MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பித்அத் எல்லாம் வழிகேடாகுமா? (தொடர் - 5)


மௌலவீ  K R M.ஸஹ்லான் (றப்பானீ)  BBA-Hons


♣ நபி ﷺ அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகுமா ?


நபி ﷺ அவர்களின் காலத்தில் நபி ﷺ அவர்கள் சொல்லாத, செய்யாத, முன்னர் அங்கீகரிக்காத பல விடயங்களை ஸஹாபாக்கள் செய்தமைக்கான சில சான்றுகளை முன்னர் நான் குறிப்பிட்டேன். அவற்றின் மூலம் நபி ﷺ அவர்கள் தமது வாழ்வில் செய்யாமல் விட்ட விடயங்களை நாம் செய்ய முடியும். ஆனால் அந்த விடயங்கள் அல்குர்ஆனுக்கும், நபி ﷺ அவர்களின் வாழ்க்கை முறைக்கும் மாற்றமில்லாமல் இருந்தால் மாத்திரமே அவை ஆகுமான விடயங்களாகும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.


நபி ﷺ அவர்களின் காலத்தின் பின்னர் ஸஹாபாக்கள் நபி ﷺ அவர்கள் சொல்லாத, செய்யாத, முன்னர் அங்கீகரிக்காத பல விடயங்களை செய்தமைக்கான சில சான்றுகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.



நபி ﷺ அவர்களின் காலத்தில் தறாவீஹ் தொழுகை ஜமாஅத் கூட்டடாக நடைபெறவில்லை. அபூபக்கர் சித்தீக் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்திலும் அவ்வாறுதான் இருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே தொழுதுவந்தார்கள். உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பக் கட்டத்தில்லும் அவ்வாறுதான் இருந்தது.


பின்னர் ஒருநாள் றமழான் மாத இரவு உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில் காரீ என்பவருடன் மதீனஹ் பள்ளிவாயலில் நுழைந்தார்கள். அங்கு மக்கள் தனித்தனியே தறாவீஹ் தொழுது கொண்டிருந்ததைக் கண்டு, இந்த மக்கள் அனைவரையும் ஒரே இமாம் தலைவரின் கீழ் ஒன்று சேர்த்தால் சிறப்பாயிருக்குமென்று கூறிவிட்டு தறாவீஹ் தொழுகையை உபையிப்னு கஃப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தலைமையில் கூட்டாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜமாஅத் கூட்டாகத் தறாவீஹ் தொழுது கொண்டிருந்ததைக் கண்டு நிஃமல் பித்அது ஹாதிஹீ இது நல்ல பித்அத் என்று கூறினார்கள்.


ஆதாரம் – புஹாரி-1986

அறிவிப்பு – அப்துர் றஹ்மான் இப்னு அப்தில் காரீ (றழியல்லாஹு அன்ஹு)



ஹழ்றத் உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி ﷺ அவர்களின் மிக நெருங்கிய தோழர். குலபாஉர் றாஷிதீன் நல்வழி பெற்ற நான்கு கலீபாக்களிலும் ஒருவர். இவர்கள் நபி ﷺ அவர்களின் காலத்தில் செய்யப்படாத ஒன்றை அவர்களின் மறைவின் பின் செய்துள்ளார்கள். நபி ﷺ அவர்கள் றமழானின் சில இரவுகள் மாத்திரமே தறாவீஹ் தொழுதார்கள். பின்னர் அதை வழக்கமாக்கிக் கொள்ளவில்லை. அத்துடன் ஜமாஅத்தாக தொழவுமில்லை. அவ்வாறுதான் அபூபக்கர் சித்தீக் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்திலும் இருந்தது. உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் தறாவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை ஆரம்பித்து வைத்தார்கள். இவர்கள் செய்த இச்செயல் பித்அத் என்பதில் சந்தேகமில்லை. நிஃமல் பித்அது ஹாதிஹீ என்று அவர்கள் சொன்ன வசனம் கொண்டு அவர்களே தான் செய்தது பித்அத் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். நபி ﷺ அவர்கள் செய்யாத எதையும் செய்யக்கூடாது அது வழிகேடு என்றிருந்தால் ஹழ்றத் உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தறாவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை ஆரம்பித்து வைத்திருக்க மாட்டார்கள்


وعن السائب بن يزيد رضي الله عنه قال: كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام على المنبر على عهد النبي صلى الله عليه وآله وسلم وأبي بكر وعمر رضي الله عنهما فلما كان عثمان رضي الله عنه وكثر الناس زاد النداء الثالث على الزوراء وهي دار في سوق المدينة وسمي هذا الأذان ثالثا باعتبار إضافته إلى الأذان الأول والإقامة ويقال له ثان بإسقاط اعتبار الإقامة( [82]).


நபி ﷺ அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு), உமர் (றழியல்லாஹு அன்ஹு) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உத்மான் (றழியல்லாஹு அன்ஹு) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது (அதான்) அழைப்பு அதிகமானது.


புஹாரி-912, இப்னு மாஜா - 1135, அபூதாவூத் 1087, இப்னு ஹுஸைமா-1773, நஸாஈ-1391, திர்மிதி -516

அறிவிப்பு- ஸாயிப் இப்னு யஸீத் (றழியல்லாஹு அன்ஹு)


ஹழ்றத் உத்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி ﷺ அவர்களின் மிக நெருங்கிய தோழர். குலபாஉர் றாஷிதீன் நல்வழி பெற்ற நான்கு கலீபாக்களிலும் ஒருவர். இவர்கள் நபி ﷺ அவர்களின் காலத்தில் செய்யப்படாத ஒன்றை அவர்களின் மறைவின் பின் செய்துள்ளார்கள். நபி ﷺ அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு), உமர் (றழியல்லாஹு அன்ஹு) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் மாத்திரம் ஒரு முறை பாங்கு சொல்லப்பட்டு வந்தது. ஹழ்றத் உத்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்கள் கூட்டம் அதிகமானதால் காலத்தின் தேவை கருதி இமாம் மிம்பருக்கு வர முன்னரே மக்கள் ஜும்ஆவிற்கு நேரம் வந்துவிட்டதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக முன்னரே ஒரு முறை பாங்கு சொல்லப்படவேண்டும் என அறிவித்து அமுல்படுத்தினார்கள். நபி ﷺ அவர்கள் செய்யாத எதையும் செய்யக்கூடாது அது வழிகேடு என்றிருந்தால் ஹழ்றத் உத்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.


صحيح مسلم (2764) ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ. قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللّهُ عنهما أَنَّ تَلْبِيَةَ رَسُولِ اللّهِ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ. لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ. إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ» .

قَالَ: وَكَانَ عَبْدُ اللّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللّهِ عَنْهُمَا يَزِيدُ فِيهَا: لَبَّيْكَ لَبَّيْكَ. وَسَعْدَيْكَ. وَالْخَيْرُ بِيَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ


"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத லக, வல்முல்க்க, லா ஷரீக்க லக்" என்பது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொன்ன "தல்பியா" ஆகும்.


(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமிலர்)


இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் "லப்பைக் லப்பைக் வ சஅதைக், வல்கைரு பி யதைக், லப்பைக் வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" என்று கூடுதலாகக் கூறுவார்கள்.


(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். நன்மைகள் உன் கைகளிலேயே உள்ளன. இதோ வந்துவிட்டேன். வேண்டுதல்கள் உன்னிடமே. நற்செயல்கள் உனக்காகவே.)


முஸ்லிம்-2764

அறிவிப்பு- அப்துல்லாஹ் இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹு)


இங்கு இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி ﷺ அவர்களின் தல்பியாவை விட வித்தியாசமான தல்பியாவை சொல்லியுள்ளார்கள். இது நபி ﷺ அவர்கள் காட்டாத வழிமுறையாகும். இருப்பினும் ஸஹாபி அவர்கள் அதை செய்துள்ளார்கள்


صحيح البخاري (4561) ـ حدَّثنا أبو اليمانِ أخبرنا شعيبٌ عن الزُّهريِّ قال: أخبرَني ابنُ السَّبّاق «أنَّ زيدَ بن ثابتٍ الأنصاريَّ رضيَ الله عنه ـ وكان ممَّن يكتبُ الوَحيَ ـ قال: أرسلَ إِليَّ أبو بكرٍ مَقتَلَ أهلِ اليمامةِ وعندَهُ عمرُ فقال أبو بكرٍ: إِنَّ عمرَ أتاني فقال: إِنَ القتلَ قَدِ استحرَّ يوم اليمامةِ بالناس، وإِني أخشى أن يَستحرَّ القتلُ بالقُراءِ في المَواطِن فيذهب كثيرٌ منَ القرآنِ إلاّ أن تجمَعوهُ، وإني لأرَى أن تجمعَ القُرآنَ. قال أبو بكرٍ: قلتُ لعمرَ كيفَ أفعلُ شيئاً لم يَفعلهُ رسولُ الله صلى الله عليه وسلّم؟ فقال عمرُ: هو واللهِ خيرٌ. فلم يَزَل عمرُ يُراجِعُني فيه حتى شرحَ الله لذلك صدري، ورأيت الذي رأى عمرُ ـ قال زيدُ بن ثابتٍ: وعمرُ عندَهُ جالسٌ لا يتكلم ـ فقال أبو بكر: إنكَ رجلٌ شابٌ عاقل، ولانَتهِمُك، وكنتَ تكتبُ الوحيَ لرسولِ الله صلى الله عليه وسلّم، فتَتَبَّع القرآنَ فاجمَعْه. فواللهِ لو كَلّفَني نقلَ جبلٍ منَ الجبال ماكان أثقلَ عليَّ مما أمرَني به من جَمْع القرآن. قلتُ كيفَ تَفعَلانِ شيئاً لم يَفْعَلْهُ النبيُّ صلى الله عليه وسلّم؟ فقال أبو بكر: هو والله خيرٌ فلم أَزَلْ أُراجعُهُ حتى شرحَ اللهُ صدري للذي شرحَ اللهُ له صدرَ أبي بكرٍ وعمر، فقمتُ فتتبَّعتُ القرآنَ أجمعُهُ منَ الرِّقاع والأكتاف والعُسُب وصُدورِ

الرجال، حتى وَجدتُ من سورةِ التوبةِ آيَتين مَعَ خُزَيمةَ الأنصاريِّ لم أجدْهما مَعَ أحدٍ غيره {لَقَدْ جَآءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} إلى آخِرِهما. وكانتِ الصُحُفُ التي جُمعَ فيها القرآن عندَ أبي بكرٍ حتى تَوَفّاهُ الله، ثم عندَ عمرَ حتى توفاه الله، ثم عند حفصةَ بنتِ عمر». [89])


ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி (றழியல்லாஹு அன்ஹு) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.


யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப் (றழியல்லாஹு அன்ஹு) இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) (என்னிடம்) கூறினார்கள்:

உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர் ﷺ அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொருத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர் (றழியல்லாஹு அன்ஹு) (ஏதும்) பேசாமல் அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.


(பிறகு) அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர் ﷺ அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.


அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி ﷺ அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன்.


முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், பேரிச்ச மட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.


(அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129)


(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா (றழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் இருந்தது.


புஹாரி- 4561



நபி ﷺ அவர்களின் காலத்தில் அல்குர்ஆன் நூலுருவில் புத்தக வடிவத்தில் இருக்கவில்லை. கலீபா அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆலோசனைப்படி அல்குர்ஆன் புத்தக வடிவத்தில் தொகுக்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.


நபி ﷺ அவர்கள் செய்யாத எதையும் செய்யக்கூடாது அது பித்அத், வழிகேடு என்றிருந்தால் ஹழ்றத் அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) , ஹழ்றத் உமர் (றழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் இவ்வாறு அல்குர்ஆனை புத்தக வடிவத்தில் அமைத்திருக்கமாட்டார்கள்.


இவ்வாறு புத்தக வடிவத்தில் அமைக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதி அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களிடத்திலும் ஹழ்றத் உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களிடத்திலும் இருந்தது. கலீபா உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணித்த போது ஹப்ஸா (றழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் இருந்தது. உத்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலத்தில் காலத்தின் தேவை கருதி குறித்த மூலப்பிரதி பல பிரதிகளாக்கப்பட்டு இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. மதீனாவில் ஒரு பிரதி மாத்திரம் வைக்கப்பட்டிருந்தது.


இதுவும் நபி ﷺ அவர்கள் செய்யாத விடயம். ஆயினும் உத்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் செய்த பெரும் சேவையாகும். இது வழிகேடல்ல.


நபி ﷺ அவர்கள் செய்யாத விடயங்கள் அனைத்தும் வழிகேடு என்போர் அல்குர்ஆன் பிரதிகளைப் பார்த்து ஓதுவது (அவர்களின் பார்வையில்) வழிகேடாகும்.


وأخرج البيهقي عن عائشة مثلـه بسند قوي ولفظه: أن المقام كان في زمن النبي صلى الله عليه وآله وسلم وزمن أبي بكر ملتصقا بالبيت ثم أخره عمر.

وقال الحافظ في فتح الباري: ولم تنكر الصحابة فعل عمر ولا من جاء بعدهم فصار إجماعا.


மகாம் இப்றாஹீம் எனும் புனித கல் நபி ﷺ அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்திலும் புனித கஃபாவை மிக நெருங்கியதாக வே இருந்தது. உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் அதை தற்பொழுது இருக்குமிடத்திற்கு மாற்றினார்கள்.


அறிவிப்பு –ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா)

பைஹகீ



கஃபாவில் தொழக்கூடியவர்களுக்கும் தவாப் செய்யக் கூடியவர்களுக்கும் இட நெருக்கடியை குறைப்பதற்காகவே உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவ்வாறு செய்தார்கள். இது நபி ﷺ அவர்களின் காலத்தில் செய்யப்படாத ஒரு செயலாக இருந்தும் ஸஹாபாக்கள் உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இந்த செயலை மறுக்கவில்லை.


பத்ஹுல் பாரீ பாகம்-09 பக்கம் 20



தறாவீஹ் தொழுகை ஜமாஅத் கூட்டடாக தொழுததும் அல்குர்ஆனை நூல் வடிவில் அமைத்ததும் ஜும்ஆவுக்கு இரண்டாவது அதான் சொன்னதும் நபி ﷺ அவர்களின் காலத்தில் செய்யப்படாத விடயங்களாகும். ஆயினும் ஹழ்றத் அபூபக்ர் (றழியல்லாஹு அன்ஹு) , ஹழ்றத் உமர் (றழியல்லாஹு அன்ஹு), ஹழ்றத் உத்மான் (றழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் இவற்றை செய்துள்ளனர். நபி ﷺ அவர்கள் செய்யாத எதையும் செய்யக் கூடாது, அது வழிகேடு என்றிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.


இதுவரை நான் குறிப்பிட்ட ஹதீஸ்களிலிருந்தும் விபரங்களிலிருந்தும் நபி ﷺ அவர்களின் காலத்திலும் அதன் பின்னரும் ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரத்துடன் பல விடயங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை பித்அத் என்று பெயர் பெற்றாலும் அவை வழிகேடல்ல. ஸஹாபாக்கள் அல்குர்ஆனை நூல் வடிவத்தில் அமைத்ததும், உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தறாவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழ ஆரம்பித்து வைத்ததும், உத்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஜும்ஆவுக்கு இரண்டாவது அதான் சொல்ல பணித்ததும் புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்கள். ஆயினும் ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரத்துடன் உருவாக்கப்பட்டதால் அவை பித்அத் என்று பெயர் பெற்றாலும், அவை வழிகேடல்ல. ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும்.


நபி ﷺ அவர்கள் தமது வாழ்வில் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது கூடாது, அது வழிகேடு என்ற கருத்து தவறானது. நபி ﷺ அவர்கள் தடை செய்த விடயங்களைச் செய்வது வழிகேடாகுமே தவிர அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகாது என்பதை புரிந்துகொள்ளலாம்.


(முற்றும்)

← தொடர் 4