MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரா அபஸ – 80 (கடுகடுத்தார்)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 130, வசனங்கள் – 42, எழுத்துகள் – 533
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. (நபியாகிய) அவர் கடுகடுத்தார்: முகத்தையும் திருப்பிக் கொண்டார் –
2. பார்வையற்ற ஒருவர் அவரிடம் வந்ததற்காக –
3. (நபியே!) அவர் பரிசுத்தமடைந்து விடக்கூடும் (என்பது பற்றி) உமக்கென்ன தெரியும்?
4. அல்லது உபதேசத்தை அவர் நினைவு கூறலாம் – அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பலனளிக்கலாம் (என்பது பற்றி உமக்கென்ன தெரியும்?)
5. எவர் (தீனின் பக்கம்) தேவையற்றவராக இருக்கிறாரோ –
6. நீர் அவரையே முன்னோக்குகிறீர்.
7. அவர் பரிசுத்தம் ஆகாததினால் உம்மீது குற்றம் (ஏற்படப்போவது) இல்லை.
8. (எனினும்) எவர் உம்மிடம் விரைவாக வந்தாரோ –
9. அவர் (அல்லாஹ்வை) அஞ்சிய நிலையில் –
10. அவரை விட்டும் நீர் பராமுகமாகி விடுகின்றீர்.
11. அவ்வாறல்ல! நிச்சயமாக இ(வ் வேதமான)து ஓர் உபதேசமாகும்.
12. எனவே, எவர் நாடுகிறாரோ, அவர் அதனை நினைவில் கொள்வார்.
13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் உள்ளதாகும் –
14. உயர்வாக்கப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட (ஏடுகளில் உள்ளதாகும்.)
15. எழுதுவோர்களின் கரங்களினால் (எடுத்தெழுதப்பட்டதாகும்.)
16. (அவர்கள்) சங்கையானவர்களும், நல்லோர்களுமானவர்கள்.
17. (நாயன் செய்துள்ள நன்மைகளை நினையாது அவனுக்கு மாறு செய்யும்) மனிதன் நாசமடைக! எவ்வளவு நன்றியற்றவனாக இருக்கிறான்?
18. எந்தப் பொருளினால் அவனை (மனிதனை) அவன் படைத்துள்ளான்?
19. ஒரு துளி விந்திலிருந்து: அவனை அவன் படைத்து, (வேண்டிய உறுப்புகளுடன்) அவனை அமைத்தான் –
20. பிறகு (தாய் வயிற்றிலிருந்து வெளிவரும்) வழியை அவனுக்கு இலேசாக்கி வைத்தான்.
21. பிறகு அவனை மரணிக்கச் செய்து, அப்பால் அவனை கப்ருக்குள் ஆக்கினான் –
22. பிறகு அவன் தான் நாடும்பொழுது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
23. மெய்யாக, (அல்லாஹ்) அவனுக்கு ஏவியதை இவன் நிறைவேற்றவில்லை.
24. எனவே, மனிதன் தன் உணவின்பால் கவனித்துப் பார்க்கட்டும்.
25. நிச்சயமாக நாமே (மேகத்திலிருந்து) நீரைப் பொழிவதாகப் பொழியச் செய்தோம்.
26. பிறகு பூமியைப் பிளப்பதாகப் பிளக்கச் செய்தோம்.
27. பின்னர் அதில் தானியத்தை முளையச் செய்தோம்.
28. திராட்சையையும், காய்கறிகளையும் (விளையச் செய்தோம்.)
29. ஒலிவ மரத்தையும், பெரிச்சையையும் –
30. மரங்கள் அடர்ந்த தோட்டங்களையும் –
31. பழத்தையும் தீவனத்தையும் (உண்டாக்கினோம்.)
32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் சுகமளிக்கும் பொருளாக (இவற்றை விளையச் செய்தோம்.)
33. எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் (இரண்டாவது ஸுர்) வரும்பொழுது.
34. அந்நாளில் மனிதன் தன்னுடைய சகோதரனை விட்டும் வெருண்டோடுவான் –
35. அவனுடைய தாயையும், அவனுடைய தந்தையையும் விட்டு –
36. அவனுடைய மனைவியையும், அவனுடைய மக்களையும் விட்டு (வெருண்டோடுவான் -)
37. அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் (தான் எவ்வாறு வேதனையிலிருந்து தப்புவது என்னும் அவனுடைய) சொந்தக்காரியமே (கவலையாக மிகைத்து) இருக்கும்.
38. அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாயிருக்கும் –
39. சிரித்தவையாகவும், மகிழ்ச்சியுள்ளவையாகவும் இருக்கும்.
40. (ஆனால்) அந்நாளில் இன்னும் சில முகங்கள் – அவற்றின் மீது புழுதி படிந்தவையாயிருக்கும்.
41. அவற்றைக் கருமை நிறம் மூடிக் கொண்டிருக்கும்.
42. அவர்கள்தாம் (உலகில்) குற்றமிழைத்த காபிர்கள்.