Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் கியாம(ஹ்) – 75  (மறுமை நாள்)
(மக்கீ)  பிரிவு - 2, சொற்கள் – 199, வசனங்கள் – 40, எழுத்துகள் – 652


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

ருகூஃ 1

1. கியாமத்து நாளின்மீது நான் சத்தியம் செய்கிறேன் –

2. (தன் தீச் செயல்களுக்காகத் தன்னையே) நொந்து கொள்கின்ற ஆன்மாவின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

3. மனிதன் – (மடிந்தபின் உக்கிப்போன) அவனுடைய எலும்புகளை (மீண்டும்) நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று எண்ணிக் கொள்கிறானா?

4. ஆம்! அவனுடைய நுனி விரல்களையும் நாம் செவ்வையாக (முன்போல்) ஆக்குவதின் மீதும் சக்தியுள்ளோராய் இருக்கிறோம்.

5. எனினும், (கியாம நாள் உண்டென்பதை மறுத்தவனாக) மனிதன் தன முன்னுள்ள (எதிர் கால ஜீவியத்)திலும் பாவம் செய்யவே நாடுகிறான்.

6. கியாமத்து நாள் எப்பொழுது வரும்? என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்.

7. எனவே, பார்வை மழுங்கி –

8. சந்திரன் ஒளியிழந்து –

9. சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது:

10. “(தப்பித்துக்கொள்ள) விரைந்தோடும் இடம் எங்குள்ளது?” என்று மனிதன் அந்நாளில் கூறுவான்.

11. அவ்வாறல்ல! (ஓட முடியாது:) தப்பிக்க வழியில்லை.

12. அந்நாளில் உம்முடைய ரப்பின் பக்கந்தான் தங்குமிடமிருக்கிறது.

13. அந்நாளில் மனிதன் முற்படுத்தி வைத்ததியும், அவன் பிற்படுத்தி வைத்ததையும் (பற்றி) அறிவிக்கப்படுவான்.

14. எனினும், மனிதன் (தன செயல்களைக் குறித்துத்) தனக்குத் தானே சாட்சியாக இருக்கிறான்.

15. தன்னுடைய (பாவங்களுக்கான எந்தப்) புகழ்களை அவன் எடுத்துப் போட்டாலும் சரி (அவை ஏற்கப்படமாட்டா).

16. (நபியே!) ஜிப்ரீல் வஹீயை ஓதிக்காட்டும்போது) அதற்கு நீர் அவசரப்பட்டு, அ(தனை ஓதுவ) தற்காக உம்முடைய நாவை நீர் அசைக்க வேண்டாம்.

17. (உம்முடைய நெஞ்சத்தில்) அதனைச் செக்கரமாக்குவதும், (உம்முடைய நாவினால்) அதனை ஓதச் செய்வதும் நிச்சயமாக நம் மீது பொறுப்பாகும்.

18. எனவே, அதனை (ஜிப்ரீலின் மூலம்) நாம் ஓதினால், பின்னர் அதன் ஓதுதலைத் தொடர்ந்து (ஓதிக்) கொள்வீராக!

19. பிறகு அதனை விளக்குவதும் நிச்சயமாக நம்மீதே பொறுப்பாகும்.

20. அறிந்து கொள்ளுங்கள்! எனினும், (மனிதர்களே!) அவசரமாகச் செல்(லும் உலக வாழ்)வதையே நீங்கள் நேசிக்கிறீர்கள்.

21. (இதன் காரணமாக) மறுமையை நீங்கள் விட்டுவிடுகிறீர்கள்.

22. அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

23. (அவை) தம்முடைய ரப்பின்பால் நோக்கியவையாக இருக்கும்.

24. இன்னும் சில முகங்கள் (கவலையினால்) வாடியவையாயிருக்கும்.

25. இடுப்பை ஒடிக்கும் நிகழ்ச்சி தங்களுக்கு ஏற்படக் போகிறது என்று அவை (-அந்த முகங்கள்) எண்ணும்.

26. அறிந்து கொள்ளுங்கள்! தொண்டைக் குழியை (உயிர்) அடைந்து விட்டால் –

27. (அவனை குணப்படுத்த இருக்கும்) “மந்திரிப்பவர் யார்?” என்று கேட்கப்படும்.

28. எனினும் நிச்சயமாக இது (உலகை விட்டும்) பிரிவதாகும் என்று அவன் உறுதி கொள்கிறான்.

29. (அந்த நேரத்தில்) ஒரு கெண்டைக்கால், மற்றொரு கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

30. அந்நாளில் இழுத்துச் செல்லுதல் உம்முடைய ரப்பின் பக்கமேயாகும்.

ருகூஃ 2

31. ஏனெனில், அவன் (சன்மார்க்கத்தை) உண்மைப்படுத்தவுமில்லை: அவன் தொலவுமில்லை.

32. மாறாக பொய்யாக்கினான்: முகத்தை திருப்பிக் கொண்டான்.

33. பிறகு பெருமை கொண்டவனாகத் தன குடும்பத்தாரிடம் சென்றான்.

34. (பெருமையடிக்கும் மனிதனே!) கேடுதான்: உனக்கு மறுபடியும் கேடுதான்:

35. பிறகும் உனக்குக் கேடுதான் – பின்னரும் கேடுதான்.

36. மனிதன் (கேள்வி கணக்கின்றி) வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக் கொள்கிறானா?

37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாக ஊற்றப்படும் விந்தின் ஒரு துளியாக அவன் இருக்கவில்லையா?

38. பிறகு அவன் சதைக் கட்டியாக இருந்தான்: பின்னர் (அவனை) அவன் படைத்து, பிறகு செவ்வையாக அமைத்தான்.

39. பிறகு அதிலிருந்து ஆண், பெண் என்னும் இரு ஜோடிகளை உண்டாக்கினான்.

40. இத்தகைய (ஆற்றலுள்ள)வன், இறந்துவிட்டவர்களை உயிர்ப்பிப்பத்தின் மீது சக்தி உடையவனல்லவா? (ஆம்! மெய்யாக!)