MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஆஷுரா தினத்தில் நடைபெற்ற அற்புத சம்பவங்கள் 


​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நாளாகும் இதனால்தான் இந்நாளை முஸ்லிம்கள் விஷேட நாளாக அமைத்துள்ளார்கள்.

1) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டினால் ஆதம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டான்.

2) இன்றுதான் நபி நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல் தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள்.

3) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும், நபீ ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் பிறந்தார்கள்.

4) இன்றுதான் நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் (அலைஹி வஸல்லம்) அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்.

5) இன்றுதான் நபீ யூனுஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.

6) இன்றுதான் நபீ ஐயூப் (அலைஹி வஸல்லம்) அவர்களின் துன்பம் நீங்கியது.

7) இன்றுதான் நபீ யஃகூப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது மகன் யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்களை இழந்ததால் இழந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.

8) இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

9) இன்றுதான் நபி ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் இத்ரீஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களும் வானத்தின் பக்கம் உயர்த்தப்பட்டார்கள்.

10) இன்றுதான்ந பீ யூனுஸ் (அலைஹி ஸ்ஸலாம்) அவர்களை மீனின் வயிற்றில் இருந்து காப்பாற்றிய தினம்.

11) இன்றுதான் நபீ தாஊத் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் பாவத்தை மன்னித்த தினம்.

12) இன்றுதான் நபீமார்களான மூஸா, ஹாறூன் அலைஹிமுஸ் ஸலாம் ஆகியோரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட தினம்.

13) இன்றுதான் நபீ ஹழிர் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் அறிவை அதிகப்படுத்திய தினம்.

14) இன்றுதான் சுவர்க்கம், நரகம் இரண்டையும் படைத்த தினம்.

15) இன்றுதான் தவ்றாத், சபூர், இன்ஜீல், குர்ஆன் முதலான வேதங்களை இறக்கி வைத்த தினம்.

16) ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்றாபீல், இஸ்றாயீல் (அலைஹிமுஸ் ஸலாம்) ஆகியோரை படைத்த தினம்.

17) இன்றுதான் அர்ஷ், குர்ஸீ, லவ்ஹு, கலம், முதலானவற்றை படைத்த தினம்.

18) இன்றுதான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவையும் படைத்த தினம்.

19) இன்றுதான் வானங்கள், பூமி யாவையும் படைத்த தினம்.

20) இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்.

21)இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்.

22)இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது.

23) இன்றுதான் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்.

24) இன்றுதான் சுலைமான் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.

25) இன்றுதான் நபீ ஸகரிய்யா (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலைஹி வஸல்லம்) மகனாகப் பிறந்தார்கள்.

26) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும் தோற்கடித்தார்கள்.

27) இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.

28) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) ஷஹீதாக்கப்பட்டார்கள்.

29) இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இனபந்துக்களில் அநேகர் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

எனவே முஸ்லிம்கள் இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீண் விளையாட்டில் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், திக்று செய்தல், மௌலித் ஓதுதல், ராதிப் மஜ்லிஸ்,பிக்று செய்தல், தியானம் செய்தல்,முறாகபஹ் முஷாஹதஹ் எனப்படும் பேரின்ப ஆத்மீக தியானம் செய்தல் போன்ற நல்ல விடயங்களைக் கொண்டு இந்நாளைச் சிறப்பித்தல் அவசியமாகும்.


​​

♣ ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்து, யாஸீன் ஓதுதல்.

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் குடும்பத்தினல் அனேகர் ஈராக் நாட்டிலுள்ள கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் ஷஹீதாக்கப்பட்டது இத்தினத்திலேயாகும். இதனால்தான் ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு (ஹஸன், ஹுஸைன், அலி, பாதிமாஹ், அஹ்லுல் பைத்துகள்) ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்தம் ஓதி வருகிறார்கள். இன்றுவரை இந்த வழக்கம் பல நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கையில் பல ஊர்களில் ஓதிவரப்படுகிறது .

இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்த போதினும் சமீபத்தில் தோன்றிய வழிகெட்ட கூட்டங்களிற் சில இவ்வழக்கம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் மக்களிடையே பறை சாற்றி வருகின்றது. இத்தகைய கூட்டங்கள் பற்றிப் பொது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


​​

♣ ஆஷூறா தினத்தில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள்

இத்தகைய சிறப்புகளை பெற்ற ஆஷுராவுடைய நாளில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை பார்ப்போம். சில முஸ்தஹ்பான அமல்களை சூபியாக்கள், உலமா பெருமக்கள் கிதாபுகளில் எழுதியுள்ளார்கள்.

1) ஆஷுராவுடைய தினத்தில் குளிப்பது. இதனுடைய பலன் என்னவென்றால் அந்த வருடம் முழுவதும் நோய் நொம்பலங்கள் ஏற்படாது.

2) கண்ணுக்கு சுர்மா இடுவது. இதனுடைய பலன் கண் நோய் வராது.

3) ஸதகா செய்வது. ஏனென்றால் ஹதீஸில் வருகிறது. எவரொருவர் ஒரு திர்ஹம் ஸதகா செய்தால் எழுநூறு ஆயிரம் திர்ஹம் ஸதகா செய்த நன்மை கிடைக்கும்.

4) அனாதைகளின் மீது இரக்கம் காட்டுவது. யாரொருவன் ஆஷுராவுடைய தினத்தில் அநாதைக்கு இரக்கம் காட்டுவானோ அந்த அனாதையின் ஒவ்வொரு தலைமுடியின் அளவுக்கு ஸவாபு கிடைக்கும்.

5) நோயாளிகளை சந்திப்பது. நோயாளிகளை சந்திப்பதனால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும்.

6) அதிகமான நபிலான தொழுகைகளை தொழுந்து கொள்ளுங்கள். இத்தினத்தில் நான்கு றக்அத்துக்கள் தொழுவது ஒவ்வொரு றக்அத்திலும் பாத்திஹா ஸூறத் ஒரு தரமும் ஸூறதுல் இஹ்லாஸ் பதினொரு தரமும் ஓதி தொழுகையை முடித்தால்அவனது ஐம்பது வருட பாவங்களைஇறைவன் மன்னிப்பதுடன் ஒளியினால் ஒரு மின்பர் மேடையும் அமைக்கின்றான்.

7) உறவை துண்டித்தவர்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும்.

8) குடும்பத்தார்களுக்கு செலவழிப்பது.

9) துஆ கேட்பது மிகுதியாக பாவ மன்னிப்பு கேட்பது.

10) நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பெயரால் மௌலித் ஓதுதல், அந்த அடிப்படையில் ஆஷுறா தினமும், ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஷஹாததும் ஹிஜ்ரி 61ம் ஆண்டு ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் (ஷஹாதத்) வீர மரணமடைந்ததாக இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள்.


நூல்: தாரீக் தபரீ-5 /400, அல் பிதாயா வந் நிஹாயா-8/215