MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ ஆதாரம் வேண்டுமோ?
அரபு நாட்டிலே மக்கா எனும் சிறிய கிராமத்திலே பிறந்த ஒரு தனி மனிதரின் வாழ்வையே ஆதாரமாகக் கொண்டு அகிலமே அசைகிறதென்றால் அந்தப் புனிதரைப் புகழ்வதற்கு ஆதாரம் வேறு அவசியமோ?
அரசியலானாலும் , ஆன்மீகமானாலும் , குடும்பவியலானாலும் , கொடுக்கல் வாங்கலானாலும் , விஞ்ஞானமானாலும் , மெஞ்ஞானமானாலும் அத்தனைக்கும் தாயகமாய் அமைந்தது அண்ணல் நபி நாயகத்தின் அருமந்த வாழ்வல்லவா?
அறுபத்தி மூன்றாண்டு வாழ்வில் ஈருலகிலும் ஈடேற்றம் பெறும் அரியவழியை , எளிய முறையில் அமைத்து தந்தாலன்றோ, உலகம் இன்றளவும் அந்தப் பாதையிலே பயணித்து வருகிறது .
வாழ்வில் எழும் பிரச்சனைகளுக்கு விடைகாண அவர்களின் வாழ்க்கைப் புத்தகமல்லவா புரட்டப்படுகிறது? அவர்களின் அங்க அசைவுகளல்லவா இன்று விஞ்ஞானம் என்றும் மெஞ்ஞானம் என்றும் மருத்துவம் என்றும் மனோதத்துவம் என்றும் பெயர் மாறி மாறி வருகிறது .அப்படிப்பட்ட அந்த புனித நபியை புகழ்வதற்கு மனிதா! வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?
அடிமைகள் நாம் அரசரைப் புகழ ஆதாரம் வேறு தேவையோ?
வேண்டாம் விடுங்கள் அவர்களைப் புகழத்தேவையில்லை என்போரே , பின்னர் புகழுக்கு தகுதியானவர் தான் யார்?
படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வே ! பாசநபியை புகழ்ந்து கொண்டிருக்கிறான் . பரதேசிகள் நாம் புகழ ஆதாரம் வேண்டுமோ?
வனவிலங்குகளும் , மரங்கள் யாவுமே ! மாநபிக்குச் சிரம்பணிந்து மௌலிது ஓதுகிறது . ஆறறிவு மனிதா ! உன் பகுத்தறிவு மட்டும் ஏன் பாழ்பட்டுவிட்டது?
அபூஜஹ்லும் , அபூலஹபுமே, அருமை நபி மீது புகழ் ஓதியபோது ஆபிதீன் உனக்கு ஆதாரம் வேண்டுமோ?
நன்றி :
நூல் : மாநபியின் மவ்லித் ஷரீப் மார்கத்திற்கு அரணா ? முரணா ?
ஆசிரியர் : T.S.A. அபூதாஹிர் ஆலிம் மஹ்ழரி
வெளியீடு : ஃபஹீமியா பப்ளிஷர்ஸ்