MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அவ்லியாக்கள் நல்லமக்களே என அறிந்து கொள்வது எப்படி?


எழுதியவர்:  முஹம்மத் ரிபாய் லுதுபுfல்லாஹ்  (இலங்கை)


இவ்வுலகில் வாழும் இஸ்லாமியர்களை நல்லவர்கள் என்று மக்களால் தெரிந்து கொள்ள முடியாது அல்லாஹ்வுக்கு மட்டுமே அது பற்றி தெரியும் என்று வஹ்ஹாபிகள் கூறி வருவதைக் காணலாம். உண்மையில் அல்லாஹ்வுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது தான் யதார்தத்தில் உண்மையாகும். இங்கே வஹ்ஹாபிகள் இந்த விடயத்தை பேசுவதற்கான பிரதான காரணம் நபிமார்கள், வலிமார்களுக்கு மறைவான அறிவு கிடையாது என்பதை கூறி அந்த வாதங்களை நியாயப்படுத்தவே இத்தனைக்கும் காரணமாகும்.


 அல்லாஹ்வின் இறைநேசர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அன்பளிப்புக்கள், அந்தஸ்த்துக்கள், விசேட ஆற்றல்கள், அவன் புறத்தில் இருந்து இவர்களுக்கு ஏற்படுத்தும் இல்ஹாமிய்யத்தான உதிப்புக்கள், ஸாலிஹான கனவுகள், அவ்லியாக்களிடம் உள்ள கஷ்பு எனும் அகப்பார்வை போன்ற பல்வேறு வழிகள் ஊடாக அவ்லியாக்கள் சாதாரண மக்களுடைய ஆற்றல்களில் இருந்து உயர்த்தி நோக்கப்படுகின்றனர்.


இது போன்ற பிரத்தியேகமான அறிவுகள் ஆற்றல்களைக்கொண்டு இவர்களுக்கு உணர்த்தப்படுகின்ற செய்திகளே மறைவான ஞானமாக கருதப்படுகின்றது. அல்லாஹ்விலிருந்து அடியார்களுக்கு வஹியின் மூலமே செய்திகள், விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்ற போதிலும் வஹி என்பது ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக நேரடியாக இறக்கப்பட்ட போதும் வஹியின் பிரிவுகளில் நின்றும் மேற்கூறப்பட்ட பல் வேறு அம்சங்களும் உள்ளடங்கி காணப்படுவதே உண்மையான விளக்கமாகும்.


இனி எப்படி ஒரு மனிதரை நல்லவர் கெட்டவர்கள் என மக்களால் முடிவு செய்யலாம் என்பதை பார்ப்போம்.

உண்மையில் உறவுகள் ஆரம்பிப்பது திருமண வாழ்விலாகும் இந்த திருமணத்தில் நல்ல கணவன்மார்களை தேடுவதும், நல்ல மனைவியை தேடும் வழமையும் நம் சமூகத்தில் காணப்படுகிறது அல்லாஹ்வுக்கு மட்டுமே அதை தீர்மானம் செய்யலாம் என்று இருந்தால் எப்படி இருஜோடிகளை திருமணம் முடித்து வைப்பது. எனவே வெளிப்படையான சில அம்சங்களை வைத்து அவ்விருவரும் வாழும் சூழலில் இருப்பவர்களை விசாரித்து அவர் அல்லது அவள் நல்லவளா கெட்டவளா என்பதை தீர்மானிக்க முடிகிறது. இது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விடயமும் கூட அல்லாஹ் வெளித்தோற்றத்தை பார்ப்பது கிடையாது அவன் உள்ளங்களில் இருப்பவற்றையே நோட்டமிடுவதாக குறிப்பிடுகிறான்.


இந்த விடயத்தை வைத்துக்கொண்டு அவ்லியாக்களை மனிதர்களுக்கு அடையாளம் காணமுடியாது என்று வஹ்ஹாபிகள் கூறுவது வேடிக்கையான விடயமாகும். அப்படியானால் அல்குர்ஆனில் பிரிதொரு இடத்தில் இந்த குர்ஆன் யாருக்கு வழிகாட்டுகிறது என்ற தொடரில் ஈமான் கொண்ட மறைவான விடயங்களை நம்புகின்றவர்களுக்கு இது நேர்வழி காட்டும் என்பதாக குறிப்பிடுகின்றது அப்படியானால் மறைவான அறிவு என்பதை மக்கள் தெரிந்திருக்க வேண்டும் அதை நம்ப வேண்டும் அப்போது தான் அல்குர்ஆன் நேர்வழி காட்டும் என்றிருந்தால் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களை பூரணமாக ஏற்றுக்கொண்டவர்களுக்கே இத்தகைய சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதை அல்லாஹ் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றான்.


ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் சிலதை ஏற்று பலதை விடும் வஹ்ஹாபிகளுக்கு எப்படி இந்த குர்ஆன் நேர்வழி காட்டப்போகின்றது? அல்லாஹ்வின் இறைநேசர்களுக்கு அச்சமோ கவலையோ கிடையாது அவர்கள் கேட்பதை தருவதாக அதாவது விரும்பியதை கேட்கும்போது அதை வழங்க காத்திருக்கிறான் என்பதாக குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அல்லாஹ்விடத்தில் ஒரு நரகவாதிக்குதான் இப்படியான பாக்கியத்தை கொடுப்பானா? என்பதை வஹ்ஹாபிகளிடம் கேட்க விரும்புகிறேன். அப்படியானால் பயமும் கவலையும் இல்லாத இந்த அவ்லியாக்களை யார்? என்று இனம் காண்பதற்கு அவசியமில்லையா? அப்படியானால் ஏன் அவர்களைப்பற்றி அல்குர்ஆனில் கூற வேண்டும்? இந்த வசனம் பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடாதா? நல்லவர்கள் யார் என்று தேடக்கூடாதா? அல்குர்ஆனில் ஈமான்கொண்ட விசவாசிகளே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் இன்னும் உண்மையாளர்களோடு சேர்ந்து நீங்களும் ஆகிவிடுங்கள் (9:119) ஆகவே நல்லவர்கள் யார்? உண்மையாளர்கள் யார்? என்று தெரிந்தால் தான் நாம் அவர்களுடன் சேர்ந்து சகவாசம் கொள்ளலாம் அல்லவா ஆகவே நல்லவர்கள் யார் என்பதை தேடுவது மிக அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகிறது.


இது பற்றி குறிப்பிட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இதற்கு அழகான உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டினார்கள். அதாவது மக்கள் நல்லவர்களுடன் பழகுவது ஒரு கஸ்தூரி வியாபாரியுடன் சேர்ந்திருப்பதற்கு ஒப்பானதாகும். கெட்டவர்களுடன் சகவாசம் கொள்வது ஒரு கொல்லனுடன் சகவாசம் கொள்வதற்கு ஒப்பானதாகும். கஸ்தூரி வியாபாரியுடன் இருந்தால் ஒன்றில் அவன் பணம் கொடுத்து கஸ்தூரியை பெற்றுக்கொள்வான் அப்படியும் இல்லையென்றால் அந்த வியாபாரி இலவசமாக கஸ்தூரியை அவனுடன் சேர்ந்திருத்தவனுக்கு வழங்குவான் அப்படியும் கொடுக்கவில்லை என்றால் அவனுடன் சதாவும் இருப்பதால் கஸ்தூரி வியாபாரியின் நறுமணத்தையாவது இவன் பெற்றுக்கொள்வான். கொல்லனுடன் சேர்ந்திருந்தால் அவனுடைய காசை பெற்றுக்கொள்ள சதாவும் இரும்பை தட்டி நெருப்பின் அகோரத்துடன் தன் உடம்பை வருத்திக்கொள்வான் அப்படியும் இல்லையென்றால் அந்த பட்டளையில் இருப்பதால் தனது உடம்புக்கும் ஆடைக்கும் ஆபத்து வரலாம் தீப்பொறிகள் தாக்குவதால் அப்படியும் இல்லையென்றால் சதாவும் அந்த கொல்லன் அழுக்குடன் இருப்பதால் அவனுடன் அன்றாடம் பழகும் குறித்த நபரிலும் துர்வாடைகள் வீசும் என்பதாக அழகான உவமானத்தின் மூலமாக நல்லோர்களின் சகவாசம் பற்றியும் கெட்டவர்களின் சகவாசம் பற்றியும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் விளக்கிகாட்டினார்கள்.


எனவே நல்லவர்களுடன் சகவாசம் கொள்ளச்சொன்ன இஸ்லாம் நல்லவர்களுடன் சேர்ந்திருப்பதால் நன்மைகள் கிடைக்கும் என்று சொன்ன இஸ்லாம் நல்லவர்கள் யார் என்பதை தேடவேண்டாம் அது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் அல்லாஹ் வஹியை கொண்டு தான் இப்பூமியிலுள்ளவர்களுக்கு நபிமார்கள் மூலம் அறிவிப்பான் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வபாத்திற்கு பிறகு உலகில் தோன்றும் நல்லடியார்களை அறிந்து கொள்ள முடியாதா? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வபாத்திற்கு பிறகு உலகில் நல்லடியார்கள் தோன்ற மாட்டார்களா? அல்லது இஸ்லாம் நல்லடியார்களை அறிந்து கொள்ள அல் குர்ஆனிலோ ஹதீஸிலோ தீர்வு வைக்கவில்லையா? இது போன்ற கேள்விகளுக்கு வஹ்ஹாபிகள் பதில் தரவேண்டும்?


எனவே அவ்லியாக்களை எப்படி இனம் காணலாம் என்ற தொடரில் திருமண பந்தத்திற்கு பிறகு எவ்வாறு நல்லவர்களை அடையாளம் காணமுடியும் என்பதை பார்ப்போம் உண்மையில் இந்த வாழ்விலே ஒருவர் முழுமை பெற்ற ஒருவராக மாற்றம் பெறுகின்றார் ஸாலிஹான முறையில் தமது இளமைக் காலத்தை கழித்த இவர்கள் திருமணத்திற்கு பிந்திய வாழ்விலும் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுக்கொள்ள சதாவும் முயற்சி செய்துவந்தனர். இந்த இறைநேசர்கள் சன்மார்க்க கடமைகளை சம்பூரணமாக எடுத்து நடப்பவர்களாக காணப்பட்டார்கள் நற்குணங்கள் என்பது அவர்களிடம் ஒன்றரக் கலந்திருந்தது பொய் அறவே இல்லாதிருந்தது. ஸுன்னத்தான நபிலான வணக்கங்களை தமக்கு கடமையாக்கி கொண்டார்கள் திக்ரு ஸலவாத்தை தமது பொழுது போக்கு விடயங்களில் கூட விட்டு வைக்கவில்லை. இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அல்லாஹ்வை நோக்கி தினமும் முன்னேறியவர்களாகவே காணப்பட்டார்கள். இப்போது அல்லாஹ் இவ்வடியான் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவான் இதை தான் இந்த ஹதீஸ் தெளிவாக எமக்கு உணர்த்துகிறது.


ஒரு அடியான் ஸுன்னத்தான நபிலான வணக்கங்களை கொண்டு நான் அவனை நேசிக்கும் வரை நெருங்குவான் அப்படி அந்த அடியானை நேசித்து விட்டால் அவன் பேசும் பேச்சாகவும், அவன் பிடிக்கும் கரமாகவும், அவன் நடக்கும் காலாகவும் மாறிவிடுவதாக அல்லாஹ் அறிவித்ததாக நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (ஹதீஸ் குத்ஸி புகாரி) எனவே இவ்வாறான மாற்றம் குறித்த அடியாரில் ஏற்படும்போது அவர் சாதாரண மக்களுடைய ஆற்றல்கள் சக்தியில் இருந்து வேறுபடுகின்றார்கள்.


சாதாரண நபருக்கு நீர் மேல் நடக்க முடியாத வேலையை இந்த இறைநேசர்கள் நடந்து காட்டுவார்கள். சாதாரணமாக நடக்க முடியாத தூரத்தை அசாதாரணமாக நடந்து காட்டுவார்கள். இதைத்தான் கராமத் விசேட ஆற்றல்கள் அல்லது அற்புதங்கள் என்கிறோம். இவ்வாறான அற்புதங்கள் இந்த அடியார் மூலம் நிகழும் போது குறித்த அந்த மனிதர் அவ்லியாவாக இறைநேசச்செல்வராக இருப்பதை அவர்களுடன் சேர்ந்து வாழ்பவர்கள் அறிந்து கொள்வார்கள். சேர்ந்து வாழ்பவர்கள் அந்த அவ்லியாவை அறிந்து கொண்டதன் பின்னர் தமக்கு மத்தியில் ஏற்படும் நோய் பிணிகள், செய்த்தான் கோளாருகள் போன்ற விடயங்களுக்கான ஷிபாவை மருந்ததை இந்த வலிமார்களின் உதவியுடன் அல்லாஹ்விடம் பெற்று சுகதேகிகளாக மாறினார்கள்.


இந்த வஸீலா மூலம் அவ்லியாக்களிடம் உதவி தேடி நோய்களினதும், பேய்களினதும் ஆபத்துக்களில் இருந்து ஆரோக்கியம் பெற்ற மக்கள் இந்த அவ்லியாக்களின் பெயரை எல்லோருக்கும் தெரியப்படுத்தினார்கள். அவர்கள் நெறிப்படுத்தும் ஆன்மீக பாசறைக்கு அனைவரையும் கலந்து கொள்ள செய்தார்கள். மக்கள் நாளுக்கு நாள் இந்த அவ்லியாக்களை நாடி தேடி வந்து நற்போதனைகளையும் ஆத்மீக ஞானங்களையும் பெற்றுவந்தார்கள். இப்படியான அவ்லியாக்களுடன் சகவாசம் கொண்டதனால் உடை நடை பாவனை முதலான விடயங்களிலும் நற்குணம் விருந்தோம்பல் போன்ற விடயங்களிலும் சிறந்து விளங்கினார்கள்.


பார்த்தீர்களா வாசனையுடன் கலந்த நீரும் வாசம் பெறுவது போல் நல்லடியார்களுடன் சேர்ந்த மக்களும் நல்லவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதை. இதே போல் கெட்டவர்களுடனான சகவாசத்தில் அல்லது வழிகேடர்களுடன் சேர்ந்திருப்பதால் அவர்களின் கெட்ட நடத்தைகள் துர்க்குணம் போன்றவைகளும் வழிகேடர்களுடன் சகவாசம் பேணினால் தமக்கும் அவருடைய வழிகேட்டுகொள்கை தாவி தானும் வழிகெட்டுச்செல்வதற்கு உவமையாக பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் உண்ணும் என்றவாறு குறிப்பிடலாம்.


ஆகவே நாமும் நல்லடியார்களின் சகவாசத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அளப்பரிய நற்பாக்கியங்களையும் அல்லாஹ்வின் இறைநேசர்களுக்கு இறங்கும் நல்லருள்களையும் பெற்று வாழ்வதற்கு பெரும் துணைபுரியும். இப்படியாக இந்த அவ்லியாக்கள் அந்த மக்களை ஆத்மீக பயிற்ச்சிகளை ஏற்படுத்தவும் மக்களை திக்ரைக்கொண்டு தரிப்படுத்தவும் இதர நல் இபாதத்களை ஏற்பாடு செய்வதற்காக இவர்களால் வாங்கப்பட்ட அல்லது இவர்களுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட ஆன்மீக விருத்தி கலாசாலைகளே தக்கியாக்கள் அல்லது ஸாவியாக்கள் எனப்படுகிறது.


மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்காக வெளியுலகில் சுற்றி திரியும் மக்கள் வீடு திரும்பியதும் அவரவர் தரீக்காவில் விதிக்கப்பட்ட நல்லமல்களான குர்ஆன் திலாவத், காலை மாலை ஸிக்ர். தஸ்பீஹ் போன்றவற்றோடு வாரத்தில் சிறந்த நாளாகிய வெள்ளிக்கிழமை இரவு, காலை போன்ற பெறுமதி வாய்ந்த நேரங்களில் அனைத்து சகோதரர்களையும் தக்கியாக்கள் ஸாவியாக்கள் போன்ற ஆன்மீக பயிற்ச்சி பாசறைகளுக்கு வரவழைத்து அங்கே நபிகள் நாயகத்தின் புனித வரலாறுகள் சம்பவங்கள் அவர்களால் நிகழ்த்திய அற்புதங்கள் போன்ற பல்வேறு வரலாற்று தொகுப்புகளையும் அரபு மொழியில் கோர்வை செய்து அவற்றை அந்த புனித இரவில் கூட்டமாக இருக்கும் மக்கள் மத்தியில் வாசித்து இடைக்கிடையே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத்கள் கூறும் அருமையான அஸ்ராருர்ரப்பானிய்யா மஜ்லிஸ் அல்லாஹ்வினதும் அருளைப் பெற்று தரும் என்பதோடு அண்ணலாரின் நற்பாக்கியங்களையும் பெற்றுத்தரவல்லது.


இதையடுத்து அங்கே அந்த மக்களின் உள்ளத்தை பக்குவப்படுத்தும் திக்ர்களை அழகான முறையில் கோர்வை செய்து அழகான வடிவத்தில் அதை நெறிப்படுத்தி மக்கள் கூட்டாக சேர்ந்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குர் ஆன் திலாவத் திக்ர் அவ்ராது தஸ்பீஹ் துஆக்கள் போன்றவற்றின் தொகுப்பே ராத்தீப்கள் என்றழைக்கப்படுகிறது.


இப்படியாக வாராந்த மாதாந்த வருடாந்த விசேட தினங்களில் மக்களை ஆத்மீக பயிற்சிகள் மூலமும் இஸ்லாத்தின் விசேட அம்சமாகிய உணவளித்தல் தர்மத்தையும் ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் வைத்து ஏழையும் பணக்காரனும் ஒரே உணவுப்பாத்திரத்தில் கையைபோட்டு பசியாறக்கூடிய அளவில் வைத்திருப்பதே தரீக்காக்கள் சகோதரத்துவ மேம்பாட்டுக்கு செய்துள்ள சேவையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறான அளப்பரிய சேவைகளை தரீக்காக்களின் ஆன்மீக தலைவர்களான வலிமார்கள் அல்லது ஷெய்குமார்கள் போன்ற இறைநேசர்களே செய்து முஸ்லிம்களே இல்லாத ஊரை முஸ்லிம் கிராமங்களாகவும் பள்ளிவாசல்களே இல்லாத பகுதிகளில் பள்ளிவாசல்களையும் கட்டி இஸ்லாமிய தஃவா பணியை மூலை முடுக்கெல்லாம் இந்த மகான்கள் எடுத்துச்சென்றார்கள் வெற்றியும் கண்டார்கள்.


இறுதியில் அந்த அவ்லியாக்கள் தாம் மக்களை நெறிப்படுத்திய திக்ர் மஜ்லிஸ்களை தொடர்ந்து நடாத்தவும் தக்கியாக்கள், ஸாவியாக்கள், பள்ளிவாசல்கள் போன்ற ஆன்மீக ஸ்தாபனங்களை கொண்டு நடாத்துவதற்கு அந்த அவ்லியாவுடன் விசுவாசமாக இருந்தவர்களுள் சிலரை தெரிவு செய்து பரிபாலன குழக்களை அமைத்து தாம் ஏற்படுத்திய திக்ர் மஜ்லிஸிலும் தாம் அல்லாஹ்வை நெருங்கிய முறையில் ஏனையமக்களும் அல்லாஹ்வை நெருங்கி இறைநேசர்களாக மாறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தம் தரீக்காவின் விடயங்களை கியாமத் நாள்வரை தொடர்ந்து செய்வதற்காக பொறுப்புக்களையும் கடமைகளையும் அந்த நிர்வாக குழுவிற்கு அல்லது தமது தலைமைத்துவ பொறுப்பை வழங்க தகுதியானவர்களிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் அப்பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுகிறார்களா? என்பதை பரீட்சித்து அவற்றில் ஏற்படும் குறை நிறைகளை சுட்டிக்காட்டி செவ்வை செய்பவர்களாகவும் இந்த வலிமார்கள் காணப்பட்டார்கள்.


இப்படியாக தாம் மேற்கொண்ட தஃவா பணியை செவ்வனே நிறைவுசெய்த பின்னர் இவ்வுலக வாழ்வை துறந்தார்கள். அந்தந்த ஊர்களிலே இந்த அவ்லியாக்கள் வபாத்தாகினார்கள். இவர்களை தாங்கள் சொந்தமாக வாங்கிய அல்லது தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியிலே நல்லடக்கம் செய்தார்கள். அப்போது அவர்களுடன் இருந்த மக்கள் தம்மையும் தமது ஊரையும் முஸ்லிமாகவும் முஸ்லிம் கிராமங்களாகவும் உருவாக்கிய இந்த மனிதப்புனிதர்களை பிற்கால சமூத்தவர்களும் அறிந்து வைக்கவேண்டும் என்பதற்காகவும் தாம் இஸ்லாமியர்களாக வாழ்வதற்கு காரணமாக இருந்தவர்களை தமது பரம்பரையினரும் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவும் மரணித்த பின்பும் அல்லாஹ்வின் அருட்கள் இறங்கும் இறைநேசர்களின் கப்ரை அடுத்த மக்களும் தெரிந்து நற்பாக்கியங்களையும் நோய் நிவாரணிகளையம் பெற்று சிறந்து வாழவேண்டும் என்ற உயரிய நோக்கிலே அந்த அவ்லியாக்களின் கப்றுகளை உயர்த்தி கட்டி அடுத்த பொதுமக்களின் கப்றுகளில் இருந்து வேறுபிரித்து வைத்திருக்கிறார்கள். இது தான் அவ்லியாக்களின் கப்றுகள் கட்டப்படுவதற்கும் விசேடமாக வேறுபிரித்து வைக்கப்படுவதற்கும் காரணமாக உள்ளது. கப்றுகள் தரைமட்டமாக்கப்படவேண்டும் என்றோ கப்றுகளில் சீமெந்து போன்றவற்றால் கட்டக்கூடாது என்று பிரச்சாரம் செய்யும் வஹ்ஹாபிகள் ஹதீஸின் உண்மையான அர்த்தத்தை மறைத்து செவ்வை செய்யுமாறு ஒழுங்கு படுத்துமாறு சொல்லப்பட்ட ஹதீஸின் விளக்கத்துக்கு சொந்தக்கருத்து கொடுக்கப்போய. தரைமட்டம் ஆக்குங்கள் என்று தவறான பத்வாக்களை சமூகத்தில் கட்டவிழ்த்து விட்டிருப்பதைக்காணலாம்.


ஆகவே தர்காக்களில் அடங்கியுள்ள அவ்லியாக்கள் அல்லாஹ்வின் இறைநேசர்களே அவர்களைப்பற்றி தெரிந்தவர்களிடம் அல்லது அவர்களுக்கு அருகாமையில் இருந்தவர்களிடம் அல்லது அவ்வூர் மக்களிடம் கேட்டுப்பார்ப்பது கொண்டும் அந்த அவ்லியா மூலமாக வஸீலா முறையில் பலனடைந்தவர்களைக் கேட்பதன் மூலமும் கப்றில் அடங்கியுள்ள மகான் அல்லாஹ்வின் வலிய்யுல்லாஹ் இவர்கள் இறைநேசர்கள் என்று அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது.


யார் எனது வலியை பகைத்துக்கொள்கிறார்களோ அவனுடன் நான் யுத்தப் பிரகடனம் செய்கிறேன் என்று அல்லாஹ் குறிப்பிட்டதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் (ஹதீஸ் குத்ஸி புகாரி) எனவே அவ்லியாக்கள் யார் என்று அறியாமல் இருந்தால் எப்படி அவர்களுடன் பகைத்துக்கொள்ளாமல் இருக்க முடியும்? இதில் இருந்து விளங்குகிறது அவ்லியாக்கள் யார் என்பதை அறிந்து வைத்தால்தான் அல்லாஹ்வுடன் யுத்தம்செய்வதில் இருந்து தப்பிக்க முடியும் இல்லையேல் இது விடயத்தில் வஹ்ஹாபிகள் தமக்கு தெரியாமலே அல்லாஹ்வின் கோப பார்வையில் சதாவும் இருப்பதைதவிர வேறு வழி இல்லாத நஷ்டவாளிகளாகவே இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


எனவே உலகில் மக்கள் கூட்டாக இருந்து திக்ர் ஸலவாத்கள் சொல்லும் விடயத்தை எப்படி மலக்குமார்களிடம் பெருமையாக பேசிக்கொள்கிறானோ அதேபோலவே இப்லீஸை அல்லாஹ் பூமிக்கு சபித்து அனுப்பும் சமயம் இப்லீஸ் கூறினான். பூமியில் நான் உன்னுடைய அடியார்களை அவர்களின் இடம்புறமாகவும் வலம்புறமாகவும் மேலாலும் கீழாலும் சென்று வழிகெடுத்துவேன் என்று சபதமிட்ட போது அல்லாஹ் கூறினான் அப்படி நீ சென்று வழிகெடுத்தினாலும் என்னுடைய. நெருக்கத்தைப்பெற்ற நல்லடியார்களை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதாக அவ்லியாக்கள் பற்றிய நற்சான்றிதழை அன்றே அல்லாஹ் வழங்கினான்.


எனவே அல்லாஹ்வின் நற்சான்றிதல் பெற்ற அவ்லியாக்கள் பற்றி அறிந்துகொள்ள யாருக்கும் ஏன் தேவைப்படுவதில்லை அல்லாஹ்வின் உத்தரவாதத்தைப் பெற்ற வலிமார்களுடன் ஏன் யாரும் நேசம்கொள்வதில்லை அல்லாஹ் மலக்குமார்களிடம் பெருமையாக பேசிக்கொள்ளும் திக்ர் மஜ்லிஸ்களில் ஏன் யாரும் போய் அமருவதில்லை? இத்தகைய சிறப்புவாய்ந்த மஜ்லிஸ்களை வலிமார்கள் ஏற்படுத்தி தரும்போது ஏன் அவற்றை ஏற்றுக்கொள்ள தயாரில்லை? போன்ற வினாக்களை இதை எதிர்ப்பவர்களிடம் முன்வைக்கின்றேன்.


அத்தோடு வலிமார்களோடு நேசம் கொள்ள கூடாது வலிமார்கள் யாரென்று அறிய முடியாது என்று கூறி தரீக்காக்கள் மற்றும் வலிமார்களை கண்டபடி திட்டி நினைக்கும் நேரமெல்லாம் பெண்களை தூண்டி பாதைவழியே பெண்களை சீரழிக்கும் இந்த வஹ்ஹாபிகளுக்கும் வஹ்ஹாபி மெளலவி மார்களுக்கும் வலிமார்களை விமர்சிக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ஆகவே அவ்லியாக்கள் என்பவர்களை நாமும் அறிந்து அவர்கள் ஏற்படுத்திய தரீக்காக்கள் வழியில் நாமும் வாழ்ந்து மரணிக்க வல்லவன் அல்லாஹ் துணைபுரிவானாக ஆமீன்.