MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஹிக்மத் என்பது ஞானமா? தந்திரமா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாமிய மார்க்கத்தில் (உண்மைப் பொருளை உணர்ந்து அறிந்துக் கொள்ளும்) ஹிக்மத் என்பது ஞானமா? தந்திரமா?
♦ ஹிக்மத் எனும் ஞானத்தை சொல்வது கேட்டு இன்று வெறிநாய் போலும் விஷப்பாம்பு போலும் சீறிப்பாய்ந்து ஞானமா? ஆணமா? என்று இறை ஞானத்தைக் கிண்டல் செய்யும் நயவஞ்சகர்கள் அதிகமாகவே காணப்படுகின்றார்கள்.
ஆகவே ஹிக்மத் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? அதனால் என்ன பயன்? இதற்கு நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்? இதுபோன்ற சில கேள்விகளுக்குறிய பதில்கள் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் ஹிக்மத் என்றால் என்ன? இதற்கு ஒருவரியில் விளக்கம் சொல்ல முடியாது. இதற்கு முழுமையான பதில் தெரியாததால் தான் நாம் இன்னும் இப்படியே இருக்கிறோம். இது பற்றி எவ்வளவு படித்தாலும் எழுதினாலும் அதன் சுவையை சுவைத்து அறிவது போல் இருக்காது. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட, அறிந்த, புரிந்த சில சிறு விளக்கங்களைத் தருகிறேன்.
♣ ஹிக்மத் என்றால் என்ன?
இஸ்லாமிய மார்க்கத்தில் ஷரீஅத் சட்டங்களை குறிப்பாக சூபிசம், தரீகத் பகுதியில் சில விடயத்தை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு ஹிக்மத் அவசியமாகும். 'ஞானத்தை' "இல்முல் ஹிக்மத்" என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. ("அல் ஹிக்மது இல்முன் யுப்ஹது பீஹி அன் ஹகீகதி குள்ளி ஷெய்யின்") "ஹிக்மத்" என்பது ஒவ்வொரு வஸ்துவின் எதார்த்தம் பற்றி ஆராயப்படும் ஒரு அறிவாகும்.
இவ் வரைவிலக்கணப் படி எந்த அறிவில் ஒவ்வொரு வஸ்துவினுடைய எதார்த்தம் பற்றி ஆராயப்படுகின்றது என்று சிந்தித்தால் "ஹிக்மத்" என்பதை சந்திப்பாய். மேலும் ஹிக்மத் எனும் ஞானம் என்பது தூய உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணம், சிந்தனை, செயல், உறுதி என்றெல்லாம் கூறலாம் (உண்மைப் பொருளை உணர்ந்து அறிந்துக் கொள்வதுதான் ஹிக்மதாகும்.)
ஹிக்மதை அடைந்தவன் இயற்கையோடு இயற்கையாகவே வாழும் தன்மை உடையவன், எல்லாம் இறைவனின் செயல் என்று உணர்ந்து, சில நேரங்களில் மக்களுக்காக தம்மையே அர்பணித்து கொள்பவன். ஞானிகள் உணரும் அனுபவம் மெய்ஞானம் ஆகும். இதனை அவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளமுடியும் .ஊமை கனவு கண்டால் எப்படி இருக்குமோ, அதைப்போல ஞானத்தை அடைந்தவர்கள் இருப்பார்கள்.
♣ ஹிக்மத் என்பது ஞானமா? தந்திரமா?
"ஹிக்மத்" என்பது அறபுச் சொல்லாக இருந்தாலும் இச் சொல்லை படித்தவர்களும், பாமரர்களும், ஆண்களும், பெண்களும் அடிக்கடி சொல்லுவதுண்டு. ஆனால் அவர்கள் இச்சொல்லின் அர்த்தம் புரிந்து சொல்கிறார்களா? புரியாமல் சொல்கிறார்களா? என்பது கேள்விக்குரிய ஒன்றுதான்.
எனினும் நான் அறிந்தவரை மார்க்கம் படித்த மகான்கள் உட்பட ஒரு சிலர் தவிர எல்லோரும் இச் சொல்லின் உண்மையான அர்த்தம் ஒன்றிருக்க அதை விளங்கிக்கொள்ளாமல் வேறோர் அர்த்தங் கொண்டுதான் இதை சொல்லி வருகிறார்கள்.
சகோதர, சகோதரிகளே! உங்கள் நிலை என்ன? நீங்கள் இச்சொல்லை சொல்வதுண்டா? சொல்பவர்கள் என்றால், என்ன அர்த்தங்கொண்டு சொல்கின்றீர்கள்? சொல்லமுடியுமா? அல்லது தயக்கமா? தயங்காமல் சொல்லுங்கள் அல்லது நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்களும் மற்றவர்கள் போல இச்சொல்லின் அர்த்தம் ஒன்றிருக்க வேறோர் அர்த்தங்கொண்டுதான் சொல்லி வருவீர்கள் என்று நம்புகிறேன். இதில் ஐயமில்லை.
நீங்களும் மற்றவர்களும் இச்சொல்லுக்கு வைத்துள்ள அர்த்தத்தை நானே சொல்லிக் காட்டுகின்றேன். "ஹிக்மத்" என்றால் தந்திரம், உபாயம் என்றுதான் நீங்களும் பொருள் சொல்வீர்கள். மற்றவர்களும் அவ்வாறுதான் பொருள் சொல்கிறார்கள். உலக விவகாரத்தில் தந்திரமும், உபாயமும் உள்ள ஒருவனை அவன் பெரிய "ஹிக்மத்" உள்ளவன் என்றும், அவன் சரியான "ஹிக்மத்" காரனென்றும் நீங்கள் சொல்வதுண்டா? இல்லையா? உன்னைப்போன்று மற்றவர்களும் சொல்லக் கேட்டதுண்டா? இல்லையா? "ஹிக்மத்" என்ற சொல்லுக்கு தந்திரம், உபாயம் என்று பொருள் சொல்வது முற்றிலும் பிழையானதாகும்.
ஏனெனில் தந்திரம், உபாயம் என்பது இஸ்லாத்தில் இகழப்பட்டதே அன்றி புகழப்பட்டதல்ல. அதே போல் தந்திரமுள்ளவனும் இகழப்பட்டவனே அன்றி புகழப்பட்டவனல்லன். தந்திரம், உபாயம் என்பதற்கு அறபு மொழியில் ஹீலா, ஹீலத் என்று சொல்லப்படும். இது "தஃலப்" எனும் நரியிடம் உள்ள ஒரு விசேட தன்மையாகும். இத்தன்மை இகழப்பட்டதே அன்றி புகழப்பட்டதல்ல. இக்குணம் நரிக்குணம் ஆதலால் இதை இஸ்லாம் வரவேற்கவில்லை.
♣ ஹிக்மத் எனும் ஞானம் பற்றிய சில செய்திகள்
அல்லாஹுதஆலா குர்ஆனில் (உத்உ இலா ஸபீலி றப்பிக பில் ஹிக்மதி வல் மவ்யிளத்தில் ஹஸனதி) "(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) ஹிக்மத்"தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்". (அல் குர்ஆன் 16:125)
♦ தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான் (இத்தகு) ஹிக்மத் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார் எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல் குர்ஆன் 2:269)
♦ இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்குர்ஆன் 3:48)
♦ “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல் குர்ஆன் 2:129)
♦ இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். (அல் குர்ஆன் 2:151)
♦ மேலும்,, அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான், அல்லாஹ்வை அஞ்சுங்கள், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:231)
அன்பினிய சகோதர, சகோதரிகளே! மேலே நான் கூறிக்காட்டிய திரு வசனங்கள் அல்லாஹ்வின் வழிக்கு "ஹிக்மத்" கொண்டும், அழகிய உபதேசம் கொண்டும் மக்களை அழைக்குமாறு அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான். (அல் குர்ஆன் 16:125)
"ஹிக்மத்" என்ற சொல்லின் அர்த்தம் உங்களுக்கு தெரியாவிட்டாலும் அது இகழப்பட்ட தந்திரம் என்ற அர்த்தமுள்ளதில்லை என்பதை இத்திரு வசனங்கள் மூலம் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள் அல்லவா? ஏனெனில் அல்லாஹ்வின் வழியின் பக்கம் அழைப்பது ஒரு புனிதமான வேலை. புனிதமான பணி செய்வதற்கு தந்திரமும் தேவை இல்லை மந்திரமும் தேவை இல்லை. புனித பணி செய்ய இகழப்பட்ட தந்திர வழிபொருத்தமும் இல்லை.
எனவே மேலே சொன்ன திரு வசனங்களிலே வந்துள்ள "ஹிக்மத்" என்ற சொல்லுக்கு தந்திரம் என்று கருத்துக் கொள்ளுதல் பிழை என்பது உங்களுக்குத் தெளிவாகி விட்டதல்லவா! "ஹிக்மத்" என்ற சொல்லுக்கு தந்திரமென்று பொருள் கொள்ளக் கூடாது என்பதற்கு மேலே நான் கூறிக்காட்டிய ஆதாரங்களில் ஒன்று மட்டுமே உங்களுக்கு போதும்.
எனினும் உங்களது அறிவு வளர்ச்சி கருதி இன்னும் பல ஆதாரங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். ஆகவே ஹிக்மத் என்ற சொல்லுக்கு உங்களுக்கு அர்த்தம் விளங்காவிட்டாலும் மேலே சொன்ன திரு வசனங்களிலுள்ளது போல இச்சொல்லுக்குத் தந்திரமென்ற அர்த்தமில்லை என்பது தெளிவானதே.
ஏனெனில் தந்திரமென்று பொருள் வைத்துக் கொண்டால் தந்திரம் கொடுக்கப்பட்டவன் ஒரு போதும் அதிகம் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்க மாட்டான். அவ்வாறிருப்பது நியாயமுமில்லை. தந்திரமென்னும் இகழப்பட்ட பண்புள்ளவன் தீமை வழங்கப்பட்டவனே அன்றி அவன் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்கமாட்டான். இவ்வசனங்கலிருந்தும். "ஹிக்மத்" என்பது தந்திரம் என்ற அர்த்தமுள்ளதில்லை என்பது அவன் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்கமாட்டான்.
♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் என்னை நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பியுள்ளதற்கு உதாரணம், நிலத்தில் விழுந்த பெருமழையின் நிலையைப் போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும் முளைக்கச் செய்யும் நல்ல நிலங்களாகும்.. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதிலிருந்து மக்களும் அருந்தினர், (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர், (பயிரிட்டுக் கால்நடைகளை) மேய்க்கவும் செய்தனர்.. அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ளவும் இல்லை, புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை. இதுதான், இறைமார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நல்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கின்றவனுக்கும் உதாரணமாகும். இதை அபூமூசா அல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் முஸ்லிம் 4587)
சகோதர, சகோதரிகளே! நான் இதுவரை கூறி வந்த விளக்கங்களிலிருந்து "ஹிக்மத்" என்ற சொல்லுக்கு தந்திரமென்று பொருள்கொள்வது பிழை என்று உங்களுக்கு விளங்கி இருக்கும். ஆகவே நபிமார்கள், ஸஹாபா பெருமக்கள், இமாம்கள், இறைநேச செல்வர்களின் வாழ்க்கை வழிமுறைகளை அறிந்து அதன்படி நம்மை வாழச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக!
மேலும் இறைவா! எங்களது அகத்தையும் புறத்தையும் மஃரிபத் எனும் ஞான ஜோதியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக! எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு - ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு -அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம் அனைவர்களுக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.