MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அன்பை கொண்டு சோதனை


​ஆக்கம் : மெயில் ஒப் இஸ்லாம் குழு​ உறுப்பினர்


மனித ஆத்மாவிலிருந்து வரக்கூடியவை இரண்டு - ஒன்று அறிவு, மற்றது அன்பு.


எனவேதான் இறைவன் தர கூடிய சோதனைகளில் மிக கடுமையானது அன்பை கொண்டு வரக்கூடிய சோதனை. அது உடலில் இருந்து உயிரை பிடுங்கி எடுப்பதற்கு சமம். வறுமை, நோய், கஷ்டம் போன்ற அனைத்து சோதனைகளையும் பல்லை கடித்து கொண்டு பொறுமை செய்யும் மனிதன் நிலை தடுமாறி போவது இந்த அன்பை கொண்டு செய்யப்படும் சோதனையில்தான்.


​​ஆன்மீக பாதையில் செல்பவர்கள் அனைவருமே கடைசியாக இந்த அன்பை கொண்டு சோதிக்கப்படுகின்றனர். ஆனால் சோதனையின் வடிவம் மட்டும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. சிலருக்கு பெற்றோரை கொண்டு சோதனை. சிலருக்கு பிள்ளைகளை கொண்டு சோதனை. சிலருக்கு மனைவியை கொண்டு சோதனை, இன்னும் சிலருக்கு காதலன் அல்லது காதலி என்ற பெயரில் சோதனை.


அப்பொழுது விடும் கண்ணீருக்கு அளவு இல்லை. உள்ளம் கவலையால் செத்து, உடலையும் பலவீனமாக்கிவிடும். ஏன் என்னை மட்டும் அல்லாஹ் இப்படி சோதிக்கிறான் என்று உள்ளம் கேட்கும். யாரையும் எதையும் பிடிக்காது. அப்பொழுது செய்யாத துஆ இல்லை. எனக்காக துஆ செய்யுங்கள் என்று போய் சொல்லாத பெரியார்கள் இல்லை. நீங்கள் எங்கு சுற்றி எங்கு வந்தாலும் எதுவும் நடக்காது. காரணம் நீங்கள் அல்லாஹ்வின் வேதனையை அனுபவிக்கும் பாவி அல்ல. அவனது சோதனைகளை அனுபவிக்கும் அல்லாஹ்வின் நேசர். தன் நேசர்களை புடம் போட்ட தங்கமாக மாற்ற அல்லாஹ் கொடுக்கும் மருந்துதான் இந்த சோதனைகள்.


நோயுற்ற குழந்தை சுகம் அடைய தாய் தன் குழந்தைக்கு மருந்து கொடுக்க முனைகிறாள். மருந்தின் கசப்பினால் மருந்தை குடிக்க முடியாது என்று குழந்தை அழுகிறது அலறுகிறது. கூட சுற்றி நிற்கும் உறவினர்கள் பரிதாபத்துடன் பார்க்கின்றனர். வழமையாக தன் குழந்தையின் சிறு அழுகையை கூட தாங்கி கொள்ள முடியாமல், குழந்தை எதை வேண்டுகிறதோ அதை உடனே செய்து விடும் தாய், அப்போது குழந்தையின் விருப்பத்திற்கு எதிராக செயலாற்றுகிறாள். காரணம், அப்போது அவளுக்கு வேண்டியதெல்லாம் தன் குழந்தையின் ஆரோக்கியமும், தன் குழந்தைக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்கிற எண்ணமும் மட்டுமே.


இதேபோல்தான், தன் நேசர்களின் மீது அளவில்லா அன்பு கொண்டுள்ள அல்லாஹ் தன் நேசனை, உலக மாயை என்னும் நோயிலிருந்து விடுவித்து இறையண்மை என்னும் சுகத்தை கொண்டு தன்னோடு இணைத்து கொள்ள நாடுகிறான். அப்போது அவன் கொடுக்கும் கசப்பான மருந்துதான் இந்த சோதனைகள்.


தாய் கொடுக்கும் கசப்பான மருந்தை குடிக்காமல் கதறி அழும் குழந்தையை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் உறவினர்கள் யாரும் தாயை ஏசுவதில்லை. தாய் படும்பாட்டை பார்த்து அவள் பாசத்தை புகழ்கின்றனர். மாறாக, குழந்தை அழுதாலும் அதன் விருப்பத்துக்கு மாறான அந்த மருந்தை அது எப்படியும் குடிக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்காக தாய்க்கு உதவியும் செய்கின்றனர்.


இந்த உறவினர்களை போன்றவர்கள்தான் நாம் உதவி தேடி நிற்கும் பெரியார்கள். அவர்கள் நபிமார்களாக இருக்கட்டும், வலிமார்களாக இருக்கட்டும். அவர்களுக்கு உங்கள் உள்ரங்க நிலைமை தெரியும். நீங்கள் இப்போது என்ன செய்யப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் உங்களுக்கு சொன்னால் புரிவதில்லை. காரணம் நீங்கள் குழந்தையின் ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் அவர்களிடம் முறையிட்டால், அவர்கள் தற்காலத்தில் லௌகீக உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் வலிமார்கள், செய்குமார்கள் என்றால் உங்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவார்கள். இன்ஷா அல்லாஹ் உனக்காக துஆ செய்கிறேன் என்று சொல்வார்கள்.


​​எங்கள் கண்களை விட்டு மறைந்த நபிமார்கள் வலிமார்கள் என்றால், கனவில் அவர்களின் தரிசனத்தின் மூலம் அல்லது கனவில் சில செய்திகளை சொல்வதன் மூலம் வேதனை கொண்ட உங்கள் உள்ளங்களை சாந்தப்படுத்துவார்கள். மருந்து கசப்பிற்கு பயந்து அழும் குழந்தை மீது அன்பு கொண்ட உறவினர்கள் அதன் வாயில் தேனை தொட்டு வைப்பது போல.


ஒன்றை மறந்து விடாதீர்கள், இது போன்ற தருணங்களில்தான் பலர், எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை கனவில் கண்டு உள்ளனர். அந்த ஆழிய இன்பம், சோதனையின் வலிகளை குறைக்கிறது. உள்ளத்திற்கு இன்பம் கொடுக்கிறது.


இறுதியாக அடிப்பட்டு அடிப்பட்டு உங்கள் உள்ளம் செத்துவிடுகிறது. உலக ஆசாபாசம் என்னும் மாயையை விட்டு செத்து விடுகிறது. நீங்கள் யாரை கொண்டு சோதனை செய்யப்பட்டீர்களோ அவர்களின் அன்பு உங்கள் உள்ளத்தை விட்டும் போய் விடுகிறது. இப்போது எதுவும் வேண்டாம். அல்லாஹ்வும் அவனது ரசூலும் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) மட்டும் எனக்கு போதும். அல்லாஹ்வும் அவனது ரசூலும் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) நாடுவது நடக்கட்டும், நான் அதை பொருந்தி கொள்கிறேன் என்று சொல்லும் நிலைக்கு உங்கள் உள்ளம் வருகிறது.


இப்போது, நீங்கள் பரிட்சையில் வெற்றி பெற்று விட்டீர்கள். எதை கொண்டு சோதிக்கப்பட்டீர்களோ, அது திரும்ப உங்கள் காலடியில் வந்து சேரலாம். அப்போது உங்கள் உள்ளம் அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) மட்டுமே நாடி நிற்கும். எதை எண்ணி ஒரு காலத்தில் கண்ணீர் வடித்தீர்களோ, இப்போது அது ஒன்றும் பெரிதான விடயமாக இருக்காது. உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். இதற்காகவா இத்தனை காலம் அழுது புரண்டேன் என்று.


“நிச்சயமாக உங்களுடைய பொருட்களும், உங்களுடைய மக்களும் (உங்களுக்கு) சோதனையாகும். அல்லாஹ் அவனிடமே மகத்தான கூலி இருக்கிறது” (அல் குர்ஆன் 64: 15)


உங்கள் சோதனை சீக்கிரம் நீங்க ஒரே வழி, முதலில் சோதனையை சோதனை என்று விளங்கி கொள்ளுங்கள். அழுவது கவலைப்படுவது போன்றவற்றை உடனே நிறுத்தி விடுங்கள். அழ அழ உங்கள் சோதனை கூடுமே தவிர, குறையாது. சோதனையின் நோக்கத்தை விளங்கி கொள்ளுங்கள். உலக பற்றுக்களை உங்களை விட்டு நீக்கி அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) மட்டுமே நேசிக்க கூடிய உள்ளமாக மாற்றதான் இந்த சோதனை என்பதை விளங்கி கொள்ளுங்கள்.


​​எனவே அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) தவிர்த்து இதரபொருள்களின் சம்பந்தங்களை உங்கள் உள்ளத்தில் இருந்து களையுங்கள். அல்லாஹ்விடமே பாரம் சாட்டுங்கள். பிரார்த்தியுங்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதி, பாத்திஹா ஓதி அன்னவரகளையே பற்றி பிடித்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் சோதனைகள் குறையும்.


உள்ளத்திலிருந்து உலக பற்றை நீக்குவது என்பது இலேசல்ல. சாதாரண மனிதர்களாகிய எங்களால் அவ்வளவு இலகுவாக செய்ய முடியாது. சில நேரம் உள்ளம் ஒத்துக்கொள்ளும். மீண்டும் உள்ளம் உலக பற்றை நாடும். பிரிந்தவரின் பிரிவு உள்ளத்தை வாட்டும். மீண்டும் மனம் அழ சொல்லும். மீண்டும் பரிட்சையில் தோல்வி. இது போன்ற நிலைகளில் வழுக்கி விழும் உங்களை மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்துவது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்தான். அன்னவர்களின் அன்பை என்னவென்று சொல்வது. அன்னவர்களை பற்றி பிடித்து கொள்ளுங்கள். உங்களை அன்னவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இனி பயம் வேண்டாம். எப்போதும் எல்லாம் நல்லதே நடக்கும். காரணம், அண்டசராசரத்தின் அருட்கொடை உங்கள் காவலர். உங்களுக்கு நல்லதே நடக்கும். இன்ஷா அல்லாஹ்.


(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (அல் குர்ஆன் 9 : 128)