Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துத் தக்வீர் – 81  (சுருட்டுதல்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 104,  வசனங்கள் – 29,  எழுத்துகள் – 530


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. சூரியன் (ஒழி போக்கப்பட்டுச்) சுருட்டப்படும் போது –

2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும் போது –

3. மலைகள் பெயர்க்கப்ப(ட்டுப் புளுதியாகப் பரத்தப்ப)டும் போது –

4. சூழ் கொண்ட ஒட்டகைகள் (கவனிக்கப்படாமல் அலைய) விடப்படும் போது –

5. காட்டு மிருகங்கள் (மனிதர்கள் வசிக்கும் தளங்களில்) ஒன்று சேர்க்கப்படும் போது –

6. கடல்கள் (நெருப்பாக) எரிக்கப்படும் போது –

7. ஆன்மாக்கள் (அவற்றுக்குரிய உடல்களுடன்) இணைக்கப்படும் போது –

8. (உயிருடன் புதைக்கப்பட்ட) பெண் குழந்தை விசாரிக்கப்படும் போது –

9. “எந்தப் பாவத்திற்காகக் கொல்லப்பட்டால்?” என்று.

10. பட்டோலைகள் விரித்து வைக்கப்படும் போது –

11. வானம் (அதற்கப்பால் இருப்பவையும் தெரியுமாறு) சுழற்றப்படும் போது –

12. நரகம் கொழுந்து விட்டெரியச் செய்யப்படும் போது –

13. சொர்க்கம் நெருங்கி வருமாறு செய்யப்படும் போது –

14. ஒவ்வோர் ஆத்மாவும் (அது அங்கு) கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

15. எனவே, பின்னால் விலகிச் செல்பவற்றின் (- நட்சத்திரங்களின்) மீது நான் சத்தியம் செய்கிறேன்.

16. முன்னே செல்பவையும் மறையக் கூடியவையுமான... (நட்சத்திரங்களின் மீது சத்தியம் செய்கிறேன்) –

17. (உதயத்தை நோக்கி) முன் செல்கின்ற இரவின் மீது சத்தியமாக –

18. மூச்சு விட்டுக் கொண்டு உதயமாகும் வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக –

19. நிச்சயமாக இ(க் குர்ஆனான)து சங்கைக்குரிய தூதுவர் (ஜிப்ரீல் மூலம் கொண்டு வரப்பட்ட) சொல்லாகும்.

20. (அவர்) வலிமையுடையவர்: அர்ஷுடையவனிடத்தில் (அவர்) மேலான பதவியுடையவர் –

21. (வானுலகமாகிய) அவ்விடத்தில் ஏற்கப்படுகின்ற (தலை)வர்: நம்பிக்கைக்குரியவர்.

22. (நம் ராஸுலாகிய) உங்களுடைய தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

23. மேலும் அவரை (-ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் திட்டமாக அவர் பார்த்தார்.

24. அவர் மறைவானவற்றை (உங்களுக்கு அறிவிப்பதை)க் கொண்டு உலோபத்தனம் செய்பவரல்லர்.

25. இன்னும் அ(ந்த குர்ஆனான)து விரட்டப்பட்ட ஷைத்தானுடைய சொல்லுமல்ல –

26. எனவே, (இக்குர்ஆனை விட்டு) எங்கே நீங்கள் செல்கிறீர்கள்?

27. இது அகிலத்தொருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமே தவிர (வேறு) இல்லை –

28. உங்களிலிருந்து நேர்வழி நடக்க விரும்புவோருக்கு (நினைவூட்டும் நல்லுபதேசமாகும்.)

29. எனினும், அகிலத்தோரின் ரப்பாகிய அல்லாஹ் நாடினாலன்றி (நல்லுபதேசம் பெற) நீங்கள் நாடமாட்டீர்கள்.