MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தபஅத்தாபிஈன்கள் என்றால் யார்?
இஸ்லாத்தில் தபஅத்தாபிஈன்கள் என்பது தாபிஈன்களுக்கு அடுத்து வந்த தலைமுறையை குறிக்கும்.
ஒருவர் தபஅத்தாபிஈன் என அழைக்கப்பட பின்வரும் தகுதிகள் வரையறை செய்யப்படுகிறது:
* தாபிஈன்களில் எவரேனும் ஒருவரையாவது நேரடியாக தமது கண்களினால் பார்த்து இருக்க வேண்டும்.
* ஈமான் கொண்டு கடைசி வரை நேர்வழியில் (அதாவது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி) வாழ்ந்து மரணித்தவர்களாக இருக்க வேண்டும்.
உதாரணமாக – கவாரிஜியாக்கள் நிறைய தாபிஈன்களை கண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களை தபஅத்தாபியீன் என்று இஸ்லாத்தில் சொல்வதில்லை. காரணம் அவர்கள் நேர் வழியான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி வாழாமல் வழிகெட்ட கவாரிஜியா கொள்கையில் வாழ்ந்ததினாலாகும்.
தபஅத்தாபிஈன்களுக்கு உதாரணம்
• இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
• இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு
• இமாம் அஹ்மத் இப்ன் ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு
தபஅத்தாபிஈன்களின் அந்தஸ்து
இஸ்லாத்தில் தாபிஈன்களுக்கு அடுத்தப்படியான உயர்ந்த அந்தஸ்தில் வைத்து தபஅத்தாபிஈன்கள் நோக்கப்படுகின்றனர்.
அவ்வாறு நோக்கப்பட காரணம் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களால் இந்த சமுதாய மக்கள் சிறப்பித்து சொல்லப்பட்டதே காரணமாகும்.
* கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (ஸஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள் (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள் (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.
அப்துல்லாஹ் பின மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி – 3651
* கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
என்னைக்கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவனைக் கண்ட முஸ்லிமையும் நரகம் தொடாது.
திர்மிதி, மிஷ்காத்
தபஅத்தாபிஈன்களின் இஸ்லாமிய சேவை
தபஅத்தாபிஈன்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் இஸ்லாம் முழு உலகிலும் பரவுவதற்கும் செய்த தொண்டு அளப்பரியது.
தாபிஈன்களிடம் இருந்து பெற்ற அல்குர்ஆன் சம்பந்தப்பட்ட அறிவுகள், விளக்கங்களை அடுத்த சமுதாயத்திற்கு சிறப்பாக கொண்டு சேர்த்த பெருமை இவர்களை சாரும்.
இவர்களுடைய காலங்களிலேயே மார்க்க சட்டங்களை தொகுத்து மத்ஹபுகள் அமைக்கப்பட்டன. இவை பிற்கால சமுதாயத்தினர் குழம்பி போகாமல் வழி தவறி போகாமல் தெளிவாக மார்க்கத்தை பின்பற்ற பெரிதும் துணை புரிந்தன.
அதேபோல், தாபிஈன்கள் ஸஹாபக்களிடம் இருந்து கற்ற ஹதீஸ்களை தெளிவான முறையில் அடுத்த சமுதாயத்திற்கு கற்பித்து விட்டு சென்றனர். அதனால்தான் பிற்காலத்தில் ஹதீஸுடைய இமாம்கள் ஹதீஸ்களை தொகுத்து நூல் வடிவில் செய்ய, குறிப்பாக ஸிஹாஹ் ஸித்தா போன்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்கள் வெளிவந்து இன்று வரை முழு உலகிலும் உள்ள முஸ்லிம்கள் பயன் பெற தபஅத்தாபிஈன்களின் பங்களிப்பு அளப்பரியது.
அதேபோல், தபஅத்தாபிஈன்கள் உலகிலுள்ள பல நாடுகளுக்கு சென்று இஸ்லாமிய தஃவா அழைப்பை மேற்கொண்டு பலர் இஸ்லாத்திற்கு வர காரணகர்தாக்களாகவும் இருந்தனர்.