MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஈஸால் ஸவாப் செய்யலாமா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் "ஈஸால் ஸவாப்" எனும் உயிரோடுள்ளவர்கள் இறந்தவர்களுக்காகச் செய்கின்ற நல்ல அமல்களின் நன்மைகள் அவர்களுக்குப் போய் சேருமா?
♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-
உயிரோடுள்ளவன் மரணித்தவனுக்காகச் செய்கின்ற நல்லமல்களின் நன்மை அவனைச் சென்றடைதல் தொடர்பாக தர்மம், நோன்பு, ஹஜ், துஆ, போன்றவற்றின் நன்மை அவனைச் சென்றடையும் என்பதை ஏற்றுக்கொள்ளும் வஹ்ஹாபிகள் திருக்குர்ஆன், கத்தம், பாதிஹா போன்றவற்றின் நன்மை மாத்திரம் அவனைச் சென்றடையாதென்று, கத்தம் பாத்திஹா பித்அத் என்று கூறுவது விந்தையைானதாகும். தர்மம், நோன்பு, ஹஜ், துஆ என்பன இபாதத் என்றும் அஃமால் என்றும் சொல்லப்படும். இதேபோல் திருக்குர்ஆன், யாஸீன், கத்தம், பாதிஹா என்பவையும் இபாதத் என்றும் அஃமால் என்றுமே சொல்லப்படும்.
தர்மம், நோன்பு, ஹஜ், துஆ என்ற அமல்களின் பலன் மரணித்தவனைச் சென்றடையுமென்றால் அமல் – இபாதத் என்றவகையில் திருக்குர்ஆன், கத்தம், பாதிஹா ஆகியவற்றின் பலனும் அவர்களைச் சென்றடையவே செய்யும். இபாதத் – அஃமால் என்றவகையில் எல்லாமே ஒன்றுதான். அந்த வணக்கத்தின் நன்மை செல்லாது. இந்த வணக்கத்தின் நன்மை செல்லும் என்று வணக்கங்களுக்கிடையில் வேறுபாடு காட்டுதல் கூடாது. உயிருள்ளவன் மரணித்தவனுக்காகச் செய்கின்ற தர்மம், நோன்பு, ஹஜ், துஆ போன்றவற்றின் நன்மை மட்டும்தான் அவனைச் சென்றடையுமேயன்றி திருக்குர்ஆனின் நன்மை அவனைச் சென்றடையாதென்று வாதிடுவதற்குக் காரணம் இது பற்றிய அடிப்படை அறிவு குர்ஆன், ஹதீஸ்களின் தெளிவான விளக்கம் வழிகெட்ட வஹ்ஹாபிகளிடமில்லை என்பதேயாகும்.
♣ ஈஸால் ஸவாப் என்றால் என்ன?
ஈஸால் ஸவாப் என்பது உயிரோடுள்ளவர்கள் மரணித்தவர்களுக்காச் செய்கின்ற நல்லமல்களின் நன்மை அவனைச் சென்றடைதல், நன்மையை சேர்த்து வைத்தல் தொடர்பாக தர்மம், நோன்பு, ஹஜ், உம்ரா, திருக்குர்ஆன், கத்தம், பாதிஹா, துஆ போன்றவற்றின் நன்மைகளை மரணித்து கப்ராளிகலாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பக்கம் சேர்த்து வைப்பதாகும்.
♣ ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது இன்றி வேறில்லை. (சூறா அந்றஜ்ம் 19) ஆகையால் இறந்தவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் நற்காரியங்கள் இறந்தவர்களுக்கு போய் சேருமா?
ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது இன்றி வேறில்லை. (சூறா அந்றஜ்ம் 19) என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஆகையால் இறந்தவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் நற்காரியங்கள் இறந்தவர்களுக்கு போய் சேராது. அப்படி இருக்க இறந்தவர்களுக்கா கத்தம் ஓதி என்ன பயன்? என்ற கேள்விக்கு கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் விரிவாக இமாம்கள் ஆய்வு செய்து விளக்கங்களை தந்துள்ளார்கள். ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது அன்றி வேறில்லை' என்று சூரத்து அந்நஜ்மில் வரும் 19வது வசனத்தை மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிட்டு சன்மார்க்கத்தை சரியாக விளங்காத நமது சகோதரர்கள் ஒருவர் செய்த நல்லமலின் பலன் மற்றவர்களுக்கு போய்ச் சேராது என்கின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால் அவர்களின் தலைவர்கள் கூறும் கூற்றே சரியானது என்று நம்பி அதிலேயே பிடிவாதமாக இருப்பதாகும்.
ஆனால் அந்த பிடிவாதத்தை விட்டு விட்டு அரபி இலக்கணத்தை நன்றாக அறிந்து அதன் துணை கொண்டு மேற்படி வசனத்தை பார்த்திருந்தாலோ அல்லது அந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்திருக்கிற ஏனைய வசனங்களின், ஹதீஸ்களின் துணை கொண்டு பார்த்திருந்தாலோ அல்லது அதன் தொடர் வசனங்களின் விளக்கங்களை கவனித்திருந்தாலோ கண்டிப்பாக இப்படிப்பட்ட விபரீதமான முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள்.
ஆகவே அதற்குரிய எதார்த்தமான பொருளை முதலில் கவனிப்போம்.'வ அன் லைஸ லில் இன்ஸானி'- என்ற வசனத்தின் எதார்த்த விளக்கம்: இந்த ஆயத்தில் இடம் பெற்று இருக்கின்ற 'லில்' இன்ஸான் என்ற வார்த்தையில் உள்ள 'லாம்' என்ற எழுத்து அரபி இலக்கணப்படி சொந்தம், உரிமை என்ற பொருள்களைத் தரக்கூடியதாக இருக்கின்றது என்று அரபி மத்ரஸாக்களில் இரண்டாம் ஜும்ரா (வகுப்பு) ஓதும் மாணவர்கள் கூட நன்கு அறிவார்கள். இதன்படி பார்த்தால் மேற்கூறப்பட்ட வசனத்தின் பொருள், ஒரு மனிதனுக்கு உரிமையானதாக இல்லை அவன் முயற்சித்தது அன்றி என்று அமையும். இதை ஒரு உவமான ரீதியில் கூறுவதென்றால், ஒரு மனிதனுக்கு சொந்தமானதாக ஊதியம் இல்லை அவன் உழைத்தது அன்றி என்று ஆகும். எனவே இந்தக் கருத்தின்படி அவன் உழைத்து கிடைத்த ஊதியம் அவனுக்கு சொந்தமானதாகும். அவன் விரும்பினால் அவனே வைத்துக் கொள்ளலாம். அல்லது அதை மற்றவருக்கு அன்பளிப்புச் செய்ய விரும்பினால் மற்றவருக்கு அதை அன்பளிப்பாகவும் கொடுக்கலாம் என்று தான் பொருள் வரும். (கிதாபுர் ரூஹ் அல் மஸாயில் பக்கம் 4)
அதைப் போன்றே ஒருவன் செய்த நல்ல அமலின் பலனுக்கு அவனே முழு உரிமை பெற்றவனாக ஆகிறான். அவன் விரும்பினால் அவனே அதை வைத்துக் கொள்ளலாம் அல்லது அதை அடுத்தவருக்கு அன்பளிப்பு செய்ய விரும்பினால் அன்பளிப்பும் செய்யலாம் என்று பொருள் விரியும். ஆனால் ஒரு மனிதன் தான் செய்த நல்லமலின் பலனை மற்றவருக்கு சேர்ப்பித்தால் அது மற்றவருக்குப் போய் சேராது என்றோ அல்லது ஒருவன் செய்த நல்லமலின் மூலம் மற்றவர் பயன் அடைய முடியாது என்றோ மேற்படி வசனத்திற்கு பொருள் கொள்ள கிஞ்சிற்றும் இடமில்லை. அப்படி இருக்க இறந்தவர்களுக்காக ஓதப்படும் கத்தம் அவர்களை போய் சேராது என்பதற்கு மேற்படி வசனத்தின் (உள்ளார்ந்த விளக்கத்தை விளங்காமல் அதன்) வெளிரங்க விளக்கத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு அதை ஆதாரமாக காட்டுவது கொஞ்சம் கூட பொருத்தமானதாக இல்லை என்படி மேற்படி சகோதரர்கள் நன்றாக விளங்கிக் கொள்வார்களாக
மேலும் நமது அந்த சகோதரர்கள் கூறுகின்றபடி மேற்கூறப்பட்ட ஆயத்தின் பொருள் ஒருவருக்கு அவர் செய்தது மாத்திரம்தான் கிடைக்கும் மற்றவர்கள் செய்த நல்லமல்களின் பலன் அவருக்குப் போய்ச் சேராது என்று இருக்குமாயின், ஒருவருக்காக மற்றவர் செய்யும் தொழுகை, ஹஜ், தானதருமங்கள், பிழை பொறுக்கத் தேடுதல் போன்ற நல்லமல்கள் அவரைச் சென்றடையும் என்று கூறுகின்ற எண்ணற்ற ஆயத்துக்களுக்கும், ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்து விடும். அத்துடன் இறந்த மய்யித்திற்கு ஜனாஸா தொழுகை தொழ வைதப்பதிலும் ஒரு அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும்.
♣ உயிரோடுள்ளவர்கள் இறந்தவர்களுக்காகச் செய்கின்ற நல்லமல்களின் நன்மைகள் அவர்களுக்குப் போய் சேரும் என்பதற்காக ஆதாரங்கள்
♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : ஒரு முஃமினான மனிதன் கற்பித்த கல்வியும், (எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும்) அவன் பரப்பிய கல்வியும், அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும், (பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும், அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும், வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும், அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும், அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும் கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும்.
ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள்: இப்னுமாஜா 242, பைஹக்கி 3448, ஷுஅபுல் ஈமான், மிஷ்காத் 254
♦ ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து யா ரஸூலல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் பெற்றோர்கள் மரணித்த பின்பு அவர்களுக்காக பிள்ளைகளாகிய நாங்கள் செய்ய வேண்டிய நன்மைகள் ஏதேனும் இருக்கிறதா ? என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் இருக்கிறது அவர்களுக்காக தொழுது, நன்மை சேர்த்தல், அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுதல், அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், அவர்களின் சுற்றத்தினர்களுடன் சேர்ந்த.து நடந்து கொள்ளுதல், அவர்களின் நோழர்களுக்கு சங்கை செய்தல் என்று கூறினார்கள்.
நூல்கள்: ஆபூதாவூத் , இப்னு மாஜா , மிஷ்காத் பக்கம் - 420 , பாபுல் பிர்ரி வஸ்ஸிலா
♦ நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒரு மனிதனுக்கு அவன் பிள்ளை செய்யும் இஸ்திஃபார் மூலம் அவரின் அந்தஸ்த்தை சுவனத்தில் உயர்த்துகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: இப்னுமாஜா ஹதீஸ் எண் 3660, மிஷ்காத் ஹதீஸ் எண் 2354
♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதன் வந்து 'நாயகமே! எனது தாயார் (எது குறித்தும்) வஸிய்யத் செய்யாமல் திடீரென மரணம் அடைந்து விட்டார்கள். அவர்கள் பேசி இருந்தால் ஏதேனும் தானதர்மங்கள் செய்திருப்பார்கள். ஆகையால் அவர்களுக்காக நான் ஸதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை உண்டா?' என்று கேட்டார். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம்' என்று பதில் கூறினார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்கள்: புகாரி ஹதீஸ் எண்: 1388, 2760, முஸ்லிம் ஹதீஸ் 1004 அபூதாவூத் ஹதீஸ் எண் 2881
♦ ஸய்யிதுனா ஸஃது இப்னு உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் வபாத்தான நேரத்தில் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியூர் சென்றிருந்தார்கள். எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'நாயகமே! நான் வெளியூர் சென்றிருந்த வேளையில் எனது தாயார் மரணமடைந்து விட்டார்கள். அவர்களைத் தொட்டும் நான் ஸதக்கா செய்தால் அது அவர்களுக்கு பயன் அளிக்குமா? என்று கேட்டார்கள். 'ஆம். பயனளிக்கும்' என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது 'நிச்சயமாக எனது தோட்டம் அவர்களுக்காக ஸதக்காவாக இருக்கும் என்று தாங்களை சாட்சியாக்குகிறேன்' என்று ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: புகாரி ஹதீது எண்: 2756, 2762, 2770, 2761, நஸாயி பாகம் 6 பக்கம் 250 பாபு இதா மாத்த அல் புஜ்அத்த ஹல் யுஸ்த்தஹப்பு லி அஹ்லிஹி….கிதாபுல் வஸாயா
♦ ஒரு பெண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் ஹஜ் செய்யாத நிலையில் மரணமடைந்து விட்டார்கள். அவர்களைத் தொட்டும் நான் ஹஜ்ஜு செய்யலாமா? என்று கேட்டார். ஆம். செய்யலாம். அவர்களுக்காக நீர் ஹஜ்ஜு செய்வீராக!' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஹழ்ரத் புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
திர்மிதி ஹதீஸ் எண்: 667 பாபு மா ஜாஅ பில் முதஸத்திகி கிதாபுஸ்ஸகாத்
♦ ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது சகோதரி ஹஜ் செய்வதற்கு நேர்ச்சை செய்திருந்தாள். ஆனால் அவள் மரணித்து விட்டாள் என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் மீது கடன் இருந்தால் நீர் அதை நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அவர் பதில் கூறினார். அப்படியானால் அல்லாஹ்வுக்கு (செலுத்த வேண்டிய கடனை) நிறைவேற்றிவிடுவாயாக. அவன் நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானவன் என்று கூறினார்கள்.
நூல்: புகாரி ஹதீஸ் எண்: 6699 பாபு மன் மாத்த வஅலைஹி நத்ருன் கிதாபுல் அய்மானி வந்நுதூரி
♦ நிச்சயமாக ஒரு மனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்கள் மீது ஒரு மாத நோன்பு (நிறைவேற்றப்பட வேண்டியது) இருக்கிறது. அவர்களைத் தொட்டும் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து 'உனது தாயார் மீது கடன் இருந்தால் நீர் அதை அவர்களைத் தொட்டும் நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு 'ஆம்' என்று பதில் கூறினார். அப்படியானால் அல்லாஹ்வின் கடனாகிறது நிறைவேற்றப்படுவதற்கு மிக ஏற்றமாக இருக்கிறது என்று கூறினார்கள்.
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: முஸ்லிம் ஹதீஸ் எண்: 1148-155 பாபு கலாயிஸ் ஸியாமி அனில் மய்யித்தி கிதாபுஸ் ஸியாம்
♦ ஒருவர் மீது கடமையான நோன்பு இருக்கும் நிலையில் அவர் மரணித்துவிடுவாராயின் அவரைத் தொட்டும் அவரின் பொறுப்பாளர் நோன்பு வைக்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஆயிஷஹ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நூல்: முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம்– 1147,பாடம் - கிதாபுஸ்ஸியாம்
♦ ஸய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை இரு ஆடுகளை குர்பானி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ஸய்யிதினா ஹனஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ஏன் இரண்டு குர்பானி கொடுத்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் தமக்காக ஒரு குர்பானி கொடுக்குமாறு வஸிய்யத் செய்திருந்தார்கள். ஆகையால் இவ்விரண்டில் ஒன்று அவர்களுக்கும் எனக்கும் என்று கூறினார்கள்.
அபூதாவூத் ஹதீது எண்: 2790, திர்மிதி ஹதீது எண்: 1495 , மிஷ்காத் ஹதீது எண்: 1462
♦ யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டார்களா? என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல கப்ரில் மரணித்த மய்யித்து தனது தந்தை அல்லது தனது தாய் அல்லது சகோதரன் அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து துஆவை எதிர்பார்க்கிறது. அப்படி ஏதேனும் ஒரு துஆ அந்த மய்யித்தை சென்றடையுமானால் அதை துன்யா மற்றும் அதில் உள்ளவற்றை விட மிகப் பிரியமாக கருதுகிறது. நிச்சயமாக அல்லாஹு தஆலா பூலோகவாசிகளின் பிரார்த்தனை மூலம் கப்ருவாசிகளுக்கு மலைகளைப் போன்று ரஹ்மத்துகளை நுழைவிக்கிறான். இறந்தவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவது உயிரோடு இருப்போர் மரணித்தவர்களுக்காக வழங்குகின்ற சன்மானமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக செய்யிதினா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: பைஹகி ஹதீது எண் 7904, மிஷ்காத் ஹதீது எண் 2355 பக்கம் 206 பாபுல் இஸ்திஃபார், அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 103 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இந்தல் கப்ரி ஹாலத்தத் தபனி வ பஃதஹு
♦ யாராவது ஒருவன் மையவாடிக்கு பக்கத்தால் சென்று 11 தரம் ஸூறதுல் இக்லாஸ் – குல்ஹவல்லாஹு அஹத் என்ற அத்தியாயத்தை ஓதி அதன் நன்மையை மரணித்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவானாயின் அவனுக்கு மரணித்தோரின் எண்ணிக்கப்படி நற்கூலி வழங்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக ஸெய்யிதுனா அலீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நூல்: கன்சுல்உம்மால்,பக்கம் 2059, ஹதீஸ் இலக்கம்-42596
♦ கப்ருக்குச் சென்றால் பாத்திஹா சூராவையும் முஅவ்வித்தைனியையும் குல் ஹூவல்லாஹூ அஹதையும் ஓதி அதன் நன்மையை கப்ராளிகளுக்குக் சேர்த்து வையுங்கள் . கண்டிப்பாக அது அவர்களை சென்றடையும் என்று அஹமத் இப்னு ஹம்பலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூற நான் கேட்டேன் .
அறிவிப்பவர் : ஹழ்ரத் அஹ்மதுல் மரூஸி
நூல்: மிர்காத் - பாகம் - 2 , பக்கம் - 381 . இஆனா பாகம் 2 (பஸ்லுன் பிஸ் ஸலவாத்தி அல ல் மய்யித்தி)
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: உங்களில் மௌத்தானவர்களுக்கு சூரத்துல் யாசீனை ஓதுங்கள்.
நூல்கள்: அபூதாவூத், இப்னு மாஜா, பைஹகி, மிஷ்காத் - 141
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரேனும் மரணம் ஆகிவிட்டால் அவரை அடக்குவதில் தாமதம் செய்யாதீர்கள். அவரது தலை மாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பத்தையும், அவரது கால்மாட்டில் பகராவின் கடைசி ஆயத்தையும் ஓதுங்கள்.
ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள்: மிஷ்காத் - 149, பைஹகி, ஷுஹ்புல் ஈமான்
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எவராவது கப்ர் ஸ்தானங்களுக்கு சென்று யாசீன் சூராவை ஓதினால் கப்ராளிகளை தொட்டும், வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கை அளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. (நூல் மிர்காத் 4 - 382)
ஆகவே இதுவரை கூறப்பட்ட ஆதாரங்கள் மூலம் இறந்துவிட்ட பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்கின்ற நற்காரியங்களும், இறந்து போன பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்கின்ற நற்காரியங்களும், இறந்து விட்ட தனது உடன் பிறந்த சகோதரனுக்காக அவனுடைய உடன்பிறந்த சகோதரன் செய்யும்' நற்காரியமும், இறந்துவிட்ட ஒரு நண்பனுக்காக அவன் நண்பன் செய்யும் நற்காரியமும், ஓர் இறந்து விட்ட முஃமினான சகோதரருக்காக மற்றொரு முஃமினான சகோதரர் (அவ்விருவருக்கிடையே எவ்வித உறவு மற்றும் நட்புமின்றி) செய்யும் நற்காரியமும், ஒரு மரணித்துவிட்ட மார்க்க அறிஞருக்காக (அவரிடம் பயின்ற மாணவர்கள் மற்றும் அவருடைய நல்லுபதேசதைக் கேட்டு அதன்படி நடந்து வந்த பொதுமக்கள் மூலம்) அவர் கற்பித்த கல்வியின் பயனும் அவர்களைப் போய் சேரும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.