MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
அல் குர் ஆனையும், ஹதீஸையும் மாத்திரமா பின்பற்ற வேண்டும்?
முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் எதனை செய்ய சொல்கிறார்களோ அதனை செய்ய வேண்டும். எதனை பின்பற்ற சொல்கிறார்களோ அதனை பின்பற்ற வேண்டும். இது எங்கள் மீது கடமை.
அந்த அடிப்படையில் அல் குர்ஆனிலும் அல் ஹதீஸிலும் எதனை பின்பற்றுமாறு சொல்லப்பட்டுள்ளது என்பதை பாப்போம்.
1. அல் குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் குடும்பமாகிய அஹ்லுல் பைத்துகளையும் பின்பற்றுமாறு சொல்லப்பட்டுள்ளது.
ஆதாரம் 1
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள் ! எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது.
நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விசயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லாஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்ளுபைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விசயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன் .
அறிவிப்பவர் - ஸைத் இப்னு அர்கம் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் - ஸஹிஹுல் முஸ்லிம் – 5920
ஆதாரம் 2
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய குடும்பத்தார்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் - ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் - திர்மிதி - 3789 முஸ்னத் அஹ்மத் - 3:14 மிஷ்காத் - 569, 6152
2.அல் குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வழிமுறையான அல் ஹதீஸையும் பின்பற்றுமாறு சொல்லப்பட்டுள்ளது.
ஆதாரம் 1
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு மத்தியில் இரண்டு காரியங்களை விட்டு செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றி பிடித்து நடக்கும் காலமெல்லாம் திட்டமாக நீங்கள் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆன் மற்றது எனது வழிமுறை.
நூல் - முஅத்தா
3. அல் குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தோழர்களாகிய ஸஹாபாக்களையும் பின்பற்றுமாறு சொல்லப்பட்டுள்ளது.
ஆதாரம் 1
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், இன்னும் நற்செயலைக்கொண்டு அவர்களைப் பின்பற்றியவர்கள் (ஆகிய) அவர்களைக்கொண்டு அல்லாஹ் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவனை பொருந்திக்கொண்டார்கள். அவர்களுக்காக சொர்க்கங்களையும், அவன் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் எப்பொழுதும் அவர்கள் நிறந்தரமாக இருப்பார்கள். இது மகத்தான வெற்றியாகும்.
அல் குர்ஆன் 9:100
ஆதாரம் 2
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எனது ஸஹாபாக்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். அவர்களில் எவரை பின்பற்றினாலும் நீங்கள் நேர் வழி பெறுவீர்கள்
மிஷ்காத் - 6018
ஆதாரம் 3
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய்ப்பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.
திர்மிதி: 2676, இப்னு மாஜா: 42, அபூதாவுத்: 4607, முஸ்னத் அஹ்மத் : 4 - 126, மிஷ்காத்:165
மொத்தத்தில்,
முஸ்லிம்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்ட அல் குர்ஆனையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அன்னவர்களின் சொல், செயல், அங்கீகாரமான அல் ஹதீஸையும் பின்பற்றவேண்டும். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அன்னவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களையும், தோழர்களான ஸஹாபாக்களையும் பின்பற்றவேண்டும்.
இவ்வளவு தெளிவாக அல் குர்ஆனிலும் அல் ஹதீஸிலும் சொல்லப்பட்ட பின்னரும் இவற்றில் எதையேனும் ஒன்றை நான் பின்பற்றமாட்டேன், பின்பற்ற தேவை இல்லை என்று ஒருவன் கூறினால் அவன் அல்லாஹ்வின் வார்த்தைக்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அன்னவர்களின் வார்த்தைக்கும் எதிராக குதர்க்கம் பேசுபவனாவான். இத்தைகைய வழிகெட்டவர்களை விட்டும் நாம் ஒதுங்கி வாழ வேண்டும்.