MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துத் தஹ்ரு – 76 (காலம்)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 240, வசனங்கள் – 31, எழுத்துகள் – 1054
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
ருகூஃ 1
1. மனிதனின் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் திட்டமாக வந்தது: (அதில் இன்னதென்று குறிப்பிட்டு எடுத்துச்) சொல்லக்கூடிய எப்போருலாகவும் அவன் இருக்கவில்லை.
2. நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான விந்திலிருந்து படைத்தோம்: அவனை நாம் சோதிக்கின்ற நிலையில் (படைத்தோம்:) எனவே கேட்கிறவனாகவும் பார்க்கிறவனாகவும் அவனை நாம் ஆக்கினோம்.
3. நிச்சயமாக நாம் அவனுக்கு (நன்மை, தீமையைப் பிரித்துணரும்) வழியை விளக்கினோம்: (அப்பாதையில் சென்று) நன்றியுள்ளவனாக இருக்கிறான்: அல்லது (அப்பாதையைப் புறக்கணித்து) நன்றி கொன்றவனாக இருக்கிறான்.
4. நிச்சயமாக நாம், காபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும் கொழுந்து விட்டெரியும் நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றோம்.
5. நிச்சயமாக, நல்லோர்கள் குவளையிலிருந்து (சொர்க்க பானத்தை) அருந்துவார்கள்: அதனுடைய கலவை கற்பூரமாக இருக்கும்.
6. (அது ஒரு) நீரூற்று: அல்லாஹ்வின் (நல) அடியார்கள் அதிலிருந்து பருகுவார்கள்: அதனை அவர்கள் (விரும்பிய இடத்திற்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள்.
7. (தங்களுடைய) நேர்ச்சையை அவர்கள் நிறைவேற்றுவார்கள்: இன்னும், அதன் தீங்கு (எங்கும்) பரவியதாக இருக்குமே அத்தகைய ஒரு நாளை(க் குறித்து – மறுமையைக் குறித்து) அவர்கள் பயப்படுவார்கள்.
8. இன்னும் அவனுடைய அன்பினால் ஏழைக்கும், அநாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.
9. உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் ஒரு முகத்திற்காகத்தான். (அதற்காக) உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றி செலுத்துதளையும் நாங்கள் நாடவில்லை (என்று கூறுவார்கள்).
10. கடினமாய், முகங் கடுகடுக்கக்கூடிய ஒரு நாளை எங்கள் ரப்பிடமிருந்து நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம் (என்றும் கூறுவார்கள்).
11. ஆகையால், அல்லாஹ் அந்த நாளின் தீங்கை விட்டும் அவர்களைத் காத்து, அவர்களுக்கு முகச் செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொடுப்பான்.
12. இன்னும் அவர்கள் (உலகில்) பொறுமையாக இருந்த காரணத்தினால், சொர்க்கத்தையும், பட்டாடையையும் அவர்களுக்குப் பிரதிபலனாக வழங்குவான் –
13. அதில் ஆசனங்களின் மீது அவர்கள் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்: வெப்பத்தையும், கடுங்குளிரையும் அதில் அவர்கள் காணமாட்டார்கள்.
14. அதனுடைய (மர) நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்: அதனுடைய பழங்கள் மிகத் தாழ்வாக இருக்கும்.
15. வெள்ளியினாலான பாத்திரங்களும், பளிங்குகளினாலான கிண்ணங்களும் அவர்களிடம் (சுற்றிச்) சுற்றிக் கொண்டுவரப்படும் –
16. (அவை) வெள்ளியினாலான பளிங்குகளாக இருக்கும் – அவற்றைத் தக்க அளவாக அவர்கள் அளவிட்டு வைத்திருப்பார்கள்.
17. இன்னும் அங்கு குவளையில் அவர்கள் (பானம்) புகட்டப்படுவார்கள்: அதனுடைய கலவை ஸன்ஜபீல் (இஞ்சிக்கலவை) ஆகும்.
18. அங்கு ஓர் ஊற்று இருக்கிறது: ஸன்ஸபீல் (சிரமமில்லாமல் அதன் நீர் உள் செல்லக்கூடியது, மதுரமானது) என்று அதற்குப் பெயர் சொல்லப்படும்.
19. என்றென்றும் (இளமை மாறாமல்) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள்: (நபியே!) நீர் அவர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துகளென அவர்களைக் கருதுவீர்.
20. (அன்றியும்) அங்கு நீர் பார்க்கும்பொழுது சுகபோகத்தையும், பெரும் அரசாட்சியையும் காண்பீர்.
21. அவர்கள் மீது ‘ஸுந்துஸ்’ என்னும் (மெல்லிய) பட்டாடைகளும், பச்சை நிற கனமுள்ள ‘இஸ்தப்ரக்’ பட்டாடைகளும் இருக்கும்: வெள்ளியினாலான காப்புகளும், அவர்கள் அணிவிக்கப்பட்டிருப்பார்கள்:’ அவர்களுடைய ரப்பு அவர்களுக்குப் பரிசுத்தமான பானத்தை புகட்டுவான்.
22. நிச்சயமாக இது உங்களுக்குரிய பிரதிபலனாகும்: உங்களுடைய (உலக) முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிவிட்டது.
ருகூஃ 2
23. நிச்சயமாக நாமே (இந்தக்) குர்ஆனை உம்மீது கொஞ்சங் கொஞ்சமாக இறக்கி வைத்தோம்.
24. எனவே (நபியே!) உம்முடைய ரப்பின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! அவர்களிலிருந்து எந்தப் பாவிக்கோ அல்லது குப்ரில் (விழுந்து) கிடப்பவனுக்கோ வழிபடாதீர்.
25. உம்முடைய ரப்பின் திருப் பெயரை காலையிலும், மாலையிலும் நீர் திக்ரு செய்வீராக!
26. இன்னும் இரவில் (சிறிது நேரம்) அவனுக்கு ஸுஜூது செய்வீராக! இரவில் நீட நேரம் அவனைத் தஸ்பீஹ் செய்வீராக!
27. நிச்சயமாக இவர்கள் விரைந்து செல்கிற (இவ்வுலகத்)தை நேசிக்கின்றனர்: பளுவான (கடினமான மறுமை) நாளைத் தனகலுக்குப் பின்னால் விட்டுவிடுகின்றனர்.
28. நாம் அவர்களைப் படைத்து, அவர்களுடைய (உறுப்புகளின்) இணைப்புகளை நாம் உறுதிப்படுத்தினோம்: நாம் நாடினால் (அவர்களுக்கு பதிலாக) அவர்களைப் போன்றவர்களை(க் கொண்டு) நாம் மாற்றி விடுவோம்.
29. நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்: எனவே எவர் (ஈடேற்றத்தை) நாடுகிறாரோ அவர் தம் ரப்பின்பால் (இதன் மூலம் நேர்) வழியை ஆக்கிக் கொள்வாராக!
30. அல்லாஹ் நாடினாலன்றி (எதனையும்) நீங்கள் நாடமாட்டீர்கள்: நிச்சயமாக அல்லாஹ் முற்றும் அறிந்தவனாகும், ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான் –
31. தான் நாடுபவரை தன ரஹ்மத்தில் (அருளில்) அவன் புகச் செய்வான்: அநியாயக்காரர்களுக்கு – நோவினை தரும் வேதனையை அவர்களுக்காக அவன் சித்தம் செய்து வைத்துள்ளான்.