MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இஸ்லாத்தில் ஆயுள் காப்புறுதி கூடுமா? (LIFE INSURANCE)
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் (லைப் இன்சூரன்ஸ்) ஆயுள் காப்பீடு பற்றிய தீர்வு என்ன?
♣ இஸ்லாத்தின் பார்வையில் லைப் இன்சூரன்ஸ் (உயிர் காப்பீடு, வாகன காப்பீடு, சொத்து காப்பீடு, பொருள் காப்பீடு, மருத்துவ காப்பீடு) இவையல்லாம் கூடுமா? என்று பார்ப்பதற்கு முன்பு காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்.
ஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும். காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம்தான் 'இன்சூரன்ஸ்' என்று அழைக்கப்படும்.
♣ காப்பீடு முறை
காப்பீட்டு முறையானது காப்பீடு செய்யப்படும் பொருளுக்கு சேதமோ அல்லது அழிவோ ஏற்படும்போது அல்லது காப்பீடு செய்துள்ள நபருக்கு விபத்து போன்றவற்றின் காரணமாக மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின் சந்தை விலையை தனக்கோ அல்லது தான் குறிப்பிடும் நபருக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ காப்பீடு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காப்பீடு செய்யும் நபர் முன்வைக்கிறார்; அதற்காக காப்பீடு செய்யும் நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறது, ஆகவே ஒரு கோரிக்கையை காப்பீடு செய்பவர் முன்வைக்கிறார், அதை ஒரு நிபந்தனையின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.
♣ இஸ்லாத்தில் காப்பீடுத் திட்டம் கூடுமா?
இஸ்லாத்தில் காப்பீட்டுத் திட்டம் கூடுமா? கூடாதா? என்று நேரடியாக பதில் கூறப்படவில்லை. ஆனாலும் சில வழிமுறைகளைக்கொண்டு கூடுமா? கூடாதா? என்பதை அறிஞர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள். காப்பீடு திட்டம் (இன்சூரன்ஸ்) என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும், கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் அதில் எது கூடும்? எது கூடாது? என்பதை மிகத் தெளிவாக விளக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டங்களில் மார்கத்திற்கு மாற்றமான வட்டி கலந்த காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. வட்டியில்லாத காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. நம்முடைய பணத்திற்கு வட்டி கணக்கிட்டு தரக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களில் நாம் ஒரு போதும் சேர்ந்து விடக்கூடாது. இது மார்க்கத்திற்கு மாற்றமானதும் மறுமையில் நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பாவமாகும்.
♦ ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் : 3:130)
♦ அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.
”அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அவை எவை?“ என்று கேட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள். (ஷஹீஹ் புகாரி)
குறிப்பு :- ஒருவர் வட்டியுடன் சேர்த்து திரும்பக் கிடைக்கும் இன்சூரன்ஸில் சேர்ந்து எனக்கு வட்டி வேண்டாம் என்னுடைய அசல் தொகை மட்டும் போதும் என்று கூறினால் அது மார்க்கத்தில் ஹலால் ஆகும். ஆனால் இன்னும் சில காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் வட்டியின் எந்த ஒரு அம்சமும் கிடையாது. இவற்றில் நாம் போடும் பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது. ஆனால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது இன்சூரன்ஸ் நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும். நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையில்லையென்றால் நம்முடைய பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது.
♦ உதாரணமாக மருத்துவக் காப்பீடு (medical insurance), வாகனக் காப்பீடு (vechicle insurance) போன்றவற்றைக் கூறலாம். நம்முடைய மார்க்க அடிப்படையில் நாம் அனைவரும் பணம் போட்டு பைதுல் மால் ஒன்றை ஆரம்பிக்கின்றோம். நமக்கு நோய் ஏற்படும் போது அந்த பைதுல் மாலின் மூலம் நமக்கு உதவி செய்வார்கள்.
நாம் பைதுல் மாலிற்கு செலுத்திய பணம் குறைவாக இருந்தாலும் அனைவரின் பணமும் சேர்ந்து நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையென்றால் அந்தப் பணம் வேறு யாருக்காவது பயன்படும். இது போன்ற ஒரு ஒப்பந்தத்தில்தான் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. நாங்கள் இந்த மருத்துவக் காப்பீட்டில் பணம் செலுத்துகின்றோம். நமக்கு பாதிப்பு வரும்போது அந்த நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு உதவி செய்கிறது. நமக்கு பாதிப்பே வரவில்லையென்றால் நம்முடைய பணம் பாதிப்பு ஏற்பட்ட மற்றொரு சகோதரருக்கு உதவியாகச் செல்லும். இந்த அடிப்படையில்தான் அனைவரும் பணம் செலுத்துகின்றனர்.
இதில் பணத்திற்கு எந்த விதமான வட்டியும் கணக்கிடப்படுவதில்லை.ஆகவே இது போன்றுதான் வாகன இன்சூரன்சும். நாம் நம்முடைய வாகனத்திற்காக குறிப்பிட்ட கால அளவில் குறிப்பிட்ட தொகையை காப்பீடாகச் செலுத்துகின்றோம். இந்த குறிப்பிட்ட கால அளவில் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் போது அந்த நிறுவனம் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படும்.
1) ஒன்று நாம் ஓட்டும் போது எதிரில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
2) இரண்டாவது நாம் ஓட்டுகின்ற வண்டிக்கு பாதிப்பு ஏற்படும்.
3) மூன்றாவது வண்டியின் ஓட்டுனருக்கு ஏற்படும்.
நாம் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒருவன் மீது மோதி அவன் இறந்து விட்டால் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே அவனுக்கு அவனுடைய குடும்ப நிலையை பார்த்து அவனுக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என்பது கட்டாய மார்க்க விதி. நாம் யாராவது ஒருவர் மீது மோதி அவர் மரணத்திதாலோ அல்லது வண்டிக்கு ஏதாவது ஆனாலோ அல்லது நமக்கு ஏதாவது ஆனாலோ எவ்வளவு செலவானாலும் அந்த நிறுவனம் பார்த்துக்கொள்ளும். அப்படி எதுவும் ஆகவில்லையென்றால் பணம் திரும்ப வராது.
இவ்வாறாக கூறித்தான் அனைவரிடமும் பணம் வாங்கப்படுகிறது. இதில் வட்டி இல்லை. அதற்கான சாயலும் இல்லை. இது ஒரு கூட்டு உதவித் திட்டம் தான். இதற்கு மார்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆகையால் இது நமக்கு அனுமதியாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் வட்டியில்லாத வகையைச் சேர்ந்ததாகும். எனவே அதில் இணைவது தவறுகிடையாது.
குறிப்பு : உயிருக்கு பயந்து, தக்கவித்துக்கொள்ள செய்யப்படும் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டத்தை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை
ஏனெனில் மரணம் என்பது எப்போதும் வரலாம் அந்த மரணித்தில் இருந்து தப்பிக்கொள்ள முன்கூட்டியே சேர்கப்படும் காப்பீட்டுத் திட்டம் கூடாது அது இறைநம்பிக்கையை குறைக்கின்றது அதுமட்டுமல்லாமல் கலாகத்ர் நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.
♦ எனவே மேலே கூறப்பட்ட முறையில் இன்சூரன்ஸ்முறை ஷரியாவின் கண்ணோட்டத்தில் கூடுமானதான விஷயமாக இருக்கிறது, இதனடிப்படையில். சொத்துக் காப்பீடு வாகனக் காப்பீடு ,பொருள் காப்பீடு ஆகிய காப்பீடுகளும் இதரவகை காப்பீடுகளும் ஷரியாவிற்க்கு முறனில்லாததாக மேலும் வட்டியில்லாததாக இருந்தால் கூடும் வட்டி கலந்த திட்டங்கலாக இருந்தால் கூடாது.