MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் கலம் – 68 (எழுதுகோல்)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 306, வசனங்கள் – 52, எழுத்துகள் – 1295
ருகூஃ 1
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. நூன்: எழுதுகோலின் மீதும் சத்தியமாக, (அதைக் கொண்டு) அவர்கள் எழுதியதன் மீதும் சத்தியமாக.
2. உம்முடைய ரப்பின் பாக்கியத்தால் நீர் பைத்தியக்காரர் அல்லர்.
3. நிச்சயமாக உமக்கு(க் குறைவும்,) முடிவு(ம்) இல்லாத (நற்) கூலி உண்டு.
4. நிச்சயமாக நீர் மகத்தான நட்குனத்தின் மீது இருக்கின்றீர்.
5. எனவே விரைவில் நீர் கண்டறிவீர்: அவர்களும் கண்டறிவார்கள் –
6. உங்களில் யார் பைத்தியக்காரர் என்பதை...
7. நிச்சயமாக உம்முடைய ரப்பு, தன் வழியை விட்டும் தவறியவன் யார் என்பதை அவன் மிக அறிந்தவன்: இன்னும் அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.
8. எனவே, (உம்மைப்) பொய்யாக்குகிறவர்களுக்கு நீர் வழிப்பட வேண்டாம்.
9. (உம்முடைய பிரச்சாரத்திலிருந்து) நீர் தளர்ந்தால், தாங்களும் தளர்ந்து கொள்ளலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
10. இன்னும் (அதிகமாகப் பொய்) சத்தியம் செய்கின்ற அற்பனான எவனுக்கும் நீர் வழிபட வேண்டாம்.
11. (அவன்) குறை கூறிக் கொண்டிருப்பவன்: கோள் சொல்லித் திரிபவன் –
12. நன்மையைத் தடுப்பவன்: வரம்பு மீறுபவன்: பாவம் செய்பவன் –
13. வன்னெஞ்சன்: அதன் பின்னர் இழி பிரப்பிணன் –
14. பொருள் (வசதி) உடையவனாகவும், ஆண் மக்கள் உடையவனாகவும் அவன் இருந்தமையால் –
15. நம்முடைய வசனங்கள் அவன் மீது ஓதப்பட்டால், (அவை) “முன்னோர்களின் கற்பனைக் கதைகள்” என்று கூறினான்.
16. (அவனுடைய) மூக்கின் மீது அவனுக்கு விரைவில் நாம் அடையாளமிடுவோம்.
17. தோட்டக்காரர்களை நாம் சோதித்தது போன்றே நிச்சயமாக நாம் இவர்களைச் சோதித்தோம்: அதனை (அதன் கனிகளை) அதிகாலையில் திண்ணமாகப் பறித்திடுவோம் என்று அவர்கள் சத்தியம் செய்தபோது... (சோதித்தோம்) –
18. “இன்ஷா அல்லாஹ்” – (அல்லாஹ் நாடினால்) – என்று அவர்கள் கூறவில்லை.
19. எனவே அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, உம்முடைய ரப்பிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பான)து அ(த் தோட்டத்)தின் மீது சுற்றிக் கொண்டது.
20. பிறகு அது (நெருப்பில் கரிந்து) காலையில் கருஞ் சாம்பல் போல் ஆகிவிட்டது –
21. எனவே, (தோட்டம் எரிந்தது தெரியாத) அவர்கள் காலையில் எழுந்து ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டனர் –
22. நீங்கள் (கனிகளைப்) பறிப்பவர்களாக இருந்தால், உங்களுடைய தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள் (என்று கூவி அழைத்துக் கொண்டனர்.)
23. எனவே, அவர்கள் மெதுவாகப் பெசியவர்கலாக நடந்து சென்றனர்.
24. இன்று அ(ந்த தோட்டத்)தில் உங்களிடம் எந்த ஏழையும் திண்ணமாக நுழைந்து விடக் கூடாதே (என்றும் பேசிக் கொண்டு சென்றனர்.)
25. (ஏழைகள் தோட்டத்திலிருந்து எதையும் பெறுவதைத்) தடுக்க சக்தியுடையவர்களாக (எண்ணி) அதிகாலையில் சென்றனர்.
26. எனவே, அதனை (அழிக்கப்பட்டதாக) அவர்கள் பார்த்தபோது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு ஏதோ இடத்துக்கு வந்து) விட்டோம்!” என்று கூறினார்கள் –
27. (பின்னர் உண்மை தெரிந்தபோது) எனினும், ‘நாம் பாக்கியமற்றவர்கலாக இருக்கிறோம்’ (என்று கூறிக் கொண்டார்கள்).
28. அவர்களில் நடுநிலையான (நல்ல)வர் ஒருவர், “நீங்கள் (அல்லாஹ்வை) தஸ்பீஹ் செய்திருக்க வேண்டாமா? என்று நான் உங்களுக்குக் கூறவில்லை?” என்று சொன்னார்.
29. (அப்போது), ‘எங்களுடைய ரப்பு மகாப் பரிசுத்தமானவன்: நிச்சயமாக நாமோ அநியாயக்காரர்களாகி விட்டோம்” என்று (தஸ்பீஹ் செய்து) அவர்கள் சொன்னார்.
30. பிறகு அவர்களில் சிலர், சிலரை நிந்தித்தவர்களாய் முன்னோக்கினர்.
31. “எங்களுடைய கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்” என்று கூறினார்கள்.
32. “நம்முடைய ரப்பு இதைவிடச் சிறந்ததை நமக்குப் பகரமாகக் கொடுக்கப் போதும்: நிச்சயமாக நாம் நம்முடைய ரப்பின் பக்கமே ஆதரவு வைக்கிறோம்” (என்றும் கூறினார்கள்)
33. வேதனை இவ்வாறுதான் (வரும்); மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும்: (இதனை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!
ருகூஃ 2
34. நிச்சயமாக முத்தகீன்களுக்கு அவர்களுடைய ரப்பிடத்தில் ஜன்னுதுந் நயீம் (என்னும் சொர்க்கச் சோலை)கள் உண்டு.
35. எனவே, முஸ்லிம்களைக் குற்றவாளிகளைப் போல நாம் ஆக்குவோமா?
36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? (வழிபட்டு நடப்போரும், மாறுபட்டு நடப்போரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று) எவ்வாறு நீங்கள் தீர்ப்பு செய்கிறீர்கள்?
37. அல்லது உங்களுக்கு ஏதேனும் ஒரு வேதம் இருந்து, அதில் நீங்கள் (இவ்வாறு) படிக்கிறீர்களா?
38. உங்கள் மனம்போல் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்பவை (யெல்லாம்) நிச்சயமாக உங்களுக்கு அதில் உண்டு என்று (எழுதப்பட்டு) இருக்கிறதா?
39. அல்லது (உங்கள் விருப்பப்படி) நீங்கள் தீர்ப்புச் செய்வது நிச்சயமாக உங்களுக்கு உண்டு என்று கியாமத்து நாள் வரை இருக்கக்கூடிய பிரமாணங்கள் உங்களுக்கு நம்மிடத்திலிருந்து (வந்தது) உண்டா?
40. “இவர்களில் யார் அ(வ்வாறு அவர்கள் விரும்பியவையெல்லாம்) கிடைக்கும் என்ப)தற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறவர்” என்று அவர்களிடம் நீர் கேட்பீராக!
41. அல்லது இவர்களுக்கு(ப் பொறுப்பேற்கும்) கூட்டாளிகள் (- தெய்வங்கள்) இருக்கின்றனரா? அவ்வாறாயின் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தம் கூட்டாளிகளை இவர்கள் கொண்டு வரட்டும்.
42. கெண்டைக்கால் வெளியாக்கப்பட்டு, ஸுஜூது செய்ய (மக்கள்) அழைக்கப்படும் (கியாமத்து) நாளில், இவர்கள் (அதற்குச்) சக்தி பெற மாட்டார்கள்.
43. இவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும் நிலையி, இழிவு இவர்களைச் சூழ்ந்து கொள்ளும்: இவர்களோ (உலகில் உடலுறுப்புகளில் கேடில்லாமல்) சுகமானவர்களாக இருந்த நிலையில் ஸுஜூது செய்யத் திட்டமாக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். (ஆனால் இவர்கள் ஸுஜூது செய்யவில்லை.)
44. எனவே, என்னையும், (குர்ஆனாகிய) இச்செய்தியைப் பொய்யாக்குபவரையும் நீர் விட்டுவிடுவீராக! (இவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்;) இவர்கள் அறியாத விதத்தில் இவர்களைச் சிறுகச் சிறுக விரைவில் நாம் பிடிப்போம் –
45. இன்னும் அவர்களுக்கு நான் அவகாசம் கொடுப்பேன்: நிச்சயமாக என்னுடைய சூழ்ச்சி உறுதியானது.
46. அல்லது அவர்களிடம் ஏதேனும் கூலியை நீர் கேட்கிறீரா? அதனால் அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டுள்ளனரா?
47. அல்லது அவர்களிடம் மறைவான விஷயம் இருந்து, (அதிலிருந்து) அவர்கள் எழுதுகிறார்களா?
48. ஆகவே உம்முடைய ரப்பின் கட்டளைக்காக பொறுமையுடனிருப்பீராக! மீனுடையவரைப் போன்று நீர் (அவசரப்படுபவராய்) ஆகிட வேண்டாம்: அவர் கவலை நிரம்பப் பெற்றவராக (மீன்வயிற்றில்லிருந்து தம் ரப்பை) அளித்த போது.
49. அவருடைய ரப்பிடமிருந்து நிஃமத் (அருட்கொடை) அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக, வெட்ட வெளியான அப்பொட்டலில் தூக்கி எறியப்பட்டிருப்பார்.
50. பின்னர், அவருடைய ரப்பு அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை நல்லோர்களில் உள்ளவராய் ஆக்கினான்.
51. நிச்சயமாக, காபிர்கள் (குர்ஆனுடைய) உபதேசத்தைச் செவியுறும்பொழுது, தம் பார்வைகளால் உம்மை வீழ்த்திவிட முடுகுகின்றனர்: “நிச்சயமாக இவர் பைத்தியக்காரர்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
52. இது அனைத்துலகோருக்கும் உபதேசமாகவேயன்றி (வேறு) இல்லை.