Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
சூரத்துல் முஜாதலா – 58  (தர்க்கித்தல்)
(மதனீ) பிரிவு - 3, சொற்கள் – 473, வசனங்கள் – 22, எழுத்துகள் – 1792



ருகூஃ 1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (நபியே!) தன கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடம் முறையிட்டாளே அந்த ஒருத்தியின் சொல்லைத் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான்: அல்லாஹ் உங்களிருவருடைய வாக்கு வாதங்களையும் செவியேற்றுக் கொண்டிருந்தான் – நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியேற்கிறவன்: பார்க்கிறவன்.

2. உங்களிலிருந்து எவர் தம் மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிவிடுகிறார்களோ (உண்மையில் மனைவியரான) அவர்கள் அவர்களுடைய தாய்களாக இல்லை: அவர்களைப் பெற்றெடுத்தவர்களைத் தவிர (வேறு எவரும்) அவர்களுடைய தைகள் அல்லர்: மேலும் நிச்சயமாக அ(வ்வாறு சொல்ப)வர்கள் வெருப்பிற்குரிய சொல்லையும், போய்யையுமே சொல்கின்றனர் – நிச்சயமாக அல்லாஹ் பிழை போருக்கிரவன்: மிகக் மன்னிக்கிறவன்.

3. இன்னும் எவர் தம் மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்களோ, பின்னர் தாம் கூறியவற்றிலிருந்து திரும்பி வருகிறார்களோ – அப்போது அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை (அதற்குக்குற்றப் பரிகாரமாக) உரிமை விட வேண்டும்: அது(வே சட்டமாகும்)- அதனைக் கொண்டு நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

4. எவர் (அவ்வாறு உரிமை விடுவதற்காக அடிமையைப்) பெற்றுக் கொள்ளவில்லையோ, அப்போது அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன், தொடராக இரு மாதங்கள் நோன்பு வைத்தல் வேண்டும்: எவர் (அதற்கும்) சக்தி பெறவில்லையோ, அப்போது அறுபது ஏழைகட்கு உணவளிக்க வேண்டும்: அது நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய ரஸூலின் மீதும் ஈமான் கொள்வதற்காக வேண்டியதாகும்: இவை அல்லாஹ்வுடைய (சட்ட) வரம்புகளாகும்: (இவற்றை) நிராகரிக்கிரவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

5. அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் நிச்சயமாக மாறு செய்கிறார்களே அத்தகையோர் – அவர்களுக்கு முன்னிருந்தோர் இழிவாக்கப்பட்டது போல் இழிவாக்கப்படுவார்கள்: மேலும், தெளிவான வசனங்களைத் திட்டமாக நாம் இறக்கி வைத்துள்ளோம்: (அவற்றை) நிராகரிக்கிறவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

6. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான்: அல்லாஹ் அதனைப் பாதுகாத்து வைத்துள்ளான்: அவர்கள் அதனை மறந்து விட்டார்கள் – அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.


ருகூஃ 2

7. நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? மூவருடைய இரகசியத்தில் – அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை: இன்னும் அதனைவிடக் குறைவாகவோ, அதிகமாகவோ அவன் அவர்களுடன் இல்லாமலில்லை – அவர்கள் எங்கிருந்த போதிலும்! பின்னர் அவர்கள் (உலகில்) செய்தவை பற்றி மறுமை நாளில் அவர்களுக்கு அவன் அறிவிப்பான் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் முற்றும் அறிந்தவன்.

8. இரகசியம் பேசுவதை விட்டுத் தடுக்கப்பட்டார்களே அத்தகையோரை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? பின்னர் எதை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதன்பால் மீளுகிறார்கள்: இன்னும் பாவத்தையும், வரம்பு மீறுதலையும், (நம்) ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசுகிறார்கள்: உம்மிடம் அவர்கள் வந்தால் அல்லாஹ் எதனைக் கொண்டு உமக்கு வாழ்த்து (முகமன்) கூறவில்லையோ அதனைக் கொண்டு உமக்கு அவர்கள் வாழ்த்து (முகமன்) கூறுகின்றனர்: இன்னும் “(இவர் உண்மையான நபியாக இருந்தால் இவ்வாறு) நாம் கூறியதற்காக அல்லாஹ் நம்மை ஏன் வேதனை செய்திருக்கிறான்?” என்றும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்: அவர்களுக்கு (தண்டனையால்) நரகம் போதுமானது: அதில் அவர்கள் புகுவார்கள்: மீளுமிடமான (அ)து மிகக் கெட்டதாகும்.

9. முஃமின்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும், வரம்பு மீறுதலையும், (நம்) ரஸூலுக்கு மாறு செய்வதையுங் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்: நன்மையையும், பயபக்தியையும் கொண்டு இரகசியம் பேசுங்கள்: மேலும் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால் – அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

10. (தீமையைக் கொண்டு) இரகசியம் பேசுவதெல்லாம், முஃமீன்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானில் நின்றுமுள்ளதாகும்: (எனினும்) அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டே தவிர, அவர்களுக்கு அவன் (ஷைத்தான்) எந்தத் தீங்கும் செய்யக் கூடிய (சக்தி பெற்ற)வன் அல்லன்: எனவே அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் முற்றிலும் நம்பிக்கை கொள்ளவும்.

11. முஃமின்களே! சபைகளில் (நெருங்கியிருந்தது), விசாலமாக இடமளியுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் இடமளியுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு (சுவனத்தில்) விசாலமாக இடமளிப்பான்: இன்னும் (சபையிலிருந்து) “நீங்கள் எழுந்து நில்லுங்கள்” என்று கூறப்பட்டால், எழுந்து நில்லுங்கள்: உங்களிலிருந்து ஈமான் கொண்டவர்களுக்கும், (மார்க்க) ஞானம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல பதவிகளை உயர்த்துகிறான் – அல்லாஹ், நீங்கள் செய்கின்றவற்றை நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

12. முஃமின்களே! (நம்) ரஸூலிடம் நீங்கள் இரகசியம் பேசினால் உங்களுடைய இரகசியப் பேச்சிற்கு முன்னதாக ஏதேனும் ஒரு தர்மத்தை முற்படுத்தி வையுங்கள்: அது உங்களுக்குச் சிறந்ததும், பரிசுத்தமானதுமாகும்: எனினும், நீங்கள் (தர்மம் செய்ய வசதி) பெற்றுக்கொள்ளவில்லையானால் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன்: மிகக் கிருபையுடையவன்.

13. உங்களுடைய இரகசியப் பேச்சிற்கு முன் தர்மங்களை முற்படுத்தி வைப்பதை(ப் பற்றி – வறுமையை) நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் (அவ்வாறு) செய்ய முடியாதபோது (அதற்காக) அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான்: எனவே தொழுகையை நீங்கள் நிலைநிறுத்துங்கள்: ஜகாத்தைக் கொடுங்கள்: அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸூலுக்கும் வழிபடுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.


ருகூஃ 3

14. அல்லாஹ் எவர் மீது கோபம் கொண்டுள்ளானோ அக்கூட்டத்தினரை நண்பர்களாக்கிக் கொண்டவர்க(ளான முனாபிக்குக)ளளவில் நீர் பார்க்கவில்லையா? அவர்கள் (முற்றிலும்) உங்களில் உள்ளவர்களல்லர்: (முற்றிலும்) அவர்களில் உள்ளவர்களுமல்லர் – மேலும் அவர்கள் அறிந்தவர்களாயிருந்தும் பொய்யின் மீது சத்தியம் செய்கின்றனர்.

15. அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையைச் சித்தப்படுத்தியுள்ளான்: நிச்சயமாக அவர்கள் – செய்து கொண்டிருந்தது மிக்க கெட்டதாகும்.

16. தம் சத்தியங்களைக் கேடயமாக அவர்கள் ஆக்கிக் கொண்டனர்: பிறகு அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர்: எனவே, இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.

17. அவர்களுடைய பொருட்களும், அவர்களுடைய மக்களும் அல்லாஹ் வி(திக்க இருக்கும் வேதனையி)லிருந்து எதனையும் அவர்களை விட்டும் ஒருக்காலும் தடுத்து விடமாட்டா: அவர்கள் நரவாசிகள்: அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

18. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற நாளில், உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வதுபோல் அவனிடமும் சத்தியம் செய்வார்கள்: இன்னும் நிச்சயமாக அவர்கள் ஏதோ (தங்களுக்கு பயன் தரும்) ஒன்றின் மீது இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள்: அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அவர்கள் தாம் பொய்யர்கள்.

19. ஷைத்தான் அவர்கள் மீது வெற்றி கொண்டு, அல்லாஹ்வைப் பற்றிய நினைவையும் அவர்களுக்கு மறக்கச் செய்து விட்டான்: அவர்கள் ஷைத்தானுடைய கூட்டத்தினர்: அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக ஷைத்தானுடைய கூட்டத்தினர் – அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.

20. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் மாறு செய்கிறார்களோ அத்தகையோர் மிகத் தாழ்ந்தோரில் உள்ளவராவார்கள்.

21. “திண்ணமாக நான் வெற்றி பெறுவேன், இன்னும் என்னுடைய ரஸுல்களும் (வெற்றி பெறுவார்)” என்று அல்லாஹ் விதித்திருக்கிறான்: நிச்சயமாக அல்லாஹ் சக்தி மிக்கவன்: (யாவற்றையும்) மிகைத்தவன்.

22. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொள்கின்ற எந்தக் கூட்டத்தினரையும் – அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸுலுக்கும் மாறு செய்கிறவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காணமாட்டீர் – (மாறு செய்கிற) அவர்கள் – (மூமினான)இவர்களுடைய தந்தையர்களாக, அல்லது இவர்களுடைய புதல்வர்களாக, அல்லது இவர்களுடைய சகோதரர்களாக, அல்லது இவர்களுடைய குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரி, அத்தகையோர் – அவர்களுடைய உள்ளங்களில் ஈமானை (அல்லாஹ்) பதிய வைத்து விட்டான்: இன்னும் தன்னிடமிருந்துள்ள ஆன்மா (ஒளி)வைக் கொண்டு அவர்களுக்கு அவன் உதவியளித்தான்: மேலும் அவற்றின் கீழ் ஆறுகள் ஓடுகின்ற சொர்க்கச் சோலைகளில் அவர்களை புகுத்துவான்: அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்: அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்: அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்: அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வுடைய கூட்டத்தினர்): அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ்வுடைய கூட்டத்தினர் – அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.