MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஆடி அசைந்து சப்தமிட்டு திக்ர் செய்வது கூடுமா?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


திக்ர் என்றால் என்ன? மேலும் வட்டமாக நின்று அமர்ந்து கைகளை அசைத்து அமைதியாகவும் சப்தமாகவும் ஹா - ஹூ - ஆஹ் என்றெல்லாம் திக்ர் செய்யலாமா?

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

சப்தமாக திக்ரு செய்வது பற்றியும்,மெதுவாக திக்ரு செய்வது பற்றியும், கைகள் ஆட்டி திக்ரு செய்வது பற்றியும், வட்டமாக அமர்ந்து நின்று திக்ரு செய்வது பற்றியும், சாய்ந்தவர்களாக திக்ரு செய்வது பற்றியும், ஆஹ் - ஹூ என்று கூறி திக்ரு செய்வது பற்றியும், வேறு அல்லாஹ்வை நினைவு கூறும் வார்த்தைகளைக் கூறி திக்ரு செய்வது பற்றியும் கேவலமான முறையில் திக்ர் மஜ்லிஸ்களை வழிகெட்ட வஹ்ஹாபிகள் இது என்ன Dance ஆடிக்கொண்டு, (கையை ஆட்டிக்கொண்டு, சாய்ந்தவர்களாக வட்டமாக) திக்ரு செய்கின்றார்கள் என்று கிண்டல் அடிக்கின்றார்கள்.


​​மேலும் என்ன உரக்க சப்தம் இட்டு கத்துகின்றார்கள் என்றும் விமர்சனம் செய்கின்றார்கள். இவர்களுக்கு வேண்டுமானால் அல்லாஹ்வை திக்ர் செய்யும் விதங்கள் கிண்டலாக தெரியலாம். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களையே குறை காணுபவர்கள் தான் இந்த மகா பாவிகள்.


​​

♣ திக்ர் என்றால் என்ன?

அல்லாஹாவை புகழ்வதற்கு திக்ரு என்று சொல்லப்படும். மேலும் திக்ர் என்பது ஞாபகப்படுத்தல், நினைத்தல் என்ற பொருள் தருவதனால் எமது வணக்கங்களிலும், எமது எல்லா நிலைகளிலும் மறக்காமல் அல்லாஹ்வை திக்ரு எனும் “தியானம்” செய்து அதிகம் செய்து கொள்ள வேண்டும்.


​​ஏனெனில் உலகில் வாழும் நாம் அல்லாஹ்வை வணங்கவே படைக்கப்பட்டுள்ளோம். அந்த அடிப்படையில் திக்ரு "தக்பீர் (அல்லாஹுஅக்பர்), தஹ்மீத் (அல்ஹம்து லில்லாஹ்), தஸ்பிஹ் (சுப்ஹானல்லாஹ்), கலிமா(லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பதும்" மேலும் இது போன்ற அல்லாஹ்வின் தன்மைகள் குறித்தும், அல்லாஹ்வை நினைத்து பார்க்க உதவும் வார்த்தைகள், அல்லாஹ்வை நினைவு கூர்தல் போன்ற அனைத்தும் திக்ர் ஆகும்.


​​

♣ திக்ரின் முக்கியத்துவம் என்ன?

'திக்ர்' ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீகம் சார்ந்த அமல்களில் ஒன்றாகும். இறை நினைவின்றி வாழும் எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் அதிருப்தி நிறைந்ததாகவும், பதட்டம் உள்ளதாகவும், நிம்மதி அற்றதாகவுமே காணப்படும். இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் 'அல்லாஹ்வை நினைவு கூரும் மனிதனுக்கும், அல்லாஹ்வை நினைவு கூராத மனிதனுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு மரணத்திவனுக்கும் உயிர் வாழ்பவனுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு போன்றதாகும். எனக் கூறியுள்ளார்கள்.


​​நூல்: புகாரி 6407

இறை நினைவுடன் செயல்படும் எந்த ஒரு முஸ்லிமும் இறையச்சமுடையவனாகவும், முன்மாதிரியுடைவனாகவும் இருப்பான். அவனது வாழ்வில் தவறுகள் மிகக்குறைவாகவே நிகழும். பிறர் அவனை முன்மாதிரி முஸ்லிம்களில் ஒருவனாக காண்பர். நமக்கு ஈருலக வெற்றியை ஈட்டித்தர வல்ல இந்த மகத்தான 'திக்ர்' என்றால் என்ன? அதனை நமது வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? போன்ற அம்சங்களை அறிந்து கொண்டால் 'திக்ர்' நமது வாழ்வில் தேவைப்பட்டதா? இல்லையா? என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அல்லாஹ் அதற்கு துணை செய்யப் போதுமானவன்.


​​

♣ திக்ர் செய்வதன் சிறப்புகள் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்

♦ ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள், எனக்கு மாறு செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:152)


♦ (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள், மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்ற, அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்!  (அல்குர்ஆன் : 13:28)

♦ அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களான பெண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூருபவர்களான ஆண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் தயார் செய்து வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன் 33:35)

♦  ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினையுங்கள். (அல்குர்ஆன் 33:41)

♦(அல்லாஹ்வின்) வீடுகளில் (வணக்க வழிபாடுகளின் மூலம்) அவை உயர்த்தப்படவும், அவற்றில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமென்றும், (திக்ரு செய்யப்பட வேண்டும் என்றும்) அல்லாஹ் கட்டளை இடுகின்றான். அவற்றில் காலையிலும், மாலையிலும், அவனை திக்ரு செய்வர். (அல்குர்ஆன் 24:36)

♦(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை, நாவுக்கு எளிதானவை, நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் கனமானவை ஆகும். (அவை:) ஒன்று "சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), இரண்டாவது "சுப்ஹானல்லாஹில் அழீம்" (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்) என இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.”


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 7563, 6406, முஸ்லிம் 5224

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் திக்ரும், என் மீது ஸலவாத்தும் ஓதாத எல்லா சபைகளும் மறுமையில் நன்மைகளை இழந்து கைசேதப்படுவதாகவே அமையும், அவர்கள் சுவர்க்கத்திற்க்கு சென்றாலும் சரியே!


​​நூல்கள்: நஸாயீ 10242, 10243 இப்னு ஹிப்பான் 591, பைஹகீ 542

♦ ஸுப்ஹானல்லாஹி அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படுகிறது என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: திர்மிதீ 3386

♦ பயிரை நட்டிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன் என்றார்கள். இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும் என்றார்கள்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு

​நூல் : இப்னுமாஜா 3797

♦ எல்லாவற்றையும் தூய்மை படுத்துதல் இருக்கின்றது, இதயத்தை தூய்மை படுத்துவது அல்லாஹ்வின் திக்ரு ஆகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,"இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது".


ஹழ்ரத் ​​ அபூ மூஸா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6407

♦ ஹழ்ரத் அபூ தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நீங்கள் செய்யும் நற்செயலில் எது சிறந்தது என்று சொல்லவா? மேலும் அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதை, புகழ்ந்து கண்ணியப்படுத்தி, அதன் மூலம் அதிக கூலி பெறுவதையும், இறைவன் பாதையில் தங்கம் செலவழிப்பதை காட்டிலும் சிறந்ததையும் கூறவா? இறைவன் பாதையில் எதிரியை சந்தித்து தனது கழுத்து வெட்டுப்பட்டு உயிரை தியாகம் செய்வதை காட்டிலும் சிறந்ததை கற்று கொடுக்கவா? என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, சரி கூறுங்கள் யா ரசூலல்லாஹ் என்று சஹாபாக்கள் (ரழியல்லாஹு அன்ஹும் ) சொல்ல, அல்லாஹ்வின் திக்ரு என்று நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: திர்மிதி 3377, இப்னு மாஜா

♦அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன். அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவுகூர்ந்தால், நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோர் மத்தியில் அவன் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடம் அவனை நான் நினைவுகூருவேன். அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலமாகவும் இடமாகவும் விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன். என்னை நோக்கி அவன் நடந்துவந்தால், அவனை நோக்கி நான் ஓடிச்செல்வேன்.

ஹழ்ரத் ​அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: முஸ்லிம் 5195, 5196


​​

♣ திக்ர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி - 6405

♦கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலைஹிசலாம்) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி - 6404, முஸ்லிம் 5223

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி - 3293

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை, அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர.


ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: முஸ்லிம் 5222

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ”உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ”என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், ”அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ”என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான். வானவர்கள், ”உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள் இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள்.

அதற்கு இறைவன், ”என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?” என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ”அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்” என்பார்கள். அதற்கு இறைவன், ”அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை” என்பர். அதற்கு இறைவன், ”அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்பான். வானவர்கள், ”சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று பதிலளிப்பார்கள்.

இறைவன், ”அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?” என்று வினவுவான். வானவர்கள், ”நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)” என்று பதிலளிப்பார். இறைவன், ”அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். வானவர்கள், ”இல்லை உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை” என்பர். அதற்கு இறைவன், ”அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்று கேட்பான் வானவர்கள், ”நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்பர்.

அப்போது இறைவன், ”எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ”(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்பார். அதற்கு இறைவன், ”அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்” என்று கூறுவான்.


ஹழ்ரத் ​​அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6408


♣ பர்ளான தொழுகையின் பின்னர் சப்தமிட்டு திக்ர் செய்வது கூடுமா?

♦ தொழுகை முடிந்த பின்னர்: நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்று கொண்டும், இருந்து கொண்டும், விலாப்புறங்களின் மீது படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். (அல்குர்ஆன் 4:103)

♦ அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ஏழை மக்கள் சிலர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து ”பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர், உம்ராச் செய்கின்றனர், அறப்போரிடுகின்றனர், தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)” என்று முறையிட்டனர்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ”நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ”ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்” என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்”. என்று விளக்கம் தந்தார்கள். (நூல் புகாரி 843 மேலும் பார்க்க முஸ்லிம் 5274)

♦ நீங்கள் தொழுதால் ஸுப்ஹானல்லாஹ் 33 விடுத்தம்,அல்ஹம்துலில்லாஹ் 33 விடுத்தம்,அல்லாஹு அக்பர், 34 விடுத்தமும்,லாஇலாஹ இல்லால்லாஹ் 10 விடுத்தமும் கூறுங்கள்” என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத்  இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு

​நூல் : திர்மிதி, பாகம் 1, பக்கம் 55

♦ இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள் கடமையான தொழுகையை முடிக்கும் போது அல்லாஹ்வின் திக்ரில் சப்தத்தை உயர்த்தி திக்ரு செய்யும் நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் இருந்தது. இந்த திக்ரின் சப்தத்தைக் கேட்டு மக்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்.

நூல்: புகாரி: 841

ஆகவே தொழுகைக்கும் பின் சப்தமிட்டு திக்ரு செய்வது சுன்னத் என்ற ஸலபீ (முன்னோர்)களின் கூற்றுக்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். பின்னோர்களில் இப்னு ஹஸ்ம் ளாஹிரியும் சுன்னத் என்றே கூறுகின்றனர் என இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றனர்.


​​நூல்: ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 237

♦ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் கூறிய பின் சப்தமிட்டு லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு எனக் கூறுபவர்களாக இருந்தனர்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 88 அந்த அடிப்படையில் தொழுகைக்குப் பின் சப்தமிட்டு திக்ரு செய்வதற்கு இது தெளிவான ஆதாரம் என ஷெய்க் அப்துல்ஹக் முஹத்திது திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கின்றனர்.


​​

♣ மஜ்லிஸ்களில் வட்டமாக ஆடி அசைந்து அமைதியாகவும் சப்தமிட்டும் திக்ர் செய்வது கூடுமா?

♦ (அறிவாளிகள் யாரெனில்) எவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும் தங்கள் விலாப்புறங்களில் சாய்ந்து கொண்டும் அல்லாஹ்வை நினைவு கூருகிறார்களோ (அவர்கள்தாம்) (அல்குர்ஆன் 3: 190,191)

♦ தொழுகை முடிந்த பின்னர்: நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்று கொண்டும், இருந்து கொண்டும், விலாப்புறங்களின் மீது படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் (அல்குர்ஆன் 4:103)

♦ (நபியே!) காலையிலும், மாலையிலும் நீர் உம் மனதிற்குள் பணிவோடும், அச்சத்தோடும் உரத்த சப்தமின்றி உம் இறைவனின் திக்ரு செய்வீராக! மறந்து இருப்போரில் நீர் ஆகி விடாதீர் (அல்குர்ஆன் 7:205)

♦  இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள் கடமையான தொழுகையை முடிக்கும் போது அல்லாஹ்வின் திக்ரில் சப்தத்தை உயர்த்தி திக்ரு செய்யும் நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் இருந்தது. இந்த திக்ரின் சப்தத்தைக் கேட்டு மக்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்.

நூல்: புகாரி: 841

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சுவனத்தை கடந்து சென்றால் அதில் மேய்ந்து கொள்ளுங்கள் என்றார்கள், அது என்ன என்று சஹாபா பெருமக்கள் கேட்க, அது தான் திக்ரின் (வளையம், வட்டம்) என்று கூறினார்கள் என்று ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்.


​​நூல்: திர்மிதீ

♦ நான் எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுவது போலவே நடந்து கொள்கிறேன், அவன் என்னை நினைக்கும் (திக்ர் செய்யும்) போது நான் அவனுடனேயே இருக்கிறேன் அவன் அவனுள் என்னை நினைத்தால் (அதாவது அமைதியாக திக்ரு செய்தால்) நானும் என்னுள் அவனை நினைப்பேன். ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் (சப்தமாக திக்ரு செய்தால்) அந்த கூட்டத்தை விட சிறந்த கூட்டத்தில் அவனை நினைப்பேன், அவன் என்னை ஒரு ஜாண் நெருங்கினால் நான் ஒரு முழம் நெருங்குவேன், அவன் ஒரு முழம் நெருங்கி வந்தால் ஒரு பாகம் நான் நெருங்குவேன், அவன் என்னிடம் நடந்து வந்து நெருங்க நினைத்தால் அவனிடம் நான் ஓடி வந்து நெருங்குவேன் என அல்லாஹ் கூறுவதாக நபிகள் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: அஹ்மத் 9340

♦ இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் அறிஞர் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களிடம் ஸூபிஸ ஞானிகளுக்கு இறை காதல் ஏற்படும் வேளையில் அவர்கள் நடனமாடுவது தொடர்பாக அதற்கு மார்க்கத்தில் இடமுண்டா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்கப்பட்டது. அவர்கள் சொன்ன பதில் –ஆம். அதற்கு ஆதாரம் உண்டு.


​​ஸெய்யிதுனா ஜஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்கள் தோற்றத்திலும், பண்பிலும் என் போன்று உள்ளீர் என்று சொன்ன போது அவர்களுக்கு முன்னாலேயே ஜஃபர் அவர்கள் நடனமாடினார்கள். அவர்கள் இவ்வாறு செய்தது நாயகத்தின் மகிழ்ச்சியான செய்தி கேட்டதினாலாகும். நபீ பெருமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அச்செயலை – நடனத்தை – நேரில் கண்டும் கூட எந்த மறுப்பும் கூறவில்லை.


​​அல்லாஹ்வை “திக்ர்” செய்யும் சபைகளிலும், “ஸமாஉ” அல்லாஹ்வை, நபீகள் நாயகத்தை, அவ்லியாஉகளை புகழ்ந்து பாடும் சபைகளிலும் நடனமாடுவதும், எழுந்து நிற்பதும் ஆகும். இவ்வாறு செய்யலாம் என்று இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய, பின்பற்றிச் செயல்படுவதற்குத் தகுதியான பல இமாம்கள் – மார்க்க மேதைகள் கூறியுள்ளார்கள். அவர்களில் “ஷெய்குல் இஸ்லாம்” என்றழைக்கப்படுகின்ற இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் “றஹிமஹுல்லாஹ்” அவர்களும் ஒருவர். (நூல் அல்பதாவல் ஹதீதிய்யாஹ் பக்கம் – 217) ஆகவே சாரம் – ஆன்மீக உணர்வால், அல்லது ஒரு மகிழ்ச்சியால் ஒருவர் நடனமாடுவது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றேயாகும்.

♦ ஹபஷிகளான தோழர் பெருமக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடையே ஆடி அசைந்து கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸாலிஹான நல்லடியாராகும் என அவர்களுடைய பாஷையில் பேசி கொள்வார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களென்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள். அதற்கு "முகம்மதுன் அப்துன் ஸாலிகூன் " என கூறுகின்றனர் என அவர்கள் விடையளித்தனர்.


​​நூல்: முஸ்னத் அஹ்மத் - 3:152

♦ நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை பார்த்திருக்கிறேன் . அவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. அவர்கள் இரவு காலங்களில் வணக்கம் புரிந்தவர்களாகும். பயணம் செய்தவர்களை போன்று அவர்கள் களைப்படைந்தவர்களாக காலையில் காட்சி அளிப்பார்கள். பொழுது புலர்ந்து விட்டால் புயல் வீசும் போது மரங்கள் ஆடி அசைவது போல் அவர்களும் ஆடி அசைந்து திக்ர் செய்வார்கள். இன்னும் அவர்கள் கண்களில் இருந்து வழிந்தோடும் கண்ணீர் அவர்கள் ஆடைகளை எல்லாம் நனைத்து விடும்" என்று சொன்னார்கள்.


​​நூல்: இமாம் இப்னு கதீரின் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அல் பிதாயா வல் நிகாயா பாகம்-8 பக்கம் -6, இமாம் அபூ நுஅயிமின் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) - ஹில்யத் அல் அவ்லியா)

♦ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹுஅவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு முறை நான் யா ரசூலல்லாஹ் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இலகுவாக விளங்கவும், அவனை மிகவும் இலகுவான முறையில் வணங்குவதையும், அல்லாஹ்வை மேன்மை படுத்துவதையும் கற்று தாருங்கள் என கேட்டேன், அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீயே! அல்லாஹ்வின் திக்ரை வழமையாக (மெதுவாகவும், சப்தத்தோடும்) செய்து வரவும் என கூறினார்கள். நான் யா ரசூலல்லாஹ் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அனைத்து மனிதர்களும் திக்ரு செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள், எனக்கு விசேஷமாக சிலவற்றை கற்று தரவும் என கேட்டேன். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீயே, நானும், எனக்கு முன் உள்ள அனைத்து நபிமார்களும் செய்த சிறந்த திக்ராகிறது "லா இலாஹா இல்லல்லாஹ்" வாகும்.

எல்லா சுவனமும், இவ்வுலகமும், ஒரு பக்கத்தில் வைத்து, மற்றொரு பக்கத்தில் "லா இலாஹா இல்லல்லாஹ்" என்ற திக்ரைவைத்து நிறுத்தினால், லா இலாஹா இல்லலாஹ் என்ற திக்ரே கனமானதாக இருக்கும். மக்கள் லா இலாஹா இல்லல்லாஹ் என்று கூறும் காலம் வரை கியாமத் நாள் வராது என்று கூறினார்கள். பிறகு நான் யா ரசூலல்லாஹ் அதை நான் எப்பிடி கூறட்டும் என கேட்டேன், அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், உன் கண்ணை மூடி எவ்வாறு லா இலாஹா இல்லல்லாஹ் என்று நான் கூறுவதை செவியுற்று பிறகு நீர் அப்படியே கூறும், நான் செவியேர்கின்றேன் என்று கூறினார்கள். பிறகு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (லா இலாஹா இல்லல்லாஹ்) என்று கூறி நானும் (சப்தத்தோடு) லா இலாஹா இல்லல்லாஹ் என்று கூறினேன். என்று ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி, முஸ்லிம்

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், சஹாபா ரழியல்லாஹு அன்ஹும் அவர்களைப் பார்த்து உங்களில் யாரும் புதியவர்கள் இருக்கின்றார்களா? என்று கேட்க இல்லை என்று நாம் பதில் அளித்தோம். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதவை மூட சொன்னார்கள். மேலும் கூறினார்கள், உங்களின் கையை உயர்த்திக்கொண்டு எனக்கு பின்னால் லா இலாஹா இல்லல்லாஹ் என்று என்று கூற சொன்னார்கள், நாமும் அவ்வாறே கையை உயர்த்தி லா இலாஹா இல்லல்லாஹ் என்று கூறினோம்.


​​பிறகு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்தார்கள், பிறகு கூறினார்கள், அல்லாஹ் என்னை இந்த உலகத்தில் இந்த கலிமாவோடு தான் அனுப்பினான், அதன் படி தான் எனக்கு கட்டளையும் இட்டான், இதில் இருந்து தான் சொர்க்கம் உள்ளது என்று சத்தியம் செய்தும் இருக்கின்றான், அவன் தனது வாக்குக்கு மாறு செய்ய மாட்டான். பிறகு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், மகிழ்ச்சியோடு இருங்கள் அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் என்றார்கள்.


​​ஹழ்ரத் உப்பாதா பின் சாமித் ரழியல்லாஹு அன்ஹு

​நூல்: அஹமத், தப்ரானி


​​

♣ திக்ரு செய்வதற்குரிய அதபுகள் (ஒழுக்கங்கள்).

♦ அல்லாஹ்வை திக்ர் செய்யும் பொழுது கல்பு ஹுழுறுடனும் உள்ளச்சத்துடனும் ஒழுக்கமாகவும் திக்ரு செய்ய வேண்டும். திக்ரு செய்ய முன்னால் தவ்பா செய்ய வேண்டும். ஆகையினால் திக்ரு செய்கிறவர்கள் செய்த பாவத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

♦ராத்திபு செய்கிற இடம் அதாவது திக்ர் மஜ்லிஸ் சுத்தமாக இருக்க வேண்டும். அத்தர், சந்தனம், பூக்களை முன்னாடியே மஜ்லிஸிலுள்ளவர்களுக்கு பூசியும், சாம்புராணி ஊதுபத்தி போன்ற வாசனை புகைகளை கொண்டு இடத்தை வாசமாக்கி கொண்டு பின் சாம்புராணி சட்டி மற்றதுகளை 'ஹல்கா'வை விட்டும் அப்புறப்படுத்திவிட வேண்டும்.

♦ ராத்திபு செய்கிறவர்கள் ஹலாலான துப்புரவான உடை கொண்டும் உளு செய்வது கொண்டும் உடலை அழகாக்கியும் ஹலாலான உணவை அதிலும் குறைந்த அளவை அருந்துவது கொண்டு வயிற்றை துப்புரவாக்கியும் என்னத்தை தூமைப்படுத்தியும் (கல்பு ஹுழுராகிறதை போக்கக் கூடிய பசியில்லாது போனால் ஆகாரம் புசிக்காதிருப்பதுவே நல்லது)

♦ அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்வது கொண்டு அவனுடைய மஹப்பத்தையும், பொருத்தத்தையுமே அல்லாது எப்பொருளையும் அவனிடம் ஆதரவு வைப்பதையும் அவை மனதில் ஊசலாடுவதையும் விட்டு மனதை தூய்மையாக்கியும் அதபாக உட்கார்ந்து தொடையில் கையை வைத்து கண்ணைப் பொத்திக் கொண்டு, தனக்கு முன்னால் ஷெய்கு அவர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்கள் கிட்டவே இருக்கிறோம் என்று நினைத்து அவர்கள் சூரத்தை மஹப்பத்தோடு ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

♦ நகீர் (திக்ரை நடத்துபவர்) அவர்கள் 'நக்ரவுல் பாத்திஹா' என்று ஒதம் போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மற்றும் எல்லா ஷெய்குமார்களும் மஜ்லிஸிற்கு ஹாழிராயிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய பேர்களையும் சொல்லி அவர்களுக்கெல்லாம் பாத்திஹா ஓதுகிறோம் என்று சொல்கிறார் என்றும் மனதில் நினைக்க வேண்டும்.

♦ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஷெய்குமர்களும் நமக்கு முன்னாலேயே ஹாழிராகி இருப்பதினால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் சொல்லும் போது '(ஸலவாத்து) அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்' என்பதையும், ஷெய்குமார்கள் பெயர் சொல்லும் போது'(தறழ்ழி)' ரலியல்லாஹு அன்ஹு என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டும்.

♦ பின்பு கொஞ்சநேரம் மனதையே நோட்டமிட்டுக் கொண்டிருந்து நகீப் அவர்கள் திக்ரை ஆரம்பிக்கிற போது அவர் சொல்வது போல், அவர் நீட்டி சொன்னால் நீட்டியும், துரிதமாக சொன்னால் துரிதமாகவும், எல்லாவர்களும் ஒற்றுமையாகவும் சப்தமிட்டு (முழு ஹிம்மத்தோடு) இனியும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லமுடியாதென்ற விதமாக முழு சக்தியோடும் எல்லாவர்களும் ஒரே தொனிவோடும் திக்ரின் கருத்தை மனதில் கவனித்துக் கொண்டும் சொல்ல வேண்டும்.

♦ திக்ரு செய்யும்போது கல்பே திக்ரு செய்வது போலும் தான் அதைக் கேட்டு நாவால் மொழிவது போலும் கருதி கல்பின் பக்கம் காது தாழ்த்தி கேட்டுக் கொண்டும் திக்ரின் பொருளைக் கவனித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.

♦ அல்லாஹுத்தஆலாவின் மீது மஹப்பத்தும், ஆசையும் உண்டாகி அதிலேயே மூழ்கி தன் உணர்வு அற்று மயக்கம் உண்டாகும் வரையிலும் திக்ரை நிறுத்தக் கூடாது. பின்பு திக்ரை முடித்துவிட்டால் வாய்பொத்தி ஒடுங்கி திக்ரை கல்பில் நடத்தாட்டிக் கொண்டு திக்ரின் ஞாபகத்திலேயே(முறாக்கபா) வாரிதாத்து தஜல்லியாத்துகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். (மஹப்பத்து) ஆசை, (ஸுஹ்து)-உலக வெறுப்பு, (வரஃ)பேணுதல், (தஹ்ம்முல்) சகிப்பு, (ரிழா) அல்லாஹ்வின் கற்பனையில் திருப்தி இது போன்ற வாரிதுகளில் ஒன்று, அல்லது மறைவான உலகத்தின் ஒளி தோற்றமென்ற தஜல்லியாத்துகளில் ஒன்று ஒரு கணத்தில் இவனை வந்து கவர்ந்துக் கொள்ளவும் கூடும்.ஆகையினால் வாய்பொத்தி ஒடுங்கி மூச்சை பல முறையும் அடக்கி விட்டுக் கொண்டே திக்ரின் கருத்திலேயே இருப்பானேயானால் (வாரிது) அல்லாஹ்வின் அருள் இவனை எல்லா ஆலம்களிலும் கொண்டு சுற்றும். ஆகையினால் கொஞ்சம் தாமதிப்பது அவசியமாகும்.

♦ திக்ரு செய்யும் போதும் , திக்ரு முடித்த பின்பும் தண்ணீர் குடிக்காதிருப்பது திக்ரின் அதபுகளில் முக்கியமானதாயிருக்கும்.ஏனென்றால் திக்ரானது, கல்பில் உஷ்ணத்தை உண்டாக்கும். அதனால் கல்பில் பிரகாசமும், தஜல்லியாத்தும், வாரிதாத்தும் வரும். தண்ணீர் கடிப்பதினால் கல்பின் உஷ்ணம் தூர்ந்து போகும். ஆகையினால் குறைந்தது அரைமணி நேரமாகிலும் சென்றபின் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு நேரம் அதிகம் சென்றாலும் நல்லதுதான். தண்ணீர் தேவைப்பட்டவர்கள் திக்ரு ஆரம்பிக்க முன்னாடி குடித்துக் கொள்ளலாம்.

♦ எழும்பி நின்று (தாயிம் அல்லாஹ்) என்று திக்ரு செய்யும் போது தாயீம் என்று யேயை நீட்டாமல் (தாயிம்) என்றும் தலையை குனிந்தும் அல்லாஹ் என்று தலையை உயர்த்தியும் அல்லாஹ்விலுள்ள (ஹ்)வுக்கு ஸுகூன் வைத்தும் சொல்லி மூச்சை விடவேண்டும்.(தாயிம் அல்லாஹ் ஹைய்) என்று திக்ரு செய்யும் போது (ஹைய்) எனும்போது திரும்பவும்தலை குனிந்தும் சொல்லி அதில் மூச்சை விடவேண்டும். இதுபோலவே மற்றயெல்லா திக்ருகளிலும் அவர் சொல்வது போலவே சொல்ல வேண்டும். ஜத்பானவர்கள் தன் நினைப்பில்லாது சொல்வதை அனுசரித்து அவர்களைப்போல் மற்றவர்களும் சொல்லக் கூடாது.


​​

♣ ஹா ஹா, ஹூ ஹூ, ஆஹ் என்றெல்லாம் திக்ர் செய்யலாமா?

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : உங்களை மக்கள் மஜ்னூன் (பைத்தியம் - லூசு - கிருக்கு பிடித்தவர்கள்) என்று கூறும் அளவிற்கு நீங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். (நூல்கள் அஹமத், இப்னு ஹிப்பான், ஹாகிம்)

​​

இன்று எங்களைப் பார்த்து (திக்ர் மஜ்லிஸை) வழிகெட்ட வஹ்ஹாபிகள் அப்படிதான் அதாவது பைத்தியம் என்று கூறிக் கொண்டு தான் திரிகின்றார்கள். இது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு. ஆகவே இவர்கள் சொல்கின்றார்களே என்று நாம் வெட்கப்பட தேவையில்லை. நாங்கள் அல்லாஹ்வை தான் புகழ்கின்றோம்.


​​மேலும், அல்லாஹ்வின் திக்ரு தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் தண்டனையை விட்டு பாதுகாப்பு அளிக்காது என்று ஹழ்ரத் முஆத் பின் ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். மேலும் அல்லாஹ் அனைத்து விஷயங்கள் நின்றும் ஒரு எல்லையை வகுத்து உள்ளான் ஆனால் திக்ரை தவிர. திக்ரு செய்வதற்கு ஒரு எல்லை இல்லை என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

வட்டமாக அமர்ந்து நின்று கையை ஆட்டிக்கொண்டும், அமைதியாகவும் சப்தமிட்டும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திக்ர் செய்யும் படியும் கூறியுள்ளார்கள். அதனால் செய்கின்றோம். மேலும் ஒருவர் நடுவில் கையை தட்டிக்கொண்டு திக்ரு செய்கின்றார் என்றும் வஹ்ஹாபிகள் விமர்சனம் செய்வார்கள். இரண்டு கையை தட்டுவது தொழுகையில் தடுக்கப்பட்டுள்ளது, வேறு இடங்களில் தடுக்கப்பட்டுள்ளதா? இல்லேயே! மேலும், இரண்டு கை தட்டி தான் ஓசை வரக்கூடாதா? நீங்கள மேஜையை தட்டி சப்தம் உருவாக்குவதில்லையா! அந்த சப்தம் கூடுமா?

திக்ர் மஜ்லிஸ்களில் சுயமிழந்த ஜத்புடையவர்களோ அவர்களுக்கு உண்டாகும் (லம் ஆத்) வெளிச்சம், (தஜல்லி) பிரகாசம் (தவ்க்) அனுபோகத்துக்கு தக்கவாறு அவர்கள் நாவிலிருந்து (அல்லாஹ்-அல்லாஹ்)- ஹூ – ஹூ அல்லது ஹா ஹா, (ஆஹ் ஆஹ்) அல்லது அச்சரமில்லாத சப்தம் அல்லது அழுகை அல்லது கைகாலை அடிப்பது, உருளுவது இது போன்றதுகள் உண்டாகும். அப்போது அவர்களுக்கு அதபாகிறது: அது என்னது? என்று சிந்திக்காமலும், வேண்டுமென்றும் செய்யாமலும் வாரிதாத்து செய்வது போல் செய்யவிட்டு கொடுத்துவிட வேண்டும்.வாரிதாத்து செய்யும் வேலையை செய்து முடிந்து தனக்கு ஞாபகம் வந்தபின் மேலும் வாரிதாத்து வருவதை எதிர்பர்த்துக் கொண்டும் ஒடுங்கியிருக்க வேண்டும்.

ஆகவே வாரிதாத்தினால் பரவசமுண்டாகும் போது அது நம்மை என்னென்ன செய்யுமோ, நம் வாயிலிருந்தும, உறுப்புகளிலிருந்தும் என்னென்ன சொற்செயல்கள் உண்டாகுமோவென்றும் அஞ்சி ஆரம்பத்தில் கொஞ்சம் ஞாபகமிருக்கும் போது அதை நிறுத்தக் கூடாது. வாரிதாத்தின் போக்குபோல் விட்டுவிட வேண்டும். ஏனென்றால் ஒரு விடுத்தம் கொஞ்சம் (ஜத்பு) ஹக்கின் ரஹ்மத் அடியானின் கல்பை பிடித்து அவன் பக்கம் இழுப்பதானது கல்பை விட்டும் எவ்வளவோ கறல்களை நீக்கி விடுகிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவுளமாயிருக்கிறார்கள் : ரஹ்மானுடைய கிருபையின் இழுப்புகளில் ஒரு லேசான இழுப்பாகிறது (மனு ஜின்னு ஆகிய) இரு கூட்டத்தார்களின் இபாதத்தைப் பார்க்கிலும் விஷேசமாக இருக்கும்.ஆனால் ஜத்பானவர்கள் தங்களுக்கு ஜத்பு நீங்கி நல்ல சுயம் வந்தபின் அவர்கள் சுயமாகவும் ஞாபகத்தோடும் ஏற்கன சுயமில்லாத போது ஏற்பட்ட சொற்செயலை சொல்லாதும் செய்யாதும் மற்றவர்கள் சொல்வது போல் திக்ரு செய்தும் திக்ரின் கருத்திலேயே கவனத்தை செலுத்திக் கொண்டும், திரும்பவும் ஜத்பு வருவதை எதிர்ப்பார்த்து கொண்டுமிருக்க வேண்டும்.

மேலும் குறிப்பிட்டபடி திக்ருகள் முழுவதையும் செய்ய வசதியில்லாத போது லாயிலாஹ இல்லல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ், இல்லல்லாஹ், அல்லாஹ் என்ற நான்கு திக்ருகளையும், அதற்கும் வசதியில்லாதபோது அல்லாஹ் எனும் திக்ரு ஒன்றையாவது செய்துக் கொள்ளலாம்.

எது எப்படி இருந்தாலும் ஹூ என்ற வார்த்தை இறைவனை குறிக்கும் அந்த அடிப்படையில் அல் குர்'ஆனில் பல இடங்களிலும் வந்துள்ளது. இதற்க்கு மேலாக என்ன ஆதாரம் வேண்டும்? அஆஹ் - ஹூ என்ற திக்ரை வழிகெட்ட வஹ்ஹாபிகள் கிண்டல் செய்து, அல்லாஹ்வின் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்து கூறுகின்றார்கள், அப்படியானால் ரஹ்மானிற்கு ரன் என்றும், ரஹீமிற்கு ரம் என்றும் கூறுவார்களா? என்று கேட்கின்றார்கள். நாம் ஹூ என்று கூறுவது குர்ஆன் அடிப்படையில் தான் கூறுகின்றோம். இல்லை அது தவறு என்றால், ஆஹ் - ஹூ என்பதற்கு அல்லாஹ்வை குறிக்கும் சொல் இல்லை என்றாவது நிரூபிக்க முடியுமா? என்றால் முடியாது, காரணம் ஆஹ் - ஹூ என்பதும் அல்லாஹ்வை தான் குறிக்கும் சொல்லாக இருக்கின்றது. ரன் என்பதும், ரம் என்பதும் அல்லாஹ்வை குறிக்காது, அதனால் சொல்லக்கூடாது. சொல்ல முடியாது.

எதை எதையோ கிண்டல் அடித்தவர்கள் இறுதியாக அல்லாஹ்வையும், அல்லாஹ்வை திக்ரு செய்பவர்களையும் கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அல்லாஹ்வை திக்ரு செய்யாமல், அதை எதிர்க்கவும் செய்ததினால், இவர்களின் மறுமை பாழாக இருக்கின்றது என்பதையும் தெரிவித்து, அல்லாஹ் நம்மையும், நம் பெற்றோர், குழந்தைகள், நம் வருங்கால சந்ததியினர், நம் உறவினர்கள், நம் சுற்றத்தார்கள், சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள், அனைவரையும் இவர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுவானாக! என்று துஆ செய்தவனாக முடிக்கின்றேன்.