந்த ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பது மறுக்க முடியாத அம்சமாகும்.
♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான்.
இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 6502
ஆகவே வஸீலா தேடுவது இஸ்லாமிய மார்க்கத்தில் குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் கருத்துக்கள் அடிப்படையில் ஏகோபித்த முடிவு படி ஆகுமான செயலே. அது நல்லடியார்களைக் கொண்டாயினும், நல்லமல்களைக் கொண்டாயினும் சரி என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது.
அல்லாஹ் நம் அனைவர்களையும் ஹபீப் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், இறைநேசர்கள் பொருட்டால் சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இறுதிவரை நிலைக்கச் செய்து மரணிக்கச் செய்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.