MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இறை காதலில் மூழ்கிய மஜ்தூபியும் 

உலக காதலில் ​மூழ்கிய மஜ்னூனும்


​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


மஜ்தூப் எனும் உலகப் பற்றற்ற நிலையில் இறை காதலால் சுய அறிவிழந்து அல்லாஹ்வில் சிந்தனையில் மூழ்கிக் கொள்ளுதல் என்பதன் யதார்த்த உண்மை நிலை என்ன?


​​

♣ மஜ்தூப் என்பவர் யார்?

ஸூபிஸத்தில் “மஜ்தூப்” என்று ஓர் ஆன்மிக நிலை உண்டு. இச் சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் உலகப் பற்றற்றவர் என்று பொருள் கூறப்பட்டுள்ளது.


​​எனினும் இறை ஞானிகள், மகான்கள், காமிலான ஷெய்குமார்கள் இச்சொல்லுக்கு ஒரு ஆலமான தெளிவாக வரைவிலக்கணம் கூறும்போது:

(لا قدير إلا الله) “சக்தியுள்ளவன் அல்லாஹ் தவிர யாருமில்லை” என்ற இது போன்ற திக்ர்கள் மூலம் ஏனைய திக்ரையும் எண்ணிக்கையின்றி கருத்து மனதில் உருதியாகும் வரை செய்ய வேண்டும் – சொல்ல வேண்டும்.


​​அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையில் திக்ர் பிக்ர் தியானங்கள் மூலம் இறைவனால் இரவலாக வழங்கப்பட்ட நப்ஸின் ஏழு தன்மைகளையும் அடக்கி ஆழுவது கொண்டு கல்பு எந்தளவுக்கு உயிரோட்டத்துடன் செயல்படுகிறதோ அதற்குத்தக்க உயிர்ப்புடன் நிலையுள்ள கல்பாக மூமீன்களான (ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள், சூபியாக்களாக) மாறி அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களில் அவன் கடமையாக்கிய ஒன்றை விட வேறு கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் இறைவன் பக்கம் நெருங்கி விடுவார்கள்.

இறைவனின் நினைவில் அல்லாஹ்வுக்கு விருப்பமான அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்து இபாதத், வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் சூபியாக்கள், காமிலான ஷைகுமார்கள் அல்லாஹ்வின் சிந்தனையில் மூழ்குவது கொண்டு மனிதனை விட்டும் அஸ்ஸிபாதுல் பஷரிய்யஹ் எனும் மனித இயல்புகள் – சுபாவங்கள் – நீங்கி அவனில் இறை இயல்புகளும் தன்மைகளும் வெளிப்படும் “fபனாஃ fபில்லாஹ்” எனும் நிலை ஏற்படும். இதற்கு பிறகுதான் உலகப் பற்றற்ற நிலையில் இறை காதலால் சுய அறிவிழந்து அல்லாஹ்வில் சிந்தனையில் மாத்திரமே மூழ்கிக் கொள்ளுதல் என சூபியாக்கள் வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள்.


​​

♣ மஜ்தூப் - மஜ்னூன் இரண்டிற்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன?

அரபியில் மஜ்தூப் என்ற சொற்றொடருக்கு உலகப் பற்றற்றவர் என்றும், மஜ்னூன் என்ற சொற்றொடருக்கு பைத்தியக்காரர் என்றும் தமிழ் அகராதியில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் மஜ்தூப் என்பவர் உலகப் பற்றற்றவர் ஆவார். நமது சமூக நடைமுறையில் சொவல்வதாக இருந்தால் 'பைத்தியக்காரர்' என்று சொல்லப்படும்.


​​நாம் எவர்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்கின்றமோ அவர்கள் உலகம் சார்ந்த விடயங்களில் ஏதோ ஒரு பொருளை அல்லது பணத்தை அல்லது காதலியை இழந்து அல்லது மனைவி, மக்களை இழந்து அல்லது நஷ்டத்துக்கு உள்ளாகி அல்லது பெரும் நபர்களால் ஸிஹ்ர் எனும் சூனியம் செய்யப்பட்டு பைத்தியமாக வீதி ஓரங்களில் கிளிந்த ஆடைகளை அணிந்து சுற்றக்கூடிய நபர்களின் சிந்தனைதான் எமக்கு ஞாபகம் வரும். இதுவும் பைத்தியம்தான் ஆனால் இந்த பைத்தியம் உலகம் சார்ந்த பைத்தியமாகும்.


​​உலகத்தினால் ஏற்படக்கூடிய நஷ்டங்களைக் கண்டு அதில் மனதை துவைத்து ஏற்பட்ட விளைவால் மனநோயாளிகளாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சொல்வதாக இருந்தால் உலகத்தில் அதிகபட்சமான பேராசைகளை வைத்து அந்த உலக ஆசாபாசங்கள், பேராசை அவர்களுக்கு கிடைக்காத போது அவர்கள் பைத்தியமாக தடுமாறி தெருத்தெருவாக செல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு ஆளாகி விடுகிறார்கள். ஆகவே மஜ்தூப் என்பவர்களுக்குள் இவர்களும் உள்ளடங்குவார்கள் என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்தாகும்.


​​பைத்தியக்காரர்கள் இவர்கள்தான் என்று சமூக நடப்பில் இருந்தாலும் இவர்களை மஜ்தூப் என்பதுக்குள் கொண்டு வரமுடியாது. எனவே மஜ்தூப் என்பதற்கு உலகப் பற்றற்றவர் என்று கூறுவதே சரியான கருத்தாகும். இனி உலக பற்றற்றவர் என்றால் என்ன என்று பார்க்கும் போது இறை அன்பால் அல்லாஹ், ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அன்பில் ஸல்லல்லாஹு மூழ்கிக் கொண்டவர்கள் உலகத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள் மதிக்கவும் மாட்டார்கள். இதனைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது:

♦ அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை, அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர், வாழ்விலும், மறுமையிலும் (அந்த அவ்லியாகலான) அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 10: 62, 63, 64)

ஆகவே அவர்களுக்கு இருக்கக் கூடிய பயம் ஒன்றே ஒன்றுதான் அல்லாஹ்வைப் பற்றி அச்சமாகும். அவர்களுடைய சிந்தனை ஒன்றே ஒன்றுதான் அல்லாஹ்வின் திருப்தியையும் திருப்பொருத்தத்தையும் பெற்றுக் கொள்வதாகும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை எவைகள் உண்டோ அவைகளை தேடிப் பிடித்து செயல்படக் கூடியவர்கள் அல்லாஹ்வின் அன்பிலயே தேய்ந்து போனவர்கள், அல்லாஹ்வுடைய அன்பிலயே அவர்களின் சிந்தனைகளை கல்புக்குல் கொண்டு வந்து அதனுடன் அளவலாகக்கூடிய நிலைக்குச் சென்று அவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் இறை நினைவால் மூழ்கிக் போயிருக்கும் காரணத்தினால் தங்களுடைய ஆடை அலங்காரங்களை பெரிதாக செய்து கொள்ள மாட்டார்கள்.

சில நேரங்களில் அவர்கள் ஆடைகளை சரியாக அணிந்து கொள்ளாமலும் இருக்கலாம், அதேபோன்று தலைகள் கூட பரட்டையான இருக்கும், அவர்கள் அல்லாஹ்வின் அன்பிலயே மூழ்கிக் போன பைத்தியக்காரர்கள். இவர்களிடம் எந்த ஒரு மார்க்க சட்டமும் செல்லுபடியாகாது. அதே சமயம் இவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவும் முடியாது. இப்படிப்பட்டவர்களே மஜ்தூப் என்று சூபியாக்கள் வரைவிலக்கணம் கூறுவார்கள் இவர்களைப் பற்றித் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். பரட்டைத் தலையோடும் புழுதி படிந்த மேனியோடும் யாசகம் கேட்டு வாசலில் நின்றால் உடனடியாக விரட்டப்படும் அளவிற்கு அருவருக்கத்தகுந்த வகையிலும் தம்மை அமைத்துக் கொண்டு எத்தனையோ நன் மக்கள் இவ்வுலகில் நடமாடி வருகிறார்கள். அவர்கள் வாய் திறந்து ஏதேனும் வாக்கு சொல்லி விட்டார்களானால் உடனே பலித்துவிடும்.

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 329 கிதாபுல் பிர்ரிவஸ்ஸிலத்தி, மிஷ்காத் 446 பாபு பழ்லில் புகராஇ

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் உமர் பின் அல் ஹத்தாப் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: அபூதாவூத் 3060


​​

♣ உன்னை மறந்தால் இறைவனை நினை

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

​​உங்களை மக்கள் மஜ்னூன் (பைத்தியம் - லூசு - கிருக்கு பிடித்தவர்கள்) என்று கூறும் அளவிற்கு நீங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்.


​​நூல்கள்: அஹமத், இப்னு ஹிப்பான், ஹாகிம்

இன்று இப்படிப்பட்டவர்களைப் பார்த்து வழிகெட்ட வஹ்ஹாபிகள் அப்படிதான் அதாவது பைத்தியம் என்று கூறிக் கொண்டு தான் திரிகின்றார்கள். இது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு.


​​ஆகவே இவர்கள் சொல்கின்றார்களே என்று நாம் வெட்கப்பட தேவையில்லை. நாங்கள் அல்லாஹ்வை தான் புகழ்கின்றோம்.மேலும், அல்லாஹ்வின் திக்ரு தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் தண்டனையை விட்டு பாதுகாப்பு அளிக்காது என்று ஹழ்ரத் முஆத் பின் ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். மேலும் அல்லாஹ் அனைத்து விஷயங்கள் நின்றும் ஒரு எல்லையை வகுத்து உள்ளான் ஆனால் திக்ரை தவிர. திக்ரு செய்வதற்கு ஒரு எல்லை இல்லை என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​

♣ மஜ்தூப் நிலையில் உள்ளவர்களை ஆன்மீக வழிகாட்டிகளாக ஏற்று பின்பற்றலாமா?

ஏவல் விலக்கல் என்பன “முகல்லப்” குறித்த இரண்டு நிபந்தனைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கடமை. இந்த அடிப்படையில் “மஜ்னூன்” பைத்திய காரனுக்கும், “மஜ்தூப்” இறை காதலால் சுய அறிவிழந்தவருக்கும் ஏவல், விலக்கல் கடமையாகாது. எனவே, “மஜ்தூப்” என்பவருக்கு அவரின் சொல், செயல், அங்கீகாரம் “ஷரீஅஹ்”வுக்கு முரணானவையாக இருந்தால் அவருக்கு எந்த ஒரு “பத்வா” தீர்ப்பும் வழங்காமல் அவர் வழியில் அவரை விட்டு விட வேண்டும்.


​​எனினும் அவரின் சொற் செயல்களைப் பின்பற்றுவதும், அவரின் கருத்துக்களைச் சரி காண்பதும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும். அவரைக் கண்ணியப்படுத்துவதும், அவருக்கு உதவியுபகாரம் செய்வதும் நல்ல காரியமேயாகும் என சூபியாக்கள் கூறுகின்றார்கள்.


​​

♣ மஜ்தூப் நிலையில் உள்ள ஆன்மீக வாதிகளின் சட்டம் என்ன?

“மஜ்னூன்” பைத்தியக்காரனுக்கும், “மஜ்தூப்” இறை காதலால் சுய அறிவிழந்தவனுக்கும் சட்டம் ஒன்றுதான். பைத்தியக்காரன் ஒருவனைக் கொலை செய்தால் கொலைக்குக் கொலை என்ற அடிப்படையில் பைத்தியக்காரனைக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு வழங்குதல் கூடாது. இவ்வாறுதான் “மஜ்தூப்” என்பவருமாவார்.

ஏனெனில் கொலை செய்த ஒருவனுக்கு கொலைத் தீர்ப்பு வழங்குவதாயின் அவன் “முகல்லப்” ஆக இருக்க வேண்டும். “முகல்லப்” என்ற சொல் இரண்டு அம்சங்களைக் குறிக்கும் செல்லாகும். ஒன்று – “ஆகில்” “அக்ல்” புத்தி உள்ளவராக இருத்தல். அதாவது பைத்தியக்காரனாக இருத்தல் கூடாது. இரண்டு – ஆணாயினும், பெண்ணாயினும் பருவமடைந்தவராக இருத்தல். அதாவது பருவமடையாதவராக இருத்தல் கூடாது. இவ்விரு அம்சங்களும் உள்ள ஒருவன் அல்லது ஒருத்தி “முகல்லப்” அல்லது “முகல்லபஹ்” என்று சொல்லப்படுவார்கள்.


​​ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பருவமடைவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று – 15 வயதை அடைதல். இரண்டு – ஆணாயினும், பெண்ணாயினும் இந்திரியம் வெளியாதல். பெண்ணாயின் மாதத்தீட்டு வருதல். 15 வயதுக்கு முன் ஆணுக்காயினும், பெண்ணுக்காயினும் இந்திரியம் வந்தால் அது பருவ வயதின் ஆரம்பமாகும்.

ஆகவே இறை காதலால் சுய நினைவற்றவர்களின் மொழி எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழி தெரிந்த அவர்களின் படித்தரத்தை அடையாதவர்களுக்கு அந்த மொழி அந்நிய மொழி போன்றே இருக்கும். ஒன்றும் புரியாது. “மஜ்தூப்” என்பவரால் ஏற்படுகின்ற சொற் செயல்கள் “ஷரீஅஹ்”வுக்கு முரணாக இருந்தாலும் கூட அவர்கள் பைத்தியக்காரர்கள் போல் சலுகை வழங்கப்பட்டவர்களாவர். அவர்களுக்கு ஏவல் விலக்கல் என்பன இல்லை. இறை காதலர்களுக்கு ஒரு சலுகை உண்டு. இறை காதலர்களால் ஏற்படும் சொற் செயல்களுக்கு மன்னிப்புண்டு என்பதையே உணர்த்துகின்றது. ஆஷிகீன் – இறை காதலர்களை நிராகரித்து அவர்களின் சாபத்திற்குள்ளாகாமல் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


​​

♣ மஜ்தூப் நிலையில் உள்ளவர்களின் பேச்சுக்களை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்

இறை காதலால் பைத்தியமாக மாறினவர்கள் விடயத்தில் எந்த ஓர் எதிர்ப்பும் காட்டாமல் அவர்களைத் தமது போக்கில் விட்டுவிடுவதே மிகச் சிறந்ததாகும். ஏனெனில் அவர்கள் – இறை காதல் பைத்தியமாக மாறினவர்கள் – காதல் மொழிதான் பேசுவார்கள். தெளிவான அறிவு மொழி பேசமாட்டார்கள்.

இதன் சுருக்கம் என்னவெனில் இறை காதலர்கள் தமது காதல் அதன் உச்சியை அடைந்து காதல் போதையில் – மயக்கத்தில் – இருக்கும் போது தாம் பேசுவது தமக்கே விளங்காமல் பேசுவார்கள். அல்லாஹ்வைப் புகழ்வார்கள். சுருங்கச் சொன்னால் சிற்றின்ப மயக்கத்தில் உள்ள ஒருவன் தனது காதலியை விழித்து அல்லது நினைத்து எவ்வாறெல்லாம் பேசுவானோ அதே போல் இறை காதல் மயக்கத்திலுள்ளவனும் பேசுவான்.

இறை காதலர்களால் ஏற்படும் பேச்சுகள் கொண்டு அல்லாஹ் அவர்களை குற்றம் பிடிக்க மாட்டான் என்பது இறை ஞானிகளின் கருத்து வேறுபாடில்லாக் கூற்றாகும். இறை காதல் தலைக் கேறி இகபரமிரண்டையும் மறந்த நிலையில் பல ஞானிகள் சூபியாக்கள் கவிதைகள் பாடியுள்ளார்கள்.

சில மஜ்தூப் மஸ்ஜிதின் பக்கம் சென்று கொண்டிருப்பார். எவரேனும் ஒருவர் அவரிடத்தில் சென்றால் திட்டுவார். இன்னும் சிலர் குறிப்பாக மன்சூர் அல் ஹல்லாஜ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ’அனல் ஹக்’ என்று சொன்னதும் உலகப் பற்றற்ற நிலையில் இறை காதலால் சுய அறிவிழந்து அல்லாஹ்வில் சிந்தனையில் மூழ்கிக் கொண்டு இறைவனின் நாட்டப்படி தான் எனும் போது இது என்னுடைய பிரச்சினை அல்ல அதை அவன் பார்த்துக் கொள்ளட்டும் என்பது போல் மகிழ்ச்சியோடு தண்டனைகளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

இப்படி உலகப் பற்றற்ற நிலையில் இறை காதலால் சுய அறிவிழந்து அல்லாஹ்வில் சிந்தனையில் மூழ்கிக் கொண்டவர்கள் இறைநேசர்கள் - சூபியாக்கள் என்பதாகவும், அவர்களின் பிரார்த்தனை ஏற்கப்பட தகுதியானவர்கள் என்பதாக முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹ்மத் ரிழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற மாபெரும் அனேக அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்: பஹ்ஜத்துல் அஸ்ரார், பதாவா ஹதீதிய்யா


​​

♣ யாசகர் கோலத்திலும் மஜ்தூப் நிலையிலும் இறை நேசர்கள்

சில மகான்கள் யாசக கோலத்திலும் மஜ்தூப் நிலையிலும் இருந்து கொண்டும் மனிதர்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அப்படிப்பட்ட யாசக வேஷம் போட்டு வந்துள்ளவர்களை பெரியவர்களா? அல்லது உண்மையிலேயே யாசகம் எடுக்கும் யாசகர்கள்தானா? என்று நம் போன்ற சாமான்ய மனிதர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. எனவேதான் நம் வீட்டிற்கு யாசகம் கேட்டு வருபவர்களையும் மஜ்தூப் நிலையில் உள்ளவர்களையும் உதாசீனம் செய்து விடாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களிடம் இனிய வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்லித்தந்து இருக்கிறார்கள்.

ஏனெனில் நம் வீட்டிற்கு வந்த மகான்களை மகான்கள் என்று அறியாமல் நாம் அவர்களை உதாசீனம் செய்து அதனால் அப்புனிதர்கள் மனவேதனை அடைந்து விடுவார்களானால் அது நமது இம்மை மறுமை வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெரியார்களின் சாபத்திற்கு இலக்கான எந்தக் குடும்பமும் உருப்பட்டதில்லை. இது போன்ற மகான்களின் சாபத்திற்கு ஆளாகி விடாமல் இருக்க வேண்டுமென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். பரட்டைத் தலையோடும் புழுதி படிந்த மேனியோடும் யாசகம் கேட்டு வாசலில் நின்றால் உடனடியாக விரட்டப்படும் அளவிற்கு அருவருக்கத்தகுந்த வகையிலும் தம்மை அமைத்துக் கொண்டு எத்தனையோ நன் மக்கள் இவ்வுலகில் நடமாடி வருகிறார்கள். அவர்கள் வாய் திறந்து ஏதேனும் வாக்கு சொல்லி விட்டார்களானால் உடனே பலித்துவிடும்.

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 329 கிதாபுல் பிர்ரிவஸ்ஸிலத்தி, மிஷ்காத் 446 பாபு பழ்லில் புகராஇ

♦ அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்” கூறினார்கள்.


​​நூல்: புகாரி 2703

♦ மேலும் "நிச்சயமாக அல்லாஹு தஆலா மிக எளிமையாகவும் இறையச்சம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்ற நல்லோர்களை நேசிக்கிறான். அவர்கள் ஒரு சபையில் சமூகமளிக்காவிடின் தேடப்படமாட்டர்கள். சமூகமளித்தால் முக்கியத்துவம் கொடுத்து அழைக்கப்பட மாட்டார்கள். மேலும் சமீபமாக்கவும் படமாட்டார்கள். ஆனால் அவர்களின் இதயங்கள் நேர்வழியின் ஒளி விளக்குகளாகும். இருளும் புழுதியும் படிந்தவர்களிலிருந்து வெளியேறுவார்கள்" என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.


​​நூல்: மிஷ்காத் பக்கம் 455 பாபுர் ரியாஇ வஸ்ஸும்அத்தி

ஆகவே இது போன்ற மகான்கள் மஜ்தூபிகளின் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். நமது பார்வையில் யாசகர்களைப் போன்றும் மஜ்தூப் நிலையிலும் தோற்றமளித்தாலும் அந்தரங்கத்தில் நம்மை விட்டும் அல்லாஹ்வின் நினைவில் ஒன்றித்து (கல்வத்) இருப்பவர்கள் என்பதை மறந்து விடாமல் அவர்களுக்கு மரியாதை செலுத்தி வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.