Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் மும்தஹினா – 60  (பரிசோதித்தல்)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 348, வசனங்கள் – 13, எழுத்துகள் – 1510


ருகூஃ 1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. முஃமின்களே! என்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் – அன்பின் காரணத்தால் அவர்களிடம் நீங்கள் (இரகசியத்) தூது அனுப்புகின்ற – நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்: சத்தியத்திலிருந்து உங்களிடம் வந்ததைத் திட்டமாக அவர்கள் நிராகரித்து விட்டனர்: உங்களுடைய ரப்பாகிய அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொண்டதற்காக ரஸூலையும், உங்களையும் (ஊரை விட்டு) வெளியேற்றுகின்றார்கள்: என்னுடைய பாதையில் போர் செய்வதற்காகவும், என்னுடைய பொருத்தத்தைத் தேடுவதற்காகவும் நீங்கள் புறப்பட்டால், (நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்); அன்பின் காரணத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தைத் தெரியப்படுத்துகிறீர்கள்: நானோ, நீங்கள் மறைத்து வைப்பதையும், நீங்கள் பகிரங்கமாக்குவதையும் மிக அறிந்தவன்: (அன்றியும்) உங்களில் எவர் இதனைச் செய்கிறாரோ திட்டமாக அவர் நேர்வழி தவறிவிட்டார்கள்.

2. உங்கள் மீது அவர்கள் வெற்றி பெறுவார்களானால், (பகிரங்கமாகவே) உங்களுக்கு அவர்கள் எதிரிகளாகி விடுவார்கள்: இன்னும் உங்கள் பால் தம் கரங்களையும், தம் நாவுகளையும் தீமையைக் கொண்டு நீட்டுவார்கள்: (அன்றியும்) நீங்கள் காபிராகி வேண்டுமே என்றும் விரும்புகின்றனர்.

3. உங்களுடைய உறவினர்களும், உங்களுடைய மக்களும் கியாமத்து நாளில் உங்களுக்கு பலனளிக்கவே மாட்டார்கள்: உங்களுக்கு(ம், அவர்களுக்கும்) மத்தியில் (அந்நாளில்) அவன் தீர்ப்புச் செய்வான் – அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நோக்குகிறவன்.

4. இப்ராஹிமிடமும், அவருடன் இருந்தொரிடமும் உங்களுக்கு திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது: தம் சமூகத்தினரிடம் “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் நீங்கியவர்களாக இருக்கிறோம்: உங்களை நாங்கள் நிராகரித்து விட்டோம்: ஏகனாகிய அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் பகையும், வெறுப்பும் என்றென்றைக்குமாகத் தோன்றி விட்டன” என்று அவர்கள் கூரியபோதில் (அழகிய முன் மாதிரி இருக்கிறது) – இப்றாஹீம் தம் தந்தையிடம் “உமக்காக அல்லாஹ்விடமிருந்து (வர இருக்கும் வேதனை) எதனையும் (தடுக்க) நான் உரிமை பெற மாட்டேன்” என்று சொன்ன சொல்லைத் தவிர (அதில் முன் மாதிரியில்லை: மேலும் அவர் கூறியதாவது): ‘எங்களுடைய ரப்பே! உன் மீதே நாங்கள் முற்றிலுமாக நம்பிக்கை வைத்துள்ளோம்: உன்பக்கமே நாங்கள் மீண்டோம்: இன்னும் (இறுதித்) திரும்புமிடமும் உன் பக்கமேயாகும்” என்றும்,

5. “எங்களுடைய ரப்பே! காஃபிர்களுக்குச் சோதனையாக எங்களை நீ ஆக்கிவிடாதே: எங்களுடைய ரப்பே! எங்களை நீ மன்னிப்பாயாக – நிச்சயமாக நீ தான் மிகைத்தவன்: ஞானமுள்ளவன்” (என்றும் துஆச் செய்தார்கள்).

6. உங்களுக்கு – அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்துல்லோருக்கு – அவர்களில் அழகிய முன் மாதிரி திட்டமாக இருக்கிறது: (ஆனால், இதனை) எவர் புறக்கணிக்கிறாரோ, அப்போது (அவருக்குத்தான் இழப்பு: ஏனெனில் எவரிடமிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் – அவன் தேவையற்றவன்: புகழுடையவன்.

ருகூஃ 2

7. (முஃமின்களே!) உங்களுக்கும், எவர்களிலிருந்து நீங்கள் விரோதித்துக்கொண்டீர்களோ அவர்களுக்குமிடையில் அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தக் கூடும்: அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்: அல்லாஹ் மிகக் மன்னிக்கிறவன்: மிகக் கிருபையுடையவன்.

8. மார்க்க விஷயத்தில் உங்களுடன் எவர் போரிடவில்லையோ, இன்னும் உங்களுடைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதை விட்டும், அவர்களின் பால் நீங்கள் நீதி செலுத்துவதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.

9. அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம்: மார்க்க விஷயத்தில் உங்களிடம் போரிட்டு, உங்களுடைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றி, உங்களை வெளியேற்றுவதற்கு (எதிரிகளுக்கு) உதவி செய்தார்களே அவர்களை நீங்கள் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் – எவர் அவர்களை நண்பர்களாக்கிக் கொள்கிறார்களோ அத்தகையோர் – அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.

10. முஃமின்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத்துச் செய்தவர்களாக உங்களிடம் வந்தால் அவர்களை நீங்கள் சோதித்துப் பாருங்கள்: அல்லாஹ் அவர்களுடைய ஈமானை மிக அறிந்தவன்: எனவே (உண்மையில்) முஃமினான பெண்கள்தாம் என்று அவர்களை நீங்கள் அறிந்தால், காஃபிர்களின் பக்கம் அவர்களை நீங்கள் திருப்பி அனுப்பி விடாதீர்கள்: (ஏனெனில் முஃமினான) இவர்கள் அவர்களுக்கு ( - காபிர்களுக்கு மனைவியரை இருப்பது) ஹலாலாக இல்லை: அவர்களும் இவர்களுக்கு(க் கணவர்களாக) இருக்க ஹலாலானவர்களல்லர்: மேலும், (காஃபிர்களாகி) அவர்களுக்கு, அவர்கள் (தம் மனைவியருக்குச்) செலவு செய்ததை நீங்கள் கொடுத்து விடுங்கள்: இன்னும் இவர்களுக்கு (-இப்பெண்களுக்கு) இவர்களுக்குரிய மஹர்களைக் கொடுப்பீர்களானால், இவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்வதும் உங்கள் மீது குற்றமில்லை: இன்னும் காபிரான பெண்களின் திருமண பந்தங்களை நீங்கள் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம்: (உங்கள் மனைவியர் மதம் மாறி அவர்களிடம் சென்று விட்டால்) நீங்கள் (அவர்களுக்காகச்) செலவு செய்ததை (அவர்களிடம்) நீங்கள் கேளுங்கள்: (அவ்வாறே மூமினாவாகி உங்களிடம் வந்தோருக்காக) அவர்கள் செலவு செய்ததை (உங்களிடம்) அவர்கள் கேட்கட்டும்: இதுவே அல்லாஹ்வுடைய சட்டம்: உங்களுக்கிடையே அவன் தீர்ப்பு வழங்குகிறான்: அல்லாஹ் முற்றும் அறிந்தவன்: ஞானமுள்ளவன்.

11. உங்களுடைய மனைவியரிலிருந்து எவரேனும் (மதம் மாறி) உங்களை விட்டும் காபிர்களிடம் தப்பிச் சென்று விட்டால், பிறகு நீங்கள் (போர் தொடுத்து) வெற்றிக் கொண்டால், எங்களுடைய மனைவியர் (காபிர்களிடம்) சென்று விட்டனரோ அவர்களுக்கு, அவர்கள் செலவு செய்தது போன்றதைக் கொடுத்து விடுங்கள்: (இவ்விஷயத்தில்) அவனைக்கொண்டு நீங்கள் ஈமான் கொண்டவர்களாய் இருக்கிறீர்களே அந்த அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.

12. நபியே! முஃமினான பெண்கள் – “அல்லாஹ்விற்கு எப்பொருளையும் அவர்கள் இணை வைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தம் குழந்தைகளிக் கொள்வதில்லை என்றும், தம் கைகளுக்கும், கால்களுக்கும் மத்தியில் எதனைக் கற்பனை செய்கிறார்களோ அத்தகைய அவதூறை அவர்கள் கொண்டு வருவதில்லை என்றும், நன்மையானவற்றில் உமக்கு அவர்கள் மாறு செய்வதில்லை” என்றும், அவர்கள் பைஅத்து (உடன்படிக்கை) செய்ய – உம்மிடம் வந்தால், அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.

13. முஃமின்களே! அல்லாஹ் எவர் மீது கோபம் கொண்டானோ அத்தகைய ஒரு கூட்டத்தாரை (யூதர்களை) நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்: (காரணம்) மறுமை(யின் நற்பேறுகள்) பற்றி கப்ருகளில் உள்ள காபிரானவர்கள் (மறுமை குறித்து) நிராசையாக்கிவிட்டது போன்று – திட்டமாக இவர்களும் நிராசையாகிவிட்டனர்.