Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
பாகம் 29 - சூரத்துல் முல்க் – 67  (ஆட்சி)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 330, வசனங்கள் – 30, எழுத்துகள் – 1313

ருகூஃ 1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. எவனுடைய கரத்தில் ஆட்சி இருக்கிறதோ அவன் பாக்கியவான்: மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுடையவன் –

2. அவன் எத்தகையவனென்றால் உங்களில் யார் அழகிய செயலுடையவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான்: அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்: மிக்க மன்னிக்கிறவன் –

3. ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக அவனே படைத்தான்: (மனிதனே!) அர்ரஹ்மானின் படைப்பில் எவ்விதக் குறைப்பாட்டையும் நீ காணமாட்டாய்: பின்னரும் பார்வையை (வானத்தின்பால்) நீ மீட்டிப்பார்: (அங்கே) ஏதேனும் பிளவை நீ காண்கிறாயா?

4. பிறகும் பார்வையை இரு தடவை மடக்கி, மடக்கி மீட்டிப்பார்: அந்தப் பார்வை – (வானங்களில் ஏதும் காணாமல்) மங்கியதாக அது களைத்து உன் பக்கமே திரும்பி வரும்.

5. (பூமிக்கு) அருகிலுள்ள வானத்தை (நட்சத்திரங்களென்னும்) விளக்குகளைக் கொண்டு திட்டமாக நாம் அலங்கரித்தோம்: இன்னும் அவற்றை (-நட்சத்திரங்களை) ஷைத்தான்களுக்கு எறியப்படும் பொருட்களாகவும் நாம் ஆக்கினோம்: அவர்களுக்கு துளிர் விட்டெரியும் நெருப்பின் வேதனையையும் நாம் சித்தம் செய்து வைத்துள்ளோம்.

6. இன்னும் தங்களுடைய ரப்பை நிராகரித்தார்களே அத்தகையோருக்கும் நரக வேதனையுண்டு – சென்றடையுமிடமான (அ)து மிகக் கெட்டது.

7. அதில் அவர்கள் எறியப்பட்டால் – அது கொதிக்கும் நிலையில் (கழுதையின் சப்தத்தைப் போல்) அருவருக்கத் தக்க சப்தம் அதற்கிருப்பதைக் கேட்பார்கள்.

8. (அவர்களின் மீதுள்ள) கோபத்தினால் அது வெடித்துவிட முடுக்கும்: அதில் ஒவ்வொரு கூட்ட(த்தாரு)ம் எறியப்படும் போதெல்லாம் அ(ந் நரகத்)தின் காவலர்கள், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அவர்களிடம் கேட்பார்கள்.

9. (அதற்கு) “ஆம், மெய்தான்! அச்சமூட்டி எச்சரிக்கிறவர் திட்டமாக எங்களிடம் வந்தார்: (ஆனால் அப்போது அவரை) நாங்கள் பொய்யாக்கி, “அல்லாஹ் எதனையும் (உங்கள் மீது) இறந்க்கி வைக்கவில்லை: நீங்கள் பெரும் வழிகேட்டிலில்லாமல் வேறில்லை.” எட்ன்று கூறினோம் என அவர்கள் கூறுவார்கள்.

10. மேலும், “(அந்த எச்சரிக்கையாளரின் சொல்லை) நாங்கள் செவிஎட்கிரவர்கலாக அல்லது சிந்திப்போராக இருந்திருப்போமானால் துளிர் விட்டெரியும் நரகவாசிகளில் நாங்கள் ஆகியிருக்கமாட்டோம்” என்றும் கூறுவார்கள்.

11. அவர்களுடைய பாவத்தை அவர்களே ஒப்புக் கொள்வார்கள்: எனவே, (அந்த) நரகவாசிகளுக்கு கேடுதான்!

12. நிச்சயமாக எவர்கள் அந்தரங்கத்திலும் தங்கள் ராப்பைப் பயப்படுகிறார்களோ அத்தகையோர் – அவர்களுக்கு(ப் பாவ) மன்னிப்பும், பெரும் கூலியும் உண்டு.

13. (மனிதர்களே!) உங்களுடைய பேச்சை நீங்கள் இரகசியமாகப் பேசுங்கள்: அல்லது அதை பகிரங்கமாக (உரக்க)ப் பேசுங்கள்: (எவ்வாறாயினும்) நிச்சயமாக அவன் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளவற்றை முற்றும் அறிந்தவன்.

14. (அனைத்தையும்) படைத்தவனாகிய அவன் (உங்களுடைய இரகசியங்களை) அறியமாட்டானா? அவன் நுட்பமாக அறிபவன்: நன்கு தெரிந்தவன்.


ருகூஃ 2

15. வனே பூமியை உங்களுக்கு மிருதுவாக (வாழ்வதற்கு வசதியாய்) ஆக்கி வைத்தான்: எனவே, அதனுடைய பல திசைகளிலும் நீங்கள் நடந்து சென்று, (உங்களுக்காகப் படைக்கப்பட்டுள்ள) அவனுடைய உணவிலிருந்து உண்ணுங்கள் – (மரணத்துக்குப் பின்) உயிர்த்தெழுதல் அவன் பக்கமேயாகும்.

16. வானத்திலிருப்பவன் உங்களை பூமியில் அழுந்தச் செய்திடுவான் என்பதை(ப் பற்றி) நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது அ(ப் பூமியான)து நடுங்கும்.

17. அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவதை(ப் பற்றி) நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? எனவே, என்னுடைய எச்சரிக்கை எவ்வாறு இருக்கும் என்பதி விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

18. இவர்களுக்கு முன் இருந்தவர்களும் (நம் ரஸூல்களைத்) திட்டமாகப் பொய்யாக்கி(க் கடும் வேதனைக்குள்ளா)னார்கள்: எனவே என்னுடைய வெறுப்பு(டைய விளைவு) எப்படி இருந்தது?

19. அவர்களுக்கு மேல் (ஆகாயத்தில்) இறக்கைகளை விரித்தவையாகவும், (அவை) மூடிய நிலையிலும் பறக்கும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அற்ரகுமானைத் தவிர (வேறெவரும் அவை கீழே விழாமல்) அவற்றைத் தடுத்து வைக்கவில்லை: நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் பார்க்கிறவன்.

20. அர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவி)ப் படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கிறவர் யார்? காபிர்கள் எமாற்றத்திலே தவிர வேறில்லை.

21. தான் வழங்கும் உணவை (அல்லாஹ்வாகிய) அவன் தடுத்துக்கொண்டால் உங்களுக்கு உணவு வழங்குபவர் யார்? எனினும், அவர்கள் பெருமையடிப்பதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் மூழ்கியிருக்கின்றனர்.

22. தன்னுடைய முகத்தின் மீது முகங் குப்புற நடப்பவன் நேர்வழியுடையவனா? அல்லது நேரான வலியின் மீது சீராக நடந்து செல்கிறானே அந்த ஒருவனா?

23. (நபியே!) நீர் கூறுவீராக: அவன்தான் உங்களைப் படைத்து, உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் அமைத்தான் – மிகக் குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.

24. நீர் கூருவீராக: அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான்: அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

25. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (மறுமைபற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.

26. “நிச்சயமாக (அதுபற்றிய) அவ்வறிவு அல்லாஹ்விடமே உள்ளது: நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கிறவனாகவே இருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

27. எனவே, அதனை (- மறுமையின் வேதனையை) நெருக்கமானதாக அவர்கள் பார்த்தால், காபிர்களின் முகங்கள் கறுத்து விடும்: “(உலகில்) நீங்கள் எதனைத் தேடிக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

28. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் அழித்து விட்டாலும் அல்லது எங்களுக்கு அவன் அருள்புரிந்தாலும், காபிர்களை நோவினை தரும் வேதனையைவிட்டும் யார் காப்பாடுவார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?

29. நீர் கூறுவீராக: ‘அவன்தான் அர்ரஹ்மான்: அவன்மீது நாங்கள் ஈமான் கொண்டோம்: அவன் மீதே நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கின்றோம்: பகிரங்கமான வழிகேட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

30. நீர் கூறுவீராக! உங்களுடைய தண்ணீர் பூமியினுள் உறிஞ்சப் பட்டுவிட்டால், பிறகு பொங்கும் நீரூற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்?