Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் முர்ஸலாத் – 77  (அனுப்பப்படுபவை)
(மக்கீ)  பிரிவு - 2,  சொற்கள் – 180,  வசனங்கள் – 50,  எழுத்துகள் – 816



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

ருகூஃ 1

1. தொடராக அனுப்பப்படுபவை(யான நல்ல காற்று)கள் மீது சத்தியமாக –

2. வேகமாக வீசுகின்ற (புயற்காற்று போன்ற)வற்றின் மீது சத்தியமாக!

3. (மேகங்களைப்) பரவலாக பரப்பி விடுகின்ற (மழைக்காற்று போன்ற)வற்றின் மீது சத்தியமாக!

4. (மேகங்களைப் பல பிரிவாகப்) பிரிக்கின்ற (காற்று முதலிய)வை மீது சத்தியமாக!

5. உபதேசத்தை (இதயங்களில்) போடுகின்றவற்றின் மீது சத்தியமாக! –

6. (தவ்பாச் செய்தோர்) மன்னிப்புப் பெறுவதற்காக, அல்லது (பாவத்தில் இருப்போரை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காக (உபதேசத்தைப் போடுவோர் மீது சத்தியமாக!)

7. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுகின்ற (கியாம நாளான)து நிகழ்வதேயாகும்.

8. பிறகு நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது –

9. வானம் பிளக்கப்ப்படும்போது –

10. மலைகள் (தூசுகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது –

11. ரஸுல்கள் (சாட்சி கூற) நேரம் குறிக்கப்படும்போது –

12. (இவையெல்லாம்) எந்த நாளுக்காகத் தவணை வைக்கப்பட்டுள்ளது?

13. தீர்ப்பு நாளுக்காக (தவணை வைக்கப்பட்டுள்ளது.)

14. (நபியே!) தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

15. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

16. (அவ்வாறு பொய்யாக்கிய) முன்னோர்களை நாம் அழிக்க வில்லையா?

17. பிறகு பின்னோர்களை(யும் வேதனையில்) அவர்களைத் தொடரச் செய்தோம்.

18. இவ்வாறே குற்றவாளிகளை நாம் (வேதனை) செய்வோம்.

19. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

20. அற்பமான நீரிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

21. பிறகு அதனைப் பாதுகாப்பான ஓரிடத்தில் (கர்ப்பக் கோளறை)யில் நாம் வைத்தோம் –

22. குறிப்பிட்ட (கால) அளவு வரை –

23. பிறகு (அதனை மனிதனாக அமைக்க) நாமே சக்தியுடையோராய் இருக்கிறோம்: எனவே சக்தியாளர்களில் (நாமே) மேலானோர் ஆவோம்.

24. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

25. (உங்களை) அனைத்துக் கொள்ளக் கூடியதாக (இந்த) பூமியை நாம் ஆக்கவில்லையா?

26. உயிருள்ளவர்களையும், இறந்து விட்டவர்களையும் (அனைத்துக் கொண்டதாக) –

27. இன்னும் அதில் உயரமான மலைகளையும் நாம் அமைத்தோம்: மதுரமான நீரையும் உங்களுக்கு நாம் புகட்டினோம்.

28. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

29. நீங்கள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம் நடந்து செல்லுங்கள் (என்று கூறப்படும்).

30. மூன்று கிளைகளையுடைய (புகை) நிழலின் பக்கம் க்னடந்து செல்லுங்கள் –

31. (அது சுகமான) நிழல் தரக்கூடியதல்ல: நெருப்பின் தழலை விட்டும் காப்பாற்றக்கூடியதுமல்ல.

32. நிச்சயமாக அது (பெரும்) மாளிகையைப் போன்ற நெருப்புக் கங்குகளை வீசி எறியும்.

33. நிச்சயமாக அது (-நெருப்புக் கங்கு) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போன்றிருக்கும்.

34. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

35. இது அவர்கள் பேச முடியாத நாளாகும் –

36. இன்னும் அவர்கள் புகல் கூறி(த் தப்பித்து)க் கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுமாட்டாது.

37. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

38. இது தீர்ப்பிற்குரிய நாள்: உங்களையும் (உங்களுக்கு) முன்னிருந்தோரையும் நாம் ஒன்று சேர்ப்போம்.

39. எனவே, (நீங்கள் தப்பிக்க) ஏதேனும் ஒரு சூழ்ச்சி உங்களிடம் இருந்தால் என்னிடம் நீங்கள் சூழ்ச்சி செய்து பாருங்கள்.

40. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

ருகூஃ 2

41. நிச்சயமாக முத்தகீன்கள் (குளிர்) நிழல்களிலும், நீரூற்றுகளிலும் (மகிழ்வுடன்) இருப்பார்கள் –

42. அவர்கள் விரும்புகின்றவற்றிலிருந்துள்ள பழவகைகளிலும் (புசிப்பவர்களாகவும்) இருப்பார்கள்.

43. “நீங்கள் (உலகில் நன்மைகளைச்) செய்து கொண்டிருந்த காரணத்தினால் மகிழ்ச்சியுடையோராய் புசியுங்கள், பருகுங்கள் – (என்று அவர்களுக்கு சொல்லப்படும்).

44. நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்கு பிரதிபலன் வழங்குவோம்.

45. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

46. (பொய்யாக்குகிறவர்களே) கொஞ்ச காலம் நீங்கள் உண்ணுங்கள், சுகமனுபவியுங்கள் – நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே – (என்று குற்றவாளிகளை நோக்கிச் சொல்லப்படும்).

47. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

48. “நீங்கள் ருகூஃ செய்து (தொழுது) கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் ருகூஃ செய்ய (-தொழ) மாட்டார்கள்.

49. (நம் வசனங்களைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

50. எனவே, இதற்குப் பின் எந்தப் பேச்சைக் தொண்டுதான் அவர்கள் ஈமான் கொள்ளப் போகிறார்கள்?