MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கப்றுகள் தரைமட்டமாக்கப்பட வேண்டுமென்பது நபி ﷺ வழி அல்ல


​மௌலவி  K.R.M. ஸஹ்லான் (றப்பானீ) BBA (Hons)


கப்றுகள் எவ்வாறு அமைக்கப்பவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடையே பல்வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கப்றுகளின் மேல் காணப்படும் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமெனவும் கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்பட வேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர். இந்த அடிப்டையில் “கப்றுகளைச் சூழ கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பவேண்டும்” என முதலில் தீர்ப்பு வழங்கியவர் இப்னு தைமியா என்பவர்தான். (ஸாதுல் மஆத் – பக்கம் 661)


இது இஸ்லாமிய மார்கத்தீர்ப்பு அல்ல. அதாவது அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல் இஜ்மாஉ, அல்கியாஸ் ஆகிய நான்கு மூலாதாரங்களின் அடிப்டையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு படித்தவர்களும் பாமரர்களும் கப்றுகளை உடைத்தெறியவேண்டும் என கோஷமிடுகின்றனர்.


அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில்

ومن يعظـّـم شعائِر الله فإنـّـها من تقوى القلوب (حج – 32)

“யார் அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியம் செய்கின்றானோ அது இறையச்சத்தில் நின்றுமுள்ளது” (ஹஜ்-32) என கூறுகின்றான்.


இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் சின்னம் என்பது அல்லாஹ்வை நினைவுபடுத்தக்கூடியதை குறிக்கின்றது. எந்த வஸ்து அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் ஆகும்.


இந்த அடிப்டையில்

انّ الصفا والمروة من شعائِر الله (البقرة-158

ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் நின்றுமுள்வையாகும்.

( அல் பகரா-158)



وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِّن شَعَائِرِ اللَّهِ (الحج:36 ))

உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணிகளை நாம் அல்லாஹ்வின் சின்னங்களில் நின்றுமுள்வையாக ஆக்கியுள்ளோம். (ஹஜ்-36)


மேற்குறிப்பிடப்பட்ட திருவசனங்களில் ஸபாவும் மர்வாவும் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணிகளும் அல்லாஹ்வின் சின்னங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இவை கண்ணியம் செய்யப்படவேண்டிவையாகும். கஃபதுல்லாஹ், ஹஜறுல் அஸ்வத், ஸபா, மர்வா, மினா, அறபஹ் போன்ற புனித தலங்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் ஆகும். இவை கண்ணியம் செய்யப்படவேண்டிவையுமாகும். ஆயினும் இவையாவும் கல்லினாலும் மண்ணினாலும் படைக்கப்பட்டவையாகும். இருப்பினும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்ற அடிப்படையில் அவை கண்ணியம் செய்யப்படுகின்றன. உதாரணமாக கஃபதுல்லாஹ்வுக்கு போர்வை போர்த்துதல், ஹஜறுல் அஸ்வத் கல்லை முத்தமிடுதல் போன்று.


அவ்வாறாயின் அல்லாஹ்வின் பெரிய சின்னங்களான அவனது தூதை கொண்டுவந்த நபிமார்கள், அவர்களின் வாரிசுகளான வலிமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பவேண்டியவர்கள் என்பதை நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.


அதேபோல் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச் செல்லப்படும் பிராணி என்ற காரணத்தினால் குறித்த பிராணி அல்லாஹ்வின் சின்னம் என்றாகிறது. அதன் காரணமாக கண்ணியம் செய்யப்படுகின்றது. அவ்வாறாயின் நபிமார்கள், வலிமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பவேண்டியவர்கள் என்பதையும் நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.


இந்த அடிப்டையில் நாம் பார்க்கும்போது நபிமார்கள், வலிமார்கள் வாழும் கப்றுகளை அழகாக கட்டுவதும், அவற்றை சுத்தமாக வைத்திருப்பதும்தான் அவர்களுக்கு செய்யும் கண்ணியமே தவிர அவர்களின் கப்றுகளை உடைப்பதும் அவற்றை அசுத்தப்படுத்துவதும் அவர்களுக்கு செய்யும் கண்ணியம் அல்ல.


கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல் தரும் மேற்பரப்புகள் உடைக்கப்படவேண்டும் என்றும் கப்றுகளின் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமென்றும் கூறுபவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றனர். காரணம் இந்த ஹதீதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டமையாகும்.


باب الأمر بتسوية القبر

(2196) صحيح مسلم

ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى وَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَ زُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ يَحْيَى: أَخْبَرَنَا. وَقَالَ الآخَرَانِ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي الْهَيَّاجِ الأَسْدِيِّ قَالَ: قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، : أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللّهِ ؟ أَنْ لاَ تَدَعَ تِمثْالاً إِلاَّ طَمَسْتَهُ. وَلاَ قَبْراً مُشْرِفاً إِلاَّ سَوَّيْتَهُ


அபுல் ஹய்யாஜ் அல் அஸதீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அலீ இப்னு அபீதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எனக்கு கூறினார்கள். என்னை நபி (ﷺ) அவர்கள் அனுப்பிய விடயத்தின் மீது நான் உன்னை அனுப்புகிறேன். விக்கிரகங்களை அழிக்காமல் விட்டு விடாதே, உயர்ந்துள்ள கப்றுகளை சீராக்காமல் விட்டு விடாதே”

ஆதாரம் – முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் – 2196


இந்த ஹதீஸ் திர்மிதி-1043, முஸ்னத் அஹ்மத்-1067, நஸாயீ-2031, ஸூனன் அபூதாவூத்-3220 ஆகிய இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீதில் கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென கூறப்படவில்லை.


இந்த ஹதீதில் இடம்பெற்றுள்ள سَوَّيْتَه என்றசொல்லுக்கு “உடைத்தல்” அல்லது “தகர்த்தல்” என தவறாக பொருள் கொள்வதே கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென சிலர் கூறுவதற்கு காரணமாகும். இந்த சொல் تسوية என்ற சொல்லடியில் இருந்து வந்ததாகும். تسوية என்றால் “சீராக்குதல்” அல்லது செம்மையாக்குதல்” என்பது கருத்தாகும். இந்தக்கருத்தின் அடிப்படையிலேயே அறபுமொழி நடையில் இது பாவிக்கப்படுகின்றது. تسوية என்றசொல் “உடைத்தல்” அல்லது “தகர்த்தல்” என்ற பொருளில் அறபுமொழி நடையில் எந்த இடத்திலும் பாவிக்கப்படவில்லை.


கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்பதுதான் மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதின் கருத்து என்றிருந்தால் ஹதீதின் வசனம் (وَلاَ قَبْراً مُشْرِفاً إِلاَّ سَوَّيْتَهُ (بالارض “உயர்ந்துள்ள கப்றுகளை (பூமியுடன்) சீராக்காமல் விட்டு விடாதே”என வந்திருக்கவேண்டும். அவ்வாறு ஹதீதில் வரவில்லை. எனவே இந்த ஹதீதின் சரியானபொருள் என்னவென்பதை ஹதீஸ் விரிவுரையாளர்களின் கருத்துக்களிலிருந்து நாம் நோக்குவோம்.


இமாம் நவவீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிம் விரிவுரையில் கூறுகின்றார்கள்

شرح النووي على صحيح مسلم

قوله: (يأمر بتسويتها). وفي الرواية الأخرى: ولا قبراً مشرفاً إلا سويته. فيه أن السنة أن القبر لا يرفع على الأرض رفعاً كثيراً ولا يسنم بل يرفع نحو شبر ويسطح وهذا مذهب الشافعي ومن وافقه،


“கப்றுகள் பூமி மட்டத்திலிருந்து அதிகமாக உயர்தப்படமாட்டாது, திமில் போன்ற வடிவத்திலும் அமைக்கப்படமாட்டாது. ஆனால் ஒரு சாண் அளவு உயர்த்தப்படும் அத்துடன் (தட்டையான) முகடு அமைக்கப்படும். இதுவே இமாம் ஷாபிஈ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மத்ஹப் ஆகும்.” (ஷறஹுந்நவவீ - பாகம்07, பக்கம்32)



இமாம் கஸ்தல்லானீ (ரலியல்லாஹு அன்ஹு) இர்ஷாதுஸ்ஸாரீ எனும் ஸஹீஹுல் புஹாரீ விரிவுரையில் கூறுகின்றார்கள்


لأنـّه لم يرد تسويته بالارض وإنـّما اراد تسطيحه

“கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்பது ஹதீதின் நோக்கமல்ல. (தட்டையான) முகடு அமைக்கப்படுவதே ஹதீதின் நோக்கமாகும்” (இர்ஷாதுஸ்ஸாரீ பாகம் 02, பக்கம் 477)



மேலும் குறித்த ஹதீதை பதிவுசெய்த இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் நஸாயீ, இமாம் அபூதாவூத் ஆகியோர் இந்த ஹதீதை باب الأمر بتسوية القبر

“கப்றை சீராக்குமாறு அல்லது செம்மையாக்குமாறு கட்டளையிடும் பாடம்” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்துள்ளார்களே தவிர

وهدمها باب الامر بتخريب القبور

“கப்றுகளை உடைத்துவிடுமாறு கட்டளையிடும் பாடம்” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்யவில்லை.



எனவே குறித்த ஹதீதை பதிவுசெய்த இமாம்கள் கப்றுகள் உடைக்கப்பவேண்டும் அல்லது கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்ற கருத்திலுள்ளவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.


மேலும் அல்பிக்ஹு அலல் மதாஹிபில் அர்பஅஹ் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

الفقه عَلَى المَذاهب الأرْبَعَة



ويندب ارتفاع التراب فوق القبر بقدر شبر، ويجعل كسنام البعير، باتفاق ثلاثة، وقال الشافعية: جعل التراب مستوياً منظماً أفضل من كونه كسنام البعير،

ஹனபீ, மாலிகீ, ஹன்பலீ ஆகிய மூன்று மத்ஹபுகளின் கருத்தின்படி “கப்றுக்கு மேல் மண் ஒரு சாண் அளவு உயர்தப்படுவதும் அது ஒட்டகத்தின் திமில் போன்ற வடிவத்தில் அமைக்கப்படுவதும் ஸுன்னத்தாகும்”


ஷாபிஈ மத்ஹபின் கருத்தின்படி “கப்றின் மண் ஒழுங்காகவும் சீரானதாகவும் ஆக்கப்படுவது ஒட்டகத்தின் திமில் போன்ற வடிவத்தில் அமைக்கப்படுவதை விட சிறப்பானதாகும்”


மேற்குறிப்பிடப்பட்ட விபரங்களின் படி “கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும்” என்ற கருத்தும் “கப்றுகள் உடைக்கப்படவேண்டும்” என்ற கருத்தும் தவறானது என்பது தெளிவாகின்றது. அத்துடன் கப்றுகளின் மண் ஒரு சாண் அளவு உயர்தப்படவேண்டும் என்பதுவே ஹதீஸ் கலை இமாம்களினதும், மத்ஹபுடைய இமாம்களினதும் தெளிவான முடிவாகும் என்பதும் எமக்கு தெளிவாகின்றது.


நபி (ﷺ) அவர்களின் புனித கப்று எவ்வாறு அமைந்திருந்தது என்பதை பின்வரும் ஹதீதின் மூலம் புரிந்துகொள்ளமுடியும்.

(3222) سنن أبي داوود

ـ حدثنا أَحْمَدُ بنُ صَالِح حدثنا ابنُ فدَيْكٍ أخبرني عَمْرُو بنُ عُثْمَانَ بنِ هَانىءٍ عن الْقَاسِمِ ، قال: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ: يَاأُمَّهْ اكْشِفِي لِي عَنْ قَبْرِ رَسُولِ الله صلى الله عليه وسلّم وَصَاحِبَيْهِ رَضِيَ الله عَنْهُمَا فَكَشَفَتْ لِي عَنْ ثَلاَثَةِ قُبُورٍ لاَ مُشْرِفَةٍ وَلاَ لاَطِئَةٍ، مَبْطُوحَةٍ بِبَطْحَاءِ الْعَرْصَةِ الْحَمْرَاءِ. قال أبُو عَلِيٍّ: يُقَالُ إنَّ رَسُولَ الله صلى الله عليه وسلّم مُقَدَّمٌ وَأبُو بَكْرٍ عِنْدَ رَأْسِهِ وَعُمَرُ عِنْدَ رِجْلَيْهِ رَأْسُهُ عِنْدَ رِجْلَيْ رَسُولِ الله صلى الله عليه وسلّم

காஸிம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நான் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டுக்கு சென்றேன். நபி (ﷺ) அவர்களின் புனித கப்றையும் அவர்களின் தோழர்கள் இருவரின் கப்றுகளையும் திறந்து காட்டுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்கள் எனக்கு மூன்று கப்றுகளையும் திறந்து காட்டினார்கள். அவை அதிக உயரமாவையாகவுமிருக்கவில்லை, பூமியுடன் சமனானதாகவுமிருக்கவில்லை. நபி (ﷺ) அவர்கள் முற்படுத்தப்பட்டவர்களகவும் அபூபக்ர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ﷺ) அவர்களின் தலைக்கு நேராகவும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ﷺ) அவர்களின் கால்களுக்கு நேராகவும் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர் என கூறப்படுவதாக அபூ அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – ஸுனன் அபூதாவூத், ஹதீஸ் இலக்கம் – 3222


மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதில் நபி (ﷺ) அவர்களினதும் அவர்களின் தோழர்களான அபூபக்ர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகிய இருவரினதும் புனித கப்றுகள் “அதிக உயரமாவையாகவுமிருக்கவில்லை, பூமியுடன் சமனானதாகவுமிருக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. எனவே சாதாரண உயரத்துடன் காணப்பட்டன என்பதும் குறிப்பாக அவை பூமியுடன் சமனானதாக இருக்கவில்லை என்பதும் தரைமட்டமானதாக இருக்கவுமில்லை என்பதும் தெளிவாகின்றது.


கப்றுகள் பூமியுடன் சமனானதாகத்தான் அமைக்கப்படவேண்டும் என்பது நபி (ﷺ) அவர்களின் கட்டளையாக இருந்தால் ஸஹாபாக்கள் நபி (ﷺ) அவர்களினதும், அவர்களின் இரு தோழர்களினதும் புனித கப்றுகளை பூமியுடன் சமனானதாக அல்லது தரைமட்டமானதாக ஆக்கியிருப்பார்கள். அவ்வாறில்லையாதலால் அவற்றை சாதாரண உயரமானவையாக அமைத்திருந்தார்கள்.


கப்றுகளை சூழ கட்டடங்கள், நிழல்தரும் கூரைகள் அமைப்பது ஹறாம் என்று சொல்பவர்கள் பின்வரும் ஹதீதை ஆதாரமாகக் கொள்வதுண்டு.


(2198) صحيح مسلم

ـ حدّثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِياثٍ عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ. عَنْ جَابِرٍ، قَالَ: نَهَى رَسُولُ اللّهِ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ . وَأَنْ يُبْنَى عَلَيْهِ.

கப்றின் மீது சாந்து பூசுவதையும் அதன்மீது அமர்தையும் அதன் மீது கட்டுவதையும் நபி (ﷺ) அவர்கள் தடுத்தார்கள்.

ஆதாரம் – முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் – 2198, அறிவிப்பு – ஜாபிர்(றழி)


மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதின் கருத்தை தரக்கூடிய பல ஹதீதுகள் திர்மிதி, இப்னுமாஜா, நஸாயீ, முஸ்னத் அஹ்மத் போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீதை அடிப்டையாகக் கொண்டு கப்றை சூழ கட்டடம் கட்டுவது ஹறாம் என சிலர் கூறுகின்றனர்.

இங்கு நபி (ﷺ) அவர்கள் சாந்து பூசுதையும், கட்டுவதையும் தடுத்துள்ளது ஹறாம் என்ற அடிப்படையில் அல்ல. மக்றூஹ் என்ற அடிப்டையில்தான் என்பதை ஹதீஸ் வரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காரணம் இமாம் திர்மிதி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதை

بابُ مَا جَاءَ في كَرَاهِيَةِ تَجْصِيِص الْقُبُور


“கப்றின் மீது சாந்து பூசுவது மக்றூஹ் என்பதில் தொடர்பானது” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்துள்ளார்கள்.

எனவே இமாம் திர்மிதி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இந்த விடயத்தை மக்றூஹ் என குறிப்பிட்டுள்ளார்களே தவிர ஹறாம் என்று குறிப்பிடவில்லை.


ஒரு ஹதீதை விளங்கும்போது அந்த ஹதீதை பதிவுசெய்த இமாமின் கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் அவர்கள் ஹதீஸ் அறிவிப்பாளரிடம் இருந்து ஹதீதை பெற்றவர்கள். எந்த சூழலில் எந்தக் காரணத்திற்காக குறித்த ஹதீதை நபி (ﷺ) அவர்கள் சொன்னார்கள் என்பதை கேட்டறிந்தவர்கள். குறித்த ஹதீதை ஒத்த பல்வேறு ஹதீஸ்களை அறிந்தவர்கள். குறித்த ஹதீதை அடிப்டையாகக் கொண்ட ஸஹாபாக்களின் நடைமுறையை புரிந்தவர்கள். எனவே அவர்களின் கருத்து முக்கியத்துவம்பெறுகின்றது.


இந்த அடிப்டையில் மத்ஹபுடைய இமாம்களின் கருத்தும் முக்கியமானதாகும். காரணம் இவர்கள் ஹதீதுடைய இமாம்களுக்கு முற்பட்டவர்கள். ஹதீஸ்கள் தொடர்பான மேற்கூறப்பட்ட விடயங்ளை நன்கறிந்தவர்கள். எனவே, ஷாபிஈ, ஹனபீ, மாலிகீ ஆகிய மூன்று மத்ஹபுகளின் கருத்தின்படி கப்றை சூழ கட்டடங்கள் அமைப்பது மக்றூஹாகும். அது பொதுமையவாடியாக இருந்தால் ஹறாம் ஆகும். ஹன்பலீ மத்ஹபின் கருத்தின்படி பொதுமையவாடியாக இருந்தாலும் சரி வேறு இடமாக இருந்தாலும் சரி கப்றை சூழ கட்டடங்கள் அமைப்பது மக்றூஹாகும்.


இந்த அடிப்டையில்தான் ஸஹாபாக்கள் மேற்குறித்த ஹதீதை விளங்கி நடை முறைப்படுத்தினர்.

நபி (ﷺ) அவர்கள் மரணித்த போது ஸஹாபாக்கள் அவர்களின் திருவுடலை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டில் நல்லடக்கம் செய்தனர். நபி (ﷺ) அவர்கள், கப்றை சூழ கட்டடம் கட்டுவது ஹறாம் என்று சொல்லியிருந்தால் நபி (ﷺ) அவர்களின் திருவுடலை கட்டப்பட்ட வீட்டினுள் எவ்வாறு நல்லடக்கம் செய்ய முடியும்? கட்டப்பட்ட கட்டடத்தினுள் நல்லடக்கம் செய்வதோ அல்லது நல்லடக்கம் செய்துவிட்டு கட்டடம் அமைப்பதோ ஹறாம் அல்ல என்ற காரணத்தினால்தான் ஸஹாபாக்கள் அவ்வாறு செய்தார்கள்.


நபி (ﷺ) அவர்களை மாத்திரமல்ல அவர்களின் தோழர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீபா ஹஸ்ரத் அபூபக்ர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையும், இரண்டாம் கலீபா ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையும் இவ்வாறே நபி (ﷺ) அவர்களுக்கு அருகில் கட்டப்பட்ட வீட்டினுள் ஸஹாபாக்கள் நல்லடக்கம் செய்தார்கள்.


கப்றுகளை சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்படவேண்டும் என்பதுதான் நபி (ﷺ) அவர்களின் கட்டளை என்றிருந்தால் ஸஹாபாக்கள் நபி (ﷺ) அவர்களையும் அவர்களின் இரு தோழர்களையும் கட்டப்பட்ட வீட்டினுள் நல்லடக்கம் செய்திருக்கமாட்டார்கள்.


எனவே ஸஹாபாக்கள், கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென்ற கொள்கையிலுள்ளவர்கள் அல்ல. கப்றுகள் உடைத்து தரைமட்டமாக்கப்பட வேண்டுமென்பது நபி வழி அல்ல.


எனவே நாங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வழியை பின்பற்றி நடப்போமாக.