MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வலிமார்கள் கராமத் (அற்புதங்கள்) செய்வார்களா? நம்ப முடியுமா?


​​ஆம் செய்வார்கள். நம்ப முடியும். கண்டிப்பாக நம்ப வேண்டும். ஏனெனில் அப்படி நம்பவில்லை என்றால் குர்ஆனையும் ஹதீஸையும் மறுத்த பாவத்திற்கு உள்ளாவோம். அல்லாஹ் பாதுகாப்பானாக.


வலிமார்கள் என்போர் அல்லாஹ்வின் நேசர்கள். உண்மையில் அல்லாஹ்தான் வலிமார்கள் மூலமாக அந்த அற்புதங்களை செய்கிறான். இவற்றை தாராளமாக நம்பலாம்.


அல்லாஹ் நேரடியாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் குத்ரத். அல்லாஹ் நபிமார்கள் மூலமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் முஃஜிஸாத். அல்லாஹ் வலிமார்கள் மூலமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் கராமத்.


இதில் ஏதாவது ஒரு அற்புதத்தை ஒருவன் நிராகரித்தால், அவன் இறைவனையும், இறை வேதத்தையும் நிராகரிப்பவனாவான். நிராகரிப்பவரின் கூட்டத்தை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!


ஏனெனில், கராமத்துகளை பற்றி அல்குர்ஆனிலும் அல்ஹதீஸிலும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன.


அல்குர்ஆன் ஆதாரம்:

♦ சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் சபையில் இருந்த ஞானம் பெற்ற ஒரு இறைநேசர் பன்னூறு கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறி காட்டுகிறான்.


பார்க்க – அல்குர்ஆன் – சூரா 27 : வசனம் 38-40


(ஸுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் தன் மந்திரிகளை நோக்கி) "சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?" என்று கேட்டார்.


(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.)


♦ பருவமில்லாத காலத்திலும் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்த கனிவர்க்கங்கள் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறி காட்டுகிறான்.


“ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள்” (அல்குர்ஆன் 3 : 37)


அல்ஹதீஸ் ஆதாரம்:


​♦ குபைப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை கொன்று விட வேண்டுமென முடிவெடுத்த நேரமது. திராட்சை கொத்தில் இருந்து குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அந்நாளில் மக்காவில் எந்த பழமுமில்லை. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவுதான் அது. நேரில் பார்த்த ஹாரிஃதின் மகள் இதை கூறினார்.


அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)

நூல் – ஸஹிஹுல் புஹாரி – 3045 (2818)



♦ இறைதூதர் ﷺ அன்னவர்களிடம் ஒரு தோழர் வந்து சொன்னார்:

“யா ரஸூலல்லாஹ்! ஒரு கப்ருக்கு மேலே அது கப்ர் என தெரியாமல் கூடாரம் அமைத்து தங்கினேன். அப்போது, கப்ருக்குள்ளேயிருந்தவர் சூரா முல்க்கை முழுமையாக ஓதினார். இறைதூதர் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: அந்த (முல்க்) அத்தியாயம் (நரக வேதனையை) தடுக்கும். ஈடேற்றத்தை கொடுக்கும்.”


அறிவிப்பவர் – இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு)

நூல் – திர்மிதி – 2815



♦ திண்ணமாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். சாரியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அப்படைக்கு தளபதியாக நியமித்தார்கள். (மதீனாவில்) சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘யா சாரியா! அல் ஜபல்!’ (சாரியாவே! மலையை கவனித்து சண்டையிடுங்கள்) என சப்தமிட்டார்கள்.

பிறகு படையிலிருந்து ஒரு தூதர் வந்து சொன்னார். அமீருல் முஃமினீன் அவர்களே! எங்கள் எதிரிகளோடு நாங்கள் போர் புரிந்தபோது அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள். அப்போது ‘யா சாரியா அல் ஜபல்’ என்று சத்தம் கேட்டது. பின்னர் மலையை எங்களுக்கு பின்புறமாக ஆக்கி கொண்டு போர் செய்தோம். அல்லாஹ் அவர்களை விரட்டி விட்டான்.


அறிவிப்பவர் – இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

நூல் – பைஹகீ (தலாயிலுந் நுபுவ்வா) – 2655



யுத்தம் நடைப்பெற்றது பாரசீகத்தில். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இருந்தது மதீனா மாநகரத்தில். பன்னூறு கணக்கான மைல்களுக்கு அப்பால் நடப்பதை இங்கிருந்து உமர் (ரழியல்லாஹு அன்ஹு) பார்த்ததும், அவர்களுக்கு எச்சரிக்கை செய்து இங்கிருந்து குரல் கொடுத்ததும், இவர்களின் சத்தத்தை பாரசீகத்தில் உள்ளவர்கள் கேட்டதும் அல்லாஹ் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு வழங்கிய கராமத் ஆகும்.


♦ மரணத்தருவாயிலிருந்த அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: “ஆயிஷாவே! நான் விட்டு செல்கின்ற வராஃதத் சொத்துகளை நீயும் உனது இரு சகோதரர்களும் மற்றும் இரு சகோதரிகளும் இறைவன் குர்ஆனில் கூறியபடி பங்கு பிரித்துக் கொள்ளுங்கள்.


நான் கேட்டேன்: “எனது அருமை தந்தையார் அவர்களே! இரு சகோதரிகள் என்றீர்களே! அஸ்மா என்ற ஒரு சகோதரி தானே எனக்கு உள்ளார். இன்னொரு சகோதரி யார்? (ஆயிஷாவே!) எனது மனைவியார் பின்து காரிஜா கர்ப்பமாக உள்ளார். அவர் பெண் குழந்தையை ஈன்றெடுப்பார். (எனவே தான் உனக்கு இரு சகோதரிகள் என்றேன்). அவர்கள் கூறியது போன்று பின்து காரிஜா அவர்கள் உம்மு குல்தூம் என்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்கள்.


அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

நூல்: முஅத்தா எண் 1242, பைஹகீ எண் 12267


எந்த நவீன விஞ்ஞான கருவிகளும் இல்லாத அந்த காலத்தில், குழந்தை பிறப்பதற்கு முன்னரே பிறக்க போகும் குழந்தை ஒரு பெண் குழந்தை என்று நிச்சயமாக கூறியது அல்லாஹ் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு வழங்கிய கராமத் ஆகும்.


இன்னும் இதே போன்று பல ஆதாரங்கள் அல்குர்ஆன், அல்ஹதீஸ்களில் உள்ளன. இவை எல்லாம் அல்லாஹ் வலிமார்களுக்கு வழங்கிய அற்புதங்களை அதாவது கராமத்துகளை எடுத்து காட்டுகின்றன. இவற்றை எல்லாம் ஒருவன் மறுத்தால் அவன் அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வார்த்தைகளை மறுக்கிறான் என்பதாகும். அப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதர்களை விட்டும் அல்லாஹ் நம் ஈமானை பாதுக்காப்பானாக!