Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துத் தத்ஃபீஃப் – 83  (குறைவு செய்த)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 169,  வசனங்கள் – 36,  எழுத்துகள் – 730


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (எடையிலும், அளவிலும்) குறைவு செய்கிறவர்களுக்கு கேடு உண்டாவதாக!

2. அவர்கள் எத்தகையோரென்றால் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள்.

3. ஆனால் அவர்களுக்குத் தாங்கள் அளந்துக் கொடுத்தால், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் குறைவு செய்(து நஷ்டம் உண்டாக்கு) வார்கள்.

4. நிச்சயமாக தாம் (இறந்தபின்) எழுப்பப்படுவோர் என்பதை அவர்கள் உறுதிக்கொள்ள வில்லையா? –

5. மகத்தான ஒரு நாளில் –

6. (கபுருகளை விட்டும் மனிதர்கள் அனைத்துலகோரின் ரப்பின் முன் எழுந்து நிற்கும் நாளில்.

7. விஷயம் அவ்வாறல்ல! நிச்சயமாக குற்றவாளிகளின் செயலேடு ஸிஜ்ஜீ(ன் எனும் பதிவேட்டி)னில் இருக்கிறது.

8. (நபியே!) ஸிஜ்ஜீன் என்பது என்னவென்று உமக்கு தெரியுமா?

9. (அது பாவிகளின் செயல்கள்) பதிவு செய்யப்பட புத்தகம்.

10. பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான் -

11. அவர்கள் எத்தகையோரென்றால் நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்யாக்கினார்கள்.

12. வரம்பு மீறிய பெரும்பாவியாகிய ஒவ்வொருவனையும் தவிர (வேறு எவரும்) அதனைப் பொய்யாக்கப்படமாட்டார்கள் –

13. நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக்காட்டப்பட்டால், “(இவை) முன்னோர்களின் கற்பனைக் கதைகள்” என்று அவன் கூறுவான்.

14. அவ்வாறல்ல! எனினும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை, அவர்களுடைய நெஞ்சங்களில் துருவாகி (உண்மையை மறைத்து)
விட்டன.

15. அவ்வாறு (அவர்கள் கூறுவது போல்) அல்ல: நிச்சயமாக அவர்கள் அந்நாளில் தங்களுடைய ரப்பை விட்டும் தடுக்கப்பட்டோராவார்கள்.

16. பிறகு, நிச்சயமாக அவர்கள் நரகத்தில் புகுவார்கள்.

17. பின்னர், “நீங்கள் எத்தனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அது இதுதான்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.

18. (ஆனால் முஃமின்கள் நிலை) அவ்வாறல்ல! நிச்சயமாக நல்லோர்களின் செயலேடு இல்லிய்யீ(ன் எனும் பதிவேட்டி)னில் இருக்கும்.

19. ‘இல்லிய்யீன்’ என்பது என்னவென்று (நபியே!) உமக்குத் தெரியுமா?

20. (அது நல்லோர்களின் செயல்கள்) பதியப்பட்ட புத்தகம் –

21. (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான (வான)வர்கள் அதனைப் பார்ப்பார்கள்.

22. நிச்சயமாக நல்லோர்கள் (பாக்கியமிக்க சொர்க்கமான) நயீமில் இருப்பார்கள்.

23. ஆசனங்களின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள் –

24. அவர்களுடைய முகங்களில் நயீமின் செழிப்பை நீர் அறிவீர்.

25. முத்திரையிடப்பட்ட தூய மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள் –

26. அதனுடைய முத்திரை கஸ்தூரியாகும்: எனவே இ(ந்த பாக்கியமான)வற்றின் மீது ஆர்வம் கொள்பவர்கள் (அவற்றை ஈட்டித் தரும் நல்ல அமல்கள் மீது) ஆர்வம் கொள்ளட்டும்.

27. அதனுடைய கலவை தஸ்னீம் (என்னும் சுனை நீர்) ஆகும்.

28. (தஸ்னீம் என்னும் அது) ஒரு நீரூற்று, (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்கள் அதனை அருந்துவார்கள்.

29. நிச்சயமாக குற்றம் செய்த (காபிரான) வர்கள் முஃமின்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

30. (அன்றியும் முஃமின்கள்) அவர்கள் பக்கமாக நடந்து சென்றால், கண் சிமிட்டிச் சாடை செய்து கொள்வார்கள்.

31. மேலும், அவர்கள் தம் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றால் (முஃமின்களை அவ்வாறெல்லாம் பரிகாசம் செய்தது பற்றிப்) பேசி மகிழ்ந்தவர்களாகத் திரும்பிச் செல்வர்.

32. அவர்களை (-முஃமின்களை) இவர்கள் பார்த்தால், “நிச்சயமாக அவர்கள் வழி தவறியவர்கள்,” என்று கூறுகின்றனர்.

33. (முஃமின்கலான) அவர்களின் மீது இவர்கள் பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லை.

34. ஆகவே, (மறுமை நாளான) இன்று முஃமின்கள் காபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.

35. (சுவனத்தில்) ஆசனங்களின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

36. “காபிர்கள் – அவர்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டதா?” (என்றும் கேட்பார்கள்.)