MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் இன்ஷிகாக் – 84 (பிளந்துவிடுதல்)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 107, வசனங்கள் – 25, எழுத்துகள் – 430
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. வானம் பிளந்துவிடும் பொழுது –
2. அது தன்னுடைய ரப்பின் கட்டளையை செவியேற்று (அதை நிறைவேற்ற) அது தகுதியாக்கப்பட்ட போது –
3. பூமி (ஒரே சமமாக) விரிக்கப்பட்ட போது –
4. அது (அந்நிலையில்) தனக்குள் உள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விட்டது –
5. இன்னும் அது தன்னுடைய ரப்பின் கட்டளையை செவியேற்று, (அதை நிறைவேற்ற) அது தகுதியாக்கப்பட்ட போது:
6. ‘மனிதனே! நிச்சயமாக நீ உன்னுடைய ரப்பிடம் (சேரும்வரை பல்வேறு வகையில்) சிரமம் எடுத்துக்கொண்டிருக்கிறாய் – பிறகு அவனை சந்திக்கிறவனாக இருக்கின்றாய்.
7. எனவே, எவரொருவர் – அவருடைய பட்டோலை அவரின் வலக்கரத்தில் கொடுக்கப்பட்டாரோ –
8. விரைவில் இலேசான கேள்வியாக அவர் கேள்வி கணக்கு கேட்கப்படுவார் –
9. (சுவனத்தில் உள்ள) தம் குடும்பத்தாரிடம் மகிழ்ச்சிகரமானவராக திரும்புவார்.
10. எவன் ஒருவன் அவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்புறமாக கொடுக்கப்பட்டானோ –
11. விரைவில் அழிவு, (அழிவு) என அவன் கூக்குரலிடுவான்.
12. இன்னும் கொழுந்து விட்டெரியும் நரகில் அவன் புகுவான்.
13. நிச்சயமாக அவன் தன் குடும்பத்தாருடன் (உலகில் மறுமையைப் பொய்யாக்கியவனாக) மகிழ்ச்சியோடு இருந்தான்.
14. நிச்சயமாக அவன், (தன்னுடைய ரப்பிடம்) நிச்சயமாக, திரும்பிச் செல்லவே மாட்டான் என்று எண்ணி இருந்தான்.
15. ஆம்! மெய்தான்! (அவன் நிச்சயம் திரும்பி செல்வான்:) நிச்சயமாக அவனுடைய ரப்பு அவனை நோக்குகிறவனாகவே இருந்தான்.
16. ஆகவே, (அந்தி பொழுதின்) செம்மேகத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன் –
17. இன்னும் இரவின் மீதும், அது சேர்த்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியம் செய்கிறேன்)
18. இன்னும் (தன் ஒளியை) ஒருமித்துக் கூட்டிய போதுள்ள பூர்ணச் சந்திரன் மீதும் (சத்தியம் செய்கிறேன்)
19. (மனிதர்களே!) ஒரு நிலையை விட்டும் மற்றொரு நிலைக்குப் திண்ணமாக நீங்கள் கடந்து செல்வீர்கள்.
20. எனவே, (காபிர்களாயுள்ள) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
21. அவர்களிடம் குர்ஆன் ஓதப்பட்டால் “ஸுஜூது” செய்வதுமில்லை.
22. ஆனால் காபிர்கள் (இதனை) பொய்யாக்குகின்றனர்.
23. (தம் உள்ளங்களின் மறைத்து) அவர்கள் சேர்த்து வைத்திருப்பவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
24. எனவே நோவினை தரும் வேதனையை கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக –
25. ஈமான் கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர அவர்களுக்கு (என்றும்) முடிவுறாத நற்கூலி உண்டு.